Wednesday, September 28, 2011

செப்டம்பர் 28, 2011

புதன் மறைபோதகம்: ஜெர்மானியர்களின் விசுவாசம் திருச்சபைக்கு நம்பிக்கை வழங்குகிறது - திருத்தந்தை

   கடந்த வியாழன் முதல் ஞாயிறு வரை தன் தாய் நாடான ஜெர்மனியில் நான்கு நாள் திருப்பயணத்தை நிறைவேற்றித் திரும்பியுள்ள பாப்பிறை, இப்புதன் உரோம் தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடி யிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய பொது மறைப் போதகத்தில் அத்திருப்பயண நிகழ்வுகள் குறித்தே எடுத்துரைத்தார்.
   ‘இறைவன் எங்கிருக்கிறாரோ அங்கே வருங்காலம் உள்ளது’ என்பது இப்பயணத்திற்கான மையக்கருத் தாக இருந்தது. நம் வாழ்விற்கான இறுதி அர்த்தத்தை வழங்குபவர் இறைவனே என்பதையும், அனைத்து நன்மைத்தனங்களின் ஆதாரமாக இருக்கும் அவரே வளமான, சுதந்திரமான மற்றும் நீதியான ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான நம் முயற்சிகளில் உதவுகிறார் என்பதையும் நினைவூட்டுவதாக அத்தலைப்பு இருந்தது. பெர்லினில் உள்ள ஜெர்மன் பாராளுமன்றத்தில் உரையாற்றும் பெருமையைப் பெற்றேன். மார்ட்டின் லூத்தரின் நினைவுகளோடு தொடர்புடைய எர்ஃபூர்ட் நகரில் ஜெர்மன் எவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபை அங்கத்தினர்களைச் சந்தித்து உரையாடியதுடன், கிறிஸ்தவ ஐக்கியத்திற்கான கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வழிபாட்டிலும் கலந்துகொண்டேன். எட்செல்ஸ்பாக்கில் மாலை செப வழிபாட்டிலும் எர்ஃபூர்ட்டில் திருப்பலியிலும் கலந்துகொண்ட போது அப்பகுதியின் ஆழமான விசுவாசப் பாரம்பரியங்களையும், கிறிஸ்தவச் சாட்சியங்களையும் நினைவுகூர்ந்த தோடு, புனிதத்துவத்தில் நிலைத்திருக்கவும் சமூகத்தின் புதுப்பித்தலுக்காக உழைக்க வும் அனைவருக்கும் அழைப்பு விடுத்தேன். இறுதியாக, ஃப்ரைய்பூர்க்கின் இரவுத் திருவிழிப்புச் சடங்கிலும், திருப்பலியிலும் இளைய சமுதாயத்தைச் சந்தித்தேன். கிறிஸ்துவின் மீதான இவர்களின் விசுவாசம் ஜெர்மன் திருச்சபையின் வருங்காலம் குறித்த நம்பிக்கைகளை வழங்குகிறது.
   இவ்வாறு, தன் ஜெர்மன் நாட்டிற்கான அண்மைத் திருப்பயணம் குறித்து உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.