Wednesday, May 30, 2012

மே 30, 2012

புதன் மறைபோதகம்: 'ஆமென்' என்தில் இயேசுவின் கீழ்ப்படிதலை நாம் எதிரொலிக்கிறோம் - திருத்தந்தை

   கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல், திருப் பயணிகள், சுற்றுலாப்பயணிகள் என மக்கள் பெரும் எண்ணிக்கையில் திருத்தந்தையின் மறையுரைக்கு செவிமடுக்க வருவதால், இப்புதன் பொது மறை போதகமும் தூய பேதுரு பேராலய வளாகத்திலேயே இடம்பெற்றது. கடந்த சில வாரங்களாக 'புனித பவு லின் மடல்களில் செபம்' குறித்த சிந்தனைகளை வழங்கி வரும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இந்த வாரமும் அதே தலைப்பிலேயேத் தொடர்ந்தார்.
   மனித குலத்திற்கு கடவுள் 'ஆம்' என வழங்கிய பதிலுரையும், அவரின் அனைத்து வாக்குறுதிகளின் நிறைவுமே இயேசு எனவும், நாம் கடவுளைப் போற்றிப் புகழும் போது இயேசுவின் வழியாக 'ஆமென்' எனச் சொல்கிறோம் (2 கொரி 1:19-20) என்றும் உறுதிபடக் கூறுகிறார் தூய பவுல். தூய பவுலைப் பொறுத்தவரையில், செபம் என்பது அனைத்திற்கும் மேலாக இறைவனின் கொடை. இது, தன் மகனையே இவ்வுலகிற்கு அனுப்பிய நிகழ்வில் முற்றிலுமாக வெளிப்படுத்தப்பட்ட இறைவனின் பற்றுறுதி கொண்ட அன்பில் சாணைத் தீட்டப்பட்டதும் தூய ஆவியின் கொடை
யும் கும். நம் இதயங்களில் பொழியப்பட்ட தூய ஆவி, கிறிஸ்துவில் நமக்கு கடவுள் வழங்கிய 'ஆம்' என்பதன் இருப்பைத் தொடர்ந்து உறுதி செய்வதுடன், இறைவனுக்கு 'ஆம்', அதாவது 'ஆமென்' என உரைக்க பலம் தருபவராகவும் விளங்கி, தந்தையாம் இறைவனை நோக்கி நம்மை வழிநடத்துகிறார். இஸ்ரயேலின் தொன்மைகால வழிபாட்டுச் செபங்களில் தன் மூலத்தைக் கொண்டுள்ளதும், தொடக்க திருச்சபை யால் எடுத்துக் கொள்ளப்பட்டதுமான 'ஆமென்' என்ற பதத்தின் பயன்பாடு, இறை வார்த்தையில் நம் உறுதியான விசுவாசத்தையும், இறைவனின் வாக்குறுதிகளில் நம் நம்பிக்கையையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. இறைத்தந்தையின் விருப்பத்திற்கு இயேசுவின் கீழ்ப்படிதலை, நமது தனி மற்றும் பொது செபத்தை நிறைவு செய்யும் '
ஆமென்' என்பதன் வழியாக நாம் எதிரொலிக்கிறோம். மேலும், இறைவனுடன் ஒன்றிப்பில் புதிய, மாற்றம் பெற்ற வாழ்வை வாழ, தூய ஆவியின் கொடை வழியாக வலிமை பெறுகிறோம்.
   இவ்வாறு தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, உரோம் நகருக்கு அருகேயுள்ள காஸ்தல் கந்தோல்ஃபோவில் இடம்பெறும் புத்த-கிறிஸ்தவ கருத்தரங்கில் பங்குபெறுவோருக்கும், வியட்நாம், இந்தியா, அயர்லாந்து, இங்கி லாந்து, நார்வே, இந்தோனேசியா, ஜப்பான், அமெரிக்க ஐக்கிய நாடு ஆகியவை களிலிருந்து வந்திருந்த ஆங்கிலமொழி பேசும் திருப்பயணிகளுக்கும் தன் வாழ்த்துக் களை வெளியிட்டு, இறுதியில் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Sunday, May 27, 2012

மே 27, 2012

மனித ஒற்றுமை, புரிந்துணர்தல் மற்றும் பகிர்தலின்
விழாவாக பெந்தக்கோஸ்து இருக்கிறது - திருத்தந்தை

