Wednesday, December 28, 2011

டிசம்பர் 28, 2011

கிறிஸ்தவ குடும்பங்கள் செபத்தின் கல்விக்கூடங்களாக திகழ திருக்குடும்பம் தூண்டட்டும் - திருத்தந்தை

    திருத்தந்தை 6ம் பவுல் மண்டபத்தில் குழுமி யிருந்த திருப்பயணிகளையும் சுற்றுலாப் பயணிக ளையும் புதன் பொது மறைபோதகத்துக்காக சந்தித்த திருத்தந்தை, நாசரேத்தூர் திருக்குடும்பத்தின் வாழ்வி னில் செபத்தின் இடம் குறித்து எடுத்துரைத்தார்.
   இந்த கிறிஸ்துமஸ் பெருவிழாக் காலத்தில் நாசரேத்தூர் திருக்குடும்பத்தின் வாழ்வில் செபத்தின் இடம் குறித்து தியானிக்க, செபம் குறித்த நம் புதன் மறைபோதகம் இன்று நம்மை அழைத்துச் செல்கி றது. கிறிஸ்துவின் விசுவாசமுடைய சீடர்களாக வளரவும் இறைப்பிரசன்ன மறை யுண்மை குறித்து ஆழ்ந்து தியானிக்கவும் நாம் இயேசு, மரியா மற்றும் யோசேப்பின் வீட்டி
னில் கற்றுக் கொள்கிறோம். கிறிஸ்துவின் வாழ்வு மறையுண்மைகளைத் தியானித்து செபிப்பதில் மிக உயரிய எடுத்துக்காட்டாக அன்னை மரியை நமக்குக் காட்டுகின்றன நற்செய்தி நூல்கள். நாமும் செபமாலையை செபிக்கும்போது, அதே மறையுண்மைகள் குறித்த அன்னை மரியின் ஆழ்தியானத்தில் நம்பிக்கை மற்றும் விசுவாசத்துடன் நம்மையும் இணைக்கிறோம்.
   வேலையிலும் செபத்திலும் இறைச்சட்டங்களைக் கடைபிடிப்பதிலும் பற்றுமாறா உறுதிப்பாட்டுடன் செயல்படவேண்டியதன் முக்கியத்துவம் குறித்து இயேசுவுக்கு கற்பித்ததன் வழி திருக்குடும்பத்தின் தந்தையெனும் தனக்குரிய அழைப்பை நிறைவு செய்தார் புனித யோசேப்பு. வானகத் தந்தையுடன் இயேசு கொண்டிருக்கும் தன்னிக ரில்லா உறவு, திருக்குடும்பத்தின் செபவாழ்வில் பிரதிபலித்தது மேலும் அனைத்துக் கிறிஸ்தவ செபத்தின் இதயமாகவும் அது உள்ளது. அனைத்து கிறிஸ்தவக் குடும்பங் களும் செபத்தின் கல்விக்கூடங்களாக விளங்க திருக்குடும்பத்தின் எடுத்துக்காட்டு தூண்டுவதாக. இந்த கல்விக்கூடங்களிலேயே பெற்றோர்களும் குழந்தைகளும் இறை வனின் அருகாமையைக் கண்டு கொள்கிறார்கள். அதையே இந்த கிறிஸ்துமஸ் நாட் களில் நாம் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம்.
   இவ்வாறு, 2011ம் ஆண்டின் இறுதிப் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Monday, December 26, 2011

டிசம்பர் 26, 2011

மறைசாட்சிகள் நன்னெறிகளின் ஆசிரியர்களும் திருச்சபையின் தூண்களும் ஆவர் - திருத்தந்தை

