Pages

Wednesday, January 30, 2013

ஜனவரி 30, 2013

விண்ணகத் தந்தையின் இரக்கமுள்ள முகத்தை
நாம் இயேசுவில் காண்கிறோம் - திருத்தந்தை

   வத்திகானின் பாப்பிறை ஆறாம் பவுல் மண்டபத் தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு புதன் பொது மறைபோதகம் வழங்கிய திருத்தந்தை 16ம் பென டிக்ட், தந்தையாம் கடவுளின் அன்பைப் பற்றி எடுத் துரைத்தார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   கடந்த வார மறைபோதகத்தில், விசுவாச அறிக்கையின் "நான் கடவுளை நம்புகிறேன்" என்ற வார்த்தைகளைப் பற்றி பார்த்தோம். அவரே, 'விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுள்' என்று உறுதிபடுத்துகிறது. கடவுளைப் பற்றி விசுவாச அறிக்கை நமக்கு தரும் அடிப்படை வரையறை: அவர் நமது தந்தை. தந்தை பண்பைப் பற்றி இக்காலத்தில் பேசுவது எப்பொழுதும் எளிதாக இருப்பதில்லை. பணி அதிகரிப்பு, குடும்ப பிரிவினைகள், ஊடகங்களின் தாக்கங்கள் போன்றவை தந்தை - பிள்ளைகள் இடையிலான அமைதியான உறவுக்கு இடையூறாக உள்ளன. கடவுளை தந்தையாக சிந்திப்பதிலும் பிரச்சனையாக மாறியுள்ளது. தந்தையைப் பற்றிய தெளிவான புரிதல் இல்லாதபோது, கடவுளைத் தந்தையாக ஏற்று, அவரிடம் தம்மை ஒப்படைப்பது ஒருவருக்கு எளிதானது அல்ல.
   இத்தகைய பிரச்சனைகளை வெற்றிகொள்ள, விவிலியத்தில் காணப்படும் கடவுள் நமக்கு தந்தையாக இருப்பதன் பொருளை எடுத்துரைக்கும் வெளிப்பாடு உதவுகிறது. மனிதகுல மீட்புக்காக தம் சொந்த மகனையே கையளிக்கும் அளவுக்கு அன்புகூர்ந்த கடவுளின் முகத்தை நற்செய்தி சிறப்பாக வெளிப்படுத்துகிறது. கடவுளை தந்தை உருவத்தில் காண்பது கடவுளின் அன்பை முடிவற்ற வகையில் புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறது. இயேசு நமக்கு தந்தையின் முகத்தை காட்டுகிறார்: "உங்களுள் எவராவது ஒருவர் அப்பத்தைக் கேட்கும் தம் பிள்ளைக்குக் கல்லைக் கொடுப்பாரா? அல்லது, பிள்ளை மீன் கேட்டால் பாம்பைக் கொடுப்பாரா? தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணுலகில் உள்ள உங்கள் தந்தை தம்மிடம் கேட்போருக்கு இன்னும் மிகுதியாக நன்மைகள் அளிப்பார் அல்லவா!" (மத்தேயு 7:9-11). உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மை ஆசீர்வதித்து, கிறிஸ்து வழியாகத் தம் பிள்ளைகளாகத் தேர்ந்தெடுத்தார்.