   தூய ஆவியாரின் பெருவிழாவை முன்னிட்டு, இன்று உரோம் தூய பேதுரு பேராலயத்தில் திருப் பலி நிறைவேற்றிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், பின்வருமாறு மறையுரை வழங்கினார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   பெந்தக்கோஸ்து விழா நாளில், உங்களோடு திருப்பலி நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடை கிறேன். இந்த மறைபொருள் திருச்சபையின் திரு முழுக்கினைக் கொண்டிருக்கிறது. திருச்சபைக்கு தொடக்க வடிவத்தையும், அதன் பணிக்கான உந்துதலையும் வழங்கிய ஒரு நிகழ்வு இது. இந்த வடிவமும் உந்துதலும் எப்பொழுதும் நிலைத்திருப்பதுடன், எப்பொழுதும் சரியான நேரத்தில், சிறப்பாக திருவழிபாட்டுச் செயல்கள் மூலம் புதுப்பிக்கப் படுகின்றன.
   இந்த காலைப் பொழுதில் பெந்தக்கோஸ்து மறைபொருளின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்க விரும்புகிறேன். மனித ஒற்றுமை, புரிந்துணர்தல் மற்றும் பகிர்தல் ஆகியவற்றின் விழாவாக பெந்தக்கோஸ்து இருக்கிறது. தகவல் தொடர்பு வளர்ச்சி களால் புவியியல் தூரங்கள் மறைந்தது போல தோன்றினாலும், மக்களிடையே புரிதலும் பகிர்தலும் மேலோட்டமானவையாகவும் கடினமானவையாகவுமே உள்ளன என்பதை நாம் அனைவரும் காண முடிகிறது. ஏற்றத்தாழ்வுகள் மோதலுக்கு வழி வகுக்கின்றன; தலைமுறைகளுக்கு இடையிலான உரையாடல் கடினமாகி, சில நேரங்களில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன; மக்கள் சண்டையிலும் ஆக்கிர மிப்பிலும் ஈடுபட்டிருப்பதை நாம் அன்றாட நிகழ்வுகளாக பார்க்கிறோம்; ஒருவர் மற்றவரைப் புரிந்துகொள்தல் மிகவும் கடினமானதாக உள்ளது; மேலும், மக்கள் தங்கள் வட்டத்துக்குள்ளேயே இருக்க விரும்புவதுடன் தங்கள் சொந்த விருப்பங் களைப் பெருக்கி கொள்கின்றனர். இத்தகையச் சூழலில், நமக்கு மிகவும் தேவையான ஒற்றுமையை நாம் உண்மையில் கண்டுபிடிக்கவோ அனுபவித்துணரவோ முடியுமா?
   பழைய ஏற்பாட்டில், தங்களை கடவுளுக்கு இணையாக்க விரும்பியவர்கள் பாபேல் கோபுரத்தைக் கட்டிய நிகழ்வைக் காண்கிறோம். கடவுளின் இடத்தில் தங் களை வைக்க விரும்பிய அவர்கள், ஒருவர் மற்றவருக்கு எதிராக செயல்படத் தொடங்கினர். அத்தகைய ஒரு சூழல்தான் இப்பொழுதும் நிலவுகிறது. அறிவியல் உள்ளிட்டவற்றில் ஏற்பட்ட வளர்ச்சி, நாம் இயற்கைக்கு மேற்பட்ட வகையில் செயலாற்ற பலம் அளிக்கிறது. நமக்கு தேவையானவற்றை நாமே உருவாக்கவும் கட்டவும் முடியும் என்ற நிலையில், கடவுள் தேவையற்றவராகவும் அர்த்தமற்றவராகவும் காணப் படுகிறார். நாம் மீண்டும் ஒரு பாபேல் அனுபவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நாம் உணரவில்லை. தகவல் தொடர்பில் வளர்ச்சி பெற்றிருந்தும், நமது புரிந்துணர்தல் அதிகரித்திருப்பதாக நாம் கூற முடியுமா? அவநம்பிக்கை, சந்தேகம், பயம் போன்ற உணர்வுகளே மேலோங்கியிருக்கும் நிலையில், தங்களுக்குள் மனித உறவுகளை இழந்து, ஒருவர் மற்றவருக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையைத் தானே காண்கிறோம். அப்படியானால் ஒற்றுமையும் இணக்கமும் உண்மையிலேயே இருக்க முடியுமா? எப்படி?
   இதற்கான விடையை மறைநூல் நமக்கு தருகிறது: ஒற்றுமை என்பது கடவுளின் ஆவியின் கொடையாக மட்டுமே இருக்க முடியும். தொடர்புகொள்வதற்கான புதிய இதயத்தையும், புதிய மொழியையும், புதிய திறனையும் அது நமக்கு வழங்குகிறது. இதுதான் பெந்தக்கோஸ்து நாளன்று நிகழ்ந்தது. ஈஸ்டருக்கு 50 நாட்களுக்கு பின்பு அந்த காலை வேளையில், எருசலேமில் பலத்த காற்று வீசியது; தூய ஆவியின் நெருப்பு கூடியிருந்த சீடர்கள்மீது இறங்கியது. அவர்கள் ஒவ்வொருவரின் தலை மீதும் வந்து அமர்ந்ததுடன் அவர்களில் ஒரு தெய்வீக நெருப்பை, உருமாற்றும் திறனுடைய அன்பின் நெருப்பை பற்றியெரியச் செய்தது. அவர்களின் பயம் மறைந்தது, அவர்களது உள்ளங்கள் புதிய பலத்தால் நிரப்பப்பட்டன, அவர்கள் நாவு தளர்ந்து சுதந்திரமாக பேசத் தொடங்கினர், அதன் வழியாக இயேசு இறந்து, உயிர்த்தெழுந்த செய்தியை அனைவரும் புரிந்துகொள்ள முடிந்தது. பிரிவினையும் புரிந்துகொள்ளாமையும் இருந்த இடத்தில், பெந்தக்கோஸ்து நாளில் ஒற்றுமையும் புரிந்துணர்தலும் பிறந்தன.
   இன்றைய நற்செய்தியில் இயேசு, "உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்" என்று உறுதியளிக்கிறார். தூய ஆவியைப் பற்றி பேசும்போது, திருச்சபை என்பது என்ன என்பதையும், திருச்சபை எவ்வாறு ஒற்றுமையிலும் உண்மையில் ஒன்றித்தும் வாழவேண்டும் என்பதை இயேசு விளக்குகிறார். கிறிஸ்தவராக வாழ்வது என்பது நமது சொந்த வட்டத்துக்குள் அடைத்துக்கொள்வது அன்று, மாறாக மற்றவர்களை நோக்கி நம்மைத் திறந்து செல்வதே என்று அவர் நமக்கு கூறுகிறார்; அதாவது முழு திருச்சபையையும் நம்மில் வரவேற்க வேண்டும், அல்லது திருச்சபை நம்மை வரவேற்க அனுமதிக்க வேண்டும். எனவே நான் ஒரு கிறிஸ்தவனாக பேசும்போது, சிந்திக்கும்போது அல்லது செயல்படும்போது, நான் என்னை எனக்குள் அடைத்துக் கொண்டு நிற்பதில்லை - ஆனால் நான் அனைத்திலும், அனைத்தில் இருந்தும் தொடங்குகிறேன். அதனால் ஒற்றுமை மற்றும் உண்மையின் ஆவியான தூய ஆவி மக்களின் உள்ளங்களிலும் மனதிலும் தொடர்ந்து செயல்பட்டு, அவர்கள் ஒருவர் ஒருவரை சந்திக்கவும் வரவேற்கவும் உற்சாகமூட்ட முடியும். ஆவியானவர் முழு உண்மைக்கு (அதாவது இயேசுவுக்கு) நம்மை அறிமுகம் செய்து வைப்பதுடன், அதை ஆராயவும் புரிந்துகொள்ளவும் நம்மை வழிநடத்துகிறார். நமக்குள் நம்மை மூடிக் கொள்வதன் மூலம் நாம் புரிந்துணர்தலில் வளர முடியாது, மாறாக ஆழ்ந்த தன்னடக்க மனநிலையுடன், திருச்சபையாகிய நம்மில் கேட்பதிலும் பகிர்தலிலும் மட்டுமே முடியும். இப்பொழுது பாபேல் மற்றும் பெந்தக்கோஸ்தின் வேறுபாடு விளங்குகிறது. எங்கே மக்கள் கடவுளாக மாற விரும்புகின்றார்களோ, அவர்கள் தங் களுக்குள்ளே மற்றவருக்கு எதிராக குழி தோண்டுவதில் மட்டுமே வெற்றிபெறுகின் றனர். அவர்கள் ஆண்டவரின் உண்மையில் தங்களை வைக்கின்றபோது, அவரது தூய ஆவியின் செயலுக்கு தங்களை திறக்கின்றபோது, அது அவர்களுக்கு ஆதரவளித்து அவர்களை இணைக்கும்.
   இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், "தூய ஆவியின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழுங்கள்; அப்போது ஊனியல்பின் இச்சைகளை நிறைவேற்ற மாட்டீர்கள்" என்று கூறுகிறார். நாம் கிறிஸ்துவின் ஆவியின் உதவியால் மட்டுமே நன்மையின் தூண்டுதலை தேர்வுசெய்து பின்பற்ற முடியும். ஊனியல்பின் இச்சைகளை புனித பவுல் பட்டியலிடுகிறார்: பகைமை, சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம் போன்ற தன்னலம் மற்றும் வன்முறையின் பாவங்களாக அவை உள்ளன. உண்மையான மனிதராகவும் கிறிஸ்தவ வழியில் அன்பிலும் வாழ இவை நம்மை அனுமதிப்ப தில்லை. "தூய ஆவியின் கனியோ அன்பு, மகிழ்ச்சி, அமைதி" என்றும் புனித பவுல் உறுதி செய்கிறார். நமது மனிதத்தன்மையை இழக்க தூண்டும் ஊனியல்பின் இச்சை களை குறிக்க பன்மையையும், ஆவியின் செயலான கனியைக் குறிக்க ஒருமை யையும் திருத்தூதர் பயன்படுத்துவதைக் காண்கிறோம். இவ்வாறே பாபேலின் பிரி வினையும் பெந்தக்கோஸ்தின் ஒருமைப்பாட்டில் இருந்து வேறுபடுகிறது.
   அன்பு நண்பர்களே, நாம் ஒற்றுமை மற்றும் உண்மையின் ஆவிக்கு ஏற்ப வாழ வேண்டும். நமது சொந்த உண்மைகளை பின்பற்றுவதற்கான சோதனைகளை வெல்லவும், திருச்சபையில் உள்ள கிறிஸ்துவின் உண்மையை வரவேற்கவும் நம்மை ஒளியூட்டி வழிநடத்தும் ஆவிக்காக செபிக்க வேண்டும். பெந்தக்கோஸ்து பற்றி லூக்கா எழுதியபடி, விண்ணகம் செல்வதற்கு முன்பு இயேசு, தூய ஆவியைப் பெறுவதற்கு ஒன்றுகூடி தங்களை தயாரிக்குமாறு திருத்தூதர்களிடம் கூறினார். அவர்கள் மேல்மாடி அறையில் ஒன்றாக கூடி, மரியாவோடு இணைந்து செபித்துடன் வாக்களிக்கப்பட்ட நிகழ்வுக்காக காத்திருந்தனர். அது பிறந்தபோது நிகழ்ந்தது போன்றே, திருச்சபை இன்றும் மரியாவோடு ஒன்றாக இணைந்து செபிக்கிறது: "தூய ஆவியே எழுந்தருளி வாரும், உமது விசுவாசிகளின் இதயங்களை நிரப்பும், அவற்றில் உமது அன்புத் தீயை மூட்டியருளும்!" - ஆமென்.

