Tuesday, March 31, 2009

திருப்பாடுகளின் ஞாயிறு

நாள்: 5-4-2009
நற்செய்தி: மாற்கு 14:1-15:47
.
   பாஸ்கா என்னும் புளிப்பற்ற அப்ப விழா நிகழ இன்னும் இரண்டு நாள்கள் இருந்தன. தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞரும் இயேசுவை எவ்வாறு சூழ்ச்சியாய்ப் பிடித்துக் கொலை செய்யலாம் என்று வழிதேடிக் கொண்டிருந்தனர்; ஆயினும், 'விழாவின்போது வேண்டாம்; ஒரு வேளை மக்களிடையே கலகம் ஏற்படக்கூடும்' என்று நினைத்தனர். இயேசு, பெத்தானியாவில் தொழு நோயாளர் சீமோன் இல்லத்தில் இருந்தார். அங்கே பந்தியில் அமர்ந்திருந்தபோது இலாமிச்சை நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழுடன் பெண் ஒருவர் வந்தார். அந்தத் தைலம் கலப்பற்றது, விலையுயர்ந்தது. அவர் அப்படிகச் சிமிழை உடைத்து இயேசுவின் தலையில் ஊற்றினார். ஆனால் அங்கிருந்த சிலர் கோபமடைந்து, ' இந்தத் தைலத்தை இவ்வாறு வீணாக்குவதேன்? இதை முந்நூறு தெனாரியத்துக்கும் மேலாக விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே, ' என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அப்பெண் மீதும் சீறி எழுந்தனர். இயேசு அவர்களிடம், ' அவரை விடுங்கள். ஏன் அவருக்குத் தொல்லை கொடுக்கிறீர்கள்? அவர் எனக்குச் செய்தது முறையான செயலே. ஏனெனில் ஏழைகள் எப்போதுமே உங்களோடு இருக்கின்றார்கள். நீங்கள் விரும்பும்போதெல்லாம் அவர்களுக்கு நன்மை செய்யமுடியும். ஆனால் நான் எப்போதும் உங்களோடு இருக்கப்போவதில்லை. இவர் தம்மால் இயன்றதைச் செய்தார். என் அடக்கத்திற்காக இவர் முன்னதாகவே என் உடலுக்குத் தைலம் பூசிவிட்டார். உலகம் முழுவதும் எங்கெல்லாம் நற்செய்தி அறிவிக்கப்படுமோ அங்கெல்லாம் இவர் செய்ததும் எடுத்துக் கூறப்படும்; இவரும் நினைவு கூறப்படுவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' என்று கூறினார். பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் நோக்கத்தோடு தலைமைக் குருக்களிடம் சென்றான். அவர்கள் அதை அறிந்து மகிழ்ச்சியுற்று அவனுக்குப் பணம் கொடுப்பதாக வாக்களித்தனர். அவனும் அவரை எப்படிக் காட்டிக்கொடுக்கலாம் என்று வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான். புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாள் வந்தது. பாஸ்கா ஆட்டுக்குட்டியைப் பலியிடும் அந்நாளிலே இயேசுவின் சீடர், ' நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே சென்று ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்? ' என்று கேட்டார்கள். அவர் பின்வருமாறு கூறி, தம் சீடருள் இருவரை அனுப்பினார்: ' நீங்கள் புறப்பட்டு நகருக்குள் செல்லுங்கள். மண்குடத்தில் தண்ணீர் சுமந்துகொண்டு ஓர் ஆள் உங்களுக்கு எதிரே வருவார். அவர் பின்னே செல்லுங்கள். அவர் எந்த வீட்டுக்குச் செல்கிறாரோ, அந்த வீட்டின் உரிமையாளரிடம், ' நான் என் சீடர்களோடு பாஸ்கா விருந்து உண்பதற்கான என் அறை எங்கே? ' என்று போதகர் கேட்கச் சொன்னார் ' எனக் கூறுங்கள். அவர் மேல்மாடியில் ஒரு பெரிய அறையைக் காட்டுவார். அது தேவையான வசதிகளோடு தயார் நிலையில் இருக்கும். அங்கே நமக்கு ஏற்பாடு செய்யுங்கள். ' சீடர்கள் சென்று, நகரை அடைந்து, தங்களுக்கு அவர் சொல்லியவாறே அனைத்தையும் கண்டு பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள். மாலை வேளையானதும் இயேசு பன்னிருவரோடு வந்தார். அவர்கள் பந்தியில் அமர்ந்து உண்டு கொண்டிருந்தபொழுது இயேசு, ' என்னோடு உண்ணும் உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார். அவர்கள் வருத்தமுற்று, ஒருவர் பின் ஒருவராக, ' நானோ? நானோ? ' என்று அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள். அதற்கு அவர், ' அவன் பன்னிருவருள் ஒருவன்; என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவன். மானிடமகன் தம்மைப் பற்றி மறைநூலில் எழுதியுள்ளவாறே போகிறார். ஆனால் ஐயோ! அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு! அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாய் இருந்திருக்கும் ' என்றார். அவர்கள் உண்டுகொண்டிருந்தபொழுது அவர் அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, ' இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்; இது எனது உடல் ' என்றார். பின்பு அவர் கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்தார். அனைவரும் அதிலிருந்து பருகினர். அப்பொழுது அவர் அவர்களிடம், 'இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம். இனிமேல் இறையாட்சி வரும் அந்நாளில்தான் நான் திராட்சைப்பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை ஒருபோதும் குடிக்க மாட்டேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார். அவர்கள் புகழ்ப்பாடல் பாடிவிட்டு ஒலிவமலைக்குச் சென்றார்கள். இயேசு அவர்களிடம், ' நீங்கள் அனைவரும் ஓடிப்போவீர்கள். ஏனெனில், ' ஆயரை வெட்டுவேன்; அப்போது ஆடுகள் சிதறடிக்கப்படும் ' என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆனால் நான் உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு உங்களுக்குமுன்பே கலிலேயாவுக்குப் போவேன் ' என்றார். பேதுரு அவரிடம், ' எல்லாரும் ஓடிப்போய்விட்டாலும் நான் அவ்வாறு செய்யமாட்டேன் ' என்றார். இயேசு அவரிடம், ' இன்றிரவில் சேவல் இருமுறை கூவுமுன் மும்முறை நீ என்னை மறுதலிப்பாய் என உனக்குச் சொல்கிறேன் ' என்றார். அவரோ, ' நான் உம்மோடு சேர்ந்து இறக்க வேண்டியிருந்தாலும் உம்மை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன் ' என்று மிக அழுத்தமாகச் சொன்னார். அப்படியே அவர்கள் அனைவரும் சொன்னார்கள். பின்னர் இயேசுவும் சீடர்களும் கெத்சமனி என்னும் பெயர் கொண்ட ஓர் இடத்திற்கு வந்தார்கள். அங்கே அவர் தம் சீடரிடம், ' நான் இறைவனிடம் வேண்டும்வரை நீங்கள் இங்கே அமர்ந்திருங்கள் ' என்று கூறி, பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரைத் தம்முடன் கூட்டிச் சென்றார். அப்போது அவர் திகிலும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார். அவர், ' எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது; நீங்கள் இங்கேயே தங்கி விழித்திருங்கள் ' என்று அவர்களிடம் கூறினார். சற்று அப்பால் சென்று தரையில் விழுந்து, முடியுமானால் அந்த நேரம் தம்மைவிட்டு விலகுமாறு இறைவனிடம் வேண்டினார். ″ அப்பா, தந்தையே எல்லாம் உம்மால் இயலும். இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும் ″ என்று கூறினார். அதன்பின்பு அவர் வந்து அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவிடம், ' சீமோனே, உறங்கிக் கொண்டா இருக்கிறாய்? ஒரு மணிநேரம் விழித்திருக்க உனக்கு வலுவில்லையா? உங்கள் மனம் ஆர்வம் உடையதுதான்; ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள் ' என்றார். அவர் மீண்டும் சென்று அதே வார்த்தைகளைச் சொல்லி இறைவனிடம் வேண்டினார். அவர் திரும்பவும் வந்தபோது அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுடைய கண்கள் தூக்கக் கலக்கமாய் இருந்தன. அவருக்கு என்ன மறுமொழி கூறுவது என்றே அவர்களுக்குத் தெரியவில்லை. அவர் மூன்றாம் முறை வந்து அவர்களை நோக்கி, ' இன்னும் உறங்கி ஓய்வெடுக்கிறீர்களா? போதும், நேரம் வந்துவிட்டது. மானிடமகன் பாவிகளின் கையில் ஒப்புவிக்கப்படப் போகிறார். எழுந்திருங்கள், போவோம். இதோ, என்னைக் காட்டிக் கொடுப்பவன் நெருங்கி வந்துவிட்டான் ' என்று கூறினார். இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பன்னிருவருள் ஒருவனான யூதாசு வந்தான். அவனோடு தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர், மூப்பர் ஆகியோர் அனுப்பிய மக்கள் கூட்டம் வாள்களோடும், தடிகளோடும் வந்தது. அவரைக் காட்டிக்கொடுக்கவிருந்தவன், ' நான் ஒருவரை முத்தமிடுவேன். அவர்தாம் இயேசு, அவரைப் பிடித்துக் காவலோடு கொண்டு போங்கள் ' என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். அவன் வந்ததும் உடனடியாக அவரை அணுகி, ' ரபி ' எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான். அவர்களும் அவரைப் பற்றிப் பிடித்துக் கைது செய்தனர். அருகில் நின்று கொண்டிருந்தவர்களுள் ஒருவர் தம் வாளை உருவி, தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார். இயேசு அவர்களைப் பார்த்து, ' கள்வனைப் பிடிக்க வருவது போல வாள்களோடும் தடிகளோடும் என்னைக் கைது செய்ய வந்தது ஏன்? நான் நாள்தோறும் கோவிலில் கற்பித்துக் கொண்டு உங்களோடு இருந்தேன். நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே! ஆனால் மறைநூலில் எழுதப்பட்டுள்ளவை நிறைவேற வேண்டும் ' என்றார். அப்பொழுது சீடர் அனைவரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினர். இளைஞர் ஒருவர் தம் வெறும் உடம்பின் மீது ஒரு நார்ப்பட்டுத் துணியைப் போர்த்திக் கொண்டு அவர் பின்னே சென்றார்; அவரைப் பிடித்தார்கள். ஆனால் அவர் துணியை விட்டு விட்டு ஆடையின்றித் தப்பி ஓடினார். அவர்கள் இயேசுவைத் தலைமைக் குருவிடம் கூட்டிச் சென்றார்கள். எல்லாத் தலைமைக் குருக்களும் மூப்பர்களும் மறைநூல் அறிஞர்களும் ஒன்று கூடினார்கள். பேதுரு தொலையில் அவரைப் பின்தொடர்ந்தார். தலைமைக் குருவின் வீட்டு உள்முற்றம் வரை வந்து காவலரோடு உட்கார்ந்து நெருப்பின் அருகே அவர் குளிர்காய்ந்து கொண்டிருந்தார். தலைமைக் குருக்களும் தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்க அவருக்கு எதிராகச் சான்று தேடினார்கள். ஆனால் ஒன்றும் கிடைக்கவில்லை. பலர் அவருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொன்னார்கள். ஆனால் அச்சான்றுகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டிருந்தன. சிலர் எழுந்து, ' மனித கையால் கட்டப்பட்ட இந்தத் திருக்கோவிலை இடித்து விட்டுக் கையால் கட்டப்படாத வேறொன்றை மூன்று நாளில் நான் கட்டி எழுப்புவேன் என்று இவன் சொல்லக் கேட்டோம் ' என்று அவருக்கு எதிராகப் பொய்ச் சான்று கூறினர். அப்படியும் அவர்களுடைய சான்று ஒத்துவரவில்லை. அப்பொழுது தலைமைக் குரு எழுந்து அவர்களின் நடுவே நின்று, ' இவர்கள் உனக்கு எதிராகக் கூறும் சான்றுக்கு மறுமொழி ஒன்றும் கூற மாட்டாயா? ' என்று இயேசுவைக் கேட்டார். ஆனால் அவர் பேசாதிருந்தார். மறுமொழி ஒன்றும் அவர் கூறவில்லை. மீண்டும் தலைமைக் குரு, ' போற்றுதற்குரிய கடவுளின் மகனாகிய மெசியா நீதானோ? ' என்று அவரைக் கேட்டார். அதற்கு இயேசு, ' நானே அவர்; மேலும் மானிடமகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வானமேகங்கள் சூழ வருவதையும் காண்பீர்கள் ' என்றார். தலைமைக் குருவோ தம் அங்கியைக் கிழித்துக்கொண்டு, ' இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இவன் கடவுளைப் பழித்துரைத்ததைக் கேட்டீர்களே; உங்களுக்கு என்ன தோன்றுகிறது? ' என்று கேட்க, அவர்கள் அனைவரும், ' இவன் சாக வேண்டியவன் ' என்று தீர்மானித்தார்கள். பின்பு சிலர் அவர்மேல் துப்பவும், அவர் முகத்தை மூடி அவரைக் கையால் குத்தி, ' இறைவாக்கினனே, யார் எனச் சொல் ' என்று கேட்கவும் தொடங்கினர். காவலரும் அவரைக் கன்னத்தில் அறைந்தனர். அப்பொழுது பேதுரு கீழே முற்றத்தில் இருக்க, தலைமைக் குருவின் பணிப் பெண் ஒருவர் வந்து, பேதுரு குளிர்காய்ந்து கொண்டிருக்கக் கண்டு அவரைக் கூர்ந்து நோக்கி, ' நீயும் இந்த நாசரேத்து இயேசுவோடு இருந்தவன்தானே ' என்றார். அவரோ, 'நீர் சொல்வது என்னவென்று எனக்குத் தெரியவில்லை, புரியவுமில்லை' என்று மறுதலித்து, வெளி முற்றத்திற்குச் சென்றார். (அப்பொழுது சேவல் கூவிற்று). அந்தப் பணிப்பெண் அவரைக் கண்டு