இயேசுவின் எடுத்துக்காட்டான வாழ்வு
நமக்கு வழிகாட்டுதலாய் இருக்கட்டும் - திருத்தந்தை
இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், மறைநூல் அறிஞரும் பரிசேயரும் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகின்றார்களோ அவற்றைக் கடை பிடித்து நடந்து வாருங்கள், ஆனால் அவர்கள் செய்வது போல் செய்யாதீர்கள் என்று இயேசு கூறும் ஞாயிறு திருப்பலி வாசகம் குறித்து எடுத்து கூறினார்.
சொல்வதைச் செயலில் காட்டாத மறைநூல் அறிஞர் மற்றும் பரிசேயர்கள் போலல்லாமல் அன்பெனும் முதற்கட்டளையைத் தன் வாழ்வில் கடைப்பிடித்த பின்னரே இயேசு மற்றவர்களுக்கு போதித்தார். தந்தையின் விருப்பத்திற்கு விசுவாசமாக நடந்த இயேசுவின் பாதையைப் பின்பற்றி செல்ல வேண்டியவர்களாக நாம் ஒவ்வொருவரும் இருக்கிறோம் என்றார் பாப்பிறை.
தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்த்துப் புகழவேண்டும் என்பதற்காகவே செய்யும் தலைவர்கள் குறித்து தன் கண்டனத்தை வெளியிடும் இயேசு, 'உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டனாக இருக்கட்டும்' எனக் கூறியதையும் எடுத் துரைத்து, இயேசுவின் எடுத்துக்காட்டு நமக்கு வழிகாட்டுதலாய் இருக்கட்டும் என மேலும் உரைத்தார்.
தன் மூவேளை செப உரையின் இறுதியில், தாய்லாந்து மற்றும் இத்தாலியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு தன் செப உறுதிகளை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இத்தாலி நாட்டின் லிகூரியா மற்றும் தொஸ்கானா பகுதிகளில் இடம்பெற்ற மழையால் பாதிக்கப்பட்ட மக்களையும், தாய்லாந்தின் பெருமழையால் இடம்பெற்றுள்ள உயிரிழப்புகள் மற்றும் பெரும் சேதங்களையும் நினைவு கூர்ந்து அவர்களுக்கு தன் ஆழ்ந்த செபங்களை வழங்குவதாகத் தெரிவித்தார் பாப்பிறை.