   கிறிஸ்மஸ் பெருவிழாவைத் தொடர்ந்து, அதற்கு அடுத்த நாள் திருச்சபையில் சிறப்பிக்கப்படும் முதல் மறைசாட்சியான புனித ஸ்தேவான் குறித்த சிந்தனைகளை இத்திங்கள் மூவேளை செப உரை யில் வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
   'ஸ்தேவான் அருளும் வல்லமையும் நிறைந்த வராக மக்களிடையே பெரும் அருஞ்செயல்களை யும் அரும் அடையாளங்களையும் செய்து வந்தார்' எனத் திருத்தூதர் பணிகள் நூலில் கூறப்பட்டுள்ளதை மேற்கோள்காட்டிப் பேசியத் திருத்தந்தை, ஸ்தேவான் என்ற பெயருக்கு 'மணிமகுடம்' என்ற பொருள் உண்டு என்பதையும் சுட்டிக் காட்டினார்.
   தன்மீது கல்லேறிந்தபோது ஸ்தேவான், 'ஆண்டவராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்' என்று வேண்டிக் கொண்டபின் முழந்தாள்படியிட்டு உரத்த குரலில், 'ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதேயும்' என்று சொல்லி உயிர்விட்ட நிகழ்வையும் தன் மூவேளை செப உரையின்போது எடுத்துரைத்த திருத்தந்தை, காலம் காலமாக மறைசாட்சிகள் திருச்சபை நன் னெறிகளின் ஆசிரியர்களாக, வாழும் சாட்சிகளாக, உயிருள்ள தூண்களாக, அமைதித் தூதர்களாக போற்றப்பட்டு வருகின்றார்கள் என்றும் கூறினார்.
   மூவேளை செப உரையின் இறுதியில், இவ்வுலகில் அமைதி, மற்றும் நீதியின் ஆட்சி தழைக்க செபிக்குமாறும் அழைப்பு விடுத்தத் திருத்தந்தை, நைஜீரியாவில் கிறிஸ்மஸ் நாளன்று கோவில்கள் தாக்கப்பட்டது குறித்து தன் ஆழ்ந்த கவலையை எடுத்துரைத்தார். பாதிக்கப்பட்டோருடன் தன் ஒருமைப்பாட்டையும், உடனிருப்பை யும் வெளியிட்டதுடன், துன்பங்க
ள், அழிவுகள், மரணங்களைக் கொண்டு வரும் வன்முறைகளைக் கைவிட்டு, அமைதியை நோக்கிச் செல்லும் அன்பு, மதிப்பு மற்றும் ஒப்புரவின் வழிகளைக் கைகொள்ளுமாறும் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

Sunday, December 25, 2011

டிசம்பர் 25, 2011

குழந்தையாக பிறந்த இறைவன் வன்முறைகளுக்கு எதிராக அமைதியை கொணர்கிறார் - திருத்தந்தை

   கிறிஸ்து பிறப்பு பெருவிழா இரவுத் திருப்பலியை 24ம் தேதி சனிக்கிழமை உள்ளூர் நேரம் முன்னிரவு 10 மணிக்கு உரோம் நகர் தூய பேதுரு பேராலயத்தில் துவக்கிய திருத்தந்தை தன் மறையுரையில், வலுவற்ற குழந்தையாய் அவதரித்திருக்கும் இயேசு பாலன் தன் வல்லமையை வெளிப்படுத்த வேண்டும் என இறைஞ்சினார். 
   "ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்: ஆட்சிப் பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர் என்று அழைக்கப்படும். அவரது ஆட்சியின் உயர்வுக்கும் அமைதி நிலவும் அவரது அரசின் வளர்ச்சிக்கும் முடிவு இராது" என்ற இறைவாக்கினர் எசாயா நூல் 9ம் பிரிவின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி, வலிமையற்ற நிலையில் அக்குழந்தை பிறந்தாலும் அதுவே வல்லமையுள்ள கடவுள் என்பதை மீண்டும் எடுத்துரைத்தார் திருத்தந்தை. அனைத்துத் தேவைகளுக்கும் பிறரையேச் சார்ந்திருக்கும் நிலையி லுள்ள இக்குழந்தை வழங்கும் அமைதிக்கு முடிவே இராது எனவும் தனது மறையுரையில் எடுத்தியம்பினார் பாப்பிறை.
   குழந்தையாம் இந்த இறைவன் வன்முறைகளுக்கு எதிராக ஒரு செய்தியைக் கொணர்கிறார், அதுவே அமைதி. இவ்வுலகம் மீண்டும் மீண்டும் பல்வேறு இடங்க ளில் பல்வேறு வழிகளில் வன்முறைகளால் அச்சுறுத்தப்பட்டுள்ள இவ்வேளையில் நாம் இறைவனை நோக்கி, "இறைவா, உம் குழந்தை நிலையையும் குழந்தைக்குரிய சக்தியற்ற நிலையையும் கண்டு அன்பு கூர்கிறோம். ஆனால் அதேவேளை, இவ் வுலகின் வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள யாம், உம் வல்லமையை வெளிப் படுத்துமாறு இறைஞ்சுகிறோம். மக்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலை ஒடித் தெறியும். அமளி நிறைந்த போர்க்களத்தில் போர்வீரன் அணிந்திருந்த காலணி களையும், இரத்தக் கறைபடிந்த ஆடைகள் அனைத்தையும் நெருப்புக்கு இரையாக எரித்தருளும். அதன் வழி இவ்வுலகில் உம் அமைதி வெற்றிவாகைச் சூடுவதாக" என வேண்டுவோம்.
   இவ்வாறு தன் இரவுத் திருப்பலி மறையுரையின் போது குழந்தை இயேசுவை நோக்கிய செபத்தை முன்வத்தார் திருத்தந்தை.

Monday, December 19, 2011

டிசம்பர் 18, 2011

அன்னை மரியின் சந்தேகம் இறைவிருப்பத்தை
புரிந்துகொள்ளும் ஒரு முயற்சியே! - திருத்தந்தை

   அன்னை மரிக்கு மங்கள வார்த்தை அறிவிக்கப் பட்டதை மையமாகக் கொண்டுள்ள  இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் குறித்து தியானிக்கையில் அன்னை மரியின் கன்னிமை குறித்து கருத்துக் களைப் பகிர்ந்துகொள்ள விழைகின்றேன் என தன் ஞாயிறு மூவேளை செப உரையைத் தொடங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். அன்னை மரியா கன்னியாக இருந்துகொண்டே இயேசுவைக் கருத் தாங்கினார் என்ற திருத்தந்தை, 'கன்னி கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள், அக்குழந்தைக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவர்' என்ற எசாயா இறைவாக்கினரின் வார்த்தைகளையும் மேற்கோள் காட்டினார்.
   இந்த பழமையான இறைவாக்கு அன்னை மரியிம் இயேசு உடலெடுத்ததில் நிறைவேறினாலும், இங்கு மனிதனாகக் கருவில் வளர்ந்தது இறைவனே என்பதை யும், மரியின் கன்னிமை மற்றும் இயேசுவின் தெய்வீகத்தன்மை நமக்கு ஓர் உறுதிப் பாடாக உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இயேசுவின் பிறப்பைக் குறித்த முன்னறிவிப்பில் 'இது எங்கனம் ஆகும்?' என அன்னை மரி கேள்வி எழுப்பி யது சந்தேகத்தின் வெளிப்பாடல்ல, மாறாக, இறைவிருப்பத்தை மேலும் புரிந்துகொள் வதற்கான முயற்சியே என்றும் எடுத்துரைத்தார்.
   மரியாவின் 'ஆம்' என்ற பதில் கன்னிமையில் அவரைத் தாயாக்கியது என்ற பாப்பிறை, மரியாவின் கன்னிமை தனித்துவம் வாய்ந்தது எனவும், அது விசுவா சத்தின் சாராம்சம் என்றும் கூறினார். கடவுளில் ஆழமான நம்பிக்கை கொண்ட எவரும், தூய ஆவியின் செயலால் இயேசுவையும் அவரது இறை வாழ்வையும் தம்மில் வரவேற்க முடியும் எனவும், மரியா மாசற்ற கன்னியாக கடவுளை நமக்கு கொண்டுவந்தார் என்றும் கூறிய திருத்தந்தை, இறுதியாக கூடியிருந்த அனைவ ருக்கும் கடவுளின் ஆசீரை வேண்டுவதாகவும் குறிப்பிட்டார்.