சூழ இருந்தவர்களிடம், ' இவனும் அவர்களைச் சேர்ந்தவன்தான் ' என்று மீண்டும் கூறத் தொடங்கினார். அவர் மீண்டும் மறுதலித்தார். சற்று நேரத்திற்குப்பின் சூழ இருந்தவர்களும், ' உண்மையாகவே நீ அவர்களைச் சேர்ந்தவனே. ஏனெனில் நீ ஒரு கலிலேயன் ' என்று மீண்டும் பேதுருவிடம் கூறினார்கள். அவரோ, ' நீங்கள் குறிப்பிடுகின்ற இந்த மனிதனை எனக்குத் தெரியாது ' என்று சொல்லிச் சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார். உடனே இரண்டாம் முறை சேவல் கூவிற்று. அப்பொழுது, ' சேவல் இருமுறை கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய் ' என்று இயேசு தமக்குக் கூறிய சொற்களைப் பேதுரு நினைவு கூர்ந்து மனம் உடைந்து அழுதார். பொழுது விடிந்ததும் மூப்பரோடும் மறைநூல் அறிஞரோடும் தலைமைச் சங்கத்தார் அனைவரோடும் தலைமைக் குருக்கள் ஆலோசனை செய்து, இயேசுவைக் கட்டி இழுத்துச் சென்று பிலாத்திடம் ஒப்புவித்தனர். பிலாத்து அவரை நோக்கி, ' நீ யூதரின் அரசனா? ' என்று கேட்க அவர், ' அவ்வாறு நீர் சொல்கிறீர் ' என்று பதில் கூறினார். தலைமைக் குருக்கள் அவர்மீது பல குற்றங்களைச் சுமத்தினார்கள். மீண்டும் பிலாத்து, ' நீ பதில் ஒன்றும் சொல்ல மாட்டாயா? உன் மீது இத்தனை குற்றங்களைச் சுமத்துகிறார்களே! ' என்று அவரிடம் கேட்டான். இயேசுவோ எப்பதிலும் கூறவில்லை. ஆகவே பிலாத்து வியப்புற்றான். விழாவின்போது மக்கள் கேட்டுக் கொள்ளும் ஒரு கைதியை அவர்களுக்காகப் பிலாத்து விடுதலை செய்வதுண்டு. பரபா என்னும் கைதி ஒருவன் இருந்தான். ஒரு கலகத்தில் கொலை செய்த கலகக்காரரோடு பிடிபட்டவன் அவன். மக்கள் கூட்டம் வந்து, வழக்கமாய்ச் செய்வதுபோல ஒரு கைதியை விடுதலை செய்யுமாறு பிலாத்துவை வேண்டத் தொடங்கியது. அதற்குப் பிலாத்து, ' யூதரின் அரசரை உங்களுக்காக நான் விடுதலை செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களா? ' என்று கேட்டான். ஏனெனில் தலைமைக் குருக்கள் பொறாமையால்தான் அவரை ஒப்புவித்திருந்தார்கள் என்று அவன் உணர்ந்திருந்தான். ஆனால் தலைமைக் குருக்கள் தங்களுக்குப் பரபாவையே அவன் விடுதலை செய்ய வேண்டுமெனக் கேட்குமாறு கூட்டத்தினரைத் தூண்டிவிட்டார்கள். பிலாத்து மீண்டும் அவர்களைப் பார்த்து, ' அப்படியானால் நீங்கள் யூதரின் அரசர் என்று குறிப்பிடும் இவனை நான் என்ன செய்ய வேண்டும்? ' என்று கேட்டான். அவர்கள், ' அவனைச் சிலுவையில் அறையும் ' என்று மீண்டும் கத்தினார்கள். அதற்குப் பிலாத்து, ' இவன் செய்த குற்றம் என்ன? ' என்று கேட்க, அவர்கள், ' அவனைச் சிலுவையில் அறையும் ' என்று இன்னும் உரக்கக் கத்தினார்கள். ஆகவே பிலாத்து கூட்டத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் பரபாவை விடுதலை செய்து, இயேசுவைக் கசையால் அடித்து, சிலுவையில் அறையுமாறு ஒப்புவித்தான். பிறகு படைவீரர் அவரை ஆளுநர் மாளிகையின் முற்றத்திற்கு இழுத்துக்கொண்டு போய்ப் படைப்பிரிவினர் அனைவரையும் கூட்டினர்; அவருக்குச் செந்நிற ஆடையை உடுத்தினர்; ஒரு முள் முடி பின்னி அவருக்குச் சூட்டி, ' யூதரின் அரசே வாழ்க! ' என்று அவரை வாழ்த்தத் தொடங்கினர்; மேலும் கோலால் அவர் தலையில் அடித்து, அவர்மீது துப்பி, முழந்தாள்படியிட்டு அவரை வணங்கினர். அவரை ஏளனம் செய்த பின் செந்நிற ஆடையைக் கழற்றி விட்டு அவருடைய ஆடைகளை அணிவித்து அவரைச் சிலுவையில் அறைவதற்காக வெளியே கூட்டிச் சென்றனர். அப்பொழுது அலக்சாந்தர், ரூபு ஆகியோரின் தந்தையான சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் வயல்வெளியிலிருந்து வந்து கொண்டிருந்தார். படைவீரர்கள் இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள். அவர்கள் ' மண்டைஓட்டு இடம் ' எனப்பொருள்படும் ' கொல்கொதா ' வுக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள்; அங்கே அவருக்கு