Pages

Sunday, September 23, 2012

செப்டம்பர் 23, 2012

கிறிஸ்துவின் கல்வாரி அன்புச்செயல் நமக்கு
அளவுகோலாக இருக்கட்டும்! - திருத்தந்தை

   திருத்தந்தையரின் கோடை இல்லமான காஸ்தல் கந்தல்போவில் விடுமுறையை செலவிட்டு வரும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை (மாற்கு 9:30-37) மையமாக வைத்து மூவேளை செப உரை வழங்கினார்.
   இந்த ஞாயிறுக்கான நற்செய்தி பகுதியில் சில அறிவிப்புகள் இடம்பெறுகின்றன. இயேசு கூறுகிறார்: "மானிட மகன் - இது அவரையேக் குறிக்கிறது - மக்க ளின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்; அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்'' ஆனால் அவர் சொன்னது சீடர்களுக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்கவும் அவர்கள் அஞ்சினார்கள். இயேசுவுக்கும் அவரது சீடர்களுக்கும் இடையே ஆழ்ந்த இடைவெளி இருந்தது. இன்னும் தெளிவாகக் கூறினால் இயேசுவும் அவரது சீடர்களும் இருவேறு சிந்தனை ஓட்டத்தில் இருந்தனர். இதனால் குரு சொன்னதை சீடர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இயேசு தனது பாடுகளையும், மரணத்தையும் இரண்டாவது முறை அறிவித்த பிறகு, சீடர்கள் தங்களுள் பெரியவர் யார் என்பதைப் பற்றி வழியில் ஒருவரோடு ஒருவர் விவாதிக்க தொடங்கினார்கள்.
   இறைவாக்கினர் எசாயா வழியாக, "என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல" என்று கடவுள் மொழிந்தபடியே, நம்முடையதில் இருந்து கடவுளின் நியதி எப்பொழுதும் வேறுபட்டதாக உள்ளது. இந்த காரணத்தால் நம் ஆண்டவரைப் பின்செல்வதற்கு, ஒவ்வொருவரின் எண்ணங்களி லும் வாழும் முறையிலும் மாற்றம் கொண்டுவரும் ஓர் ஆழமான மனமாற்றம் தேவைப்படுகின்றது, இதற்கு நமது இதயங்கள் ஒளிபெற்று உள்ளார்ந்த மாற்றம் பெறுவதற்கு அவற்றைத் திறந்துவைக்க வேண்டும். கடவுளும் மனிதரும் வேறுபடு வதில் தற்பெருமை முக்கியமானதாக இருக்கின்றது. மிகவும் சிறியவர்களாக இருக்கும் நாம் முதலில் பெரியவர்களாக இருப்பதற்கு விரும்புகிறோம், ஆனால் உண்மையிலேயே பெரியவரான கடவுள் தம்மைத் தாழ்த்துவதற்கு அஞ்சாமல் தம்மை கடையராகவும் ஆக்கினார். இதில் கன்னி மரியா முழுமையாக கடவுளோடு ஒத்திருந்தார். அன்பு மற்றும் தாழ்ச்சியின் வழியில் நம்பிக்கையோடு இயேசுவைப் பின்பற்றி வாழ அவரது உதவியை வேண்டுவோம்.
   இன்றைய நற்செய்தியில், நம் ஆண்டவர் மரணத்துக்கு கையளிக்கப்பட இருப்ப தையும், நமது மீட்புக்காக மீண்டும் உயிர்த்தெழப் போவதையும் தன் சீடர்களுக்கு வெளிப்படுத்துகிறார். அனைவருக்கும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண் டராகவும் மாறுவதில், கல்வாரியில் வெளிப்பட்ட கிறிஸ்துவின் மேலான அன்புச் செயல் நமக்கு உண்மையான அளவுகோலாக இருக்கட்டும்! உங்களையும், உங்கள் அன்புக்குரியவர்களையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக!