Wednesday, November 30, 2011

நவம்பர் 30, 2011

புதன் மறைபோதகம்: நம் பாவ மீட்புக்கான இயேசுவின் கீழ்படிதல் மரணம் வரை தொடர்ந்தது - திருத்தந்தை

    இப்புதனன்று உரோம் நகரின் தட்ப வெப்ப நிலை சிறப்பானதாக இருந்தபோதிலும், ஏற்கனவே திட்ட மிட்டபடி, திருத்தந்தையின் பொது மறைபோதகம் திருத்தந்தை 6ம் பால் மண்டபத்திலேயே இடம் பெற்றது. கிறிஸ்தவ செபத்தின் மறையுண்மை குறித்து தன் எடுத்துக்காட்டு மூலம் முழுமையாக வெளிப்படுத்தும் இயேசு கிறிஸ்துவை நோக்கி திரும்புவோம் என இவ்வார புதன் மறைபோதகத் தைத் துவக்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
   தன் திருமுழழுக்கைத் தொடர்ந்து இயேசு மேற்கொண்ட செபம், ஒரு முக்கிய தருணமாகும். இறைமகன் என்ற அவரின் ஆழமான தனித்தன்மையையும், தான் மீட்க வந்த பாவம் நிறைந்த மனித குலத்துடன் இயேசு கொண்ட ஒருமைப்பாட்டை யும் வெளிப்படுத்துவதாக அச்செபம் இருந்தது.
    இயேசுவின் செபம், தந்தையின் விருப்பத்திற்கு, முழுமையான, மகனுக்குரிய கீழ்ப்படிதலை காட்டி நிற்கின்றது. அந்தக் கீழ்ப்படிதலானது அவரை, நம்முடைய பாவ மீட்புக்காக சிலுவை மரணம் வரை இட்டுச்சென்றது. தன் மனித இதயத்தோடு அன்னை மரியிடமிருந்தும், யூத பாரம்பரியங்களிலிருந்தும் செபிக்கக் கற்றுக் கொண்டார் இயேசு. இருப்பினும், அவரின் செபத்திற்கான மூல ஆதாரம், தந்தையுடன் ஆன முடிவற்ற ஒன்றிப்பேயாகும். நாம் வானுலகத் தந்தையின் புதல்வர்களாக எவ்வாறு செபிக்க வேண்டும் என்பதை மனுமகன் இயேசு, நேர்த்தியான முறையில் காண்பிக்கிறார். செபத்தின் மீது பற்றுறுதி பற்றிய இயேசுவின் எடுத்துக்காட்டு, நாம் நம் செபத்திற்கு எடுக்கும் முயற்சி மற்றும் ஒதுக்கும் நேரம் ஆகியவைகளை ஆழமாகச் சிந்திக்க நமக்குச் சவால் விடுக்கின்றது. செபம் என்பது கடவுளின் கொடையாக இருப்பினும், அது தொடர் பயிற்சிகள் மூலம் கற்றுக் கொள்ளவேண்டிய ஒரு கலையாகும். தொடர்ந்து நாம் செபிக்க வேண்டும் என்று கற்பிக்கும் இயேசு, செபத்தின்
வனப்பு வழியாக, நம்மையே முற்றிலுமாக அர்ப்பணித்தல் மற்றும் திறந்த உள்ளத்துடன் இறைவனை நாடுதல் போன்றவைகளுக்கு சாட்சி பகர்பவர்களாக நாம் செயல்பட வேண்டும் எனவும் எதிர்பார்க்கிறார், என தன் புதன் மறைபோதகத்தை வழங்கினார் திருத்தந்தை.
   இப்புதன் மறைபோதகத்தில் பங்குபெற்ற ‘சான் எஜிதியோ’ அமைப்பின் அங்கத்தினர் களைத் தனிப்பட்ட முறையில் வாழ்த்திய திருத்தந்தை, மரண தண்டனையை உலகிலிருந்து அகற்ற அவர்கள் எடுத்து வரும் முயற்சிகள் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார். 'உயிர்களுக்கு மதிப்பில்லா இடத்தில் நீதியில்லை' என்ற தலைப்பில் வாழ்விற்கான மாண்பு குறித்த உலகக் கருத்தரங்கை நடத்தி வருகிறது இந்த அமைப்பு. சிறைக்கைதிகளின் மாண்பை மதிப்பதுடன் சமூக ஒழுங்கை காப்பதாகவும் உலகின் குற்றவியல் சட்டங்களில் இடம்பெறும் முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்தும் சான் எஜிதியோ குழுவிடம் திருப்தியை வெளியிட்டார் அவர். புதன் மறைபோதகத்தின் இறுதியில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் பாப்பிறை.

Monday, November 28, 2011

நவம்பர் 27, 2011

இறையன்பிலிருந்து வெளிப்படும் மீட்பை ஏற்கவே  திருவருகைக்காலம் அழைக்கிறது - திருத்தந்தை

   இறைவன் தன் தெய்வீக மகிமையைக் களைந்து நம்மைப்போல் மனிதனாக உடலெடுத்த அவரின் வருகைக் குறித்த நினைவுகளை நம்மில் தட்டி யெழுப்புவதாக திருவருகைக்காலம் உள்ளது என இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் எடுத்துரைத் தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
   கடவுள் இல்லாதது போன்றும் கடவுள் நம்மை கைவிட்டுவிட்டது போலும் தோன்றும் இன்றைய நவீன உலகில், திருவருகைக்காலம் என்பது மேலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது என்ற பாப்பிறை, இறை அன்பிலிருந்து வெளிப்படும் மீட்பு எனும் மறையுண்மையைத் திறந்த மனதுடன் ஏற்றவர்களாக, கிறிஸ்தவ சமூகங்களோடு வாழ்ந்து விசுவாசத்தின் புதிய பயணத்தைத் தொடர இத்திருவருகைகாலம் அழைப்பு விடுக்கிறது என உரைத்தார்.
   இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தில் இயேசு கூறும் 'கவனமாயிருங்கள்! விழிப்பாயிருங்கள்!' என்ற வார்த்தைகளையும் எடுத்துரைத்த பாப்பிறை, எவ்வாறு முளையானது மண்ணிலிருந்து புறப்பட்டு விண்ணை நோக்கி வளர்கிறதோ, அவ்வாறே நம் வாழ்வும் இவ்வுலகை மட்டும் சார்ந்ததல்ல, மாறாக அதையும் தாண்டியது என்பதை இயேசுவின் இவ்வார்த்தைகள் நினைவுறுத்தி நிற்கின்றன என்றார். கடவுளை விலக்கி வைத்து மனிதனே அனைத்திற்கும் தலைவன் என்பது போன்ற ஒரு மாயை இன்றைய உலகில் உருவாக்கப்பட்டுள்ளது குறித்தும், சில வேளைகளில் இயற்கையிலோ சமூகத்திலோ அதிர்ச்சி தரும் நிகழ்வுகள் இடம்பெறும்போது இறைவன் மக்களைக் கைவிட்டு விட்டது போன்ற எண்ணம் உருவாக்கப்படுகின்றது என்பது குறித்தும் எடுத்துரைத்த பாப்பிறை, உண்மையான தலைவர் என்பவர் மனித
ர் அல்ல மாறாக கடவுளே என்பதையும் சுட்டிக்காட்டி, விழிப்பாயிருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

Wednesday, November 23, 2011

நவம்பர் 23, 2011

புதன் மறைபோதகம்: புதிய காலத்தின் முன்னோடிகளாக ஆப்பிரிக்க கிறிஸ்தவர்கள் மாறட்டும்! - திருத்தந்தை

   திருத்தந்தை 16ம் பெனடிக்டின் இப்புதன் பொது மறைபோதகம் வத்திக்கானிலுள்ள திருத்தந்தை ஆறாம் பவுல் மண்டபத்தில் இடம்பெற்றது. மறை போதகத்தின்போது, திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தான் அண்மையில் முடித்துத் திரும்பிய ஆப்ரிக்கா வின் பெனின் நாட்டுத் திருப்பயணம் குறித்து எடுத்துரைத்தார்.
   கடந்த வாரத்தில் பெனின் நாட்டில் நான் மேற் கொண்ட திருப்பயணம், அந்நாட்டில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் 150ம் ஆண்டுக் கொண்டாட்டங்களை உடனிருந்து சிறப்பிக்க உதவியதுடன், அந்நாட்டின் மதிப்புக்குரிய மகனும், உன்னத திருச்சபைப் பணியாள ருமான கர்தினால் பெர்னார்டின் கான்டினின் நினைவுகளைக் கௌரவிக்கவும் உதவியது எனத் தனது புதன்
பொது மறைபோதகத்தைத் துவக்கினார் திருத்தந்தை. கொட்டுன்னு நகர் விளையாட்டரங்கில் கடந்த ஞாயிறன்று நிறைவேற்றிய திருப்பலியில், ஆப்ரிக்காவிற்கான சிறப்பு ஆயர் மாமன்றத்தின் பரிந்துரைகள் அடங்கிய ஆப்ரிகே முனஸ் என்ற அப்போஸ்தலிக்க ஏட்டை ஆப்ரிக்கா முழுமை யிலும் உள்ள திருச்சபைக்கென சமர்ப்பித்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உரோம் நகரில் இடம்பெற்ற ஆயர்கள் பேரவையின் ஆப்ரிக்காவிற்கான சிறப்பு மாமன்றக் கூட்டத்தின் கனிகளைத் திரட்டிக் கொணரும் இந்த ஏடு, ஆப்ரிக்கக் கண்டத்தின் வருங்காலத் திருச்சபையின் பணிகளுக்கான வழிகாட்டுதல்களை வழங்குகிறது. 
   ஆயர் மாமன்றக்கூட்டத்தின் ஒளியில், அமைதி, நீதி மற்றும் ஒப்புரவிற்கான பணியில் ஆழமான விசுவாசத்துடனும் அர்ப்பணத்துடனும் செயல்படுமாறு ஆப்ரிக்கத் திருச்சபை அழைப்புப் பெறுகிறது. கிறிஸ்துவைப் பின்பற்றும் அனைத்து ஆப்ரிக்க மக்களையும் ஆப்ரிக்காவின் நம் அன்னைமரியின் பரிந்துரைக்கு முன்வைப்பதில் இணையும்படி உங்களனைவரையும் விண்ணப்பிக்கின்றேன். இறைவார்த்தைக்கு விசுவாசமாக இருந்து வழங்கும் சாட்சியம், நற்செய்தி அறிவிப்பதில் அவர்களின் அர்ப்பணம், ஐக்கிய வாழ்வு, அமைதி மற்றும் ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்பு வதற்கான அவர்களின் முயற்சிகள் ஆகியவை களின் மூலம், இந்த உன்னத ஆப்ரிக்கக் கண்டத்தின் நம்பிக்கையுடன் கூடிய புதிய காலத்தின் முன்னோடிகளாக ஆப்ரிக்கக் கிறிஸ்தவர்கள் மாறுவார்களாக.
   இவ்வாறு, புதன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Sunday, November 20, 2011