Wednesday, May 23, 2012

மே 23, 2012

புதன் மறைபோதகம்: இயேசுவின் மகனுக்குரிய
உரிமையில் நாமும் பங்கு பெற்றுள்ளோம் - திருத்தந்தை

   இப்புதன் காலை, தூய பேதுரு பேராலய வளா கத்தில் கூடியிருந்த பல ஆயிரக்கணக்கான விசு வாசிகளுக்கு தன் பொது மறைபோதகத்தை வழங் கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். தூய பவுலின் மடல்களில் செபம் குறித்து காணப்படும் சிந்தனை களுக்கு விளக்கம் கொடுக்கும் தொடரைக் கடந்த வாரத்தில் தொடங்கிய திருத்தந்தை, இறைவனை அப்பா என அழைக்க நம்மை தகுதியாக்கும் தூய ஆவி குறித்து தூய பவுலின் மடல்களில் காணப் படும் இரு பகுதிகளை (கலா 4:6; உரோ 8:5) நோக்குவோம் என இவ்வார பொது மறை போதகத்தைத் தொடங்கினார்.
   தந்தையுடன் நாம் கொள்ளும் அன்புறவை வெளிப்படுத்தும் விதமாக 'அப்பா' என்ற வார்த்தை இயேசுவால் பயன்படுத்தப்பட்டது. அதேவேளை, நாம் இந்த வார்த்தை யைப் பயன்படுத்துவது என்பது, நம்முள் காணப்படும் கிறிஸ்துவின் ஆவியின் பிரசன்னத்தின் கனியாகும். திருமுழுக்கில் நாம் பெற்ற தூய ஆவியின் கொடை வழியாக, இயேசுவின் முடிவற்ற மகனுக்குரிய உரிமையில், நாம் தத்தெடுத்தல் மூலம் பங்கு பெற்று, இறைவனின் குழந்தைகளாக மாறியுள்ளோம். கிறிஸ்தவ செபம் என்பது நம் முயற்சி மட்டுமல்ல, மாறாக, நமக்குள் இருந்து நம்மோடு இணைந்து தந்தையாம் இறைவனை நோக்கி கூக்குரலிடும் தூய ஆவியின் செயலாகும் என தூய பவுல் நமக்குக் கற்பிக்கிறார். கிறிஸ்துவின் உடலாம் திருச்சபையின் உயிருள்ள உறுப்பினர்களாகிய நாம், நம்முள் உறைந்திருக்கும் மூவொரு கடவுளின் அன்பில் நம் செபத்தின் வழி நுழைகிறோம். நமது தனி மனித செபம் என்பது திருச்சபையின் செபம் எனும் மிக உயரிய இன்னிசையின் ஒரு பகுதியாகும். நம்முள் உறைந்திருக்கும் தூய ஆவியின் செயலாற்றல்களுக்கு நம் இதயங்களை முற்றிலுமாகத் திறப்போம். அதன் வழி, நாம் தந்தையாம் இறைவனில் மேலும் அதிக நம்பிக்கை கொள்வதற்கும், இயேசுவின் சாயலாக நாம் மாறுவதற்கும் வழிநடத்தப்படுவோமாக!
   இவ்வாறு தன் புதன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அதில் பங்கேற்ற, சுவீடனின் எவாஞ்சலிக்கல் - லூத்தரன் கிறிஸ்தவ ஒன்றிப்பு அவையின்
உறுப்பி னர்களுக்கும், பிலிப்பைன்சின் மணிலா புனித தாமஸ் பாப்பிறைப் பல்கலைக்கழ கத்தின் உறுப்பினர்களுக்கும் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்தியா, இங்கி லாந்து, டென்மார்க், ஃபின்லாந்து, ஸ்வீடன், பிலிப்பைன்ஸ், தென்கொரியா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து வந்து பொது மறைபோதகத்தில் கலந்துகொண்ட திருப்பயணிகளுக்கும் தன் வாழ்த்துக்களை வெளியிட்ட திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Sunday, May 20, 2012

