Wednesday, September 28, 2011

செப்டம்பர் 28, 2011

புதன் மறைபோதகம்: ஜெர்மானியர்களின் விசுவாசம் திருச்சபைக்கு நம்பிக்கை வழங்குகிறது - திருத்தந்தை

   கடந்த வியாழன் முதல் ஞாயிறு வரை தன் தாய் நாடான ஜெர்மனியில் நான்கு நாள் திருப்பயணத்தை நிறைவேற்றித் திரும்பியுள்ள பாப்பிறை, இப்புதன் உரோம் தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடி யிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய பொது மறைப் போதகத்தில் அத்திருப்பயண நிகழ்வுகள் குறித்தே எடுத்துரைத்தார்.
   ‘இறைவன் எங்கிருக்கிறாரோ அங்கே வருங்காலம் உள்ளது’ என்பது இப்பயணத்திற்கான மையக்கருத் தாக இருந்தது. நம் வாழ்விற்கான இறுதி அர்த்தத்தை வழங்குபவர் இறைவனே என்பதையும், அனைத்து நன்மைத்தனங்களின் ஆதாரமாக இருக்கும் அவரே வளமான, சுதந்திரமான மற்றும் நீதியான ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான நம் முயற்சிகளில் உதவுகிறார் என்பதையும் நினைவூட்டுவதாக அத்தலைப்பு இருந்தது. பெர்லினில் உள்ள ஜெர்மன் பாராளுமன்றத்தில் உரையாற்றும் பெருமையைப் பெற்றேன். மார்ட்டின் லூத்தரின் நினைவுகளோடு தொடர்புடைய எர்ஃபூர்ட் நகரில் ஜெர்மன் எவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபை அங்கத்தினர்களைச் சந்தித்து உரையாடியதுடன், கிறிஸ்தவ ஐக்கியத்திற்கான கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வழிபாட்டிலும் கலந்துகொண்டேன். எட்செல்ஸ்பாக்கில் மாலை செப வழிபாட்டிலும் எர்ஃபூர்ட்டில் திருப்பலியிலும் கலந்துகொண்ட போது அப்பகுதியின் ஆழமான விசுவாசப் பாரம்பரியங்களையும், கிறிஸ்தவச் சாட்சியங்களையும் நினைவுகூர்ந்த தோடு, புனிதத்துவத்தில் நிலைத்திருக்கவும் சமூகத்தின் புதுப்பித்தலுக்காக உழைக்க வும் அனைவருக்கும் அழைப்பு விடுத்தேன். இறுதியாக, ஃப்ரைய்பூர்க்கின் இரவுத் திருவிழிப்புச் சடங்கிலும், திருப்பலியிலும் இளைய சமுதாயத்தைச் சந்தித்தேன். கிறிஸ்துவின் மீதான இவர்களின் விசுவாசம் ஜெர்மன் திருச்சபையின் வருங்காலம் குறித்த நம்பிக்கைகளை வழங்குகிறது.
   இவ்வாறு, தன் ஜெர்மன் நாட்டிற்கான அண்மைத் திருப்பயணம் குறித்து உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.

Sunday, September 25, 2011

செப்டம்பர் 25, 2011

கடவுளின் இரக்கத்திலும் மன்னிப்பிலும் நம்பிக்கை வைக்க திருத்தந்தை அழைப்பு

   திருத்தந்தையின் ஜெர்மன் நாட்டுக்கான இந்த திருப்பயணத்தின் நிறைவு நாளான இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் காலை 10 மணிக்கு, அதாவது இந்திய நேரம் பிற்பகல் ஒரு மணி 30 நிமிடத்திற்கு ஃப்ரை பூர்க் விமானநிலையத்துக்கு அருகிலுள்ள பெரிய திடலில் ஜெர்மனியின் 27 மறைமாவட்டங்களின் ஆயர்களுடன் கூட்டுத் திருப்பலியைத் தொடங்கினார் திருத்தந்தை. ஜெர்மன் நாட்டுக்கான பயணத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாஇத்திருப்பலியில் சுமார் ஒரு இலட்சம் விசுவாசிகள் மிகுந்த ஆர்வமுடன் பங்கு கொண்டனர். இத்திருப்பலியில் திருத்தந்தை வழங்கிய மறையுரை பின்வருமாறு:
    இன்றைய உலகில் நடக்கும் அனைத்துப் பயங்கரமான நிகழ்வுகளைப் பார்க்கும் போது கடவுள் எல்லாம் வல்லவராக இருக்க முடியாது என்று சொல்லும் இறையியலாளர் இருக்கின்றனர். ஆனால் இன்றையத் திருவழிபாட்டில், விண்ணை யும் மண்ணையும் படைத்த கடவுள் எல்லாம் வல்லவர் என்று அறிக்கையிடுகிறோம். அதற்காக நன்றி கூருவோம். ஆனால் கடவுள் தமது வல்லமையை நாம் நினைப்பது போலன்றி வித்தியாசமான வழியில் செயல்படுத்துகிறார். அவர் தமது படைப்புக்களின் பலவீனத்தை அறிந்திருக்கிறார். அவர் தமது மக்களின் மீட்பை விரும்புகிறார். எனினும் பயங்கரமான காரியங்கள் நம்மை மிரள வைக்கின்றன. தமது வல்லமையை இரக்கத்திலும் மன்னிப்பிலும் வெளிப்படுத்தும் அந்தக் கடவுளில் நமது நம்பிக்கையை வைப்போம். அவர் எப்போதும் நம்மோடு இருக்கிறார். குறிப்பாக ஆபத்தான மற்றும் கடும் மாற்றங்கள் நிகழும் போது அவரது இதயம் நமக்காக ஏங்குகிறது. நம்மை அடைகிறது. தீமைகளைக் கைவிட்டு அவரிடம் நம்மைக் கையளிக்க வேண்டும். எனினும் கடவுள் நமது சுதந்திரத்தை மதிக்கிறார். அதேநேரம் அவர் நம்மை வற்புறுத்துவதில்லை. 
   இன்றைய நற்செய்தி வாசகத்தில் இரண்டு மகன்கள் பற்றிய உவமையைக் கேட்டோம். வார்த்தைகள் அல்ல, செயல்களே, அதாவது மனமாற்றம் மற்றும் விசுவாசத்தின் செயல்களே கணக்கில் எடுக்கப்படும் என்ற செய்தி இவ்வுவமையில் தெளிவாகிறது. இக்காலத்திய மொழியில் இதனைக் கூறவேண்டுமெனில், திருச்சபைக்குப் பிரமாணிக்கமில்லாமல் வாழ்பவர்களைவிட, தூய இதயத்துக்காக ஏங்கி, பாவத்தின் காரணமாகத் துன்புறுவோர் இறையரசுக்கு நெருக்கமாக இருக்கி றார்கள். அதேநேரம், திருச்சபையில் வாழ்ந்து அதற்காக உழைக்கும் ஒவ்வொருவரும் இறையரசுக்குத் தூரமாக இருக்கிறார்கள் என்று நோக்கப்படக்கூடாது. நிச்சயமாக இல்லை. மாறாக, திருச்சபையில் பணியாற்றும் அனைவருக்கும் நன்றி சொல்லும் நேரமாக இது இருக்கின்றது. ஜெர்மன் திருச்சபையில் பல சமூக மற்றும் பிறரன்பு நிறுவனங்கள் இருக்கின்றன. இவை உலகின் எல்லாப் பகுதிகளிலும் பிறரன்புப் பணிகளை நிறையவே செய்கின்றன. கிறிஸ்துவின் அன்பால் தொடப்படுவதற்குத் தன்னை அனுமதிக்கும் திறந்த இதயம் தேவையில் இருப்போருக்குத் தன்னையே வழங்குகின்றது. எனவே கடவுளோடு நமக்குள்ள உறவு என்ன எனச் சிந்திப்போம். ஞாயிறு திருப்பலியில், மறைக்கல்வியில், செபத்தில் விவிலியம் வாசிப்பதில் எனது பங்கு என்ன? தூய பேதுரு மற்றும் திருத்தூதர்களின் வழிவருபவர்களுடன் ஜெர்மன் திருச்சபை பிரமாணிக்கத்துடன் நிலைத்திருந்தால் இது, அகில கத்தோலிக்க உலகத்திற்குத் தொடர்ந்து ஆசீர்வாதமாக இருந்து வரும். எனவே ஒன்றிணைந்து உழையுங்கள். அன்பு நண்பர்களே, திருச்சபையின் புதுப்பித்தல், மனமாற்றத்திற்குத் திறந்த மனம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட விசுவாசத்தின் வழியாக மட்டுமே வரும்.