Wednesday, December 14, 2011

டிசம்பர் 14, 2011

புதன் மறைபோதகம்: இறைத்தந்தையின் விருப்பத்தில் முழு நம்பிக்கை கொண்டு நாம் செபிப்போம் - திருத்தந்தை

    கிறிஸ்து பிறப்பு பெருவிழாவைக் கொண்டாட உலகமே தன்னைத் தயாரித்து வரும் இவ்வேளை யில் உரோம் நகரமும் வண்ண விளக்குகளாலும் குடில் தயாரிப்புகளாலும் தன்னை அலங்கரித்து, திருப்பயணிகளுக்காக காத்து நிற்கிறது. இத்தகைய பின்னணியில், திருத்தந்தை 6ம் பால் மண்டபத்தில் இன்று திருப்பயணிகளை சந்தித்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இயேசுவின் செபம், குறிப்பாக குணப் படுத்தும் புதுமைகளின் போதான அவரின் செபம் குறித்து இன்று நோக்குவோம் என இப்புதன் மறைபோதக உரையைத் துவக்கினார்.
   புனித மாற்கு நற்செய்தி கூறும், காதுகேளாதவரைக் குணப்படுத்திய புதுமையிலும், புனித யோவான் நற்செய்தியில் நாம் காணும், இலாசர் உயிர்ப்பிக்கப்பட்ட புதுமை யிலும், அப்புதுமைகளை நிறைவேற்றும் முன்னர், மனிதத் துன்பங்களின் முன்னிலை யில் இயேசு செபிப்பதைக் காண்கிறோம். இந்த இரு வேளைகளிலும் இயேசு செபித்தது, துன்பங்களோடு தன்னை ஆழமாக அடையாளம் காணும் அவரின் நிலையை மட்டுமல்ல, தந்தையோடு அவரின் தனித்துவ உறவையும் வெளிப் படுத்துவதாக உள்ளது. காதுகேளாதவரைக் குணப்படுத்திய புதுமையில், இயேசுவின் இரக்க உணர்வானது ஒரு பெருமூச்சாக வெளிப்பட்டு, செபமாகத் தொடர்கிறது. இலாசரை உயிர்ப்பித்த புதுமையில், மரியா மற்றும் மார்த்தாவின் துன்பத்தைக் கண்டு வேதனையுறும் இயேசு, தன் நண்பனின் கல்லறை முன் கண்ணீர் விட்டு அழுகிறார். அதே சமயம், தந்தையின் விருப்பம் மற்றும் தன் பணி மற்றும் தனித்தன்மையின் ஒளியில் இலாசரின் துயர்நிறை மரணத்தை நோக்குகிறார் இயேசு.
   நாமும் நம்முடைய செபங்களில் இறைத்தந்தையின் விருப்பத்தில் முழு நம்பிக்கைக் கொள்ள வேண்டும், மற்றும், அனைத்தையும் அன்பின் அறிவுக்கு புலப்படாத திட்டத்தின் ஒளியில் நோக்க வேண்டும் என இயேசுவின் எடுத்துக்காட்டு நமக்குக் கற்பிக்கின்றது. கடவுள் நமக்குத் தரவல்ல மிகப்பெரும் கொடை அவரின் நட்பே என்பதை உணர்ந்தவர்களாக நாம் நம் ஒவ்வொரு செபத்திலும் விண்ணப் பங்களையும், புகழுரைகளையும் நன்றியையும் இணைக்க வேண்டும். அதேவேளை, நம் செப எடுத்துக்காட்டு, தேவையில் இருக்கும் நம் சகோதர சகோதரிகளை நோக்கி நம்மைத் திறப்பதாகவும், இறைமீட்பின் பிரசன்னம் இவ்வுலகில் இருப்பதை பிறருக்குச் சுட்டிக்காட்டுவதாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு தன் புதன் மறை போதக உரையை வழங்கிய திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Monday, December 12, 2011