நவம்பர் 20, 2011

வலுவிழந்தோரை நிறைவாழ்விற்கு அழைத்துச் செல்வதிலேயே கிறிஸ்துவின் அரசத்தன்மை வெளிப்படுகிறது - திருத்தந்தை

   இத்தாலிக்கு வெளியே தனது 22வது மேய்ப்புப் பணி திருப்பயணத்தை மேற்கு ஆப்ரிக்க நாடான பெனின் நாட்டில் இவ்வெள்ளியன்று தொடங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இத்திருப்பயணத்தின் நிறைவு நாளான இஞ்ஞாயிறு கிறிஸ்து அரசர் பெருவிழாத் திருப்பலியை, ஆப்ரிக்கக் கண்டத்தின் 200க்கும் மேற்பட்ட ஆயர்கள், ஆயிரக்கணக்கான குருக்களுடன் இணைந்து நிகழ்த்தினார். பெனின் அரசுத்தலைவர் தாமஸ் யாயி போனி உட்பட பல அரசு அதிகாரிகள் கலந்து கொண்ட இத்திருப்பலியில், முப்பதாயிரத்துக்கு மேற்பட்ட விசுவாசிகள் பங்கு பெற்றனர். இத்திருப்பலியில் திருத்தந்தை ஆற்றிய மறையுரை பின்வருமாறு: 
   கிறிஸ்து அரசர் பெருவிழாவான இன்று பெனின் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், பிரெஞ்ச் மொழி பேசும் டோகோ, புர்கினா பாசோ, நைஜர் ஆகிய நாடுகளிலிருந்தும் இங்கு கூடியிருக்கும் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறேன். 150 ஆண்டுகளுக்கு முன் இந்த நாட்டில் நற்செய்தி விதைக்கப்பட்டதற்கும், ஈராண்டுகளுக்கு முன் உரோம் நகரில் ஆப்ரிக்க ஆயர்களின் சிறப்பு மாமன்றம் நல்ல முறையில் நடந்து முடிந்த தற்கும் நன்றி சொல்ல நாம் அனைவரும் வந்திருக்கிறோம்.
   துன்புறுவோர், புறக்கணிக்கப்பட்டோர் ஆகியோருடன் தன்னையே ஒன்றி ணைக்கும் இறைவன், இவர்களுக்கு நாம் என்ன செய்தோம் என்பதன் அடிப்படையில் நம்மைத் தீர்ப்பிட வருவார் என்று இப்போது நாம் வாசித்த நற்செய்தியில் கேட்டோம். மனிதராகப் பிறந்து ஏழ்மையிலும் துன்பத்திலும் வாழ்ந்த கிறிஸ்துவையே நாம் இன்று அரசர் என்று கொண்டாடுகிறோம்.
   அரசர் என்றால், சக்தி, ஆடம்பரம், செல்வம் என்ற அடையாளங்களை இவ்வுலகம் காட்டும்போது, ஏழ்மையில் வாழ்ந்த கிறிஸ்துவை அரசர் என்று சொல்வது பலருக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆயினும், இதுவே நமது புனித நூல்கள் வழியே நமக்குச் சொல்லப்பட்டுள்ள உண்மை. இல்லதாரோடு தன்னையே ஒருங்கிணைத்ததாலேயே கிறிஸ்து இந்த உலகைத் தீர்ப்பிடும் வல்லமையைப்  பெற்றுள்ளார்.
   இந்தக் கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கு நாம் பல்வேறு தியாகங்களைச் செய்ய வேண்டியுள்ளது. அவர் காட்டும் புதிய வாழ்வுக்குள் நுழைவதற்கு நமது பழைய வாழ்வை முற்றிலும் களைந்துவிட நாம் தயாராக இருக்க வேண்டும். இறந்த கால உலகிலிருந்து நம்மை அந்த இறைவனே விடுவிப்பார். வறுமையிலும், நோயிலும் துன்புறும் பலருடன் கிறிஸ்து தன்னையே ஒருங்கிணைத்துக் கொண்டார். எனவே, இவர்கள் மீது நாம் தனிப்பட்ட மதிப்பு கொள்ள வேண்டும்.
   இந்த நேரத்தில் உலகெங்கும் எயிட்ஸ் மற்றும் பல்வேறு நோய்களால் துன்புறு வோருக்கு நான் கூற விழைவது இதுவே: கலங்காதீர்கள், இறைவன் உங்களோடு இருக்கிறார். பாப்பிறையான நானும் என் எண்ணங்களாலும், செபங்களாலும் உங்க ளோடு இருக்கிறேன். கலங்காதீர்கள்.
   பெனின் நாட்டிற்கும், ஆப்ரிக்கக் கண்டத்திற்கும் அற்புத கருவூலமாய் விளங்கிய மதிப்பிற்குரிய கர்தினால் பெர்னார்டின் கான்டினை இவ்வேளையில் சிறப்பாக எண்ணிப் பார்க்கிறேன். இவர் வழியாகவும், இன்னும் பல ஆயர்கள், குருக்கள், மறை பணியாளர்கள், துறவிகள், மறை
க்கல்வியாளர்கள், மக்கள் அனைவரின் வழியாகவும் 150 ஆண்டுகளுக்கு முன் இந்நாட்டில் ஊன்றப்பட்ட சிலுவையின் ஒளி இந்நாடெங் கிலும் பரவியுள்ளதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்.
   தொடர்ந்து இந்நாட்டிலும், ஆப்ரிக்கக் கண்டத்திலும், இவ்வுலகிலும் கிறிஸ்துவை யும், நற்செய்தியையும் ஒளிரச் செய்வது முக்கியமாக இன்றைய இளையோரின் கடமையாகிறது. பல பிரச்சனைகளில் ஆழ்ந்துள்ள இவ்வுலகில் நம்பிக்கையை விதைப்பது இளையோரின் கடினமான பணியாகிறது.
  மறைபணியாளர்கள் வழியாக பெனின் நாடு பல்வேறு நன்மைகளைப் பெற்றுள்ளது. தான் பெற்ற நன்மைகளை உலகின் பல நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள இந்நாடு தற்போது அழைக்கப்பட்டுள்ளது. அமைதி, நீதி, ஆதரவு ஆகிய வழிகளில் உலகைக் கட்டியெழுப்ப ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டுள்ளோம்.
   கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று உலகெங்கும் இவ்வரசரின் ஆட்சி பரவியுள்ள தற்காக நாம் அனைவரும் மகிழ்கிறோம். ஒப்புரவு, அமைதி, நீதி இவைகளுக்குத் தடையாக இருக்கும் அனைத்தையும் நீக்குபவர் கிறிஸ்துவே. உண்மையான அரசத் தன்மை சக்தியை வெளிப்படுத்துவதில் அல்ல, மாறாக, தாழ்ச்சியில் மேற்கொள்ளப் படும் பணிகளிலேயே நிலைநாட்டப்படுகிறது. வலுவிழந்தோரை ஒடுக்குவதில் அல்ல, மாறாக அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கி, அவர்களை நிறை வாழ்விற்கு அழைத்துச் செல்வதிலேயே கிறிஸ்துவின் அரசத் தன்மை வெளிப்படுகிறது. சிலுவையில் இருகரங்களையும் விரித்து அறையப்பட்டுள்ள கிறிஸ்து, அந்த அரியணையிலிருந்து நம் அனைவரையும் அணைத்து ஒன்று சேர்க்கிறார். ஆப்ரிக்கக் கண்டத்தில் வாழும் அனைத்து மக்களும் நீதியிலும் அமைதியிலும் வாழ சிறப்பாக மன்றாடுவோம்.
   ஆங்கிலம் பேசும் கானா, நைஜீரியா மற்றும் அண்மை நாடுகளிலிருந்து இங்கு வந்துள்ள அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். இறைவன் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!

