Sunday, July 15, 2012

ஜூலை 15, 2012

இயேசு சில சீடர்களை தனது பணியில்
நேரடியாக ஈடுபட அழைக்கிறார் - திருத்தந்தை

   இஞ்ஞாயிறு இத்தாலியின் பிரஸ்காட்டி மறைமா வட்ட கதீட்ரல் ஆலயத்துக்கு சென்ற திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அங்கு திருப்பலி நிறைவேற்றி பின் வருமாறு மறையுரை வழங்கினார். 
அன்பு சகோதர, சகோதரிகளே!
   நான் உங்களோடு இணைந்து இன்றைய திருப் பலியை சிறப்பித்து, இந்த மறைமாவட்ட சமூகத் தோடு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
   இன்றைய ஞாயிறு நற்செய்தியில், இயேசு பன்னிரு அப்போஸ்தலர்களையும் ஒரு பணிக்காக அனுப்புகிறார். உண்மையில் 'அப்போஸ்தலர்' என்ற சொல்லுக்கு 'தூதுவர், தூதர்' என்பது பொருள். கிறிஸ்துவின் உயிர்ப்புக்கு பின்பு பெந்தக்கோஸ்தில் தூய ஆவியைக் கொடையாக பெற்ற பிறகு, அவர்களது பணி முழுமையாக உணரப்பட்டது. எப்படி இருந்தாலும், தொடக்கத்தில் இருந்தே பன்னிருவரையும் தனது பணியில் ஈடுபடுத்த வேண்டுமென்று இயேசு விரும்பியது முக்கியத்துவம் வாய்ந்தது. இது அவர்களுக்கு காத்திருந்த மாபெரும் பொறுப்புக்கான ஒரு வாய்ப்பு. உண்மையில் அவரது அன்பை வெளிப்படுத்தும் வகையில், இயேசு சில சீடர்களை தனது பணியில் நேரடியாக ஈடுபட அழைக்கிறார். அவர் மற்ற மனிதர்களின் பங்கேற்பு உதவியைப் புறக்கணிக்கவில்லை, அவர் அவர்களது எல்லைகளையும் பலவீனங்களையும் அறிந் திருந்தாலும் அவர்களைத் தூற்றவில்லை, உண்மையில், அவர்கள் தனது தூதுவர் களாக இருக்கும் மதிப்பை அவர் அளித்தார். இயேசு அவர்களுக்கு அறிவுரை வழங்கி, அவர்களை இருவர் இருவராக அனுப்பியதை நற்செய்தியாளர் சில வாக்கியங்களில் விவரிக்கிறார். முதலாவது பிரிப்பின் ஆவியைப் பற்றியது: திருத்தூதர்கள் பணம் மற்றும் வசதி களோடு இணைந்திருக்கக்கூடாது. பின்பு இயேசு, சீடர்கள் எப்போதும் நல்ல வர வேற்பை பெற முடியாது என்று எச்சரிக்கிறார்: சில நேரங்களில் அவர்கள் புறக் கணிக்கப்படுவார்கள், மேலும் துன்புறவும் நேரிடும். ஆனால் அது அவர்களை பாதிக்கக்கூடாது: தங்கள் வெற்றியைப் பற்றி கவலைப்படாமல், அவர்கள் இயேசு வின் பெயரால் பேசி இறையரசை அறிவிக்க வேண்டும். கடவுளின் கைகளில் அவர் கள் வெற்றியை விட்டுவிட வேண்டும்.
   இன்றைய முதல் வாசகமும், கடவுளின் தூதர்கள் நல்லமுறையில் ஏற்றுக்கொள் ளப்பட மாட்டார்கள் என்ற இதே கருத்தை நமக்கு வழங்குகிறது. இறைவாக்கினர் ஆமோஸ், இஸ்ரயேல் அரசின் புனித இடமான பெத்தேலுக்கு இறைவாக்குரைக்க கடவுளால் அனுப்பப்படுகிறார். அநீதிகளுக்கு எதிராக, குறிப்பாக கடவுளின் உள்ளத் தைப் புண்படுத்தும் வகையில் அரசனும் தலைவர்களும் மேற்கொண்ட வீணான வழிபாடுகளைக் கண்டித்து பேராற்றலுடன் போதிக்கிறார். எனவே பெத்தேலின் குருவாகிய அமட்சியா, ஆமோசை அங்கிருந்து வெளியேறச் சொல்கிறார். அதற்கு ஆமோஸ், இந்த பணியை அவராக தேர்ந்துகொள்ளவில்லை என்றும், ஆண்டவரே தன்னை ஒரு இறைவாக்கினராக உருவாக்கி இஸ்ரயேல் அரசுக்கு அனுப்பிவைத்த தாகவும் பதிலளிக்கிறார். எனவே ஏற்றுகொண்டாலும் நிராகரித்தாலும், மக்கள் கேட்க விரும்புவதை அல்ல, கடவுள் சொல்வதை அவர் போதித்து இறைவாக்குரைப்பார். இதுவே திருச்சபையின் நோக்கமாக உள்ளது: அதிகாரத்தில் உள்ளவர்கள் கேட்க விரும்புவதை அது போதிப்பது இல்லை. மனித ஆற்றலுக்கும், எதிர்பார்ப்புக்கும் எதி ராக அமைந்தாலும் உண்மையும் நீதியுமே அதன் அடிப்படை.
