Sunday, September 25, 2011

செப்டம்பர் 24, 2011

நமது கிறிஸ்தவ அழைப்பை வாழ்வதற்கு
அன்னை மரியா நமக்கு உதவுகிறார் - திருத்தந்தை

   திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இந்த சனிக்கிழமை மாலைத் திருப்புகழ்மாலையில் ஆற்றிய மறையுரை: 
   அன்னை மரியா, நம் வாழ்க்கையின் நோக்கம் பற்றி  நாம்  புரிந்துகொள்ள உதவுகிறார்; மேலும் உண்மையான மகிழ்ச்சியின் பாதையைக் காட்டு கிறார். உங்களது உண்மையான மகிழ்ச்சியைத் தவிர வேறு எதையும் ஒருபோதும் விரும்பாதவரும் நன்மையானவை அனைத்தின் ஊற்றுமாகிய கடவுள், அவரது விருப்பத்திற்கேற்ப நாம் நடக்க வேண்டும் என்பதை நம்மிடம் கேட்பதற்கு உரிமை கொண்டுள்ளார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் என்று அன்னைமரியா நம்மிடம் சொல்வது போல் இருக்கின்றது. இயேசு தனது தாய் கேட்பதை ஒரு பொழுதும் மறுக்கமாட்டார் என்ற தன்னிச்சையான உறுதிப்பாட்டில் வரலாறு முழுவதும் கிறிஸ்தவர்கள் அன்னை மரியாவிடம் செல்கின்றனர். மரியா நம் தாய் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டுள்ளோம். பெரும் துயரங்களை அனுபவித்த அந்தத் தாய், நமது வேதனைகளையும் உணர்வார். நமது கிறிஸ்தவ அழைப்பை வாழ்வதற்கு உதவுகிறார். கடவுள் எங்கே இருக்கிறாரோ அங்கே எதிர்காலம் இருக்கிறது. உண்மையில், கடவுளின் அன்பு நம் வாழ்வு முழுவதையும் ஆட்கொள்ள அனுமதித்தால் விண்ணகம் நமக்குத் திறந்திருக்கும்.

இளையோருக்கு திருத்தந்தையின் உரை:
   ஃப்ரைபூர்க் நகரில் திருத்தந்தை, “கிறிஸ்துவே உலகின் ஒளி” என்பதை மையமாக வைத்து, “விசுவாசத்தின் வல்லமை” பற்றி இளையோரிடம் பகிர்ந்து கொண்டார். அதன் செய்தி பின்வருமாறு:
   கிறிஸ்துவில் விசுவாசம் கொள்பவர்கள், வாழ்வின் இருளான நேரங்களில்கூட ஒளியைப் பார்க்கும் சக்தியைப் பெற்று புதிய நாளின் விடியலைக் காண்கிறார்கள். நமது மனித முயற்சிகளோ அல்லது இந்த நம் சகாப்தத்தின் தொழில்நுட்ப முன்னேற் றமோ உலகிற்கு ஒளியைக் கொண்டு வராது. நல்லதோர் நீதியான உலகை உருவாக்கு வதற்கான நமது முயற்சிகள் இந்த வரையறைகளால் மீண்டும் மீண்டும் எப்படி தொடர்ந்து அடிவாங்குகின்றன என்பதை நாம் அனுபவித்து வருகிறோம். போரும் பயங்கரவாதமும், பசியும் நோய்களும், கடும் வறுமையும் இரக்கமற்ற அடக்கு முறையும் உலகில் இன்றும் இருக்கின்றன. எனவே சமுதாயத்தில் தீமையின் அனைத்து வடிவங்களையும் வேரோடு பிடுங்கி எறியுங்கள். அரைகுறைக் கிறிஸ்தவர் களாக இருக்க வேண்டாம். விசுவாச அர்ப்பணமின்றி இருப்பவர்கள் தங்களது திருச்சபைகளுக்கு எதிரிகளைவிட அதிகச் சேதங்களைக் கொண்டு வருகிறார்கள். நம்மைச் சுற்றிலும் இருளும் தெளிவற்ற நிலையும் சூழ்ந்து இருந்தாலும் நாம் ஒளியைப் பார்க்கிறோம். அந்த ஒளி சிறிய சுடராக இருந்தாலும், சக்திமிக்கதும் வெற்றி அடைய முடியாததுமான இருளைவிட சக்தியானதாக இருக்கின்றது. சாவினின்று உயிர்த்த கிறிஸ்து இந்த உலகில் சுடர் விடுகிறார். எல்லாமே நம்பிக்கை இழந்ததாகத் தெரியும் இடங்களில்கூட கிறிஸ்து தனது ஒளியை பளபளப்பாகப் பாய்ச்சுகிறார். ஒளி தனித்து இருக்காது. தன்னைச் சுற்றி இருப்பவர்களை ஒளிர்விக்கும். விசுவாசத்தில் நாம் தனியாக இல்லை. விசுவாசிகளின் குழுமத்தோடு இருக்கிறோம். எனவே இதில் ஒருவர் மற்றவருக்கு எடுத்துக்காட்டுகளாக இருப்போம்.