Wednesday, April 3, 2013

ஏப்ரல் 3, 2013

இயேசு உயிரோடிருப்பதை அறிந்த அவர்கள் உள்ளம்
நம்பிக்கையால் நிரப்பப்பட்டது - திருத்தந்தை

   வத்திக்கான் தூய பேதுரு சதுக்கத்தில் இப்புதன் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு பொது மறைபோதகம் வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், கத்தோலிக்கர்களின் விசுவாச அறிக்கை குறித்து தன் கருத்துகளை எடுத்துரைத்தார். இப்புதன் மறைபோதகத்தில் கலந்து கொள்ள இத்தாலியின் மிலான் நகரிலிருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளையோர் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
அன்பு சகோதர சகோதரிகளே,
   இன்று நாம் விசுவாச ஆண்டின் மறைக்கல்விக்கு திரும்புகிறோம். விசுவாச அறிக்கையில் நாம் இவ்வாறு கூறுகிறோம்: "மறைநூலின் படியே, அவர் மூன்றாம் நாளில் மீண்டும் உயிர்த்தெழுந்தார்." கிறிஸ்தவ செய்தியின் மையமாக இருக்கும் இயேசுவின் இந்த உயிர்ப்பு நிகழ்வைத்தான் நாம் கொண்டாடி கொண்டிருக்கிறோம். கொரிந்து நகர கிறிஸ்தவர்களுக்கு புனித பவுல் இவ்வாறு எழுதுகிறார்: "நான் பெற்றுக்கொண்டதும் ... உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே: மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார். பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார்" (1 கொரிந்தியர் 15:3-5). இது பாஸ்கா மறைபொருளை, உயிர்த்த இயேசுவின் முதல் காட்சிகளோடு பறைசாற்றுகிறது: இயேசுவின் இறப்பும் உயிர்ப்புமே நம் நம்பிக்கையின் மையம். திருத்தூதர் கூறுவது போன்று, "கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பயனற்றதே. நீங்கள் இன்னமும் உங்கள் பாவங்களில் வாழ்பவர்களாவீர்கள்" (15:17).
   இயேசுவின் உயிர்ப்பின் மீதான விசுவாசத்தை மறைப்பதற்கான முயற்சிகளால், நம்பிக்கையாளர்கள் மத்தியிலேயே சந்தேகங்களும் தடங்கல்களும் எழுந்துள்ளன. விசுவாசத்தை விட மற்ற பொருட்கள் முக்கியத்துவம் பெறுவதாலோ, வாழ்வின் கிடைமட்ட நிலையாலோ, விசுவாசம் உறுதியற்றதாக, நீர்த்துப் போனதாக இருக்கிறது என்றே நாம் சொல்ல வேண்டும். ஆனால், உயிர்ப்பே நமக்கு நம்பிக்கை தருகிறது, ஏனெனில் இது நமது வாழ்வை திறப்பதுடன், உலக வாழ்வை கடவுளின் நித்திய எதிர்காலத்துக்கும், முழுமையான மகிழ்ச்சிக்கும், தீமை, பாவம், சாவு ஆகியவை மீதான வெற்றிக்கும் கொண்டு செல்கிறது. இது வாழ்வின் அன்றாட எதார்த்தங்களை நாம் அதிக நம்பிக்கையுடனும், துணிவுடனும் எதிர்கொள்ள உதவுகிறது. கிறிஸ்துவின் உயிர்ப்பு இந்த அன்றாட உண்மைகளின் மீது புதிய ஒளியை வீசுகிறது. கிறிஸ்துவின் உயிர்ப்பே நமது வலிமை!
   கிறிஸ்துவின் உயிர்ப்பின் மீதான விசுவாச உண்மை எவ்வாறு பரவியது? புதிய ஏற்பாட்டில் இரண்டு விதமான சாட்சிகள் உள்ளனர்: சிலர் விசுவாசத்தை வாயார அறிக்கையிடுகிறவர்கள். மற்றவர்கள், உயிர்ப்பு நிகழ்வு மற்றும் அது தொடர்பான உண்மைகளுடன் தொடர்புடையவர்கள். விசுவாசத்தை அறிக்கையிடுதலுக்கு சான்றாக, பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் இவ்வாறு எழுதுகிறார்: "இயேசு ஆண்டவர் என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்பு பெறுவீர்கள்" (10:9). திருச்சபையின் தொடக்க காலத்தில் இருந்தே, இயேசுவின் இறப்பு மற்றும் உயிர்ப்பின் மறைபொருள் இணை பிரியாததாகவும் தெளிவானதாகவும் உள்ளது.