மே 20, 2012

விண்ணேறிய கிறிஸ்துவில் நம் மனித்தன்மை கடவுளின்
உயரத்துக்கு கொண்டுபோகப்பட்டுள்ளது  - திருத்தந்தை

      இன்று உரோம் தூய பேதுரு பேராலய வளாகத் தில் கூடியிருந்த மக்களுக்கு, பாஸ்கா மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், உலகெங்கும் வாழும் கத்தோலிக்கர், சீனத் திருச் சபையோடு இணைந்து செபிக்குமாறும் கேட்டுக் கொண்டார். அவரது மறையுரை பின்வருமாறு:
அன்பு சகோதர சகோதரிகளே,
   திருத்தூதர் பணிகள் நூலின்படி, உயிர்த்தெழுந்த நாற்பது நாட்களுக்கு பின் இயேசு விண்ணேற்றம் அடைந்தார், அதாவது தன்னை உலகத்திற்கு அனுப்பிய தந்தையிடம் திரும்பிச் சென்றார். பல நாடுகளில் இந்த மறைபொருள் வியாழக்கிழமைக்கு பதிலாக அதைத் தொடர்ந்து வரும் ஞாயிறான இன்று கொண்டாடப்படுகிறது. நம் ஆண்டவரின் விண்ணேற்றம், மானிட உடலேற்பில் தொடங்கிய மீட்பின் நிறைவைக் குறிக்கிறது. கடைசி முறையாக தன் சீடர்களுக்கு கற்பித்த பின்பு, இயேசு விண்ணகம் சென்றார். எப்படியிருந்தாலும், அவர், "நமது நிலையிலிருந்து தன்னைப் பிரித்துக்கொள்ள வில்லை," உண்மையில், அவரது மனிதத் தன்மையில், அவர் மனித குலத்தைத் தன்னோடு தந்தையின் நெருக்கத்திற்கு கொண்டு சென்று, நமது மண்ணகப் பயணத்தின் இறுதி முடிவை வெளிப்படுத்தியுள்ளார். அவர் நமக்காக விண்ணகத்தில் இருந்து இறங்கி வந்தது போன்று, நமக்காக சிலுவையில் துன்புற்று இறந்தார், நமக்காக அவர் உயிர்த்தெழுந்து கடவுளிடம் சென்றார். எனவே, நம் கடவுளும், நமது தந்தையுமானவரிடம் இருந்து யாரும் தொலைவில் இல்லை.
   விண்ணேற்றம் என்பது பாவத்தின் நுகத்தில் இருந்து நம்மை விடுவிக்கும் உச்சக் கட்ட செயலாகும். இதனை திருத்தூதர் பவுல் பின்வருமாறு எழுதுகிறார்: "அவர் உயரே ஏறிச் சென்றார்; அப்போது, சிறைப்பட்ட கைதிகளை இழுத்துச் சென்றார்." புனித பெரிய லியோ குறிப்பிடும்போது, இந்த மறைபொருளில் "ஆன்மாவின் அழி வின்மை மட்டுமின்றி, உடலின் அழியாமையும் அறிவிக்கப்படுகிறது" என்கிறார். நிலத்தில் இருந்து ஆண்டவர் விண்ணகம் நோக்கி சென்றதை சீடர்கள் பார்த்தபோது, இதற்காக அவர்கள் தளர்ந்து போகவில்லை; மாறாக, அவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தவர்களாய் மரணத்தின் மீதான கிறிஸ்துவின் வெற்றியை அறிவிக்க உந்து தல் பெற்றார்கள். அவர்களது சொந்த அருட்கொடையை ஒவ்வொருவரோடும் பகிந்துகொள்ள உயிர்த்த ஆண்டவர் அவர்களோடு செயலாற்றியதால், கிறிஸ்தவ சமூகம் முழுவதும் விண்ணகத்தின் ஒத்திசைந்த வளத்தை பிரதிபலித்தது. புனித பவுல் இவ்வாறு எழுதுகிறார்: "அவர் மனிதருக்குப் பரிசுகளை வழங்கினார்... அவரே சிலரைத் திருத்தூதராகவும் சிலரை இறைவாக்கினராகவும், வேறு சிலரை நற் செய்தியாளர்களாகவும் ஆயர்களாகவும், போதகர்களாகவும் ஏற்படுத்தினார். திருத் தொண்டாற்ற இறைமக்களை ஆயத்தப்படுத்தவும், கிறிஸ்துவின் உடலைக் கட்டி எழுப்பவும் இவர்களை அவர் ஏற்படுத்தினார்."
   அன்பு நண்பர்களே, கிறிஸ்துவில் நமது மனிதத்தன்மை கடவுளின் உயரத்துக்கு கொண்டுபோகப்பட்டுள்ளது என்பதையே விண்ணேற்றம் நமக்கு கூறுகிறது. எனவே நாம் ஒவ்வொரு முறை செபிக்கும்போதும், மண்ணகம் விண்ணகத்தோடு இணை கின்றது. மேலும் தூபத்தைப் போன்று, அதன் நறுமணப் புகை உன்னதத்தை அடை கிறது. எனவே ஆர்வத்தோடும் நம்பிக்கையோடும் நமது செபத்தை கிறிஸ்துவில் ஆண்டவருக்கு எழுப்பும்போது, அது வானங்களைத் தாண்டி கடவுளின் அரியணை யினை அடையும்; அது அவரால் கேட்கப்பட்டு பதில் அளிக்கப்படும். சிலுவையின் புனித ஜானின், 'கார்மேல் மலையேற்றம்' என்ற புகழ்பெற்ற நூலில், "நமது இதயத்தின் ஆசைகளை உணர்ந்து பார்க்க, கடவுளுக்கு மிகவும் விருப்பமான நமது செபத்தின் வல்லமையைத் தவிர சிறந்த வழி இல்லை" என்று வாசிக்கிறோம். எனவே, நாம் அவரிடம் கேட்பதை மட்டும் அவர் நமக்கு தருவதில்லை, ஆனால் நமது மீட்புக்கு தேவையானதாகவும், நமக்கு நமையானதாகவும் அவர் பார்ப்பதையே, நாம் கேட்கா விடினும் தருகின்றார்.
    ஆண்டவர் வாக்களித்த விண்ணக காரியங்களைக் குறித்து சிந்திக்கவும், தெய்வீக வாழ்வின் மிகவும் நம்பிக்கைக்குரிய சாட்சிகளாக மாறவும் கன்னி மரியாவின் உதவியை வேண்டுவோம்.