Saturday, November 19, 2011

நவம்பர் 19, 2011

மரியா வழியாக இயேசுவைத் தேடுங்கள் - திருத்தந்தை

   மேற்கு ஆப்ரிக்க நாடான பெனின் நாட்டுக்கு மூன்று நாள் திருப்பயணமாக இவ்வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு அந்நாடு சென்ற திருத்தந்தை 16ம் பெனடிக்ட், ஆன்மீக மற்றும் ஒழுக்க நெறி அழிவுகளின் மத்தியில் ஆப்ரிக்கக் கண்டம் தனது தொன்மைமிகு விழுமியங்களைப் பாதுகாக்குமாறு அழைப்பு விடுத்தார். ஒப்புரவு, நீதி, அமைதி என்ற தலைப்பில் இடம் பெற்று வரும் திருத்தந்தையின் இப்பயணத்தின் முதல் நாள் மாலை 4.30 மணிக்கு இந்நாட்டின் மிகப் பெரிய நகரமான கொட்டுன்னு நகரின் இரக்கமுள்ள அன்னைமரியா பேராலயம் சென்ற திருத்தந்தை, அங்கு ஆற்றிய மறையுரையில், அன்னைமரியா வழியாக இயேசுவைத் தேடுமாறு கேட்டுக் கொண்டார்.
   தனிப்பட்டவர்கள் மற்றும் நாடுகளின் மீட்பு வரலாற்றில், இறை இரக்கம், நம் பாவங்களை மன்னிப்பதோடு, உண்மையும் ஒளியும் நிறைந்த பாதையில் நம்மை வழி நடத்துகிறது. ஏனெனில் நாம் தொலைந்து போவதை கடவுள் விரும்பவில்லை. சிலவேளைகளில் இப்பாதையில் வேதனையும் உண்டு. இறை இரக்கத்தின் இந்தப் பண்பானது ஒவ்வொரு கிறிஸ்தவரின் திருமுழுக்கின் போது கடவுள் செய்து கொண்ட உடன்படிக்கையில் அவர் எவ்வளவு பிரமாணிக்கமாய் இருக்கிறார் என்பதை வெளிப் படுத்துகின்றது. அன்னை மரியா இறை இரக்கப் பேருண்மையை மிக அதிகமாக அனுபவித்தவர். அவர் இறையழைப்பிற்குச் சொன்ன ஆகட்டும் என்ற பதில் வழியாக, மனித சமுதாயத்தில் இறையன்பு வெளிப்படுத்தப்பட அவர் உதவியிருக்கிறார். இவ்வன்னை, தனது எளிமை மற்றும் தாய்க்குரிய இதயத்தோடு ஒரே ஒளியும் உண்மையுமான தமது மகன் இயேசுவை நமக்குக் காட்டுகிறார். எனவே பயப்படாமல் நம்பிக்கையுடன் அவரின் பரிந்துரையை வேண்டுவோம் என்று சொல்லி அன்னை மரியிடம் ஆப்ரிக்க மக்களுக்காகச் செபித்தார் திருத்தந்தை.
   இரக்கமுள்ள தாயே, நம்பிக்கையின் அரசியே, அமைதியின் அரசியே, ஆப்ரிக்க அன்னையே, ஆப்ரிக்க இளையோரின் ஏக்கங்களை நிறைவேற்றும். நீதி, அமைதி மற்றும் ஒப்புரவுக்காக ஏங்கும் இதயங்களை நம்பிக்கையால் நிரப்பும். நோயாளிகள் குணம் பெறவும், துன்புறுவோர் ஆறுதலடையவும் பாவிகள் மன்னிப்பு அடையவும் உம் மகனின் அருளைப் பெற்றுத் தாரும். மனித சமுதாயத்துக்கு மீட்பையும் அமைதியையும் பெற்றுத்தாரும் தாயே, ஆமென்.
 