டிசம்பர் 11, 2011

உலகின் உண்மை ஒளியாகிய இயேசுவின் மீது
நம் கவனத்தைத் திருப்புவோம் - திருத்தந்தை

   மழை பெய்வதையும் பொருட்படுத்தாமல் வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா வளாகத்தில் இஞ்ஞாயிறு நண்பகலில் கூடியிருந்த பல்லாயிரக் கணக்கானத் திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கிறிஸ்தவர்கள், திருவருகைக் காலத்தில் மின்னும் விளக்குகளால் கவனம் கலைக்கப்படாமல் வாழ அழைக்கப்படுகிறார்கள் என்று கூறினார். 
   இந்த திருவருகைக் காலத்தில் கிறிஸ்துமஸ் தயாரிப்பாக கடைவீதிகளில் மினுமினுக்கும் ஒளிவிளக்குகளில் நமது கவனத்தை வைக்காமல் உலகின் உண்மையான ஒளியாகிய இயேசு கிறிஸ்துவின் வருகை மீது நமது கவனத்தைச் செலுத்த வேண்டுமென்று திருத்தந்தை வலியுறுத்தினார்.
   மகிழ்ச்சி ஞாயிறு என்றழைக்கப்படும் திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறு பற்றிய சிந்தனைகளை வழங்கிய அவர், ஓய்வு மற்றும் இளைப்பாறுதலுக்கு காலம் தேவை, அதேநேரம், உண்மையான மகிழ்ச்சி கேளிக்கைகளில் இல்லை என்றார்.
   மனிதனின் இதயம் கடவுளில் இளைப்பாற்றி காணும்வரை அது சலனமற்ற ஆழ்ந்த அமைதியைப் பெற முடியாது என்று ஹிப்போ நகர் ஆயர் புனித அகுஸ்தீன் கூறியதையும் குறிப்பிட்ட திருத்தந்தை, உண்மையான மகிழ்ச்சியை ஒருவர் தனது சொந்த முயற்சியால் பெற முடியும் என்று எண்ணக் கூடாது, ஆனால் அது வாழும் மனிதாரகிய இயேசுவோடு கொள்ளும் உறவிலிருந்து பெறப்படுவது என்று கூறினார்.
   மேலும், தங்கள் வீட்டுக் குடில்களில் வைக்கும் சிறிய பாலன் இயேசு உருவங்களைத் திருத்தந்தை ஆசீர்வதிப்பதற்காக அவற்றுடன் இம்மூவேளை செப உரையில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான சிறாருக்குக் கிறிஸ்மஸ் வாழ்த்தும் நன்றியும் சொன்னார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். திருத்தந்தையின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த சிறார், கைதட்டி ஆரவாரித்து பலூன்களைப் பறக்கவிட்டனர்.

Friday, December 9, 2011

டிசம்பர் 8, 2011

அன்னை மரியாவை ஒரு அருள் வடிகாலாக
இறைவன் தேர்ந்தெடுத்திருக்கிறார் - திருத்தந்தை

   இவ்வியாழனன்று (டிசம்பர் 8) கொண்டாடப்பட்ட அன்னை மரியாவின் அமல உற்பவ திருநாளை யொட்டி சிறப்பு மூவேளை செப உரையை வழங் கியத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், பாவத்தால் மனித குலம் இழந்த பல நன்மைகளை தன் மகன் வழியாக இறைவன் மீண்டும் தருவதற்கு விழைந்த தாலேயே, ஒரு அருள் வடிகாலாக மரியாவைத் தேர்ந்தெடுத்தார் என்றும், அருள் நிறைந்தவரே வாழ்க என்று அன்னை மரியாவை வாழ்த்தும் போதெல்லாம், அருள் வடிவான இறைவனை நமக்கு வழங்கியவர் அவர் என்பதை நாம் நினைவு கூர்கிறோம் என்று கூறினார்.
   அமல அன்னைப் பெருவிழா உருவானதற்குக் காரணமாயிருந்த திருத்தந்தை 11ம் பத்திநாதர், மற்றும் அன்னையின் அமல உற்பவம் குறித்து இறையியல் ஆக்கங்களை தந்துள்ள பல புனிதர்கள் ஆகியோரின் எண்ணங்களை தன் உரையில் மேற் கோள்களாகக் காட்டிப் பேசினார் திருத்தந்தை. திருவருகைக் காலத்தில் இருக்கும் நாம் அனைவரும் அன்னை மரியாவைப் போல் இறைவனை நம் வாழ்வில் முழுமையாக வரவேற்கக் காத்திருப்போம் என்று கூறி, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
   தன் மூவேளை செப உரையின் இறுதியில் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு இஸ்பானியம், ஜெர்மன், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் மொழிகளில் அன்னை மரியாவின் பெருவிழா வாழ்த்துக்களைக் கூறிய திருத்தந்தை, அங்கு கூடியிருந்த அமல மரியா பாப்பிறைக் கழகத்தின் உறுப்பினர் களுக்குத் தன் சிறப்பான வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.


