Pages

Wednesday, February 27, 2013

பிப்ரவரி 27, 2013

வரலாற்றின் பாதையில் திருச்சபையை
வழிநடத்துபவர் இறைவனே! - திருத்தந்தை

  திருத்தந்தை 16ம் பெனடிக்ட், பதவி விலகுவதற்கு முன் வழங்கிய இறுதி மறை போதகத்தை கேட்க வத்திக்கான் புனித பேதுரு பேராலய வளாகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் திரண்டிருந்தனர். அவர்கள் நடுவே பவனியாக வந்து உரை நிகழ்த்திய திருத்தந்தை, கடந்த 8 ஆண்டுகளில் இறைவன் செய்த அனைத்து நன்மைகளுக்காகவும் நன்றி கூறி னார். தனது செபங்கள் மூலம் திருச்சபையோடு இணைந்து நடப்பதாகவும் திருத்தந்தை வாக்களித்தார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   எனது இந்த இறுதி புதன் பொதுமறைபோதகத்தில் கலந்துகொள்ள இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் என் அன்பும் பாசமும் நன்றியும் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2005ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதிக்கு பின்னர், இந்த எட்டு ஆண்டுகளில் நம் ஆண்டவர் என்னை உண்மையிலேயே வழிநடத்தினார். அவர் எனக்கு மிக நெருக்கமாக இருந்தார். தினமும் அவரது பிரசன்னத்தை என்னால் உணர முடிந்தது என்று என்னால் சொல்ல முடியும். இந்த ஆண்டுகள், திருச்சபையின் திருப்பயணத்தில் மகிழ்ச்சியும் ஒளியும் நிறைந்த நேரங்களாகவும், அதேசமயம் கடினமான தருணங்களாகவும் இருந்தன. இப்போது நான் சிலுவையைக் கைவிடேன், ஆயினும், புதிய வழியில் சிலுவையில் அறையுண்ட ஆண்டவருக்கு நெருக்கமாக இருப்பேன். செபம் மற்றும் தியானம் மூலம் திருஅவையின் பயணத்தில் தொடர்ந்து செல்வேன்.
   புனித பவுல், கொலேசேயருக்கு எழுதிய திருமுகத்தில், "உங்களுக்காகத் தவறாமல் இறைவனிடம் வேண்டி இவ்வாறு அவரிடம் கேட்டுக்கொள்கிறோம்: நீங்கள் முழு ஞானத்தையும் ஆவிக்குரிய அறிவுத்திறனையும் பெற்றுக் கடவுளின் திருவுளத்தைப் பற்றிய அறிவை நிறைவாக அடையவேண்டும். நீங்கள் அனைத்திலும் ஆண்டவருக்கு உகந்தவற்றைச் செய்து அவருக்கு ஏற்புடையவர்களாய் நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் பயன்தரும் நற்செயல்கள் அனைத்தும் செய்து கடவுளைப்பற்றிய அறிவில் வளரவேண்டும்" (1:9-10) எனக் கூறுகிறார். எனது இதயமும் இறைவனுக்கான நன்றியால் நிறைந்துள்ளது. அவரே திருச்சபையையும், விசுவாசத்திலும் அன்பிலுமான அதன் வளர்ச்சியையும் கண்காணிக்கிறார். நன்றியிலும் மகிழ்விலும் உங்களனைவரையும் நான் அணைத்துக்கொள்கிறேன்.
   திருச்சபையின் வாழ்விலும் நம் வாழ்விலும் இறை உடனிருப்பின் மீதான நம் மகிழ்ச்சி நிறை நம்பிக்கையை புதுப்பிக்க நாம் இந்த நம்பிக்கை ஆண்டில் அழைப்பு பெறுகிறோம். தூய பேதுருவின் வழித்தோன்றலாக நான் இந்தப் பணியை ஏற்றுக்கொண்டதிலிருந்து கடந்த எட்டு ஆண்டுகளில் இறைவன் காட்டிய தொடர்ந்த அன்பிற்கும் வழிகாட்டுதலுக்கும் நான் தனிப்பட்டமுறையில் நன்றியுள்ளவனாக உள்ளேன். என்னைப் புரிந்து கொண்டதற்கும், ஆதரவு வழங்கியதற்கும், செபங்களுக்கும் இங்கு ரோம் நகரில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு என் ஆழ்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். நீண்ட செபத்திற்குப்பின் நான் எடுத்த இந்தப் பணிஓய்வு குறித்த முடிவு, இறைவிருப்பத்தில் கொண்டுள்ள முழு நம்பிக்கை மற்றும் அவரின் திருச்சபை மீது கொண்டுள்ள ஆழமான அன்பின் கனியாகும்.
   என் செபங்கள் மூலம் நான் திருச்சபையுடன் தொடர்ந்து இணைந்து நடப்பேன். எனக்காகவும் வரவிருக்கும் புதிய திருத்தந்தைக்காகவும் செபிக்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். அன்னைமரியோடும் அனைத்துப் புனிதர்களோடும் இணைந்து விசுவாசத்திலும் நம்பிக்கையிலும் நம்மை இறைவனிடம் ஒப்படைப்போம். அவரே நம் வாழ்வின்மீது அக்கறை கொண்டு பராமரிக்கிறார். வரலாற்றின் பாதையில் இவ்வுலகையும் திருச்சபையையும் வழிநடத்துபவரும் அவரே. மிகுந்த பாசத்தோடு உங்கள் அனைவரையும் இறைப்பராமரிப்பில் ஒப்படைக்கிறேன். இறைவனால் மட்டுமே தர முடிந்த வாழ்வின் முழுமைக்கு உங்கள் இதயங்களைத் திறக்க உதவும் நம்பிக்கையில் உங்களைப் பலப்படுத்துமாறு இறைவனை நோக்கி வேண்டுகிறேன். நமது இதயத்தில், உங்கள் ஒவ்வொருவருடைய இதயத்திலும் ஆண்டவர் அண்மையில் இருப்பதன், அவர் நம்மை கைவிடாமல் இருப்பதன், தம் அன்பால் நம்மை சூழ்ந்திருப்பதன்  மகிழ்ச்சி எப்பொழுதும் இருப்பதாக! நன்றி!