   அவர், இயேசுவில் வெளிப்படுத்தியது போன்று, விதைக்காத, அறுக்காத வானத்து பறவைகளுக்கும் உணவளிக்கிறார், சாலமோன் கூட அணிந்திராத அருமையான வண்ணங்களால் காட்டுமலர்ச் செடிகளை போர்த்துகிறார். நாம் இந்த மலர்களையும், வானத்து பறவைகளையும் விட மேலானவர்கள் என்றும் இயேசு கூறுகிறார். மேலும், கடவுள் எவ்வளவு நல்லவராக இருக்கிறாரெனில், "அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்" (மத்தேயு 5:45). நாம் தவறு செய்தாலும், எப்பொழுதும் பயமின்றி, முழு உறுதியோடு இந்த தந்தையின் மன்னிப்பில் நம்பிக்கை வைக்க முடியும். மனந்திரும்பி வரும் வழிதவறிய மகனை வரவேற்று அரவணைக்கும் நல்ல தந்தையாக கடவுள் இருக்கிறார். அவர் கேட்பவருக்கு தம்மை இலவசமாக கொடுப்பதுடன், விண்ணக உணவையும், என்றென்றும் உயிர் தரும் வாழ்வின் நீரையும் அளிக்கின்றார்.
   திருப்பாடல் 27ல் எதிரிகளால் சூழப்பட்டவர் ஆண்டவரின் உதவியை இறைஞ்சும் செபம் இவ்வாறு கூறுகிறது: "என் தந்தையும் தாயும் என்னைக் கைவிட்டாலும் ஆண்டவர் என்னை ஏற்றுக்கொள்வார்" (27:10). தந்தையாக இருக்கும் கடவுள் தம் பிள்ளைகளை ஒருபோதும் கைவிடுவதில்லை, மனிதருக்கு நம்பிக்கைக்குரிய விதத்தில் ஒரு அன்பு தந்தையாக ஆதரித்து, உதவி செய்து, வரவேற்று, மன்னித்து, மீட்பளித்து நித்திய பரிமாணத்துக்கு திறக்கிறார். மீட்பின் வரலாற்றில் "என்றும் உள்ளது அவரது பேரன்பு" என திருப்பாடல் 136 மீண்டும் மீண்டும் எடுத்துரைக்கிறது. கடவுளின் அன்பு எப்போதும் தோற்காது, ஒருபோதும் நம்மில் சோர்வுறாது, தம் மகனையே பலியாக்கும் அளவுக்கு இந்த அன்பு தீவிரமானது. விசுவாசமே நம் வாழ்வுக்கு உறுதியைத் தருகிறது; துன்பம் மற்றும் ஆபத்து வேளைகளிலும், இருளையும், பிரச்சனையையும், வழியையும் உணரும் நேரங்களிலும் கடவுள் நம்மை கைவிடமாட்டார், நம்மை மீது வாழ்வுக்கு கொண்டு செல்ல எப்போதும் நம் அருகில் இருக்கிறார்.
   ஆண்டவர் இயேசுவில், நாம் விண்ணகத்தில் இருக்கும் தந்தையின் இரக்கமுள்ள முகத்தைக் காண்கிறோம். அவரை அறிவதில், நாம் தந்தையை அறிந்துகொள்ள முடியும், அவரைக் காண்பதில் நாம் தந்தையைக் காண முடியும், ஏனெனில் அவர் தந்தையுள்ளும், தந்தை அவருள்ளும் இருக்கிறார்கள். கொலோசையருக்கு எழுதிய திருமுகத்தில் கூறப்படுவது போன்று, "அவர் கட்புலனாகாத கடவுளின் சாயல்; படைப்பனைத்திலும் தலைப்பேறு ... இறந்து உயிர்த்தெழுவோருள் அவர் தலைப்பேறு ஆனார்." அவர் வழியாகவே நாம் பாவ மன்னிப்பையும், மீட்பையும் கொண்டுள்ளோம். சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்." தந்தையில் கொள்ளும் விசுவாசம், தூய ஆவியின் செயல் வழியாக மகனில் நம்பிக்கை கொள்ளவும், இறுதியாக சிலுவையில் வெளிப்பட்ட இறையன்பை அடையாளம் காணவும் அழைக்கிறது. நம் தந்தையாம் கடவுள் நமக்காக தம் மகனையே கொடுக்கிறார், நம் பாவங்களை மன்னிக்கிறார், உயிர்ப்பு வாழ்வின் மகிழ்ச்சிக்கு நம்மை கொண்டு செல்கிறார், நம்மை அவரது பிள்ளைகளாக்கி அவரை "அப்பா, தந்தையே" என்று அழைக்க அனுமதிக்கும் ஆவியை நமக்கு தருகிறார். எனவேதான், நமக்கு செபிக்க கற்றுக்கொடுத்த இயேசு, "எங்கள் தந்தையே" என்று கூற அழைக்கிறார்.