Wednesday, May 16, 2012

மே 16, 2012

புதன் மறைபோதகம்: செபம், தூய ஆவியின் செயல்பாடு
மற்றும் இறைப்பிரசன்னத்தின் கனியாகும் - திருத்தந்தை

   கிறிஸ்தவ செபம் குறித்த நம் புதன் மறைபோத கங்களின் தொடர்ச்சியாக இன்று, புனித பவுலின் போதனைகளில் செபம் குறித்து காணப்படுபவற்றை நோக்குவோம் என்று தன் பொது மறைபோதகத்தைத் தொடங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
   புனித பவுலின் திருமுகங்கள் அவருடைய சொந்த செபங்களின் பல்வேறு வகைப்பாடுகளைக் காட்டி நிற் கின்றன. நன்றிகூறுதல், புகழ்பாடல், விண்ணப்பம், பரிந்துரை போன்றவைகளை உள்ளடக்கியவைகளாக அவை உள் ளன. புனித பவுலைப் பொறுத்தவரையில், செபம் என்பது அனைத்திற்கும் மேலாக, நம் இதயங்களுக்குள் தூய ஆவியின் செயல்பாடு மற்றும் நமக்குள்ளே இருக்கும் இறைப்பிரசன்னத்தின் கனியாகும். நம் பலவீனங்களில் வந்து உதவும் தூய ஆவி யானவர், இறைமகன் வழியாக இறைத்தந்தையிடம் செபிப்பது குறித்து கற்றுத் தருகிறார். தூய ஆவியார் நமக்காகப் பரிந்துரைக்கிறார், கிறிஸ்துவுடன் நம்மை இணைக்கிறார், மற்றும் இறைவனைத் தந்தை என அழைக்கத் தூண்டுகிறார் என புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தின் 8ஆம் அதிகாரத்தில் குறிப்பிடு கிறார். இறைக் குழந்தைகளுக்குரிய மகிமைநிறை விடுதலையையும், நம் தினசரி வாழ்வின் துன்பங்கள் மற்றும் சோதனைகளின்போது இறைவனுக்கு விசுவாசமாக இருப்பதற்குரிய பலத்தையும் நம்பிக்கையையும், நம்மைச் சுற்றியுள்ள உலகிலும், மற்றவரிலும் இறையாற்றல் செயலாற்றுவதைக் குறித்து கவனமுடன் இருக்கும் இதயத்தையும் நம் செபங்களில் தூய ஆவியார் வழங்குகிறார். நம்மோடு இணைந்து செபிக்கும், மற்றும் மூவொரு கடவுளுடன் ஆழமான அன்பு ஒன்றிப்பை நோக்கி நம்மை இட்டுச் செல்லும் தூய ஆவியின் பிரசன்னத்திற்கு புனித பவுலுடன் இணைந்து நம் இதயங்களையும் திறப்போம்.
   இவ்வாறு, தன் புதன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், பிலிப்பீன்ஸ், கானடா, அமெரிக்க ஐக்கிய நாடு உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த திருப்பயணிகளுக்குத் தன் வாழ்த்துக்களையும் வெளியிட்டார். அனைத்துலக காரித்தாஸ் நிறுவனத்தின் புதிய அமைப்பு முறை மாற்றங்களை வரவேற்பதுடன், அதன் தலைவர் கர்தினால் ஆஸ்கார் ரொட்ரி
குவஸ் மரடியகா, மற்றும் அந்நிறுவன உறுப்பினர்களுக்குத் தன் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக திருத்தந்தை கூறினார். 'குடும்பம் மற்றும் வேலை' என்ற மையக்கருத்தில் இந்தச் செவ்வாயன்று உலகில் சிறப்பிக்கப்பட்ட அனைத்துலக குடும்ப நாளின் முக்கியத்துவம் குறித்து சுட்டிக்காட்டிய திருத்தந்தை, வேலை என்பது ஒருநாளும் குடும்பங்களுக்கு இடையூறு தருவதாக இருக்கக் கூடாது, மாறாக, குடும்பத்திற்கு பலம் தருவதாகவும், ஒன்றிப்பை வழங்கி உதவு வதாகவும் இருக்க வேண்டும் என்றார். இறுதியில் திருத்தந்தை அனைவருக்கும் தன் அப்போஸ் தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Sunday, May 13, 2012

மே 13, 2012

நமது பாவங்களில் இருந்து நம்மை விடுவிப்பது
கடவுளின் முயற்சியே! - திருத்தந்தை

   மத்திய இத்தாலியில் அமைந்துள்ள அரெஸ்ஸோ நகரத்து ஆலயத்துக்கு, இஞ்ஞாயிறு மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்ட திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அங்கு நிகழ்த்திய திருப்பலியில் இவ்வாறு மறை யுரை வழங்கினார்:
அன்பு சகோதர சகோதரிகளே,
   இறைவார்த்தை மற்றும் நற்கருணை அப்பத்தை உங்களோடு பிட்க முடிந்தது எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த் துக்களையும், உங்கள் அன்பான வரவேற்புக்கு என் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு கூடியிருக்கும் அனைத்து அதிகாரிகளுக்கும், எனது இந்த மேய்ப்புப்பணி பயணத்திற்கு உதவிய அனைவருக்கும் எனது சிறப்பான நன்றி. 
   பல நூற்றாண்டுகளாகவே, அரெஸ்ஸோ ஆலயம் விசுவாசத்தின் வெளிப்பாடுகளில் வளர்ந்தும் வடிவமைக்கப்பட்டும் வந்திருக்கிறது. அவர்கள் நடுவில் உயர்ந்திருப்ப வர்கள் புனிதர்கள். குறிப்பாக உங்கள் பாதுகாவலரான புனித டொனட்டோ, இடைக் கால கிறிஸ்தவர்களை ஈர்த்த அவரது சாட்சிய வாழ்வு இன்றளவும் பொருத்த மானதாக விளங்குகிறது. துணிச்சலான ஒரு நற்செய்திப் பணியாளராக இருந்த அவர், பிற இன பழக்கங்களில் இருந்து தங்களை விடுவித்துக்கொண்டு, ஒவ்வொரு நபரு டைய மதிப்பையும், சுதந்திரத்தின் உண்மைப் பொருளையும் உறுதிப்படுத்தும் இறை வார்த்தையில் கண்டுகொள்ள அனைவரையும் துரிதப்படுத்தினார். அவரது போதனை யால், தான் ஆயராக இருந்த மக்களை செபத்திலும் நற்கருணையிலும் ஒன்றி ணைத்தார். புனித டொனட்டோ சரி செய்த உடைந்த இரசப் பாத்திரம், புனித பெரிய கிரகோரியால் அமைதிக்கான அடையாளமாகவும், சமூகத்தில் பொது நலனுக்கான திருச்சபையின் செயலாகவும் குறிப்பிடப்பட்டது. புனித பீட்டர் தமியன் உங்களுக்கு மற்றொரு சாட்சியாக இருக்கிறார். அவரோடு சிறந்த கமால்டொலீச மரபு, இந்த மறைமாவட்ட ஆலயத்திற்கும், அகில உலக திருச்சபைக்கும் ஆயிரம் ஆண்டுகளாக ஆன்மீக வளங்களை கொடுத்திருக்கிறது.
   அன்பு நண்பர்களே, முதல் வாசகம் கிறிஸ்து மற்றும் திருச்சபையின் செய்தியின் உலகளாவிய தன்மையை விளக்கும் ஒரு முக்கியமான தருணத்தை நமக்கு வழங் குகிறது. கொர்னேலியுவின் வீட்டில் புனித பேதுரு, முதல் பிற இனத்தவருக்கு திரு முழுக்கு வழங்குகிறார். கடவுள் தொடர்ந்து யூத மக்களுக்கு மட்டும் தனிப்பட்ட விதத்தில் ஆசி வழங்க விரும்பவில்லை, அனைத்து நாடுகளுக்கும் அதை நீட்டிக் கிறார். அவர் ஆபிரகாமை அழைத்தபோது, "மண்ணுலகின் எல்லா இனங்களும் உன் வழியாக தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்" என்றார். எனவே பேதுரு, இவ்வார்த்தை களால் தூண்டுதல் பெற்று, "எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து நேர்மை யாக செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர்" என்று புரிந்துகொள்கிறார். பேதுரு வின் செயல், அனைத்து மனிதருக்கும் திருச்சபை திறந்திருப்பதை அடையாளப் படுத்துகிறது. உங்கள் ஆலயம் மற்றும் சமூகத்தின் சிறந்த மரபைப் பின்பற்றி, அனைவருக்குமான கடவுளின் அன்புக்கு உண்மையான சாட்சிகளாக விளங்குங்கள்!
   ஆனால் நமது பலவீனத்தில், நாம் எவ்வாறு இந்த அன்புக்கு சாட்சிகளாக விளங்க முடியும்? இரண்டாவது வாசகத்தில் புனித யோவான், நமது பாவங்களில் இருந்தும் அவற்றின் விளைவுகளில் இருந்தும் நம்மை விடுவிப்பது கடவுளின் முயற்சியே என்று தெளிவாக எடுத்துரைக்கிறார். நாம் அவரை அன்பு செய்யவில்லை, அவர் நம்மீது அன்புகொண்டு, நமது பாவங்களை தன்மேல் ஏற்றுக்கொண்டு, கிறிஸ்துவின் இரத்தத்தால் அவற்றை தூய்மையாக்கினார். கடவுள் நம்மை முதலில் அன்புசெய்த துடன், நாம் அவரது அன்பில் ஒன்றிணைய வேண்டுமென்றும் அவருடைய மீட்புச் செயலில் ஒத்துழைக்க வேண்டுமென்றும் விரும்புகிறார்.
   ஆண்டவரின் அழைப்பு நற்செய்தியில் தொனிக்கிறது: "நீங்கள் சென்று கனி தரவும், அந்த கனி நிலைத்திருக்கவுமே நான் உங்களை ஏற்படுத்தினேன்." அவர் தனிப்பட்ட முறையில் திருத்தூதர்களிடம் பேசினாலும், பரந்தப் பொருளில் இது இயேசுவின் அனைத்து சீடர்களையும் குறிக்கிறது. உலகெங்கும் நற்செய்தியையும் மீட்பையும் பறைசாற்ற திருச்சபை முழுவதும் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இது கடவுளின் முயற்சியே; அவர் நம்மை பல பணிகளுக்காக அழைத்திருக்கிறார். எனவே ஒவ்வொ ருவரும் பொது நலனுக்காக தங்கள் சரியான பங்களிப்பை அளிக்க வேண்டும். அவர் நம்மை பணிக் குருத்துவத்துக்கும், துறவற வாழ்வுக்கும், இல்லற வாழ்வுக்கும் உல கில் உழைப்பதற்காக அழைத்திருக்கிறார். அனைவரும், "நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன்" என்ற ஆண்டவரின் உறுதிபடுத்தும் வார்த்தையால் தாங்கப்பட்டு, அவருக்கு தாராள மனதோடு பதில் அளிக்க அழைக்கப்பட்டுள்ளோம்.
   கடவுளின் அன்புக்கு சான்று பகரும் வகையில், பலவீனர்கள்மீது அக்கறைகொள் ளுதல் என்பது மனித வாழ்வை அதன் தொடக்கம் முதல் இயற்கையான முடிவு வரை பாதுகாப்பதுடன் இணைந்திருக்கிறது. உங்கள் பகுதியில், ஒவ்வொருவரின் மதிப்பு, உடல்நலம், மற்றும் அடிப்படை உரிமைகளை உறுதிசெய்வது, நீதியுடன் தவிர்க்க முடியாத நன்மையாக கருதப்படுகிறது. நீதியுள்ள சட்டங்கள் மூலம் கிடைக் கும் குடும்ப பாதுகாப்பு மற்றும் பலவீனமான கூறுகளின் பாதுகாப்பு ஆகியவை முக்கிய மாக சமூகத்தை எப்பொழுதும் பலமானதாக வைத்திருப்பதுடன், எதிர்காலத்துக்கான நம்பிக்கையையும் வழங்குகிறது. இடைக்காலத்தைப் போன்றே, உங்கள் நகரத்தின் சட்டங்கள் மாற்றமுடியாத உரிமைகளை  பலருக்கும் உறுதி செய்யும் கருவிகளாக உள்ளன, அவற்றின் செயல் தொடரட்டும். திருச்சபை இந்த பணிக்கு தனது பங்க ளிப்பை வழங்குகிறது. அதனால் கடவுளின் அன்பு, ஒருவரின் அடுத்திருப்பவரது அன்புடன் எப்பொழுதும் இணைந்திருக்கும்.
   அன்பு சகோதர சகோதரிகளே, இயேசுவின் போதனைகளுக்கு ஏற்பவும், உங்கள் புனிதர்களின் ஒளிரும் எடுத்துக்காட்டுக்கும், உங்கள் மக்களின் பாரம்பரியத்துக்கும் உகந்த வகையிலும், கடவுளுக்கும் மனிதருக்கும் தொடர்ந்து பணி செய்யுங்கள். நீங்கள் அன்புசெய்து வணங்கும் ஆறுதல் அன்னையின் தாய்க்குரிய பாதுகாப்பு, இந்த பணியில் உங்களோடு இருந்து உங்களைத் தாங்குவதாக! ஆமென்.