செப்டம்பர் 24, 2011

நமது கிறிஸ்தவ அழைப்பை வாழ்வதற்கு
அன்னை மரியா நமக்கு உதவுகிறார் - திருத்தந்தை

   திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இந்த சனிக்கிழமை மாலைத் திருப்புகழ்மாலையில் ஆற்றிய மறையுரை: 
   அன்னை மரியா, நம் வாழ்க்கையின் நோக்கம் பற்றி  நாம்  புரிந்துகொள்ள உதவுகிறார்; மேலும் உண்மையான மகிழ்ச்சியின் பாதையைக் காட்டு கிறார். உங்களது உண்மையான மகிழ்ச்சியைத் தவிர வேறு எதையும் ஒருபோதும் விரும்பாதவரும் நன்மையானவை அனைத்தின் ஊற்றுமாகிய கடவுள், அவரது விருப்பத்திற்கேற்ப நாம் நடக்க வேண்டும் என்பதை நம்மிடம் கேட்பதற்கு உரிமை கொண்டுள்ளார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் என்று அன்னைமரியா நம்மிடம் சொல்வது போல் இருக்கின்றது. இயேசு தனது தாய் கேட்பதை ஒரு பொழுதும் மறுக்கமாட்டார் என்ற தன்னிச்சையான உறுதிப்பாட்டில் வரலாறு முழுவதும் கிறிஸ்தவர்கள் அன்னை மரியாவிடம் செல்கின்றனர். மரியா நம் தாய் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டுள்ளோம். பெரும் துயரங்களை அனுபவித்த அந்தத் தாய், நமது வேதனைகளையும் உணர்வார். நமது கிறிஸ்தவ அழைப்பை வாழ்வதற்கு உதவுகிறார். கடவுள் எங்கே இருக்கிறாரோ அங்கே எதிர்காலம் இருக்கிறது. உண்மையில், கடவுளின் அன்பு நம் வாழ்வு முழுவதையும் ஆட்கொள்ள அனுமதித்தால் விண்ணகம் நமக்குத் திறந்திருக்கும்.

