புதன் மறைபோதகம்: இறைவனின் அன்பு அவரது ஒரே மகனில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது - திருத்தந்தை
கிறிஸ்தவ ஜெபம் குறித்த நம் மறைக்கல்விப் போதனையின் தொடர்ச்சியாக இன்று திருப்பாடல் 136ஐ நோக்கி நம் பார்வையை திருப்புவோம். 'பெரும்புகழுரை' என அறியப்படும் இந்தத் திருப்பாடல், பாரம்பரியமாகப் பாஸ்காத் திருநாள் உணவின் இறுதியில் பாடப்படும் உன்னத புகழ்ப் பாடலாகும். அதன்படி பார்த்தால், இயேசுவும் அவரின் சீடர்களும் கூட இப்பாடலை இறுதி இரவு உணவின்போது பாடியிருக்க வேண்டும். இந்தத் திருப்பாடலானது 'பிரார்த்தனை' எனும் வடிவத்தைத் தாங்கி, இவ்வுலகப் படைப்பின்போதும் இஸ்ரயேலர்களின் வரலாற்றிலும் இறைவன் ஆற்றிய வல்ல செயல்களைப் புகழ்வதாக உள்ளது. அவரது மீட்புச் செயல்கள் குறித்துக் கூறும் இத்திருப்பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் 'என்றும் உள்ளது அவரது பேரன்பு' என முடிகிறது. அகிலத்தின் ஒழுங்கமைவுச் சார்ந்த அழகிலும், அடிமைத்தளையி லிருந்து இஸ்ரயேலர்களின் விடுதலை மற்றும் வாக்களிக்கப்பட்ட இடம் நோக்கிய தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் திருப்பயணம் ஆகியவைகளிலும் வெளிப்படுத்தப் பட்டது இறைவனின் மாறாத அன்பே. இறைவனின் வல்ல செயல்கள் குறித்த இந்த உயரிய பிரார்த்தனையை நாம் பாடும்போது, அவரின் கருணைநிறை மற்றும் என்றும் நிலைத்திருக்கும் அன்பின் ஆழமானது, வரவிருக்கும் அவரின் ஒரே மகனில் முழுவதுமாக வெளிப்படுத்தப்பட்டிருப்பதற்கு நன்றி கூறுகிறோம். நம் தந்தையாம் இறைவன் நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்பதையும், நாம் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவதையும், கடவுளின் மக்களாகவே இருப்பதையும் நாம் கிறிஸ்துவில் தெளிவாகக் காண்கிறோம்.
இவ்வாறு தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.