Wednesday, May 9, 2012

மே 9, 2012

புதன் மறைபோதகம்: செபத்தினால் நாம் ஆண்டவரிடமும்
ஒருவர் மற்றவரிடமும் ஈர்க்கப்படுவோம் - திருத்தந்தை

   உரோமையில் இன்று காலை, திருத்தந்தையின் பொது மறைபோதகத்தைக் கேட்பதற்காக இந்தியா உட்பட உலகின் பல நாடுகளின் ஆயிரக்கணக்கானத் திருப்பயணிகள் வத்திக்கான் தூய பேதுரு வளாகத் தினை நிறைத்திருந்தனர். கிறிஸ்தவ செபம் குறித்த தனது புதன் மறைபோகத்தை இன்றும் பல மொழி களில் வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
   அன்புச் சகோதர சகோதரிகளே, தூய பேதுரு குறித்து புகார் செய்யப்பட்ட வழக்கு எருசலேமில் விசாரிக்கப்படுவதற்கு முந்தின இரவில் அவர் சிறையிலிருந்து அற்புதமாய் விடு தலை அடைந்த நிகழ்வு குறித்து, கிறிஸ்தவ செபம் குறித்த நமது மறைபோகத்தில் இன்று நோக்குவோம். 'பேதுரு சிறையில் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது திருச் சபை அவருக்காக கடவுளிடம் உருக்கமாக வேண்டியது' (திருத்தூதர் பணிகள் 12:5) என்று புனித லூக்கா நமக்கு சொல்கிறார். ஒளியின் வானதூதரால் பேதுரு சிறையிலிருந்து வழிநடத்தப்பட்டார். எகிப்தில் அடிமைத்தளையிலிருந்து விடுதலையடைந்த இஸ்ர யேலின் விரைவுப் பயணம், கிறிஸ்துவின் உயிர்ப்பின் மாட்சி ஆகிய இரண்டையும் பேதுரு சிறையிலிருந்து மீட்கப்பட்ட இந்நிகழ்ச்சி நினைவுபடுத்துகின்றது.
   பேதுரு சிறையில் இருந்தபோது தூங்கிக் கொண்டிருந்தார். வரின் இச்செயலா னது, அவர் ஆண்டவரிடம் முழுவதும் சரணடைந்ததன் அடையாளமாகவும், கிறிஸ் தவ சமூகத்தின் செபங்களில் அவர் வைத்திருந்த நம்பிக்கையையும் வெளிப்படுத்து கின்றது. பேதுரு, கிறிஸ்தவ சமூகத்தோடு மீண்டும் இணைந்து, உயிர்த்த ஆண்ட வரின் மீட்பளிக்கும் வல்லமைக்கு சான்று பகர்ந்தபோது, இச்செபம் முழுமையடைந் தது. இதில் அளவற்ற மகிழ்ச்சியும் கலந்திருந்தது. சோதனை, துன்ப நேரங்களில் செபத்தில் நாம் உறுதியாய் நிலைத்திருப்பதும், கிறிஸ்துவில் நமது அனைத்துச் சகோதர சகோதரிகளின் செபம் நிறைந்த தோழமையும், நம்மைப் பற்றுறுதியில் வைத்துக் காக்கிறது எனப் பேதுருவின் விடுதலை நமக்கு நினைவுபடுத்துகின்றது. பேதுருவின் வழிவருபவர் என்ற விதத்தில், உங்களது செப ஆதரவுக்காக எல்லாருக் கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். தொடர்ந்து செபத்தில் ஒன்றித்திருப்பதன் மூலம், நாம் எல்லாரும் ஆண்டவரிடமும், ஒருவர் மற்றவரிடமும் மிக நெருக்கமாக ஈர்க் கப்படுவோம்.
   இவ்வாறு தனது புதன் பொது மறைபோதகத்தை நிறைவு செய்த திருத்தந்தை, இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் உட்பட பல நாடுகளின் திருப்பயணிகளை வாழ்த்தினார். இன்னும், ஆப்ரிக்காவின் சஹாராவை டுத்த பகுதிகளில் உதவி தேவைப்படும் தாய்மார் மற்றும் குழந்தைகளின் நலவாழ்வுக்கு இலவசமாக மருத் துவ உதவி செய்வதற்கென CUAMM என்ற அமைப்பு நடத்தும் கருத்தரங்கில் கலந்து கொள்வோரைச் சிறப்பாக வாழ்த்தினார். இந்தப் பொதுநிலையினர் அமைப்பு, கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவப் பிறரன்புப் பணியில் ஈடுபட்டுள்ளது என்றார். பின்னர் திருத்தந்தை எல்லாருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Sunday, May 6, 2012