இளையோருக்கு திருத்தந்தையின் உரை:
   ஃப்ரைபூர்க் நகரில் திருத்தந்தை, “கிறிஸ்துவே உலகின் ஒளி” என்பதை மையமாக வைத்து, “விசுவாசத்தின் வல்லமை” பற்றி இளையோரிடம் பகிர்ந்து கொண்டார். அதன் செய்தி பின்வருமாறு:
   கிறிஸ்துவில் விசுவாசம் கொள்பவர்கள், வாழ்வின் இருளான நேரங்களில்கூட ஒளியைப் பார்க்கும் சக்தியைப் பெற்று புதிய நாளின் விடியலைக் காண்கிறார்கள். நமது மனித முயற்சிகளோ அல்லது இந்த நம் சகாப்தத்தின் தொழில்நுட்ப முன்னேற் றமோ உலகிற்கு ஒளியைக் கொண்டு வராது. நல்லதோர் நீதியான உலகை உருவாக்கு வதற்கான நமது முயற்சிகள் இந்த வரையறைகளால் மீண்டும் மீண்டும் எப்படி தொடர்ந்து அடிவாங்குகின்றன என்பதை நாம் அனுபவித்து வருகிறோம். போரும் பயங்கரவாதமும், பசியும் நோய்களும், கடும் வறுமையும் இரக்கமற்ற அடக்கு முறையும் உலகில் இன்றும் இருக்கின்றன. எனவே சமுதாயத்தில் தீமையின் அனைத்து வடிவங்களையும் வேரோடு பிடுங்கி எறியுங்கள். அரைகுறைக் கிறிஸ்தவர் களாக இருக்க வேண்டாம். விசுவாச அர்ப்பணமின்றி இருப்பவர்கள் தங்களது திருச்சபைகளுக்கு எதிரிகளைவிட அதிகச் சேதங்களைக் கொண்டு வருகிறார்கள். நம்மைச் சுற்றிலும் இருளும் தெளிவற்ற நிலையும் சூழ்ந்து இருந்தாலும் நாம் ஒளியைப் பார்க்கிறோம். அந்த ஒளி சிறிய சுடராக இருந்தாலும், சக்திமிக்கதும் வெற்றி அடைய முடியாததுமான இருளைவிட சக்தியானதாக இருக்கின்றது. சாவினின்று உயிர்த்த கிறிஸ்து இந்த உலகில் சுடர் விடுகிறார். எல்லாமே நம்பிக்கை இழந்ததாகத் தெரியும் இடங்களில்கூட கிறிஸ்து தனது ஒளியை பளபளப்பாகப் பாய்ச்சுகிறார். ஒளி தனித்து இருக்காது. தன்னைச் சுற்றி இருப்பவர்களை ஒளிர்விக்கும். விசுவாசத்தில் நாம் தனியாக இல்லை. விசுவாசிகளின் குழுமத்தோடு இருக்கிறோம். எனவே இதில் ஒருவர் மற்றவருக்கு எடுத்துக்காட்டுகளாக இருப்போம்.

Saturday, September 24, 2011

செப்டம்பர் 24, 2011

கடவுள் எங்கு இருக்கிறாரோ
அங்கே எதிர்காலம் இருக்கிறது - திருத்தந்தை

   இந்த சனிக்கிழமை, எர்ஃபூர்ட் பேராலய வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பின்வருமாறு மறையுரை ஆற்றினார்:
   இறைவனுக்கு நம் முழு இதயத்தோடு நன்றி நவில நம் ஒவ்வொருவருக்கும் காரணம் உள்ளது. ஜெர்மன் ஜனநாயக் குடியரசின் கடந்த கால கொடுங்கோல் ஆட்சிகள், கிறிஸ்தவ மறையின் மீது அமில மழை போல் செயல்பட்டன. அவற்றின் பிற்காலத்தைய விளைவுகள் தற்போதும் சில துறைகளில் உணரப் பட்டு வருகின்றன. இருப்பினும் கடந்த 20 ஆண்டுகளில் நல் மாற்றங்களைக் கண்டு வருகிறோம், குறிப்பாக, இறைவன் நம்மை எப்போதும் கைவிடுவதில்லை என்பதில் உறுதியோடு செயல்படுகிறோம். 'கடவுள் எங்கிருக்கிறாரோ அங்கே வருங்காலமும் உள்ளது'. நம் புதிய சுதந்திரம் என்பது மேலும் மாண்பையும், புதிய வாய்ப்புகளையும், புதுப்பித்தலையும் கோவில்களின் விரிவாக்கத்தையும் தந்துள்ளது. கடந்த காலங்களில் அர்ப்பணத்துடன் செயல்பட்ட கிறிஸ்தவர்கள், திருச்சபைக்காக பல்வேறு துன்பங்களை மனமுவந்து தாங்கியுள்ளனர். 
   இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அகதிகளிடையே திருச்சபை ஆற்றிய சிறப்புமிக்கப் பணிகளை நான் இங்கு நினைவுகூர விழைகின்றேன். திருச்சபை விரோத சூழல்கள் நிலவி வந்த காலத்திலும் தங்கள் குழந்தைகளைக் கிறிஸ்தவ விசுவாசத்தில் வளர்த்த பெற்றோருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். பல புனிதர்களின் தியாகத்துடன் கூடிய மறைப்பணியால் வளர்ந்துள்ள எர்ஃபூர்ட் மறைமாவட்டத்தின் வரலாற்றில் சிறப்பான விதத்தில் டுரிஞ்சேயின் புனித எலிசபெத்தை நினைவு கூர்கின்றேன். ஏழைகள் மற்றும் நோயாளிகளிடையே சிறப்புச் சேவையாற்றிய இப்புனிதை தன் 24ம் வயதிலேயே உயிரிழந்தாலும், இவரின் புனிதத்தன்மையின் கனிகள் அளவிட முடியாதவை. நம் விசுவாசத்தின் முழுமை நிலையை கண்டுகொள்ள இப்புனிதை நமக்கு உதவ முடியும். இறைவனுடன் ஆன உறவில் நாம் வாழமுடியும் அது நன்மையானதும்கூட எனப் புனிதர்கள் நமக்குக் காட்டி நிற்கின்றார்கள். விசுவாசம் என்பது மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று என்பது அதன் அடிப்படைக் கூறாக உள்ளது. விசுவாசத்திற்காக முதலில் நாம் இறைவனுக்கு நன்றி கூறவேண்டும். இரண்டாவதாக, நம் உடன் வாழ்வோருக்கும் நன்றி நவில வேண்டும். புனிதர்கள் என்பவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், அவர்களால் உலகை மாற்ற முடியும் என்பதையும் நினைவு கூருங்கள். 1989ம் ஆண்டு இந்நாட்டில் இடம்பெற்ற அரசியல் மாற்றங்கள், வளமைக்கும் சுதந்திர இயங்கலுக்கும் ஆன ஏக்கத்தினால் மட்டும் பிறந்தவையல்ல, மாறாக, உண்மைக்கான ஏக்கத்தினாலும் விளைந்தவை.
   கடின முயற்சிகளுக்குப்பின் கிட்டிய இந்த சுதந்திரத்தைப் பொறுப்புடன் வடிவமைக்க வேண்டியது நம் கடமையாகிறது. கிறிஸ்துவுக்கான நம் சாட்சியம் நாம் வாழும் இவ்வுலகில் கேட்கப்படவும் காணப்படவும், புனிதர்களின் எடுத்துக்காட்டுகள் நம்மைத் தூண்டுவதாக.

Friday, September 23, 2011

செப்டம்பர் 22, 2011

கிறிஸ்தவர்கள் இயேசுவில் நிலைத்திருக்க 
திருத்தந்தை அழைப்பு

   திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தனது ஜெர்மனி பயணத்தின் முதல் நாள் மாலையில், பெர்லின் ஒலிம்பிக் திடலில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கினார். இதில் சுமார் 70 ஆயிரம் கிறிஸ்தவ விசுவாசிகள் பங்கேற்றனர்.
   பெர்லின் ஒலிம்பிக் திடலில் பெருமளவில் விசுவாசிகளைப் பார்க்கும் போது இதயம் மிகுந்த மகிழ்ச்சியாலும் நம்பிக்கை யாலும் நிறைந்துள்ளது என்று மறையுரையைத் தொடங்கிய திருத்தந்தை, தங்களைக் கத்தோலிக்கர் என்று சொல்லிக் கத்தோலிக்கப் போதனைகளை மறுக்கும் ஜெர்மானியர்கள் திருச்சபையை விமர்சிப்பதற்கு மிகவும் நயமாக, அதேசமயம் உறுதியாகத் தனது கருத்துக்களை எடுத்துச் சொன்னார். “நானே திராட்சைச் செடி, நீங்கள் அதன் கொடிகள்” (யோவா.15:5) என்று இயேசு தம் திருத்தூதர்களுக்கு கூறிய நற்செய்தி திருவசனங்களை மையமாக வைத்து மறையுரை வழங்கினார். ஒருவர் ஒருவரைச் சார்ந்து இருப்பது, கிறிஸ்துவைச் சார்ந்து இருப்பது ஏதோ உருவகமான, அடையாளமான ஒன்று அல்ல. ஆனால், இயேசு கிறிஸ்துவுக்கு உரியவராய் இருப்பது உயிரியல் ரீதியானது, இது வாழ்வை வழங்கும் நிலையாகும். கிறிஸ்துவும் திருச்சபையும் எவ்வாறு ஒன்றாக, ஒரே மாதிரியாக இருக்கின்றார்கள் என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். இயேசு இவ்வுலகில் தனது திருச்சபையில் தொடர்ந்து வாழ்ந்து வருகிறார். கத்தோலிக்கர், திருச்சபையை மனிதக் கூறுகளால் மட்டும், அதாவது இந்நவீன காலப் போக்குக்கு ஏற்றாற்போல் மாற்றத்திற்கு அது திறந்த மனம் கொண்டிருக்க வேண்டும் அல்லது திருச்சபையை அதன் சில பாவம் புரிந்த உறுப்பினர்களின் தொகுப்பு என்று மட்டும் நோக்கத் தொடங்கும் போது திருச்சபை மகிழ்ச்சியின் ஊற்றாக இருக்காது. மக்களின் மேலோட்டமான மற்றும் தவறான எண்ணம் கொண்ட அவர்களின் கனவுத் திருச்சபை, அதிருப்தியையும் மனநிறைவின்மையையும் ஏற்படுத்தும். இக்காலத்தில் அர்ப்பணம் குறைகின்றது. எனவே எம்மாவுஸ் சீடர்கள் போன்று, ஆண்டவரே எங்களோடு தங்கும், மாலை நேரமாகிறது. எங்களைச் சுற்றி இருள் சூழ்ந்துள்ளது என்று மக்கள் குரல் எழுப்ப வேண்டும். உயிர்த்த ஆண்டவர் நமக்கு புகலிடம் தருவார். இது ஒளியின், நம்பிக்கையின், விசுவாசத்தின், பாதுகாப்பின், இளைப்பாறும் இடமாகும். இவ்வாறு பெர்லினில் நிகழ்த்திய திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை.