வெள்ளைப் போளம் கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். ஆனால் அவர் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை. பிறகு அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; குலுக்கல் முறையில் யாருக்கு எது என்று பார்த்து அவருடைய ஆடைகளைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டார்கள். அவரைச் சிலுவையில் அறைந்தபோது காலை ஒன்பது மணி. அவரது மரண தண்டனைக்கான காரணத்தை அறிவிக்க ' யூதரின் அரசன் ' என்று அவர்கள் எழுதிவைத்தார்கள்; அவருடைய வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக, இரு கள்வர்களை அவருடன் சிலுவைகளில் அறைந்தார்கள். அவ்வழியே சென்றவர்கள் தங்கள் தலைகளை அசைத்து, ' ஆகா, திருக்கோவிலை இடித்து மூன்று நாளில் கட்டி எழுப்புகிறவனே, சிலுவையிலிருந்து இறங்கி உன்னையே விடுவித்துக்கொள் ' என்று அவரைப் பழித்துரைத்தார்கள். அவ்வாறே தலைமைக் குருக்கள் மறைநூல் அறிஞர்களுடன் சேர்ந்து அவரை ஏளனம் செய்து, ' பிறரை விடுவித்தான், தன்னையே விடுவிக்க முடியவில்லை ' என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். அவர்கள், ' இஸ்ரயேலின் அரசனாகிய மெசியா இப்போது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும்; அப்போது நாங்கள் கண்டு நம்புவோம் ' என்றார்கள். அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருந்தவர்களும் அவரை இகழ்ந்தார்கள். நண்பகல் வந்தபொழுது நாடெங்கும் இருள் உண்டாயிற்று. பிற்பகல் மூன்று மணிவரை அது நீடித்தது. பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, ' எலோயி, எலோயி, லெமா சபக்தானி? ' என்று உரக்கக் கத்தினார். ' என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்? ' என்பது அதற்குப் பொருள். சூழ நின்று கொண்டிருந்தவர்களுள் சிலர் அதைக்கேட்டு, ' இதோ! எலியாவைக் கூப்பிடுகிறான் ' என்றனர். அப்பொழுது அவர்களுள் ஒருவர் ஓடிச்சென்று கடற்பஞ்சை எடுத்து, புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்துக்கொண்டே, ' பொறுங்கள், எலியா இவனைக் கீழே இறக்க வருவாரா, பார்ப்போம் ' என்றார். இயேசுவோ உரக்கக் கத்தி உயிர் துறந்தார். அப்பொழுது திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது. அவருக்கு எதிரே நின்றுகொண்டிருந்த நூற்றுவர் தலைவர், அவர் இவ்வாறு உயிர் துறந்ததைக் கண்டு, ' இம்மனிதர் உண்மையாகவே இறைமகன் ' என்றார். பெண்கள் சிலரும் தொலையில் நின்று உற்று நோக்கிக்கொண்டிருந்தனர். அவர்களுள் மகதலா மரியாவும் சின்ன யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாகிய மரியாவும், சலோமி என்பவரும் இருந்தனர். இயேசு கலிலேயாவில் இருந்த போது அவர்கள் அவரைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்து வந்தவர்கள், அவருடன் எருசலேமுக்கு வந்திருந்த வேறுபல பெண்களும் அங்கே இருந்தார்கள். இதற்குள் மாலை வேளையாகிவிட்டது. அன்று ஓய்வுநாளுக்கு முந்திய ஆயத்த நாளாக இருந்தபடியால், அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் துணிவுடன் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். அவர் மதிப்புக்குரிய தலைமைச் சங்க உறுப்பினர். அவரும் இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர். ஏற்கெனவே இயேசு இறந்துவிட்டதைக் குறித்துப் பிலாத்து வியப்படைந்து, நூற்றுவர் தலைவரை அழைத்து, ' அவன் இதற்குள் இறந்து விட்டானா? ' என்று கேட்டான். நூற்றுவர் தலைவரிடமிருந்து கேட்டு அறிந்ததும் உடலை அவன் யோசேப்பிடம் அளித்தான். யோசேப்பு மெல்லிய துணி ஒன்றை வாங்கி வந்து, இயேசுவின் உடலை இறக்கித் துணியால் சுற்றிப் பாறையில் வெட்டப்பட்டிருந்த கல்லறையில் கொண்டு வைத்தார்; அதன் வாயிலில் ஒரு கல்லை உருட்டி வைத்தார். அவரை எங்கே வைத்தனர் என்பதை மகதலா மரியாவும் யோசேப்பின் தாய் மரியாவும் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

