Pages

Sunday, January 8, 2012

ஜனவரி 8, 2012

குழந்தைகளுக்கு கற்பிக்கும் சரியான வழியை
செபத்திலும் அருட்சாதனங்களிலும் பெற்றோர்கள்
கண்டுகொள்ள முடியும் - திருத்தந்தை

   வத்திக்கான், சிஸ்டைன் சிற்றாலயத்தில் இந்த ஞாயிறு ஆண்டவரின் திருமுழுக்கு விழா திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், 16 குழந்தைகளுக்கு திருமுழுக்கு வழங்கி, அவர்களின் பெற்றோர்களுக்கும், ஞானப் பெற்றோருக்கும் பின் வருமாறு மறையுரை ஆற்றினார்.
   கல்வி கற்பிப்பது என்பது ஒரு சவாலான பணி ஆகும். சில தருணங்களில் இது மனித திறனுக்கு மேற்பட்ட கடின செயலாக இருக்கிறது. அனைத்து மனிதர்களுக்கும் உண்மையான முதல் கல்வி அளிப்பவரான கடவுளோடு இணைந்து நாம் செயலாற்றும்போது கல்வி ஒரு அற்புதமான பணியாக மாறுகிறது.
   திருமுழுக்கு யோவான் தனது சீடர்களுக்கு சிறந்த ஆசிரியராக திகழ்ந்த போதிலும், அவரைவிட வல்லமைமிக்க தூய ஆவியால் திருமுழுக்கு வழங்கும் ஒருவரைப் பற்றி அறிந்திருந்தார். எனவே, அவர் இயேசுவுக்கு சாற்று பகர்ந்தார்.
    இறையன்பின் உயிரளிக்கும் இரத்தம் வழிந்தோடும் வாய்க்கால்களாக பெற்றோர் உள்ளனர். வாய்க்கால்களாகிய தாயும் தந்தையும் கடவுளிடம் இருந்து தொலைவில் இருந்தால், அவர்கள் கல்வி கற்பிக்கும் திறனை இழக்க நேரிடும். பெற்றோரும் ஞானத் தாய், தந்தையரும் தூய ஆவியாரின் பிரசன்னத்திலும் செயல்பாட்டிலும் நம்பிக்கை கொண்டு, செபத்திலும் அருட்சாதனங்களிலும் அவரை வரவேற்று, அவர் உதவியைக் கேட்க வேண்டும்.
   கற்பித்தலுக்கு முதல் தேவையாக இருப்பது செபமே. ஏனெனில், நாம் செபத்தில் நம்மையே கடவுளுக்கு கொடுக்கிறோம்; நம் குழந்தைகளை கடவுளிடம் ஒப்படைக் கிறோம். அவரே நமக்கு முன்பாகவும், நமக்கு மேலாகவும் அவர்களை அறிந்தவரும், அவர்களது உண்மை நலம் எது எனத் தெரிந்தவருமாக இருக்கிறார்.
   செபத்திலும் அருட்சாதனங்களிலும், குழந்தைகளுக்கு கற்பிக்கும் மிகச் சரியான வழியை, பெற்றோர் கண்டுகொள்ள முடியும். எப்போது மென்மையாக அல்லது உறுதி யாக நடந்துகொள்ள வேண்டும், மேலும் எந்தெந்த வேளையில் அமைதியாக இருப் பது அல்லது குழந்தைகளைத் திருத்துவது என்பவற்றை கற்க முடியும்.
   திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தனது மறையுரையை நிறைவுசெய்த வேளையில், புதிதாக திருமுழுக்கு பெற்ற குழந்தைகளின் வாழ்வில் இயேசு உடனிருக்கும் வகை யில், அவர்கள் மீது தூய ஆவியார் இறங்கி வரவேண்டும் என்றும் செபித்தார்.