புதன் மறைபோதகம்: திருப்பாடல் 110 நம் அரசரும் ஆண்டவருமாகிய கிறிஸ்துவின் வெற்றியை அறிக்கையிடுகிறது - திருத்தந்தை
கிறிஸ்தவ செபம் குறித்த நம் மறைக்கல்விப் போதனையில் இன்று, தாவீது அரசராக முடி சூட்டப்பட்டது தொடர்புடைய புகழ்பெற்ற ‘அரசகுல திருப்பாடல்’களுள் ஒன்றாகிய திருப்பாடல் 110 குறித்து நோக்குவோம் எனத் தன் புதன் பொது மறைபோதகத்தைத் துவக்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்து தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கும் மெசியா அரசரும் நிரந்தர குருவுமாகிய கிறிஸ்துவைக் குறித்து முன்னுரைப்பதாக இத்திருப்பாடலை நோக்குகின்றது திருச்சபை. பெந்த கோஸ்தே நாளில் புனித பேதுரு, இறப்பின் மீதான நம் ஆண்டவரின் வெற்றி, மற்றும், அவர் மகிமையில் உயர்த்தப்பட்டது குறித்துப் பேசுகையில் இத்திருப்பாடலின் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்.
பழங்காலம் தொட்டே இந்தத் திருப்பாடலின் மூன்றாம் அத்தியாயம், மன்னரைக் கடவுளின் மகனுக்குரிய இடத்தைக் கொண்டவராகக் கண்டு விளக்கம் தந்துள்ளது. அதே வேளை, நான்காம் அத்தியாயமோ, 'மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே' என அரசரைப் பற்றிக் கூறுகின்றது. புனித பவுல் எபிரேயருக்கு எழுதிய திருமுகத்தில் இந்த உருவகத்தை, இறைமகனும் நம் உன்னத தலைமைக் குருவுமாக இருக்கும் கிறிஸ்துவுக்குப் பயன்படுத்துகிறார். 'தம் வழியாகக் கடவுளிடம் வருபவரை அவர் முற்றும் மீட்க வல்லவராயிருக்கிறார்; அவர்களுக்காகப் பரிந்து பேசுவதற்கென என்றுமே உயிர் வாழ்கிறார்' என்கிறார் தூய பவுல்.
வெற்றிவாகைச் சூடிய அரசர், நாடுகள் மீது தீர்ப்பு வழங்கி அதனை நிறை வேற்றுவதை இத்திருப்பாடலின் இறுதி அத்தியாயங்கள் எடுத்துரைக்கின்றன. நாம் இத்திருப்படலைச் செபிக்கும்போது, நம் அரசரும் உயிர்த்த ஆண்டவருமாகிய கிறிஸ்துவின் வெற்றியை அறிக்கையிடுகிறோம். அதேவேளை, திருமுழுக்கின் வழி இறையுடலில் அங்கத்தினர்களாகி நாம் பெற்றுள்ள அரசகுல மற்றும் குருத்துவ மாண்பை முற்றிலுமாக வாழ நாம் முயல்கிறோம்.
இவ்வாறு தன் புதன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.
இவ்வாறு தன் புதன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.