Thursday, September 22, 2011

செப்டம்பர் 22, 2011

மதத்திற்கு சுதந்திரமும், சுதந்திரத்திற்கு மதமும் தேவைப்படுகின்றன - திருத்தந்தை

   இன்று (வியாழன்) வத்திகான் நேரம் காலை 8.30 மணிக்கு (இந்திய நேரம் பகல் 12 மணிக்கு), உரோம் சம்பினோ இராணுவ விமான நிலையத்திலிருந்து தனது 21வது வெளிநாட்டுத் திருப்பயணத்தைத் தொடங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இவர் ஜெர்மனிக்கு மேற்கொண்டுள்ள நான்கு நாட்கள் கொண்ட இந்த வெளிநாட்டுத் திருப்பயணம், உலக ஊடகவியலாளரால் அதிக ஆர்வமுடன், அதேசமயம் விமர்சனக் கண்களுடன் நோக்கப்படுகின்றது. காரணம், இப்பயணம், “ஒரு ஜெர்மானியத் திருத்தந்தை ஜெர்மனியில், அதாவது ஜெர்மன் நாட்டவரானத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தனது தாயகத்திற்கு அதிகாரப்பூர்வமாக மேற்கொண்டுள்ள முதல் திருப்பயணமாகும். 2005ம் ஆண்டில் பாப்பிறை பணியை ஏற்ற இவர் ஏற்கனவே இரண்டு முறைகள் அந்நாட்டிற்குச் சென்றிருந்தாலும் அரசின் அதிகாரப்பூர்வ விருந்தினராக முதல் முறையாகத் தற்போதுதான் சென்றுள்ளார்.
   ஜெர்மன் நாட்டு பெல்லெவ்யூ அரசுத் தலைவர் மாளிகையில் தனக்குக் கொடுக்கப்பட்ட இனிய வரவேற்புக்கு முதலில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து அந்நாட்டுக்கான தனது முதல் உரையை திருத்தந்தை தொடங்கினார். ஜெர்மன் நாட்டுக்கான எனது பயணம் திருப்பீடத்திற்கும் ஜெர்மன் கூட்டுக் குடியரசுக்கும் இடையே நிலவும் நல்லுறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வப் பயணமாக அமைந்தாலும், பிற நாடுகளின் தலைவர்கள் செய்வது போல, குறிப்பிட்ட அரசியல் அல்லது பொருளாதார இலக்குகளை அடையும் நோக்கத்தை கொண்டிருக்கவில்லை. மாறாக, இப்பயணம் மக்களைச் சந்திக்கவும் கடவுள் பற்றிப் பேசவுமான நோக்கத்தைக் கொண்டுள்ளது.
   சமுதாயத்தில் மதத்திற்குப் பாராமுகம் காட்டப்படுவது வளர்ந்து வருவதைக் காண முடிகின்றது. வெற்றிகரமான சமூக வாழ்வுக்கான அடித்தளங்களில் மதமும் ஒன்று. 'மதத்திற்குச் சுதந்திரம் தேவைப்படுவது போல, சுதந்திரத்திற்கு மதம் தேவைப் படுகின்றது.' மாபெரும் ஆயரும் சமூகச் சீர்திருத்தவாதியுமான வில்ஹெல்ம் வான் கெட்லெர் என்பவரின் வார்த்தைகள் இவை. சுதந்திரத்தை உறவுகளின்றி வாழ முடியாது. ஒன்றிணைந்த மனித வாழ்க்கையில் ஒருமைப்பாடு இல்லாமல் சுதந்திரம் இயலாததாகும். பிறரை வருத்தும் நிலையில் ஒருவர் என்ன செய்தாலும் அது சுதந்திரமாகாது. ஆனால் அது பிறரையும் தன்னையும் வருத்துகின்ற குற்றச் செயலாகும். ஒருவர் தனது சொந்த சக்தியைப் பயன்படுத்துவது, பிறரின் நலனில் அக்கறை காட்டுவது ஆகியவற்றால் மட்டுமே ஒருவர் தன்னை உண்மையிலேயே சுதந்திர ஆளாக வளர்த்துக் கொள்ள முடியும். இது தனிப்பட்டவரின் விவகாரங்களில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சமுதாய விவகாரங்களிலும் உண்மையாகும். இந்தக் கோட்பாட்டுக்கு ஒத்திணங்கும் வகையில் ஒரு சமுதாயம் சிறிய அமைப்புகள் வளருவதற்கு போதுமான இடம் ஒதுக்க வேண்டும். அதேசமயம் அவற்றுக்கு ஆதரவு வழங்க வேண்டும். அதன்மூலம் அவை ஒருநாள் தன் காலிலே நிற்க முடியும். ஜெர்மன் கூட்டுக் குடியரசின் இன்றைய நிலையை உருவாக்கியவர்களுக்கு நன்றி. இதற்கு ஆழமான கலாச்சாரப் புதுப்பித்தலும் நல்லதோர் எதிர்காலத்தைக் கட்டுவதற்கான அடிப்படை விழுமியங்களை மீண்டும் கண்டுணர்வதும் தேவைப் படுகின்றன. இந்நாட்டிற்கு எனது இப்பயணம் சிறிய அளவில் உதவும் என நம்புகிறேன் என்று திருத்தந்தை உரையாற்றினார்.

Monday, September 19, 2011

செப்டம்பர் 18, 2011

கிறிஸ்துவுக்காக வாழ்வோர் அவரது திராட்சைத் தோட்டத்தில் உழைக்கின்றனர் - திருத்தந்தை

   கிறிஸ்துவைத் தங்கள் வாழ்வின் மூலம் வாழ்ந்துகாட்டும் குடும்பங்கள் திருச்சபையின் புதிய மறைபரப்புப் பணியின் முக்கியக் கருவிகள் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
   திருத்தந்தையர்களின் கோடை விடுமுறை இல்லமான காஸ்தெல் கந்தோல்போவில் இந்த ஞாயிறு மூவேளை செப உரையை வழங்கியபோது, ஞாயிறு திருப்பலியின் வாசகங்களில் ஒன்றான புனித பவுல் பிலிப்பியருக்கு எழுதியத் திருமுகத்தின் வரிகளை சுட்டிக்காட்டி, இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
   சிறையில் மரண தண்டனையை எதிர்நோக்கியிருந்த புனித பவுல் 'நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே' என்று சொன்னதுபோல், இன்று உலகில் வாழும் பலர் கிறிஸ்துவுக்காகவே வாழ்ந்து வருகின்றனர் என்று கூறியத் திருத்தந்தை, இவர்கள் அனைவரும் ஆண்டவரின் திராட்சைத் தோட்டத்தில் உழைக்கின்றனர் என்றும் எடுத்துரைத்தார்.
   புதிய மறைபரப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் கிறிஸ்தவக் குடும்பங்கள் எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல், இறைவனுக்கும், திருச்சபைக்கும் உழைப்பது மாபெரும் ஒரு சாட்சியாக விளங்குகிறது என்று திருத்தந்தை தன் மூவேளை செப உரையில் மகிழ்வுடன் எடுத்துரைத்தார்.

ஞாயிறு 2ஆம் வாசகம்: பிலிப்பியர் 1:20-24,27
   சகோதர சகோதரிகளே, வாழ்விலும் சாவிலும் முழுத் துணிவுடன் கிறிஸ்துவை என் உடலால் பெருமைப்படுத்துவேன். இதுவே என் பேராவல், இதுவே என் எதிர் நோக்கு. ஏனெனில் நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே; நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே. எனினும் நான் தொடர்ந்து வாழ்ந்தால் பயனுள்ள பணி செய்ய முடியும். எனவே நான் எதைத் தேர்ந்து கொள்வதென எனக்குத் தெரியவில்லை. இந்த இரண்டுக்கும் இடையே ஓர் இழுபறி நிலையில் உள்ளேன். உயிர்நீத்து கிறிஸ்துவோடு இருக்கவேண்டும் என்னும் ஆவல் ஒரு புறம். - இதுவே மிகச் சிறந்தது. - ஆனால், இன்னும் வாழவேண்டும் என்பது மற்றொரு புறம். - இது உங்கள் பொருட்டு மிகத் தேவையாய் இருக்கின்றது. ஒன்றை மட்டும் மறந்து விடாதீர்கள்; கிறிஸ்துவின் நற்செய்திக்கு ஏற்றவாறு நடந்துகொள்ளுங்கள்.