   கடவுளின் தந்தை பண்பு, எல்லையற்ற அன்பும், பலவீனமான குழந்தைகளாகிய நம் அனைத்து தேவைகளையும் அறிவதில் மென்மையும் கொண்டது. திருப்பாடல் 103 இறை இரக்கத்தை இவ்வாறு அறிவிக்கிறது: "தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர் மீது இரங்குகிறார். அவர் நமது உருவத்தை அறிவார்; நாம் தூசி என்பது அவர் நினைவிலுள்ளது" (103:13-14). நமது சிறுமை நிலையிலும், பலவீனமான மனித இயல்பிலும் ஆண்டவரின் இரக்கத்துக்காக வேண்டுகிறோம். நமது அழைப்புக்கு பதிலளிக்கும் வகையில் தம் மகனை அவர் அனுப்பினார், அவர் நமக்காக இறந்து, உயிர்த்தெழுந்தார்; அவர் நம் அழிவுக்குரிய இயல்பில் நுழைந்து, ஒரு மாசற்ற ஆட்டுக்குட்டியாக உலகின் பாவங்களை தம்மீது சுமந்து கொண்டார்; நாம் கடவுளோடு ஒன்றிப்பதற்கான வழியை மீண்டும் திறந்து, நம்மை கடவுளின் உண்மையான பிள்ளைகளாக மாற்றினார். பாஸ்கா மறைபொருளில் தந்தையின் தெளிவான பங்கு முழுமையான ஒளியில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. மாட்சிமிகு சிலுவையில், எல்லாம் வல்ல தந்தையாம் கடவுளின் மேன்மை முழுமையாக வெளிப்படுகிறது.
   உண்மையிலேயே வலிமை வாய்ந்த ஒருவரே வலியைத் தாங்கிக்கொண்டு, இரக்கம் காண்பிக்கவும், அன்பின் வலிமையை முழுமையாக செயல்படுத்தவும் முடியும். அனைத்தையும் படைத்த கடவுள், ஒவ்வொருவரையும் ஒவ்வொரு பொருளையும் அன்பு செய்வதில் தம் வலிமைமிகு அன்பை வெளிப்படுத்துகிறார். கடவுள் நமது மனமாற்றத்திற்காக காத்திருக்கிறார். கடவுளின் வலிமைமிகு அன்புக்கு எல்லையில்லை, எனவே "தம் சொந்த மகனென்றும் பாராது நம் அனைவருக்காகவும் கடவுள் அவரை ஒப்புவித்தார்" (உரோமையர் 8:32). அதனால் உண்மையாகவே தீமை வீழ்த்தப்பட்டது, சாவும் தோற்கடிக்கப்பட்டது ஏனெனில் அது வாழ்வின் கொடையாக மாற்றப்பட்டு விட்டது. "எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நான் நம்புகிறேன்" என்று நாம் கூறும்போது, இறந்து, உயிர்த்தெழுந்த அவரது மகனில் இருந்த கடவுளின் அன்பின் ஆற்றலுக்குள் நமது விசுவாசத்தை அறிக்கையிடுகிறோம். விசுவாசத்தை நடைமுறையில் வாழவும், தந்தையின் அன்பிலும், நம்மை மீட்கின்ற அவரது எல்லாம் வல்ல இரக்கத்திலும் நம்பிக்கை கொண்டு, நமது பிள்ளைக்குரிய கொடையை பெற்றுக்கொள்ள கடவுள் அருள்புரிவாராக!