குருக்கள், துறவியர், குருமட மாணவர்கள் மற்றும் விசுவாசிகளுக்கு திருத்தந்தை இன்று வழங்கிய உரை:
   திருத்தந்தையின் பெனின் நாட்டுக்கானத் திருப்பயணத்தின் இரண்டாவது நாளான இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் பகல் 11 மணி 25 நிமிடத்திற்கு புனித கால் குருத்துவக் கல்லூரியில் குருக்கள், குருத்துவ மாணவர்கள், துறவிகள் மற்றும் பொதுநிலையினரைச் சந்தித்தார் திருத்தந்தை. அப்போது திருத்தந்தை அவர்க ளிடையே உரையாற்றினார்.
   புனிதர்கள் ஜோன் ஆப் ஆர்க் மற்றும் கால் ஆகியோரின் பாதுகாவலில் ஒப்படைக்கப்பட்டுள்ள இந்த குருத்துவப் பயிற்சி இல்லத்தில் உங்கள் மத்தியில் இருப்பது எனக்குப் பெரும் மகிழ்வைத் தருகிறது. திருமுழுக்கின் வழியாக நமக்குத் தரப்பட்டுள்ள கிறிஸ்தவ வாழ்வும், குருத்துவ வாழ்வும் நம்மிடம் எதிர்பார்ப்ப தெல்லாம் அமைதி, நீதி மற்றும் ஒப்புரவு ஆகிய உயரிய பண்புகள். இம்மூன்றையும் உலகில் நிலைநிறுத்துவது குருக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியப் பொறுப்பு. ஒளிப்படிகங்கள் ஒளியைத் தங்களிடமே வைத்துக் கொள்ளாமல், பிரதிபலிப்பதைப் போல், குருக்களும் தங்கள் வாழ்வின் மேலான பண்புகளை உலகோர் அனைவரும் காணும் வண்ணம் பிரதிபலிக்க வேண்டும். இப்படி வாழ்வதற்கு கிறிஸ்து ஒருவரே உங்கள் எடுத்துகாட்டாக இருக்க வேண்டும். இந்த உலகம் காட்டும் மற்ற எடுத்துக் காட்டுகள் உங்களைத் திசைத் திருப்பாமல் காத்துக்கொள்ளுங்கள்.
   துறவற வாழ்வைத் தேர்ந்துள்ள சகோதர, சகோதரிகளே, நிபந்தனை ஏதுமின்றி நீங்கள் கிறிஸ்துவைத் தேர்ந்துள்ளதுபோல், அயலவர் அன்பிலும் நிபந்தனைகள் ஏதுமின்றி செயல்படுங்கள். உலகை விட்டு விலகி துறவு மடத்தில் செபத்தில் ஈடுபடுவது உங்கள் அழைப்பாக இருந்தாலும், மக்கள் பணியில் ஈடுபடுவது உங்கள் அழைப்பாக இருந்தாலும், புனிதமான வாழ்வுக்கு நீங்கள் அழைக்கப்பட்டிருப்பதை உணர்ந்து வாழுங்கள்.
   குருத்துவ பயிற்சியில் ஈடுபட்டுள்ள மாணவர்களே, குருத்துவ அழைப்பும் வாழ்வும் புனிதத்திற்கு உங்களை நடத்திச் செல்லும் வழிகள். புனிதம் என்ற கொள்கை இல்லாமல் நீங்கள் மேற்கொள்ளும் குருத்துவப்பணி வெறும் சமுதாயச் சேவையாக மட்டும் மாறும் ஆபத்து உண்டு. உங்கள் பயிற்சி காலத்தில் நீங்கள் சேகரிக்கும் அறிவுத் திறன், ஆன்மீகப் பயிற்சி, மக்கள்பணி பயிற்சிகள் அனைத்துமே உங்களுக்கு கட்டாயம் உதவியாக இருக்கும். அறுபது ஆண்டுகள் குருத்துவ வாழ்வை முடித்தவன் என்ற முறையில் நான் இதை உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
   இங்கு கூடியிருக்கும் விசுவாசிகளே, நீங்கள் அனைவருமே உலகின் உப்பாக, ஒளியாக வாழ அழைக்கப்பட்டுள்ளீர்கள். நீதி, அமைதி, ஒப்புரவு ஆகியவற்றை வளர்ப்பதற்கு மீண்டும் ஒரு முறை நீங்கள் உறுதி கொள்ளுங்கள்.

Wednesday, November 16, 2011

நவம்பர் 16, 2011

புதன் மறைபோதகம்: திருப்பாடல் 110 நம் அரசரும் ஆண்டவருமாகிய கிறிஸ்துவின் வெற்றியை அறிக்கையிடுகிறது - திருத்தந்தை

   கிறிஸ்தவ செபம் குறித்த நம் மறைக்கல்விப் போதனையில் இன்று, தாவீது அரசராக முடி சூட்டப்பட்டது தொடர்புடைய புகழ்பெற்ற ‘அரசகுல திருப்பாடல்’களுள் ஒன்றாகிய திருப்பாடல் 110 குறித்து நோக்குவோம் எனத் தன் புதன் பொது மறைபோதகத்தைத் துவக்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்து தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கும் மெசியா அரசரும் நிரந்தர குருவுமாகிய கிறிஸ்துவைக் குறித்து முன்னுரைப்பதாக இத்திருப்பாடலை நோக்குகின்றது திருச்சபை. பெந்த கோஸ்தே நாளில் புனித பேதுரு, இறப்பின் மீதான நம் ஆண்டவரின் வெற்றி, மற்றும், அவர் மகிமையில் உயர்த்தப்பட்டது குறித்துப் பேசுகையில் இத்திருப்பாடலின் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். 
   பழங்காலம் தொட்டே இந்தத் திருப்பாடலின் மூன்றாம் அத்தியாயம், மன்னரைக் கடவுளின் மகனுக்குரிய இடத்தைக் கொண்டவராகக் கண்டு விளக்கம் தந்துள்ளது. அதே வேளை, நான்காம் அத்தியாயமோ, 'மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே' என அரசரைப் பற்றிக் கூறுகின்றது. புனித பவுல் எபிரேயருக்கு எழுதிய திருமுகத்தில் இந்த உருவகத்தை, இறைமகனும் நம் உன்னத தலைமைக் குருவுமாக இருக்கும் கிறிஸ்துவுக்குப் பயன்படுத்துகிறார். 'தம் வழியாகக் கடவுளிடம் வருபவரை அவர் முற்றும் மீட்க வல்லவராயிருக்கிறார்; அவர்களுக்காகப் பரிந்து பேசுவதற்கென என்றுமே உயிர் வாழ்கிறார்' என்கிறார் தூய பவுல். 
   வெற்றிவாகைச் சூடிய அரசர், நாடுகள் மீது தீர்ப்பு வழங்கி அதனை நிறை வேற்றுவதை இத்திருப்பாடலின் இறுதி அத்தியாயங்கள் எடுத்துரைக்கின்றன. நாம் இத்திருப்படலைச் செபிக்கும்போது, நம் அரசரும் உயிர்த்த ஆண்டவருமாகிய கிறிஸ்துவின் வெற்றியை அறிக்கையிடுகிறோம். அதேவேளை, திருமுழுக்கின் வழி இறையுடலில் அங்கத்தினர்களாகி நாம் பெற்றுள்ள அரசகுல மற்றும் குருத்துவ மாண்பை முற்றிலுமாக வாழ நாம் முயல்கிறோம்.
   இவ்வாறு தன் புதன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Monday, November 14, 2011

நவம்பர் 13, 2011

நமக்கு வழங்கப்பட்டுள்ள கொடைகள் நமது தனிச் சொத்து என்று நினைப்பது தவறு - திருத்தந்தை

   கடவுள் மனிதர்களுக்கு வாழ்வையும் திறமை களையும் அளித்து, அவர்கள் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட பணிகளையும் ஒப்படைக்கிறார் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
   வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தில் கூடியிருந்த விசுவாசிகளுடன் பகிர்ந்து கொண்ட இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில், நமக்கு வழங்கப்பட்டுள்ள கொடைகள் நமது தனிச் சொத்தாக எண்ணுவது தவறு என்
றார் திருத்தந்தை.
   இஞ்ஞாயிறு திருப்பலிக்கென தரப்பட்டிருந்த தாலந்து உவமையை தன் உரையின் மையப்பொருளாகக் கொண்டு திருத்தந்தை சிந்தனைகளை வழங்கியபோது, மண்ணுலகில் நாம் அனைவருமே பயணிகள் என்பதையும் இந்தப் பயணத்தில் நமக்கு வழங்கப்பட்டுள்ள கொடைகளை சரியான முறையில் பயன்படுத்துவதே அனைவரின் கடமை என்றும் திருத்தந்தை சுட்டிக் காட்டினார்.
   மனிதர்களுக்கு இறைவன் தந்துள்ள கொடைகளிலேயே மிக உயர்ந்த கொடை அன்பு என்றும், இந்த நற்கொடையைத் தவற விடுபவர்கள் வெளி இருளில் தள்ளப்படுவர் என்றும் திருத்தந்தை பெரிய கிரகோரி கூறிய வார்த்தைகளை தன் உரையில் நினைவுபடுத்தியத் திருத்தந்தை, பிறரன்பு என்ற கொடையை தவறாமல் பயன்படுத்துவதன் மூலமே நாம் இறைவனின் முழு மகிழ்வில் பங்கேற்க முடியும் என்று கூறினார்.
   இஞ்ஞாயிறன்று ஜெர்மனியில் அருளாளராக உயர்த்தப்பட்ட மறைசாட்சியும் குருவுமான கார்ல் லம்பெர்ட், இருள் நிறைந்த சோசியலிச நாட்களில் ஓர் அணையா விளக்காகத் திகழ்ந்தார் என்று மூவேளை செபத்தின் இறுதியில் திருத்தந்தை சுட்டிக் காட்டினார்.