   இதே போன்ற நிராகரிப்பை சில இடங்களில் பன்னிருவரும் எதிர்கொள்ளலாம் என்று இயேசு எச்சரிப்பதை நற்செய்தியில் காண்கிறோம். இவ்வாறு நிகழும்போது, கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிட்டு வெளியேற வேண்டுமென்பது, இரண்டு விதமான பொருள்களை அடையாளப்படுத்துகிறது: அறநெறி சார்ந்த பிரிவு - உங்க ளுக்கு அறிவிக்கப்பட்டவற்றை நீங்கள் நிராகரித்துவிட்டீர்கள், பொருள் சார்ந்த பிரிவு - உங்களிடமிருந்து நாங்கள் எதையும் எங்களுக்காக விரும்பவில்லை என்பவற்றை உணர்த்துகின்றன. மேலும் மனமாற்றத்தை அறிவிப்பதில் மட்டுமே பன்னிருவரின் பணி முடிந்துவிடவில்லை என்று நற்செய்தி சுட்டிக்காட்டுகிறது: இயேசுவின் அறி வுறுத்தல்களுக்கு ஏற்ப அவரது எடுத்துக்காட்டைப் பின்பற்றி, அவர்கள் போதிப்பதுடன் நோயுற்றோரை குணப்படுத்தவும் வேண்டும். உடல் மற்றும் ஆன்மீக ரீதியிலான அக்கறை தேவை. உடல் நோய்களை குணப்படுத்துவது, பேய்களை ஓட்டுவது அதா வது மனித உள்ளத்தை தூய்மைப்படுத்துவது மற்றும் சொந்த கருத்தியல்கள் மூலம் கடவுளை காண முடியாமல் இருப்போரின் ஆன்மக் கண்களை சுத்தம் செய்வது ஆகியவை பற்றி இங்கு பேசப்படுகிறது. உடல் மற்றும் ஆன்மாவை குணமாக்கும் இந்த இரட்டைப் பணியே கிறிஸ்துவின் சீடர்கள் அனைவருடைய நோக்கம். திருத் தூதர் பணி என்பது கடவுளின் வார்த்தையை அறிவிப்பதையும், அவரது நன்மைத் தனத்தை பிறரன்பு செயல்கள், சேவை மற்றும் அர்ப்பணிப்பில் வெளிப்படுத்து வதையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
   அன்பு சகோதர, சகோதரிகளே! உங்களிடையே ஒற்றுமையுடனும், அதே நேரத்தில் திறந்த உள்ளம் கொண்டவர்களாகவும், மறைபணியாளர்களாகவும் இருங்கள். விசுவா சத்தில் உறுதியாக இருங்கள், இறைவார்த்தை மற்றும் நற்கருணை வழியாக கிறிஸ் துவில் வேரூன்றி நில்லுங்கள்; செபத்தின் மக்களாக, திராட்சைக்கொடியின் கிளை களாக இயேசுவோடு இணைந்திருங்கள், அதேநேரத்தில் வெளியே சென்று அவரது செய்தியை எல்லோருக்கும், குறிப்பாக சிறியோர், எளியோர், துன்புறுவோருக்கு கொண்டு செல்லுங்கள். ஒவ்வொரு சமூகத்திலும், ஒருவர் ஒருவரை அன்புசெய் யுங்கள், பிளவுபடாமல் சகோதர சகோதரிகளாக வாழுங்கள், அதன் மூலம் இயேசு தனது திருச்சபையில் வாழ்கிறார் என்பதையும், இறையரசு நெருங்கி வந்துவிட்டது என்பதையும் இந்த உலகம் நம்பும். பிரஸ்காட்டி மறைமாவட்டத்தின் பாதுகாவலர் களாக திருத்தூதர்களில் இருவரான பிலிப்பு, யாக்கோபு ஆகியோர் உள்ளனர். அவர் களின் பரிந்துரையால், விசுவாசத்தில் புதுப்பிக்கப்பட்டு, பிறரன்பு செயல்களில் தெளி வான சான்று பகர்ந்து உங்கள் சமூகம் பயணத்தைத் தொடரட்டும்! ஆமென்.

   திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லமான காஸ்தல் கந்தல்போவில் இருந்து மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், பின்வரும் கருத்துகளை எடுத்துரைத்தார்.
