Sunday, May 13, 2012

மே 13, 2012

நமது பாவங்களில் இருந்து நம்மை விடுவிப்பது
கடவுளின் முயற்சியே! - திருத்தந்தை

   மத்திய இத்தாலியில் அமைந்துள்ள அரெஸ்ஸோ நகரத்து ஆலயத்துக்கு, இஞ்ஞாயிறு மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்ட திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அங்கு நிகழ்த்திய திருப்பலியில் இவ்வாறு மறை யுரை வழங்கினார்:
அன்பு சகோதர சகோதரிகளே,
   இறைவார்த்தை மற்றும் நற்கருணை அப்பத்தை உங்களோடு பிட்க முடிந்தது எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த் துக்களையும், உங்கள் அன்பான வரவேற்புக்கு என் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு கூடியிருக்கும் அனைத்து அதிகாரிகளுக்கும், எனது இந்த மேய்ப்புப்பணி பயணத்திற்கு உதவிய அனைவருக்கும் எனது சிறப்பான நன்றி. 
   பல நூற்றாண்டுகளாகவே, அரெஸ்ஸோ ஆலயம் விசுவாசத்தின் வெளிப்பாடுகளில் வளர்ந்தும் வடிவமைக்கப்பட்டும் வந்திருக்கிறது. அவர்கள் நடுவில் உயர்ந்திருப்ப வர்கள் புனிதர்கள். குறிப்பாக உங்கள் பாதுகாவலரான புனித டொனட்டோ, இடைக் கால கிறிஸ்தவர்களை ஈர்த்த அவரது சாட்சிய வாழ்வு இன்றளவும் பொருத்த மானதாக விளங்குகிறது. துணிச்சலான ஒரு நற்செய்திப் பணியாளராக இருந்த அவர், பிற இன பழக்கங்களில் இருந்து தங்களை விடுவித்துக்கொண்டு, ஒவ்வொரு நபரு டைய மதிப்பையும், சுதந்திரத்தின் உண்மைப் பொருளையும் உறுதிப்படுத்தும் இறை வார்த்தையில் கண்டுகொள்ள அனைவரையும் துரிதப்படுத்தினார். அவரது போதனை யால், தான் ஆயராக இருந்த மக்களை செபத்திலும் நற்கருணையிலும் ஒன்றி ணைத்தார். புனித டொனட்டோ சரி செய்த உடைந்த இரசப் பாத்திரம், புனித பெரிய கிரகோரியால் அமைதிக்கான அடையாளமாகவும், சமூகத்தில் பொது நலனுக்கான திருச்சபையின் செயலாகவும் குறிப்பிடப்பட்டது. புனித பீட்டர் தமியன் உங்களுக்கு மற்றொரு சாட்சியாக இருக்கிறார். அவரோடு சிறந்த கமால்டொலீச மரபு, இந்த மறைமாவட்ட ஆலயத்திற்கும், அகில உலக திருச்சபைக்கும் ஆயிரம் ஆண்டுகளாக ஆன்மீக வளங்களை கொடுத்திருக்கிறது.
   அன்பு நண்பர்களே, முதல் வாசகம் கிறிஸ்து மற்றும் திருச்சபையின் செய்தியின் உலகளாவிய தன்மையை விளக்கும் ஒரு முக்கியமான தருணத்தை நமக்கு வழங் குகிறது. கொர்னேலியுவின் வீட்டில் புனித பேதுரு, முதல் பிற இனத்தவருக்கு திரு முழுக்கு வழங்குகிறார். கடவுள் தொடர்ந்து யூத மக்களுக்கு மட்டும் தனிப்பட்ட விதத்தில் ஆசி வழங்க விரும்பவில்லை, அனைத்து நாடுகளுக்கும் அதை நீட்டிக் கிறார். அவர் ஆபிரகாமை அழைத்தபோது, "மண்ணுலகின் எல்லா இனங்களும் உன் வழியாக தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்" என்றார். எனவே பேதுரு, இவ்வார்த்தை களால் தூண்டுதல் பெற்று, "எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து நேர்மை யாக செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர்" என்று புரிந்துகொள்கிறார். பேதுரு வின் செயல், அனைத்து மனிதருக்கும் திருச்சபை திறந்திருப்பதை அடையாளப் படுத்துகிறது. உங்கள் ஆலயம் மற்றும் சமூகத்தின் சிறந்த மரபைப் பின்பற்றி, அனைவருக்குமான கடவுளின் அன்புக்கு உண்மையான சாட்சிகளாக விளங்குங்கள்!