Wednesday, November 9, 2011

நவம்பர் 9, 2011

புதன் மறைபோதகம்: இறைவன் மீது நாம் கொள்ளும் அன்பை அவரே நமக்கு வழங்குவாராக! - திருத்தந்தை

   இப்புதனன்று வானம் தன் சூரியக்கதிர்களை வெளிக்கொணர்ந்து உரோம் நகரை ஒளிமயமாக்க, திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம் தூய இராயப்பர் பேராலய வளாகத்தில் இடம்பெற்றது.
   கிறிஸ்தவ செபம் குறித்த நம் மறைக்கல்வி போதனையில் இன்று, இறைச்சட்டத்தைக் கொண்டா டும் திருப்பாடல் 119 குறித்து காண்போம் என தன் உரையை துவக்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இந்தத் திருப்பாடலின் 22 சரணங்களிலும், ஒளியை யும் வாழ்வையும், மீட்பையும் கொணரும் இறைச்சட்டத்தின் மீது தான் கொண்டி ருக்கும் அன்பை அறிக்கையிடுகிறார் திருப்பாடல் ஆசிரியர்.
   இறைவார்த்தைக்கு மனதை திறந்த நிலையில், இறைவனைப் புகழ்ந்து, அவருக்கு நன்றி கூறி, அவரில் நம்பிக்கையை வெளிப்படுத்தி, அவரை வேண்டி மற்றும் பாவங் களுக்காக வருந்தி செபிக்கும் ஒவ்வொருவரின் இதயத்தையும் நிறைத்திருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்துவதாக இத்திருப்பாடல் உள்ளது. இறை விருப்பத்திற்கு அன்புடன் பணிந்து செயல்படுவதன் முன்மாதிரிகையான அன்னை மரியையும், சட்டத்தின் முழுநிறைவான இயேசுவையும், இத்திருப்பாடலைச் செபிக்கும்போது கிறிஸ்தவர்கள் காண்கின்றனர். 'ஆண்டவரே! நீரே எனக்குரிய பங்கு' என திருப்பாடல் ஆசிரியர் கூறும் வார்த்தைகள், அவரின் பக்திக்கான சிறந்ததொரு எடுத்துக்காட்டாக உள்ளன. நாம் சிறப்பான விதத்தில் இந்த வார்த்தைகளை குருக்களுக்கு பயன் படுத்தலாம். இறைவனுக்கும் இறையரசுக்கும் முழுபக்தியுடன் செயல்படுவதற்கு இவர்கள் பெற்றுள்ள அழைப்புக்கு இவர்களின் கற்பு வாழ்வு சான்று பகர்கின்றது. அதே வேளை, கிறிஸ்துவின் அரசக் குருத்துவத்தில் பங்குபெறும், மற்றும், நற்செய்திக்கு சான்று பகர தினமும் அழைப்புப் பெறும் அனைத்து விசுவாசிகளுக்கும் இவ் வார்த்தைகள் பயன்படுத்தப்படலாம். இறைவன்மீது நாம் கொள்ளும் ஆழமான அன்பை அவரே நமக்கு வழங்குவாராக, அதன்வழி, நாமும் திருப்பாடல் ஆசிரியரைப் போல், இறைனின் வார்த்தைகளை நம் பாதங்களின் விளக்காகவும், பாதையின் ஒளியாகவும் கொள்வோமாக.
   இவ்வாறு தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அண்மை நாட்களில் உலகின் பல பகுதிகள் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து கவலையை வெளியிட்டார். இலத்தீன் அமெரிக்கா, குறிப்பாக அதன் மத்திய பகுதி முதல், தென்கிழக்கு ஆசியா வரை உலகின் பல பகுதிகள் இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டு பலரின் உயிரிழப்புகளுக்கும், உடமை இழப்புகளுக்கும் காரணமாகியுள்ளன. பாதிப்புக்குள்ளாகியுள்ளோருடன் என் அருகாமையை வெளிப் படுத்தும் இவ்வேளையில், இவர்களுக்கான அனைவரின் செபங்களுக்கும் விண்ணப் பிக்கின்றேன் என்ற திருத்தந்தை, நல்மனமுடைய அனைவரும் தாராள மனதுடன் இவர்களுக்கு உதவ முன் வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் பாப்பிறை.

Monday, November 7, 2011

நவம்பர் 6, 2011

கடவுள் இல்லாத உலகம் இருளில் வீழும் - திருத்தந்தை

   நாம் கடவுளை அகற்றிவிட்டால், இவ்வுலகிலி ருந்து இயேசு கிறிஸ்துவை எடுத்துவிட்டால், இந்த உலகம் இருளிலும் ஒன்றுமில்லாமையிலும் வீழ்ந் துவிடும் என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். 
   இஞ்ஞாயிறு வாசகத்தின் பத்துத் தோழியர் உவமை குறித்து தன் ஞாயிறு மூவேளை செப உரையில் எடுத்துரைத்தத் திருத்தந்தை, நம் பிற ரன்பு நடவடிக்கைகளுக்குத் தேவைப்படும் அன்பு இறைவனின் கொடை என்றும், மரணத்திற்குப் பின் நம்மைச்சூழும் இருளை வென்று, வாழ்வின் கொண்டாட்டத்திற்கு அழைத்துச் செல்லும் விளக்கு என்றும் கூறினார்.
   எண்ணெயைக் கொண்டுசெல்ல மறந்த கன்னியர்களைப் பற்றி தன் செப உரையில் திருத்தந்தை குறிப்பிடும்போது, அந்த எண்ணெய் அன்பிற்கான உருவகம், அந்த எண்ணெய் வாங்கப்பட முடியாதது, மாறாக கொடையாகப் பெற்று, பாதுகாக்கப்பட்டு நற்செயல்களில் வெளிப்படுத்தப்பட வேண்டியது என்றார்.
   தன் மூவேளை செப உரையின் இறுதியில், நைஜீரியாவில் இடம்பெறும் வன்முறைகள் குறித்த தன் ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டார் திருத்தந்தை. வன்முறைகளால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக செபிக்கும் அதேவேளை, வன்முறைகள் நிறுத்தப்பட அழைப்பு விடுப்பதாகவும் உரைத்த பாப்பிறை, வன்முறைகள் எந்த பிரச்சனைக்கும் தீர்வு காண்பதில்லை, மாறாக அவைகளை அதிகரிக்கவே உதவுகின்றன என்றார்.