   இரண்டாவது, நற்செய்திகளில் நாம் காண்கிற சான்றுகள். இந்த நிகழ்வுக்கு முதலில் சான்று பகர்ந்தவர்கள் பெண்களே என்பதை நாம் கவனிக்க வேண்டும்.  காலையிலேயே இயேசுவின் உடலில் நறுமணப் பொருட்களை பூசுவதற்காக சென்ற அவர்கள் முதல் அடையாளத்தை காண்கிறார்கள்: வெறுமையான கல்லறை. அதன் தொடர்ச்சியாக, "சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்து இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்; அவர் இங்கே இல்லை" என்று அறிவித்த கடவுளின் தூதரை சந்திக்கிறார்கள். அன்பினால் உந்தப்பட்ட இந்த பெண்கள், தாங்கள் நம்பியதுடன் பிறரிடமும் அதை பரப்பினார்கள். இயேசு உயிரோடிருக்கிறார் என்பதை அறிந்த மகிழ்ச்சியை அவர்கள் தங்களுக்குள் வைத்திருக்க முடியவில்லை, அவர்கள் உள்ளம் நம்பிக்கையால் நிரப்பப்பட்டது. தீமை மற்றும் சாவின் மீது வெற்றிகொண்டு உயிர்தெழுந்த ஒருவரில் நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். நாமும் துணிவுடன் வெளியே சென்று, இந்த மகிழ்ச்சியையும் ஒளியையும் நாம் வாழும் அனைத்து இடங்களுக்கும் கொண்டு செல்வோம்.
   புதிய ஏற்பாட்டின் விசுவாசத்தை அறிக்கையிடும்போது, ஆண்கள், மட்டுமே உயிர்ப்பின் சாட்சிகளாக நினைவுகூரப்படுகிறார்கள், திருத்தூதர்கள், பெண்கள் அல்ல. இது ஏனென்றால், அக்கால யூத சட்டத்தின்படி பெண்களும் குழந்தைகளும் தகுந்த சாட்சிகளாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இருந்தாலும் நற்செய்திகளில், பெண்கள் முதன்மையான அடிப்படை இடம் பெறுகிறார்கள். நற்செய்தியாளர்கள் நிகழ்ந்ததை எளிமையாக எடுத்துரைக்கிறார்கள்: பெண்களே முதல் சாட்சிகளாக இருக்கிறார்கள். மனித சூழ்நிலைகளுக்கு ஏற்ப கடவுள் தேர்வு செய்வதில்லை என்பதை இது நமக்கு கூறுகிறது: இயேசு பிறந்தபோது எளிய, தாழ்ச்சியுள்ள இடையர்களே முதல் சாட்சிகளாக இருந்தார்கள், உயிர்ப்பின்போது பெண்கள் சாட்சிகளாக இருக்கிறார்கள். இது அழகாக இருக்கிறது, இதுவே பெண்களின் பணி, தாய்மார்களும் பெண்களும் தங்கள் பிள்ளைகள் மற்றும் பேரப் பிள்ளைகளிடம் கிறிஸ்து உயிர்த்துவிட்டார் என்பதற்கு சான்று பகர வேண்டும். விசுவாச கண்களுக்கு எப்பொழுதும் எளிய மற்றும் ஆழ்ந்த அன்பின் பார்வை தேவை. திருத்தூதர்களுக்கும் சீடர்களுக்கும் உயிர்த்த கிறிஸ்துவை நம்புவது கடினமாக இருந்தது, இருந்தாலும் பெண்களுக்கு அப்படியில்லை! பேதுரு கல்லறைக்கு ஓடினார், ஆனால் வெற்று கல்லறை முன்பாக நின்றுவிட்டார்; தோமா இயேசுவின் உடலின் காயங்களை தனது கரங்களால் தொட்டுப் பார்த்தார். நமது விசுவாசப் பயணத்தில் நமது விசுவாச பயணத்தில் கடவுள் நம்மை அன்பு செய்கிறார் என்பதை அறிந்து உணர்வது அவசியம், அன்பு செய்ய பயப்படாதீர்கள்: விசுவாசம் வாயாலும் இதயத்தாலும், வார்த்தையாலும் அன்பாலும் அறிக்கையிடப்படுகிறது.
   பெண்களுக்கு பிறகு வேறு பலருக்கும் காட்சியளித்த இயேசு புதியவராக தோன்றுகிறார்: அவர் சிலுவையில் அறையப்பட்டிருந்தாலும், அவரது உடல் மாட்சி நிறைந்ததாக இருந்தது; அவர் உலகு சார்ந்த வாழ்வுக்கு திரும்பவில்லை, மாறாக, புதிய நிலைக்கு திரும்பினார். முதலில் அவர்கள் அவரை கண்டுணரவில்லை, அவரது சொற்களும் செயல்களும் மட்டுமே அவர்கள் கண்களைத் திறந்தன: உயிர்த்த ஆண்டவருடனான சந்திப்பு உருமாற்றுகிறது, அது விசுவாசத்துக்கு புதிய பலத்தை, அசைக்க முடியாத அடித்தளத்தை தருகிறது. உயிர்த்த கிறிஸ்து பல அடையாளங்களால் நமக்கும் தன்னை வெளிப்படுத்துகிறார்: திருமறை நூல், நற்கருணை, மற்ற அருட்சாதனங்கள், பிறரன்பு, இந்த அன்புக்குரிய சைகைகள் உயிர்த்தெழுந்தவரின் ஒளிக்கதிரைக் கொணர்கின்றன.
   கிறிஸ்துவின் உயிர்ப்பால் நாம் ஒளியூட்டப் பெற்று, அவரது ஆற்றலால் உருமாற்றப் பெற்று, நம் வழியாக சாவின் அடையாளங்கள் இந்த உலகில் வாழ்வின் அடையாளங்களுக்கு வழிவிடட்டும்! இந்த சதுக்கத்தில் நான் ஏராளமான இளையோரைக் காண்கிறேன். இளம் சிறுவர்களே சிறுமியரே, இந்த உண்மையை உலகுக்கு கொண்டு செல்லுமாறு நான் உங்களுக்கு கூறுகிறேன்: ஆண்டவர் உயிரோடு இருக்கிறார், நமது வாழ்க்கை பயணத்தில் நம்மோடு நடக்கிறார். இந்த நம்பிக்கையை கண்முன் கொண்டிருங்கள், விண்ணகத்தில் இருந்து வரும் இந்த நம்பிக்கையில் நிலைத்திருங்கள். கிறிஸ்துவுக்கான உங்கள் சாட்சியம் போர்களாலும் பாவத்தாலும் தளர்ந்திருக்கிற இந்த உலகுக்கு நம்பிக்கையை கொணரட்டும்! முன் நோக்கிச் செல்லுங்கள் இளையோரே!