Monday, March 23, 2009

தவக்காலம் 5ஆம் ஞாயிறு

நாள்: 29-3-2009

நற்செய்தி: யோவான் 12:20-33
.
    வழிபாட்டுக்காகத் திருவிழாவுக்கு வந்தோருள் கிரேக்கர் சிலரும் இருந்தனர். இவர்கள் கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா ஊரைச் சேர்ந்த பிலிப்பிடம் வந்து, ' ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம் ' என்று கேட்டுக் கொண்டார்கள். பிலிப்பு அந்திரேயாவிடம் வந்து அதுபற்றிச் சொன்னார்; அந்திரேயாவும் பிலிப்பும் இயேசுவிடம் சென்று அதைத் தெரிவித்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, ' மானிட மகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர். எனக்குக் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார் ' என்றார். மேலும் இயேசு, ' இப்போது என் உள்ளம் கலக்கமுற்றுள்ளது. நான் என்ன சொல்வேன்? ' தந்தையே, இந்த நேரத்திலிருந்து என்னைக் காப்பாற்றும் ' என்பேனோ? இல்லை! இதற்காகத் தானே இந்நேரம்வரை வாழ்ந்திருக்கிறேன். தந்தையே, உம் பெயரை மாட்சிப்படுத்தும் ' என்றார். அப்போது வானிலிருந்து ஒரு குரல், ' மாட்சிப்படுத்தினேன்; மீண்டும் மாட்சிப்படுத்துவேன் ' என்று ஒலித்தது. அங்குக் கூட்டமாய் நின்று கொண்டிருந்த மக்கள் அதைக் கேட்டு, ' அது இடிமுழக்கம் ' என்றனர். வேறு சிலர், ' அது வானதூதர் ஒருவர் அவரோடு பேசிய பேச்சு ' என்றனர். இயேசு அவர்களைப் பார்த்து, ' இக்குரல் என் பொருட்டு அல்ல, உங்கள் பொருட்டே ஒலித்தது. இப்போதே இவ்வுலகு தீர்ப்புக்குள்ளாகிறது; இவ்வுலகின் தலைவன் வெளியே துரத்தப்படுவான். நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும் போது அனைவரையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன் ' என்றார். தாம் எவ்வாறு இறக்கப்போகிறார் என்பதைக் குறிப்பிட்டே இப்படிச் சொன்னார்.

கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு பெருவிழா

நாள்: 25-3-2009
நற்செய்தி: லூக்கா 1:26-38
.
   ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, 'அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்' என்றார்.' இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார். வானதூதர் அவரைப் பார்த்து, ' மரியா, அஞ்ச வேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது ' என்றார். அதற்கு மரியா வானதூதரிடம், ' இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே! ' என்றார். வானதூதர் அவரிடம், ' தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை' என்றார். பின்னர் மரியா, ' நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும் ' என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.

தவக்காலம் 4ஆம் ஞாயிறு

நாள்: 22-3-2009
நற்செய்தி: யோவான் 3:14-21
.
   பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர். தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை. ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். இதில்தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது. தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை. உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்.

புனித யோசேப்பு கன்னி மரியாவின் கணவர் பெருவிழா

நாள்: 19-3-2009
நற்செய்தி: மத்தேயு 1:16,18-21,24

   யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு. இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, 'யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்' என்றார். 'இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.

தவக்காலம் 3ஆம் ஞாயிறு

நாள்: 15-3-2009
நற்செய்தி: யோவான் 2:13-25

   யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்; கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரை யும் அங்கே உட்கார்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார்; அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடு மாடுகளையும் விரட்டினார்; நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு மேசைகளையும் கவிழ்த்துப்போட்டார். அவர் புறா விற்பவர்களிடம், ' இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள் ' என்று கூறினார். அப்போது அவருடைய சீடர்கள். ' உம் இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் என்னை எரித்துவிடும் ' என்று மறைநூலில் எழுதியுள்ளதை நினைவு கூர்ந்தார்கள். யூதர்கள் அவரைப் பார்த்து, ' இவற்றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன? ' என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக அவர்களிடம், ' இக் கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன் ' என்றார். அப்போது யூதர்கள், ' இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே! நீர் மூன்றே நாளில் இதைக் கட்டி எழுப்பி விடுவீரோ? ' என்று கேட்டார்கள். ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலைப் பற்றியே பேசினார். அவர் இறந்து உயிருடன் எழுப்பப் பட்டபோது அவருடைய சீடர் அவர் இவ்வாறு சொல்லி இருந்ததை நினைவு கூர்ந்து மறைநூலையும் இயேசுவின் கூற்றையும் நம்பினர். பாஸ்கா விழாவின்போது இயேசு எருசலேமில் இருந்த வேளையில் அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டு பலர் அவரது பெயரில் நம்பிக்கை வைத்தனர். ஆனால் இயேசு அவர்களை நம்பிவிடவில்லை; ஏனெனில் அவருக்கு அனைவரைப் பற்றியும் தெரியும். மனிதரைப் பற்றி அவருக்கு யாரும் எடுத்துச் சொல்லத் தேவையில்லை. ஏனெனில் மனித உள்ளத்தில் இருப்பதை அவர் அறிந்திருந்தார்.

Friday, March 6, 2009

தவக்காலம் 2ஆம் ஞாயிறு

நாள்: 8-3-2009
நற்செய்தி: மாற்கு 9:2-10

   ஆறு நாள்களுக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, ஓர் உயர்ந்த மலைக்கு அவர்களை மட்டும் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவருடைய ஆடைகள் இவ்வுலகில் எந்த சலவைக் காரரும் வெளுக்க முடியாத அளவுக்கு வெள்ளை வெளேரென ஒளிவீசின. அப்போது எலியாவும் மோசேயும் அவர்களுக்குத் தோன்றினர். இருவரும் இயேசுவோடு உரையாடிக் கொண்டு இருந்தார்கள். பேதுரு இயேசுவைப் பார்த்து, ' ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம் ' என்றார். தாம் சொல்வது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் மிகுந்த அச்சம் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட அந்த மேகத்தி னின்று, ″ என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள் ″ என்று ஒரு குரல் ஒலித்தது. உடனடியாக அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். தங்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை. அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்த போது அவர், ' மானிட மகன் இறந்து உயிர்த்தெழும் வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது ' என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். அவர்கள் இவ்வார்த்தையை அப்படியே மனத்தில் இருத்தி, ' இறந்து உயிர்த்தெழுதல் ' என்றால் என்னவென்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.

Sunday, March 1, 2009

தவக்காலம் முதல் ஞாயிறு

நாள் : 1-3-2009
நற்செய்தி: மாற்கு 1:12-15


    திருமுழுக்கு பெற்ற உடனே தூய ஆவியால் இயேசு பாலைநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பாலை நிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்; அங்குக் காட்டு விலங்குகளிடையே இருந்தார். வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர். யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். ' காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் ' என்று அவர் கூறினார்.

Wednesday, February 25, 2009

சாம்பல் புதன்

நாள் : 25-2-2009
நற்செய்தி: மத்தேயு 6:1-6,16-18

   இயேசு சீடர்களை நோக்கி, ' மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது. ' நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப்பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேடக் காரர், மக்கள் புகழ வேண்டுமென்று தொழுகைக் கூடங்களிலும் சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும். அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும்; மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார். ' நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது வெளிவேடக்காரரைப்போல் இருக்க வேண்டாம். அவர்கள் தொழுகைக்கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்றுகொண்டு மக்கள் பார்க்க வேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்று விட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக் கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார். மேலும் நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப் போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம். தாங்கள் நோன்பு இருப்பதை மக்கள் பார்க்கவேண்டுமென்றே அவர்கள் தங்கள் முகங்களை விகாரப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் நோன்பு இருக்கும்போது உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள். அப்பொழுது நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது; மாறாக. மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார்.

Sunday, February 22, 2009

பொதுக்காலம் 7ஆம் ஞாயிறு

நாள்: 22-2-2009
நற்செய்தி: மாற்கு 2:1-12

   சில நாள்களுக்குப்பின் இயேசு மீண்டும் கப்பர்நாகுமுக்குச் சென்றார். அவர் வீட்டில் இருக்கிறார் என்னும் செய்தி பரவிற்று. பலர் வந்து கூடவே, வீட்டு வாயிலருகிலும் இடமில்லாமல் போயிற்று. அவர் அவர்களுக்கு இறைவார்த்தையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார். அப்போது முடக்கு வாதமுற்ற ஒருவரை நால்வர் சுமந்து அவரிடம் கொண்டுவந்தனர். மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை இயேசுவுக்கு முன் கொண்டுவர இயலவில்லை. எனவே அவர் இருந்த இடத்திற்கு மேலே வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு கீழே இறக்கினர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாத முற்றவரிடம், ' மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன ' என்றார். அங்கே அமர்ந்திருந்த மறைநூல் அறிஞர் சிலர், ' இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்? இவன் கடவுளைப் பழிக்கிறான். கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்? ' என உள்ளத்தில் எண்ணிக் கொண்டிருந்தனர். உடனே அவர்கள் தமக்குள் இவ்வாறு எண்ணுவதை இயேசு தம்முள் உணர்ந்து, அவர்களை நோக்கி, ' உங்கள் உள்ளங்களில் இவ்வாறு எண்ணுவது ஏன்? முடக்குவாதமுற்ற இவனிடம் ' உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன ' என்பதா? ' எழுந்து உன் படுக்கையை எடுத்துக் கொண்டு நட, என்பதா? எது எளிது? மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் ' என்றார். எனவே அவர் முடக்கு வாதமுற்றவரை நோக்கி, ' நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக் கொண்டு உனது வீட்டுக்குப் போ ' என்றார். அவரும் எழுந்து உடனே தம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு எல்லாரும் காண வெளியே சென்றார். இதனால் அனைவரும் மலைத்துப்போய், ' இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே ' என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.

Saturday, February 14, 2009

பொதுக்காலம் 6ஆம் ஞாயிறு

நாள்: 15-2-2009
நற்செய்தி: மாற்கு 1:40-45


   ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, ' நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும் ' என்று முழந்தாள் படியிட்டு வேண்டினார். இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், ' நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக! ' என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார். பிறகு அவரிடம், ' இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலம் அடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும் ' என்று மிகக் கண்டிப்பாகக் கூறி உடனடியாக அவரை அனுப்பி விட்டார். ஆனால் அவர் புறப்பட்டுச் சென்று இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார். அதனால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியவில்லை; வெளியே தனிமையான இடங்களில் தங்கிவந்தார். எனினும் மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் அவரிடம் வந்து கொண்டிருந்தார்கள்.

Saturday, February 7, 2009

பொதுக்காலம் 5ஆம் ஞாயிறு

நாள்: 8-2-2009
நற்செய்தி: மாற்கு 1:29-39


   இயேசுவும் அவருடைய சீடர்களும் தொழுகைக் கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள். சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள். இயேசு அவரருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார். மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டு வந்தார்கள். நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது. பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார்; அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால் அவற்றை அவர் பேசவிடவில்லை. இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள். அவரைக் கண்டதும், ' எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் ' என்றார்கள். அதற்கு அவர், ' நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்; ஏனெனில் இதற்காகவே நான் வந்திருக்கிறேன் ' என்று சொன்னார். பின்பு அவர் கலிலேய நாடுமுழுவதும் சென்று அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றி பேய்களை ஓட்டி வந்தார்.

Sunday, February 1, 2009

ஆண்டவரை காணிக்கையாக ஒப்புக்கொடுத்த விழா

நாள் : 2-2-2009
நற்செய்தி: லூக்கா 2:22-40


   மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள். ஏனெனில், ' ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப் படும் ' என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது. அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது. அப்போது எருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்து இருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார். ' ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை ' என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார். அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்தபோது. சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி, ' ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர். ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு, நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை ' என்றார். குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர். சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, ' இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும் ' என்றார். ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர்; மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்; அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோவிலைவிட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார். அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப் பற்றிப் பேசினார். ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்துமுடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள். குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.

பிப்ரவரி மாத புனிதர்கள்

பெரியதாக பார்க்க படத்தை க்ளிக் செய்யவும்...

பொதுக்காலம் 4ஆம் ஞாயிறு

நாள் : 1-2-2009

நற்செய்தி: மாற்கு 1:21-28

   அவர்கள் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள். ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார். அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார். அப்போது அவர்களுடைய தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார். அவரைப் பிடித்திருந்த ஆவி, ' நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர் ' என்று கத்தியது. ' வாயை மூடு; இவரை விட்டு வெளியே போ ' என்று இயேசு அதனை அதட்டினார். அப்பொழுது அத்தீய ஆவி அம்மனிதருக்கு வலிப்பு உண்டாக்கிப் பெருங்கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று. அவர்கள் அனைவரும் திகைப்புற்று, ' இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! ' என்று தங்களிடையே பேசிக் கொண்டனர். அவரைப் பற்றிய செய்தி உடனே கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது.

Sunday, January 25, 2009

பொதுக்காலம் 3ஆம் ஞாயிறு

நாள் : 25-1-2009

நற்செய்தி: மாற்கு 1:14-20

   யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். ' காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் ' என்று அவர் கூறினார். அவர் கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, ' என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் ' என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். பின்னர், சற்று அப்பால் சென்றபோது செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் இயேசு கண்டார். அவர்கள் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். உடனே இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின் சென்றார்கள்.

Friday, January 16, 2009

பொதுக்காலம் 2ஆம் ஞாயிறு

நாள்: 18-1-2009

நற்செய்தி: யோவான் 1:35-42

   மறு நாள் யோவான் தம் சீடர் இருவருடன் மீண்டும் அங்கு நின்று கொண்டிருந்தார். இயேசு அப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அவரைக் கூர்ந்து பார்த்து, ' இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி ' என்றார். அந்தச் சீடர் இருவரும் அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர். இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின் தொடர்வதைக் கண்டு, 'என்ன தேடுகிறீர்கள்?' என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள், 'ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?' என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், ' வந்து பாருங்கள் ' என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள். யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர். அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, ' மெசியாவைக் கண்டோம் ' என்றார். ' மெசியா ' என்றால் அருள்பொழிவு பெற்றவர் என்பது பொருள். பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, 'நீ யோவானின் மகன் சீமோன். இனி 'கேபா' எனப்படுவாய்' என்றார். 'கேபா' என்றால் 'பாறை' என்பது பொருள்.

Saturday, January 10, 2009

ஆண்டவரின் திருமுழுக்கு பெருவிழா

நாள் : 11-1-2009
நற்செய்தி: லூக்கா 2:15-16,21-22


   அக்காலத்தில் மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக் கொண்டிருந்தார்கள். யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, ' நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்' என்றார். மக்களெல்லாரும் திருமுழுக்குப் பெறும் வேளையில் இயேசுவும் திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது வானம் திறந்தது. தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்கியது. அப்பொழுது, ' என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன் ' என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.

Sunday, January 4, 2009

ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா

நாள் : 4-1-2009
நற்செய்தி: மத்தேயு 2:1-12

   ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, ' யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம் ' என்றார்கள். இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று. அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்று கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான். அவர்கள் அவனிடம், ' யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும். ஏனெனில், ″ யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார் ″ என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார் ' என்றார்கள். பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக் கொண்டு போய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டான். மேலும் அவர்களிடம், ' நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன் ' என்று கூறி அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான். அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது. அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.

Thursday, January 1, 2009

ஜனவரி மாத புனிதர்கள்

பெரியதாக பார்க்க படத்தை க்ளிக் செய்யவும்...

புனித கன்னி மரியா இறைவனின் தாய் பெருவிழா

நாள் : 1-1-2009
நற்செய்தி: லூக்கா 2:16-21

   விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள். அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர். ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார். இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது. குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.