   இவ்வியாழன் மாலை, “மரியா, அமல உற்பவி” என்ற விசுவாச சத்தியம், திருத்தந்தை 9ம் பத்தி நாதரால் 1854ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி பிரக டனப்படுத்தப்பட்டதை நினைவு கூரும் விதமாக உரோம் இஸ்பானிய படிகளின் அருகில் அமைக்கப் பட்டுள்ள அன்னைமரி திருவுருவத்தின் முன்பாக கூடியிருந்த விசுவாசிகளோடு இணைந்து செபித்த திருத்தந்தை பின்வருமாறு உரையாற்றினார்:
  திருச்சபை தனது வரலாறு முழுவதும் அடக்கு முறைகளால் துன்புற்று வருகின்ற போதிலும் அது எப்பொழுதும் இறைவனின் ஒளியாலும் பலத்தாலும் ஆதரவடைந்து வருகின்றது. எனினும் திருச்சபை எதிர் கொள்ளும் ஒரே ஆபத்து அதன் உறுப்பினர்கள் செய்யும் பாவமே; திருச்சபை தனது உறுப்பினர்கள் செய்யும் பாவத்திற்குப் பயப்பட வேண்டும்.
   அன்னை மரியா, பாவக்கறையின்றி இருந்தார், திருச்சபையும் தூயது, ஆயினும் அது நம் பாவங்களால் கறைப்பட்டுள்ளது. இதனாலே கிறிஸ்தவர்கள் உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ முயற்சிக்கும் போது, அன்னை மரியாவின் உதவியை நாடுகின்றனர். நமக்கு உண்மையிலே தேவைப்படும், குறிப்பாக மிகுந்த இன்னல்களை எதிர்நோக்கும் இத்தாலி, ஐரோப்பா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளுக்குத் தேவைப்படும் நம்பிக்கையை அன்னை மரியா கொடுக்கிறார்.
   “பெண், கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார், நிலா அவருடைய காலடியில் இருந்தது, அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார்” என்ற திரு வெளிப்பாட்டு வசனங்களை மையமாக வைத்து உரையாற்றிய திருத்தந்தை, இந்தப் பெண் மரியாவே என்றும், இவர் முழுமையும் இறைவனின் ஒளியால் சூழப்பட்டு இறைவனில் வாழ்ந்தார் என்றும் திருத்தந்தை கூறினார்.
   அமலோற்பவ அன்னை விழாவாகிய இவ்வியாழனன்று அன்னை மரியாவிடம் செபித்து அவருக்கு வெள்ளைநிற ரோஜா மலர்களையும் சமர்ப்பித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

Wednesday, December 7, 2011

டிசம்பர் 7, 2011

புதன் மறைபோதகம்: இயேசுவே நம் செபத்திற்கு எடுத்துக்காட்டும் ஆதாரமுமாக இருக்கிறார் - திருத்தந்தை

