Tuesday, December 16, 2008

திருக்குடும்பம் பெருவிழா

நாள் : 28-12-2008

நற்செய்தி: லூக்கா 2:22-40

   மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்ற வேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள். ஏனெனில், 'ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்' என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது. அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது. அப்போது எருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார். 'ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை' என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார். அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்தபோது. சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி, 'ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர். ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு, நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை' என்றார். குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர். சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, ' இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும் ' என்றார். ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர்; மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்; அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோவிலைவிட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார். அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப்பற்றிப் பேசினார். ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்துமுடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள். குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.

கிறிஸ்து பிறப்பு பெருவிழா

நாள் : 25-12-2008
நற்செய்தி: லூக்கா 2:1-14

   அக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்தார். அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது. தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர். தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய, கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார். அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார். அப்பொழுது அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் இடையர்கள் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடையைக் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள். திடீரென்று ஆண்டவருடைய தூதர் அவர்கள்முன் வந்து நின்றபோது ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது; மிகுந்த அச்சம் அவர்களை ஆட்கொண்டது. வானதூதர் அவர்களிடம், ' அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் ' என்றார். உடனே விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து, ' உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக! ' என்று கடவுளைப் புகழ்ந்தது.

Tuesday, December 9, 2008

தி.வ.காலம் 4ஆம் ஞாயிறு

நாள் : 21-12-2008
நற்செய்தி: லூக்கா 1:26-38


   ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, 'அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்' என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார். வானதூதர் அவரைப் பார்த்து, ' மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது ' என்றார். அதற்கு மரியா வானதூதரிடம், ' இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே! ' என்றார். வானதூதர் அவரிடம், ' தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை ' என்றார். பின்னர் மரியா, ' நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும் ' என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.

தி.வ.காலம் 3ஆம் ஞாயிறு

நாள்: 14-12-2008

நற்செய்தி: யோவான் 1:6-8,19-28

   கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்; அவர் பெயர் யோவான். அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக்குறித்துச் சான்று பகர்ந்தார். அவர் அந்த ஒளி அல்ல; மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர். எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, 'நீர் யார்?' என்று கேட்டபோது அவர், 'நான் மெசியா அல்ல' என்று அறிவித்தார். இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார். அப்போது, 'அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா?' என்று அவர்கள் கேட்க, அவர், 'நானல்ல' என்றார். 'நீர் தாம் வர வேண்டிய இறைவாக்கினரா?' என்று கேட்டபோதும், அவர், 'இல்லை' என்று மறுமொழி கூறினார். அவர்கள் அவரிடம், 'நீர் யார்? எங்களை அனுப்பியவர்களிடம் நாங்கள் மறுமொழி சொல்லியாக வேண்டும்; எனவே உம்மைப்பற்றி என்ன சொல்கிறீர்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், ' ″ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் எனப் பாலைநிலத்தில் குரல் ஒன்று கேட்கிறது″ என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது என்னைப்பற்றியே' என்றார். பரிசேயரால் அனுப்பப்பட்ட அவர்கள் அவரிடம், 'நீர் மெசியாவோ எலியாவோ வர வேண்டிய இறைவாக்கினரோ அல்லவென்றால் ஏன் திருமுழுக்குக் கொடுக்கிறீர்?' என்று கேட்டார்கள். யோவான் அவர்களிடம், 'நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்; அவர் எனக்குப்பின் வருபவர்; அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை' என்றார். இவை யாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன. அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

Friday, November 28, 2008

டிசம்பர் மாத புனிதர்கள்

பெரியதாக பார்க்க படத்தை க்ளிக் செய்யவும்...