Thursday, September 15, 2011

செப்டம்பர் 14, 2011

புதன் மறைபோதகம்: திருச்சிலுவையின் நிழல் உயிர்ப்பின் நம்பிக்கைக்கு வழிகாட்டுகின்றது - திருத்தந்தை

   காஸ்தெல்கந்தோல்ஃபோ கோடைகாலத் தங்கும் இல்லத்திலிருந்து இப்புதன் காலை ஹெலிகாப்டரில் வத்திக்கான் வந்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், பாப்பிறை ஆறாம் பவுல் மண்டபத்தில் அமர்ந்திருந்த சுமார் எட்டாயிரம், ஆசிய நாடுகள் உட்பட பல நாடுகளின் பயணிகளுக்குப் பல மொழிகளில் புதன் பொது மறைபோதகம் வழங்கினார். இதில் திருப்பாடல் 22, இன்னும், செப்டம்பர் 14, 15 ஆகிய தினங்களின் திருவழிபாடுகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
    சிறப்பாக, இளையோர், நோயாளிகள் மற்றும் புதிதாகத் திருமணமானவர்களை வாழ்த்திய போது இப்புதனன்று திருச்சிலுவையின் பேருண்மையையும் இவ்வியாழ னன்று அன்னைமரியின் துயரங்களையும் தியானிப்பதற்கு நாம் அழைக்கப்படுகிறோம் என்றார். அன்பு இளையோரே, கிறிஸ்துவின் திருச்சிலுவையும் வியாகுல அன்னை யின் எடுத்துக்காட்டும் உங்களது வாழ்வை ஒளிர்விப்பதாக. அன்பு நோயாளிகளே, உங்களது அன்றாட வேதனைகளைத் தாங்கிக் கொள்ளவும், திருமணத் தம்பதியரே, உங்களது குடும்ப வாழ்க்கையைத் தைரியத்துடன் தொடங்கவும் திருச்சிலுவையும் வியாகுல அன்னையும் உதவட்டும் என்றார். மேலும், கடவுளால் கைவிடப்பட்டதாக உணரும் ஒருவர் துயரத்தோடு புலம்புவதைத் திருப்பாடல் 22ல் தியானிக்கிறோம் என ஆங்கில மொழியில் அப்பாடல் பற்றிச் சுருக்கமாக விளக்கினார் திருத்தந்தை.
   தன்னை நசுக்கும் எதிரிகளால் சூழப்பட்ட இத்திருப்பாடல் ஆசிரியர், இரவும் பகலும் உதவிக்காக இறைவனிடம் தேம்பித் தேம்பி அழுகிறார். எனினும், இறைவன் மௌனமாக இருப்பது போலத் தெரிகிறது. இந்தத் திருப்பாடலின் தொடக்க வரிகளான “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்பதை இயேசு சிலுவையிலிருந்து தமது தந்தையை அழைத்த வார்த்தைகளாக மத்தேயு மற்றும் மாற்கு நற்செய்திகளில் குறிக்கப்பட்டுள்ளன. இயேசுவின் எதிரிகள் அவரைக் கேலி செய்யும் போதும், கடும்பசியோடு சீறி முழங்கும் கொடும் சிங்கங்கள் போன்று அவரைத் தாக்கும் போதும், அவர் ஏற்கனவே இறந்தது போல அவரது ஆடையைத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டபோதும், இயேசு கொடூரமான நிலையில் தான் கைவிடப்பட்டது போன்று உணர்ந்தார். கடந்த காலத்தில் இஸ்ரயேல் மக்கள் தங்களின் துயரங்களின் போது எவ்வாறு நம்பிக்கையோடு ஆண்டவரை அழைத்தனர் என்பதையும் ஆண்டவரும் அவர்களின் செபத்திற்கு எவ்வாறு பதில் அளித்தார் என்பதையும் இத்திருப்பாடல் ஆசிரியர் நினைவுகூருகிறார். சிசுவாகத், தனது தாயின் கருப்பையில் இருந்தது, குழந்தையாகத் தனது தாயின் கரங்களில் இருந்தது எனத் தனது இளமைக் காலத்தில் ஆண்டவர் எவ்வாறு தன்னைக் கனிவோடு பராமரித்தார் என்பதையும் இந்த ஆசிரியர் நினைத்துப் பார்க்கிறார். அதேசமயம், தனது பகைவர்களின் இத்தகைய கெடுபிடிச் சூழல்களிலும், இந்த ஆசிரியர் ஆண்டவரில் வைத்துள்ள நம்பிக்கையும் விசுவாசமும் அப்படியே இருக்கின்றன. கடவுளது பெயர் எல்லா நாடுகளின் முன்பாக வாழ்த்தப்படுவதாக என்ற நம்பிக்கைக் குறிப்போடு இத்திருப்பாடல் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
   திருச்சிலுவையின் நிழல், உயிர்ப்பின் ஒளிமயமான நம்பிக்கைக்கு வழி திறக்கின்றது. நாமும் நமது துன்பநேரங்களில் இறைவனைக் கூப்பிடும் போது நமது நம்பிக்கையை அவர் மீது வைக்க வேண்டும். அவரே மீட்பைக் கொணருபவர், நித்திய வாழ்வெனும் கொடையோடு மரணத்தை வெல்கிறவர் அவரே. இவ்வாறு தனது புதன் மறைபோதகத்தை நிறைவு செய்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அனைவருக்கும் தமது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Monday, September 12, 2011

செப்டம்பர் 11, 2011

நற்கருணை முன் மண்டியிடும் ஒவ்வொருவரும் பகிர்ந்து வாழத் தயாராக இருக்க வேண்டும் - திருத்தந்தை