Thursday, November 3, 2011

நவம்பர் 2, 2011

கிறிஸ்துவின் உயிர்ப்பு, இறைவன் வழங்கும் முடிவற்ற வாழ்வின் வாக்குறுதியாக இருக்கிறது - திருத்தந்தை

   அனைத்துப் புனிதர்கள் தினமான நவம்பர் முதல் தேதி, அதாவது இச்செவ்வாயன்று இத்தாலிக்குத் தேசிய விடுமுறை நாள். அந்நாளைக் குடும்பத் துடன் சிறப்பாகக் கொண்டாடிய மக்கள், உலகின் ஏனையப் பகுதிகளில் உள்ள கத்தோலிக்கர்கள் போல், இப்புத னன்று, கல்லறைகளுக்குச் சென்று இறந்த தங்கள் உறவினர்களையும் நண்பர்களையும் சிறப்பான விதத்தில் நினைவுகூர்ந்து வருகின்றனர். இவ்வாரப் புதன் பொதுமறைபோதகத்தில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்டும் இந்த அனைத்து ஆன்மாக்கள் தினம் அதாவது 'கல்லறைத் திருநாள்' குறித்து தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
   அனைத்துப் புனிதர்களின் பெருவிழாவைத் தொடர்ந்து வரும் இந்நாளில் திருச்சபை, நம்மை விட்டுப் பிரிந்துச் சென்றுள்ள விசுவாசிகளின் ஆன்மாக் களுக்காகச் செபிக்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் நினைவுகூரப்படும் இந்நாள், கல்லறைகளுக்குச் சென்று தரிசிப்பதை உள்ளடக்கு வதோடு, மரணம் எனும் மறையுண்மையை ஆழ்ந்து தியானிக்கவும், கிறிஸ்துவின் உயிர்ப்பின் வழி வழங்கப்பட்ட முடிவற்ற வாழ்வுக்கான வாக்குறுதியில் நம் விசுவாசத்தைப் புதுப்பிக்கவும் வாய்ப்புத் தருவதாக உள்ளது. மனிதர்கள் என்ற வகையில் நாம் மரணத்தைக் கண்டு அஞ்சுகிறோம், அதேவேளை, அதன் வெளிப் படையான கண்ணால் காணக்கூடிய முடிவை ஏற்றுக்கொள்ள மனம் தயங்குகிறது. நம் வாழ்வுக்கு முழு அர்த்தத்தைத் தரும், முடிவற்ற வாழ்வு குறித்த அந்தப் பெருநம்பிக்கையில், மரணம் குறித்த நமது அச்சம் எளிதாக்கப்படுகின்றது என விசுவாசம் நமக்குக் கற்பிக்கின்றது. 
   அன்பே நிறைவான இறைவன் தன் மகனின் மரணம் மற்றும் உயிர்ப்பின் வழி முடிவற்ற வாழ்வு பற்றிய வாக்குறுதியை நமக்கு வழங்குகிறார். கிறிஸ்துவில், மரணம் என்பது வெறுமையின் படுகுழியாக அல்ல, மாறாக, முடிவேயற்ற ஒரு வாழ்விற்கானப் பாதையாகத் தெரிகின்றது. கிறிஸ்துவே உயிர்ப்பும் வாழ்வும். அவரில் நம்பிக்கைக் கொள்வோர் எந்நாளும் இறப்பதில்லை. ஒவ்வொரு ஞாயிறும் நம் விசுவாச பிரமாணத்தை அறிக்கையிடும்போது, இந்த மறையுண்மையில் நம் விசுவாசத்தை மீண்டும் உறுதிசெய்கிறோம். நம்மிடமிருந்து மறுவாழ்வுக்கு பிரிந்து சென்றவர்களைப் புனிதர்களுடனான ஐக்கியத்தில் நினைவுகூரும் இவ்வேளையில், இயேசுவை இன்னும் நெருக்கமாகப் பின்பற்றவும், நம்பிக்கையின் வருங்காலத்தை இவ்வுலகில் கட்டியெழுப்பவும் நம் விசுவாசம் நம்மைத் தூண்டுவதாக. 
   இவ்வாறு தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, இந்த வியாழனும் வெள்ளியும் ஃபிரான்சின் கேன்சில் இடம்பெற உள்ள ஜி-20 நாடுகளின் தலைவர்கள் கூட்டம் குறித்தும் எடுத்துரைத்தார். உலகப் பொருளாதாரம் தொடர்பு டைய முக்கிய பிரச்சனைகள் குறித்து இடம்பெற உள்ள இந்தத் தலைவர்களின் கூட்டம், உலக அளவில் ஒன்றிணைந்த, உண்மையான மனித குல வளர்ச்சிக்குத் தடையாக இருப்பவைகள் அகற்றப்பட உழைப்பதாக என்ற அழைப்பையும் விடுத்த திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.