மே 6, 2012

இயேசுவை அன்புசெய்வோர் ஆன்மீக அறுவடைக்காக
மிகுதியான கனிகளை விளைவிக்கின்றனர் - திருத்தந்தை

   இன்று உரோம் தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பின்வருமாறு பாஸ்கா மூவேளை செப உரை வழங்கி னார்:
   இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து, "உண்மையான திராட்சைச் செடி நானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர்" என்று கூறுகிறார். நாம் திருமுழுக்கு பெற்ற நாளில், திருச்சபை கிறிஸ்துவின் மறை பொருளில், அவரது தனித்தன்மையில் நம்மை கிளை களாக ஓட்டி இணைத்தது. "நாம் ஒவ்வொருவரும் ஒரு திராட்சைச் செடியைப் போன்றவர்கள்; அது ஒவ்வொரு நாளும் செபத்திலும், அருட்சாதனங்களில் பங்கு கொள்வதிலும், பிறரன்பிலும், ஆண்டவரோடு இணைந் திருப்பதிலும் வளர்கிறது" என்பதை நினைவில்கொள்ள அவர் இறைமக்களை அழைக் கிறார். மேலும், உண்மை திராட்சைச் செடியாகிய இயேசுவை அன்புசெய்வோர், ஆன் மீக அறுவடைக்காக விசுவாசத்தின் கனிகளை மிகுதியாக விளைவிக்கின்றனர். நாம் தொடர்ந்து இயேசு வோடு உறுதியாக ஒட்டிக்கொண்டிருக்கவும், நமது செயல்கள் அனைத்தும் அவரில் தொடங்கி, அவரிலேயே நிறைவு காணவும், நாம் இறையன்னையின் உதவியை வேண்டுவோம்.
   செப உரையின் இறுதியில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த திருப்பயணிகளை வாழ்த்திய திருத்தந்தை இவ்வாறு கூறினார்: "இன்றைய பாஸ்கா மூவேளை செபத்தில் கலந்துகொண்ட உங்கள் அனைவருக்கும், சிறப்பாக இந்தோ னேஷியாவில் இருந்து பெருமளவில் வந்திருக்கும் திருப்பயணிகளுக்கும் எனது வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன். இன்றைய நற்செய்தியில் இயேசு தன்னை உண்மையான திராட்சைச் செடி என்று குறிப்பிட்டு, அதன் கனி தருகின்ற கிளைகளாக இருக்க அவர் நம்மை அழைக்கின்றார். உலகெங்கும் வாழும் கடவுளின் பிள்ளைகள் அனைவரும் ஒற்றுமையிலும் அன்பிலும் வளரவும், அவரால் ஆழமாக விதைக்கப்பட்ட தெய்வீக வாழ்வால் நீடித்த ஊட்டம்பெறவும் நான் செபிக்கிறேன். கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!"

Wednesday, May 2, 2012

மே 2, 2012

புதன் மறைபோதகம்: இயேசுவிலேயே சிறந்த முறையில்
இறைவன் பிரசன்னமாகி இருக்கிறார் - திருத்தந்தை

   புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் இடம்பெற்ற இவ்வாரப் புதன் பொது மறைபோதகத் தில், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கிறிஸ்தவ செபம் குறித்த தன் மறையுரையை தொடர்ந்தார்.
   திருச்சபையின் முதல் மறைசாட்சியாகிய புனித ஸ்தேவான் உயிரிழப்பதற்கு முன் வழங்கிய அரு ளுரை குறித்து இன்று நோக்குவோம். இறைவார்த் தையின் ஒளியில் கிறிஸ்துவின் வாழ்வு நிகழ்வைச் செப உணர்வில் மீண்டும் வாசிப்பதில் தெளிவான அடிப்படையைக் கொண்டதாக புனித ஸ்தேவானின் வார்த்தைகள் இருந்தன. இயேசு எருசலேம் கோவிலையும் மோசே வழங்கிய சட்டங்களையும் தகர்த்து அழிப்பார் என எடுத்துரைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஸ்தேவான், இறைவாக்கினர்களால் முன்னு ரைக்கப்பட்ட நேர்மையாளர் இயேசுவே எனவும், அந்த இயேசுவிலேயே இறைவன் தனிச்சிறப்பான மற்றும் நிரந்தரமான முறையில் மனித குலத்திற்கென பிரசன்னமா யிருக்கிறார் எனவும் பறைசாற்றினார்.
   மனிதனாக உருவெடுத்த இறைமகன் இயேசுவே இவ்வுலகில் இறைவனின் திருக்கோவில். நம்முடைய பாவங்களுக்காக உயிரிழந்து புதிய வாழ்வுக்கு உயிர்த் தெழுந்ததன் மூலமாக இறைவனுக்கு உண்மையான வழிபாட்டை வழங்கக்கூடிய ஒரு நிரந்தர இடமாக அவர் மாறியுள்ளார். செபத்தால் வளப்படுத்தப்பட்ட ஸ்தேவா னின் இயேசுவுக்கான சாட்சியம் அவரின் மறைசாட்சிய மரணத்தில் தன் உச்சத்தை எட்டியது. நம் தினசரி வாழ்வில் நம் செபத்தையும், இயேசு குறித்த ஆழ்ந்த தியானத் தையும், இறைவார்த்தை மீதான தியானிப்புகளையும் ஒன்றிணைக்க புனித ஸ்தேவா னின் பரிந்துரை மற்றும் எடுத்துக்காட்டு வழியாக நாம் கற்றுக்கொள்வோம். இதன் வழி நாம் இறைவனின் மீட்புத் திட்டத்தை மேலும் சிறப்பான விதத்தில் அறிந்து பாராட்டுவதோடு, நம் வாழ்வின் ஆண்டவராக இயேசுவை ஏற்றுக்கொள்வோம்.
   இவ்வாறு, தன் மறைபோதகத்தை வழங்கியத் திருத்தந்தை, இந்தியா, இந்தோனே சியா, பிலிப்பீன்ஸ் உட்பட பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்திருந்த திருப்பயணிகளை வாழ்த்தி, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.