   இத்தாலியில் அன்கொனா நகரில் கடந்த ஒரு வாரமாகக் கொண்டாடப்பட்ட 25வது திருநற்கருணை தேசிய மாநாட்டின் நிறைவுத் திருப்பலியை இந்த ஞாயிறு நிகழ்த்தி மறையுரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கிறிஸ்துவைத் திருவிருந்தில் ஏற்றுக் கொள்ளும் ஒவ்வொருவரும் அருகில் இருப்போரின் தேவைகளைப் புரிந்துகொண்டு, அவர்களுடன் தங்கள் உடைமைகளைப் பகிர்ந்து வாழத் தயாராக இருக்க வேண்டும் என்று  கூறினார்.
   இன்றைய உலகில் பெருமளவு வளர்ந்து வரும் சுயநலம், தற்பெருமை ஆகிய குறைகளுக்கு ஒரு மாற்று மருந்தாக திருநற்கருணையைச் சார்ந்துள்ள ஆன்மீகம் விளங்குகிறது என்று திருத்தந்தை சுட்டிக் காட்டினார். திருநற்கருணைக்கு முன் தாழ்மையோடு மண்டியிடும் எவரும் அடுத்தவரின் தேவைகளைக் கவனியாது இருக்க முடியாது என்றும், அடுத்தவரின் பசி, தாகம், ஆடையின்மை, உடல்நலக் குறைவு ஆகிய பல்வேறு தேவைகளைத் தீர்க்காமல் போகமாட்டார்கள் என்றும் தன் மறையுரையில் வலியுறுத்தினார் திருத்தந்தை.
   திருச்சபை என்ற குடும்பத்தின் இதயத்துடிப்பாக விளங்கும் திருநற்கருணை ஆன்மீகம், பிளவுகளையெல்லாம் மேற்கொள்ளும் ஒரு சிறந்த வழி என்று கூறியத் திருத்தந்தை, சமுதாயத்தில் மிகவும் நலிந்தோரை மீண்டும் மனித குலத்தின் மையத்திற்குக் கொண்டுவரும் வலிமைபெற்றது இந்த ஆன்மீகம் என்றும் கூறினார்.
   அன்கொனா நகரில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமாக கூடியிருந்த மக்களுக்கு திறந்தவெளியரங்கில் திருப்பலியையும் ஞாயிறு மூவேளை செப உரையையும் வழங்கியத் திருத்தந்தை ஞாயிறு மாலை மீண்டும் வத்திக்கான் திரும்பினார்.
 

திருத்தந்தையின் மூவேளை செப உரை:
   இத்தாலியின் அன்கொனா நகரில் 25வது திருநற்கருணை தேசிய மாநாட்டின் இறுதியில் திருப்பலி நிகழ்த்தியபின், அங்கு கூடியிருந்த ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்குத் தன் ஞாயிறு மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இந்த உலகில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு வன்முறை ஒரு நாளும் தீர்வாகாது என்பதை உலகத் தலைவர்களும் நல்மனம் கொண்ட அனைவரும் உணர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
   2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க் நகரிலும், வாஷிங்டனிலும் நடைபெற்ற விமானத் தாக்குதல்களின் பத்தாம் ஆண்டு நினைவு கடைபிடிக்கப் பட்டதையொட்டி, சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும் திருத்தந்தை தன் உரையிலும் அமெரிக்க மக்களுக்கு அனுப்பியுள்ள செய்தியிலும் இதுபற்றி குறிப்பிட்டு வருகிறார்.

Wednesday, September 7, 2011

செப்டம்பர் 7, 2011

புதன் மறைபோதகம்: விசுவாசத்தோடு அழைப்போருக்கு கடவுள் செவிசாய்க்கிறார் - திருத்தந்தை

    கோடை விடுமுறை காலத்தை, அதாவது ஜூலை முதல் வாரத்திலிருந்து கோடை காலத்தை திருத் தந்தையர்களின் காஸ்தெல் கந்தோல்ஃபோ கோடை விடுமுறை இல்லத்தில் செலவிட்டு வரும் பாப்பிறை 16ம் பெனடிக்ட், செப்டம்பரின் இம்முதல் புதனன்று, பொது மறைபோதகத்திற்கென உரோம் நகர் வந்து, தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு தன் உரையை வழங்கினார்.
    செபம் குறித்த நம் புதன் மறைபோதகத்தொடரில் இன்று மூன்றாம் திருப்பாடல் குறித்து நோக்குவோம் என உரையைத் துவக்கினார் திருத்தந்தை. தன்னை சுற்றி வளைத்துள்ள எதிரிகளிடமிருந்து தன்னைக் காப்பாற்றும் படி திருப்பாடல் ஆசிரியர் இறைவனை நோக்கி கூக்குரலிடுவதாக இத்திருப்பாடல் மூன்று அமைந்துள்ளது. தனக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த தன் மகன் அப்சலோமின் படைகளிடமிருந்து தப்பிச் செல்லும்போது மன்னர் தாவீது இத்திருப்பாடல் வரிகளை உரைத்ததாகப் பாரம்பரியமாக நம்பப்படுகிறது.
   அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தன்னைத் தாக்கி தன் வாழ்வைப் பறிக்க முயலும் எதிரிகளிடமிருந்து தன்னைக் காப்பாற்றுமாறு, இறைவன் மீதான விசுவாசத்துடன் அவரை நோக்கி வேண்டுகிறார் திருப்பாடல் ஆசிரியர். தன் எதிரிகளின் பிடியிலிருந்து த
ன்னைக் காப்பாற்ற வல்லவர் இறைவன் ஒருவரே என அவர் உறுதியாக நம்புகிறார். தீயவர்களால் அவமான மரணத்திற்கு தீர்ப்பளிக்கப்பட்டு, இறைவன் வந்து காப்பாற்றுவார் என ஏளனம் செய்யப்படும் நீதிமான் குறித்து 'சாலமோனின் ஞானம்' நூல் கூறுவது இப்போது நம் நினைவுக்கு வருகிறது. இங்கிருந்து நம் எண்ணங்கள் கல்வாரி நோக்கிச் செல்கின்றன.
   இயேசுவை நோக்கி வழிப்போக்கர்கள், இவன் கடவுளின் மகனென்றால் கடவுளே வந்துக் காப்பாற்றட்டும் என எள்ளி நகையாடுவதை அங்கு நாம் காண்கிறோம். இருப்பினும், நமக்கு நன்றாகவேத் தெரியும், விசுவாசத்தில் தன்னை நோக்கி அழைப்பவர்களுக்கு கடவுள் செவிசாய்க்கிறார் என்பது. தனது புனித மலையிலிருந்து அவர்களுக்குப் பதிலளிக்கின்றார் இறைவன். கண்ணுக்குப் புலப்படாத அந்த இறைவன், மிகப்பெரும் வல்லமையுடன் நமக்குப் பதிலளிப்பதுடன், நம் கேடயமாகவும் மகிமையாகவும் விளங்குகிறார். கல்வாரியில் இயேசு உயிர் துறந்தபோது அவர் இறைவனால் கைவிடப்பட்டதுபோல் தோன்றினாலும், விசுவாசக் கண்களுக்கு அதுவே மீட்பின் மணிமகுட நேரம். அதுவே சிலுவையின் வெற்றி, அதுவே நம் மீட்பரின் மகிமையின் நேரம்.
   இவ்வாறு இறை வல்லமை மீதான நம் விசுவாசம் மற்றும் இறைவனின் பதிலுரை குறித்துத் தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.