   ஆனால் நமது பலவீனத்தில், நாம் எவ்வாறு இந்த அன்புக்கு சாட்சிகளாக விளங்க முடியும்? இரண்டாவது வாசகத்தில் புனித யோவான், நமது பாவங்களில் இருந்தும் அவற்றின் விளைவுகளில் இருந்தும் நம்மை விடுவிப்பது கடவுளின் முயற்சியே என்று தெளிவாக எடுத்துரைக்கிறார். நாம் அவரை அன்பு செய்யவில்லை, அவர் நம்மீது அன்புகொண்டு, நமது பாவங்களை தன்மேல் ஏற்றுக்கொண்டு, கிறிஸ்துவின் இரத்தத்தால் அவற்றை தூய்மையாக்கினார். கடவுள் நம்மை முதலில் அன்புசெய்த துடன், நாம் அவரது அன்பில் ஒன்றிணைய வேண்டுமென்றும் அவருடைய மீட்புச் செயலில் ஒத்துழைக்க வேண்டுமென்றும் விரும்புகிறார்.
   ஆண்டவரின் அழைப்பு நற்செய்தியில் தொனிக்கிறது: "நீங்கள் சென்று கனி தரவும், அந்த கனி நிலைத்திருக்கவுமே நான் உங்களை ஏற்படுத்தினேன்." அவர் தனிப்பட்ட முறையில் திருத்தூதர்களிடம் பேசினாலும், பரந்தப் பொருளில் இது இயேசுவின் அனைத்து சீடர்களையும் குறிக்கிறது. உலகெங்கும் நற்செய்தியையும் மீட்பையும் பறைசாற்ற திருச்சபை முழுவதும் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இது கடவுளின் முயற்சியே; அவர் நம்மை பல பணிகளுக்காக அழைத்திருக்கிறார். எனவே ஒவ்வொ ருவரும் பொது நலனுக்காக தங்கள் சரியான பங்களிப்பை அளிக்க வேண்டும். அவர் நம்மை பணிக் குருத்துவத்துக்கும், துறவற வாழ்வுக்கும், இல்லற வாழ்வுக்கும் உல கில் உழைப்பதற்காக அழைத்திருக்கிறார். அனைவரும், "நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன்" என்ற ஆண்டவரின் உறுதிபடுத்தும் வார்த்தையால் தாங்கப்பட்டு, அவருக்கு தாராள மனதோடு பதில் அளிக்க அழைக்கப்பட்டுள்ளோம்.
   கடவுளின் அன்புக்கு சான்று பகரும் வகையில், பலவீனர்கள்மீது அக்கறைகொள் ளுதல் என்பது மனித வாழ்வை அதன் தொடக்கம் முதல் இயற்கையான முடிவு வரை பாதுகாப்பதுடன் இணைந்திருக்கிறது. உங்கள் பகுதியில், ஒவ்வொருவரின் மதிப்பு, உடல்நலம், மற்றும் அடிப்படை உரிமைகளை உறுதிசெய்வது, நீதியுடன் தவிர்க்க முடியாத நன்மையாக கருதப்படுகிறது. நீதியுள்ள சட்டங்கள் மூலம் கிடைக் கும் குடும்ப பாதுகாப்பு மற்றும் பலவீனமான கூறுகளின் பாதுகாப்பு ஆகியவை முக்கிய மாக சமூகத்தை எப்பொழுதும் பலமானதாக வைத்திருப்பதுடன், எதிர்காலத்துக்கான நம்பிக்கையையும் வழங்குகிறது. இடைக்காலத்தைப் போன்றே, உங்கள் நகரத்தின் சட்டங்கள் மாற்றமுடியாத உரிமைகளை  பலருக்கும் உறுதி செய்யும் கருவிகளாக உள்ளன, அவற்றின் செயல் தொடரட்டும். திருச்சபை இந்த பணிக்கு தனது பங்க ளிப்பை வழங்குகிறது. அதனால் கடவுளின் அன்பு, ஒருவரின் அடுத்திருப்பவரது அன்புடன் எப்பொழுதும் இணைந்திருக்கும்.
   அன்பு சகோதர சகோதரிகளே, இயேசுவின் போதனைகளுக்கு ஏற்பவும், உங்கள் புனிதர்களின் ஒளிரும் எடுத்துக்காட்டுக்கும், உங்கள் மக்களின் பாரம்பரியத்துக்கும் உகந்த வகையிலும், கடவுளுக்கும் மனிதருக்கும் தொடர்ந்து பணி செய்யுங்கள். நீங்கள் அன்புசெய்து வணங்கும் ஆறுதல் அன்னையின் தாய்க்குரிய பாதுகாப்பு, இந்த பணியில் உங்களோடு இருந்து உங்களைத் தாங்குவதாக! ஆமென்.