   இத்தாலியின் உரோம் நகரில் திருத்தந்தையின் புதன் மறைபோதகத்தில் பங்கு பெற வந்த திருப் பயணிகளை, திருத்தந்தை 6ம் பால் மண்டபத்தில் சந்தித்து உரை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். கிறிஸ்தவ செபம் குறித்த நம் மறைக் கல்விப் போதனையில், இயேசுவின் படிப்பினைகள் மற்றும் எடுத்துக்காட்டுக்கள் குறித்து அண்மைப் புதன் கிழமைகளில் நோக்கி வருகிறோம் எனத் தன் இவ்வாரப் பொது மறைபோதகத்தைத் துவக்கினார் திருத்தந்தை.
   இயேசு தூய ஆவியால் பேருவகையடைந்து, 'தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்' எனக் கூறிய வார்த்தைகளை மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திகளில் வாசிக்கின்றோம். தூய ஆவியில் தந்தையுடன் ஆழ்ந்த ஐக்கியத்தில் தன் மூலத்தைக் கொண்டுள்ளது இந்த உன்னதச் செபம். என்றும் நிலைத்திருக்கும் மகனாக இருக்கும் இயேசு கிறிஸ்து ஒருவரே தந்தையை அறிவார், தந்தையின் விருப்பத்திற்குத் தன்னை முற்றிலும் திறப்பதில் பேருவகை அடைகிறார். மேலும், 'தந்தை யாரென்று மகனுக்குத் தெரியும்; மகன் யாருக்கு வெளிப்படுத்த விரும்புகிறாரோ அவருக்கும் தெரியும். வேறு எவரும் தந்தையை அறியார்'. தூய மனதுடையோராகவும் இறைவிருப்பத்திற்குத் தங்களைத் திறந்தவர்களாகவும் இருக்கும் குழந்தைகளுடன் இறைவன் குறித்த அறிவைப் பகிர்ந்து கொள்ளும் தன் விருப்பத்தை இச்செபத்தில் வெளிப்படுத்துகிறார் இயேசு. 
   தந்தையைப் புகழ்ந்து பாடும் வார்த்தைகளைத் தொடர்ந்து இயேசு 'பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லோரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். ஆம்., என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது' என அழைப்பு விடுப்பதை மத்தேயு நற்செய்தியில் வாசிக்கின்றோம். இயேசுவே நம் செபத்திற்கு எடுத்துக்காட்டும் ஆதாரமும். அவர் வழியாக தூய ஆவியில் நாம் நம்பிக்கையுடன் தந்தையாம் இறைவனை நோக்கித் திரும்ப முடியும். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதன் வழி நாம் உண்மையான விடுதலையையும் அமைதியையும் கண்டுகொள்ள முடியும் என்ற உறுதியுடன் அவரை நோக்கித் திரும்புவோம். 
   இவ்வாறு தன் இவ்வாரப் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய பாப்பிறை, 1943ம் ஆண்டு வான்குண்டுவீச்சு மூலம் தகர்க்கப்பட்ட இத்தாலியின் மத்தியப் பகுதியில் உள்ள செக்கானோ என்ற ஊரின் புனித பேதுரு பங்குக் கோவில் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டதன் 50 ஆண்டு நிறைவையும், தென்னாப்ரிக்காவில் மறைபோதக குரு மிச்சேல் டி’அன்னுசி கொடூரமான முறையில் கொல்லப்பட்டதன் 10ம் ஆண்டு நிறைவையும் நினைவு கூர்ந்தார். மறைப்போதகத்தின் இறுதியில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

Monday, December 5, 2011

டிசம்பர் 4, 2011

எளிமையான ஒரு வாழ்வைத் தேர்வு செய்யுமாறு
திருமுழுக்கு யோவான் அழைக்கிறார் - திருத்தந்தை

   இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது உரோம் நகர் புனித பேதுரு பேராலய வளாகத்தில் கூடியிருந்த ஏறத்தாழ இருபதாயிரம் விசுவாசிக ளோடு இணைந்து மூவேளை செபத்தைச் செபித்து உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கிறிஸ்து பிறப்பு பெருவிழாவிற்காக நம்மைத் தயாரித்துவரும் இத்திருவருகைக் காலத்தில் நம் வாழ்வை நேர்மையான முறையில் ஆய்வுச் செய்து, எளிமையான ஒரு வாழ்வைத் தேர்வு செய்யுமாறு புனிதத் திருமுழுக்கு யோவான் அழைப்பு விடுக்கிறார் என்று கூறினார்.
   நாம் செல்வந்தராகும்படி ஏழ்மையைத் தேர்ந்துகொண்ட இயேசுவின் வருகைக்கு தயாரிக்கும் நாம், ஒட்டகத் தோலாடையை உடுத்தி, வெட்டுக்கிளியையும் காட்டுத் தேனையும் உண்ட புனித திருமுழுக்கு யோவான், மனந்திரும்பிய வாழ்வுக்கு நமக்கு விடுக்கும் அழைப்பிற்குச் செவிமடுப்போம் என்ற திருத்தந்தை, நம் பாவங்களை ஏற்று, மனம் வருந்துவது, உள் மனமாற்றத்திற்கு நம்மை இட்டுச் செல்லவேண்டும் என்ற மேலான ஓர் அழைப்பை திருமுழுக்கு யோவான் முன்வைக்கிறார் எனவும் கூறினார்.
   குடியேற்றதாரர்களுக்கான உலக அவையின் 50ம் ஆண்டு விழா வரும் நாட்களில் ஜெனீவாவில் இடம்பெற உள்ளதை, தன் மூவேளை செப உரையில் குறிப்பிட்ட பாப்பிறை, பல்வேறு துன்ப நிலைகளால் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மக்களுடன் நாம் ஒருமைப்பாடு கொள்ள வேண்டும் என்ற அழைப்பையும் விடுத்தார்.

Friday, December 2, 2011

டிசம்பர் 2, 2011

மதத்திற்கு எதிரான பகுத்தறிவைத் தவிர்க்கவேண்டியது 
இன்றைய காலத்தின் தேவை - திருத்தந்தை

   அனைத்துலக இறையியல் அவையின் நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்து கொள்வோரை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்த பாப்பிறை, மீட்பைப் புரிந்து கொள்ளுதலை ஒளிர்விக்க வரும் இறைமகனுக்காக காத் திருக்கும் இத்திருவருகைக் காலத்தில், நம் எதிர்பார்ப்பு களின் நம்பிக்கையை உயிரூட்டமுடையதாக வைத்திருப் போம் என அழைப்பு விடுத்தார்.
   இறைவன் பற்றிய கேள்வி, ஒரே கடவுள் கொள்கை, திருச்சபை சமூகக்கோட்பாடுகளின் அர்த்தம் போன்றவை குறித்து அண்மைக் காலங்களில் இந்த இறையியல் அவை விவாதித்து வருவது பற்றி தன் மகிழ்ச்சியினை வெளிப்படுத்திய திருத்தந்தை, மூவொரு கடவுள் கொள்கையின் ஒளியில் ஒரே கடவுள் கொள்கை குறித்து விளக்கமளித்த பாப்பிறை, இது மனிதர்களிடையே சகோதரத்துவம் பற்றிய எண்ணங்களை நமக்கு ஒளிர்விக்கின்றது என்றார்.
   இறையியல் மெய்யியலுடன் நடத்தும் பலன் தரும் பேச்ச்சுவார்த்தைகள், தனிமனித மற்றும் அனைத்துலக அமைதிக்கு உண்மையான மூல ஆதாரமாக இருக்க முடியும் என அவர் மேலும் எடுத்துரைத்தார். விசுவாசத்திற்கும் பகுத்தறிவுக்கும் இடையேயுள்ள உறவுக்கு கத்தோலிக்கத் திருச்சபை முக்கியத்துவம் கொடுத்ததன் வழியேதான் பல்கலைக்கழகங்கள் பிறந்தன எனவும் சுட்டிக்காட்டினார் பாப்பிறை.
   பகுத்தறிவுக்கு எதிரான வன்முறை மதத்தையும், மதத்திற்கு எதிரான பகுத்தறிவையும் தவிர்க்கவேண்டியது இன்றைய காலத்தின் தேவை என்பதைச் சுட்டிக்காட்டிய பாப்பிறை, பொதுநலனுக்கான நம் பணியின் போது, நம்மோடு விசுவாசத்தைப் பகிர்ந்து கொள்ளாதவர்களுடனும் நாம் ஒத்துழைத்து, சமூகத்திற்கான நம் உண்மையான மற்றும் ஆழமான அர்ப்பணத்தை வெளிப்படுத்த வேண்டிய தேவையையும் வலியுறுத்தினார்.