திருப்பாடல் 3:
   ஆண்டவரே, என் எதிரிகள் எவ்வளவாய்ப் பெருகிவிட்டனர்! என்னை எதிர்த்து எழுவோர் எத்தனை மிகுந்து விட்டனர்! "கடவுள் அவனை விடுவிக்கமாட்டார்" என்று என்னைக் குறித்துச் சொல்வோர் பலர். ஆயினும், ஆண்டவரே, நீரே எனைக் காக்கும் கேடயம்; நீரே என் மாட்சி; என்னைத் தலைநிமிரச் செய்பவரும் நீரே. நான் உரத்த குரலில் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்; அவர் தமது திருமலையிலிருந்து எனக்குப் பதிலளிப்பார். நான் படுத்துறங்கி விழித்தெழுவேன்; ஏனெனில், ஆண்டவரே எனக்கு ஆதரவு. என்னைச் சூழ்ந்திருக்கும் பல்லாயிரம் பகைவருக்கு நான் அஞ்சமாட்டேன். ஆண்டவரே, எழுந்தருளும்; என் கடவுளே, என்னை மீட்டருளும்; என் எதிரிகள் அனைவரையும் கன்னத்தில் அறையும்! பொல்லாரின் பல்லை உடையும்! விடுதலை அளிப்பவர் ஆண்டவர்; அவர்தம் மக்களுக்கு ஆசி வழங்குவாராக!

Monday, September 5, 2011

செப்டம்பர் 4, 2011

குற்றமிழைக்கும் சகோதரரை அன்பினால் திருத்தவும் இணைந்து செபிக்கவும் திருத்தந்தை அழைப்பு

  சகோதரத்துவ உணர்வுடன் கூடிய திருத்தங்களில் ஈடுபடுவதுடன் ஒன்றிணைந்து செபிப்பது நமது இலக்கணமாக இருக்கட்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
   இஞ்ஞாயிறு திருப்பலி வாசகங்களையொட்டி நண்பகல் மூவேளை செப உரையை காஸ்தல் கந்தோல்ஃபோ கோடை விடுமுறை இல்லத்தில் இருந்து வழங்கிய திருத்தந்தை, பிறரைத் திருத்தும் போது சகோதரத்துவ உணர்வுடன் செயல்படுவது என்பது, இதயத்தில் எளிமையையும் தாழ்ச்சியையும் எதிர்பார்க்கிறது என்றார். ஒன்றிணைந்த குடும்பமாக செபிப்பது அதற்கு மேலும் உதவும் எனவும் கூறினார் பாப்பிறை.
   சகோதரத்துவ அன்பு என்பது இருபக்கத்துப் பொறுப்புணர்வுடன் இணைந்து வருகிறது என்பதால், நம் சகோதரன் நமக்கு எதிராகக் குற்றமிழைக்கும்போது சகோதரனுடன் தனியாகப் பேச முயல வேண்டும் என்றார். தனக்குச் செவிமடுக்காத சகோதரனிடம் எவ்விதம் அன்பு கொண்டு திருத்த முயல வேண்டும் என இயேசு வழங்கியுள்ள அறிவுரைகளையும் சுட்டிக்காட்டினார் பாப்பிறை.
   தனிப்பட்ட முறையில் செபிப்பது முக்கியத்துவம் நிறைந்தது எனினும், குழுவாக இணைந்து செபிப்பதன் அவசியத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் தன் நண்பகல் மூவேளை செப உரையில் மேலும் எடுத்துரைத்தார் பாப்பிறை.

ஞாயிறு நற்செய்தி: மத்தேயு 18:15-20
   அக்காலத்தில் இயேசு சீடர்களிடம் கூறியது: "உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும். இல்லையென்றால் 'இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தால் அனைத்தும் உறுதி செய்யப்படும்' என்னும் மறைநூல் மொழிக்கு ஏற்ப உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக்கொண்டு போங்கள். அவர்களுக்கும் செவி சாய்க்காவிடில் திருச்சபையிடம் கூறுங்கள். திருச்சபைக்கும் செவிசாய்க்காவிடில் அவர் உங்களுக்கு வேற்று இனத்தவர் போலவும் வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும். மண்ணுலகில் நீங்கள் தடை செய்பவை அனைத்தும் விண்ணுலகிலும் தடை செய்யப்படும்; மண்ணுலகில் நீங்கள் அனுமதிப்பவை அனைத்தும் விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார். ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்."