   திருவழிபாட்டு நாட்காட்டியில், ஜூலை 15ஆம் தேதி நாம் புனித பொனவெந்தூரை நினைவுகூர்கின்றோம். அவர் தனது மடல்களில் இவ்வாறு எழுதுகிறார்: "திருச்சபை யின் தொடக்கத்தையும் வளர்ச்சியையும் போன்றே புனித பிரான்சிசின் வாழ்க்கை அமைந்திருந்ததே, அதை நான் விரும்ப காரணம் என்று கடவுள் முன்னிலையில் ஒத்துக்கொள்கிறேன்." இந்த வார்த்தைகள், இயேசு தனது பன்னிரு திருத்தூதர்களை யும் முதல்முறையாக அனுப்பும் இஞ்ஞாயிறு நற்செய்தியோடு நேரடித் தொடர்பு உடையவை. புனித மாற்கு நமக்கு கூறுகிறார்: 'இயேசு பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார். ... "பய ணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக்கொண்டு போகவேண்டாம்'' என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.' அசிசி புனித பிரான்சிஸ் தனது மனமாற்றத்துக்கு பிறகு, இந்த நற்செய்தியை நடைமுறைப்படுத்தி, இயேசுவின் நம்பிக்கைக்குரிய ஒரு சாட்சியாக மாறியதுடன், புனித பொனவெந்தூர் கூறுவது போன்று, "சிலுவை மறைபோருளோடு சிறப்பான விதத்தில் இணைந்து, 'மறு கிறிஸ்து'வாக மாற்றம் பெற்றார்."
   புனித பொனவெந்தூரின் முழு வாழ்க்கையும், அவரது இறையியலும் இயேசு கிறிஸ்துவை அடிப்படை உந்துதலாக கொண்டே அமைந்திருந்தன. இந்த கிறிஸ்து மைய சிந்தனையை இன்றைய திருப்பலியின் இரண்டாம் வாசகத்தில் காணலாம். பவுல் கொரிந்தியருக்கு எழுதிய திருமுகத்தில் காணப்படும் புகழ்பெற்ற பாடல் இவ்வாறு தொடங்குகிறது: "நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றி! அவர் விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி அனைத்தை யும் கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார்." பின்பு, இந்த ஆசி கிறிஸ்து வழியாக வடிவமைக்கப்பட்டுள்ள விதத்தை நான்கு படிநிலைகளில் திருத்தூதர் நமக்கு உணர்த்தி காண்பிக்கிறார். "உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார். கிறிஸ்து இரத்தம் சிந்தி தம் அருள் வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார். கிறிஸ்து வழியாய் கடவுளுடைய மாட்சியைப் புகழ்ந்துபாடுமாறு அவரது உரிமைப்பேற்றுக்கு உரியவரானோம். நற்செய்தியைக் கேட்டு அவர்மீது நம்பிக்கை கொண்டு, வாக்களிக்கப்பட்ட தூய ஆவியால் அவருக் குள் முத்திரையிடப்பட்டிருக்கிறோம்." பவுலின் பார்வையில் வரலாற்றை விளக் கும் இந்த பாடலே புனித பொனவெந்தூர் திருச்சபையைப் பரப்ப உதவியது: அவர் வரலாறு முழுவதிலும் கிறிஸ்துவை மையப்படுத்தி இருக்கிறார். இயேசுவில், கடவுள் பேசியிருப்பதுடன் அனைத்தையும் தந்திருக்கிறார். அவர் குறையாத புதையலாக இருப்பதால், அவரது மெய்யான மறைபொருளை வெளிப்படுத்துவதை தூய ஆவி எப்போதும் நிறுத்துவதில்லை. எனவே, கிறிஸ்து மற்றும் திருச்சபையின் பணி ஒருபோதும் பின்னடைவதில்லை, எப்போதும் முன்னோக்கியே செல்கிறது.
   அன்பு நண்பர்களே, கடவுளின் அழைப்புக்கு தாராள மனதுடன் செவிசாய்த்து, அவரது மீட்பின் நற்செய்தியை நமது வார்த்தைகளாலும், அனைத்துக்கும் மேலாக நமது வாழ்வாலும் அறிவிக்க உதவுமாறு, நாளை நாம் சிறப்பிக்கும் தூய கார்மேல் அன்னை மரியா, புனித பிரான்சிஸ் மற்றும் புனித பொனவெந்தூர் ஆகியோரின் பரிந்துரையை வேண்டுவோம்.
   மூவேளை செபத்துக்காக இங்கு வந்திருக்கும் உங்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன். இஞ்ஞாயிறு நற்செய்தியில், இயேசு பன்னிருவருக்கும் போதிக்க வும், தீய ஆவிகளை விரட்டவும் அதிகாரம் அளிக்கிறார். அவரது வல்லமையை மட்டும் நம்பியே, அவர்களின் முயற்சி பலனளிக்கிறது. நமது வாழ்வை கிறிஸ்துவில் வேரூன்றியதாக வைத்திருக்க போராடும்போது, நாமும் நற்செய்தியின் பயனுள்ள கருவிகளாக திகழ முடியும். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக!