Pages

Wednesday, June 13, 2012

ஜூன்13, 2012

புதன் மறைபோதகம்: ஆன்ம வறட்சியான நேரங்களிலும்
நாம் இடைவிடாமல் செபிக்க வேண்டும் - திருத்தந்தை

   உரோமையில் கோடை வெயிலின் தாக்கம் தெரிய ஆரம்பித்துள்ளது. எனவே இவ்வாரப் புதன் பொது மறைபோதகம், பாப்பிறை 6ம் பவுல் அரங்கத்தில் நடைபெற்றது. இம்மறைபோதகத்திற்கு முன்னர் வத் திக் கான் தூய பேதுரு பசிலிக்காவைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் சந்தித்தார். பின்னர் அவர் வழங்கிய பொதுமறைபோதகத்தில் புனித பவுலின் திருமடல் களில் செபம் குறித்த சிந்தனைகளைத் தொடர்ந்தார்.
   அன்பு சகோதர சகோதரிகளே, திருத்தூதர் புனித பவுல், ஆழ்நிலை செபத்தில் தனக்குக் கிடைத்த சொந்த அனுபவத்திற்கு அவரே வழங்கும் சான்று குறித்து இன்று பார்ப்போம். தானும் ஒரு திருத்தூதர் என்ற உரிமையை வலியுறுத்திய பவுல், இதற்கெல்லாம் மேலாக செபத்தில் அவர் ஆண்டவரிடம் கொண்டிருந்த ஆழமான நெருக்கத்தை விளக்கினார். இந்தச் செப நேரங்கள் காட்சிகளாலும், வெளிப்பாடு களாலும் பரவசங்களாலும் நிறைந்திருந்தன. இருந்தபோதிலும், பவுல் தனது சோதனைகள் பற்றியும் பேசுகிறார். அவர் தனக்கு அருளப்பட்ட வெளிப்பாடுகளால் இறுமாப்பு அடையாதவாறு ஆண்டவர் பெருங்குறை ஒன்றை அவருக்கு அனுப்பினார். அது அவர் உடலில் புதிரான முள்போல் வருத்திக்கொண்டே இருந்தது பற்றிப் பேசுகிறார். எனவே பவுல் கிறிஸ்துவின் வல்லமை அவரில் தங்கும் பொருட்டு தனது வலுவின்மையில் மனதாரப் பெருமைப்பட்டார். இந்த ஆழ்நிலை செப அனுபவத்தின் மூலம், கடவுளின் அரசு தனது சொந்த முயற்சிகளால் அல்ல, மாறாக, எளிய மண்பாண்டங்களாகிய நம் வழியாக, கடவுளின் சுடர்விடும் அருளின் சக்தியினால் வருகின்றது என்று உணர்ந்தார். ஆழ்நிலை செபத்தில் கடவுளன்பின் அழகையும் நமது சொந்த பலவீனத்தையும் நாம் அனுபவிப்பதால் இந்தச் செபமானது புகழ்ச்சிக்குரிய தாகவும் கலக்கம் அளிப்பதாகவும் நமக்குத் தெரிகின்றது. பவுல் இடைவிடா தினசரி செபத்தின் தேவையை நமக்குப் போதிக்கிறார். ஆன்மாவின் வறட்சியான மற்றும் துன்பம் நிறைந்த நேரங்களிலும் நாம் இடைவிடாது செபிக்க வேண்டும். ஏனெனில் செபத்தில்தான் வாழ்வை மாற்றும் இறையன்பின் வல்லமையை நாம் அனுபவிக் கிறோம்.
   இவ்வாறு மறைபோதகத்தை நிறைவு செய்த திருத்தந்தை, அயர்லாந்து நாட்டு டப்ளினில் தற்போது நடைபெற்றுவரும் 50வது அனைத்துலக
திவ்விய நற்கருணை மாநாட்டில் பங்கு கொள்வோர் குறித்துப் பேசினார். 'திவ்விய நற்கருணை : கிறிஸ்து வோடும் நம்மோடும் ஒன்றிப்பு' என்ற தலைப்பில் நடைபெறும் இம்மாநாடு, திருச் சபையின் வாழ்வில் நற்கருணை கொண்டிருக்கும் மையத்தை மீண்டும் உறுதிப் படுத்துவதற்கு விலைமதிப்பற்ற தருணம் என்று கூறிய திருத்தந்தை, நம் ஆண்டவர் திவ்விய நற்கருணையில் தம்மையே கொடையாக வழங்குவதை அதிகமாக உணரக் கூடிய வளமையான ஆன்மீகக் கனிகளை இம்மாநாடு வழங்குவதற்குத் தன்னோடு இணைந்து அனைவரும் செபிக்குமாறும் அழைப்பு விடுத்தார். பின்னர் இப்பொது மறைபோதகத்தில் கலந்து கொண்ட எல்லாரையும் வாழ்த்தி தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.