Tuesday, March 19, 2013

மார்ச் 19, 2013

தேவையில் இருப்போருக்கு பணி புரிவதே
உண்மையான அதிகாரம் - திருத்தந்தை

   கத்தோலிக்க திருச்சபையின் 266வது திருத்தந்தையின் பதவியேற்பு விழா வத்திக்கான் புனித பேதுரு பேராலயத்தில் நடைபெற்றது. அங்கு கூடியிருந்த மக்கள் நடுவே ஆசி வழங்கியவாறே பவனி வந்த திருத்தந்தை பிரான்சிஸ், பதவியேற்பு திருப்பலி வழிபாட்டின் தொடக்கத்தில் தனது பணிக்குரிய பாலியம், மீனவரின் மோதிரம் ஆகியவற்றை பெற்றுக் கொண்டார். திருப்பலியில் புனித யோசேப்பை மையமாக கொண்டு திருத்தந்தை வழங்கிய மறையுரை பின்வருமாறு:
அன்பு சகோதர சகோதரிகளே,
   திருச்சபையின் காவலரும், அன்னை மரியாவின் வாழ்க்கைத் துணைவருமான புனித யோசேப்பு பெருவிழாவன்று பேதுருவின் பணியை நான் துவங்கும் அருளை வழங்கியதற்காக இறைவனுக்கு நன்றி சொல்கிறேன். எனக்கு முன்னர் தலைமைப் பணியிலிருந்த திருத்தந்தையின் (ஜோசப் ரட்சிங்கர்) பெயர்கொண்ட திருநாள் இது என்பது கூடுதலான ஒரு மகிழ்வு. மிகுந்த அன்போடும், நன்றியோடும் நமது செபங்களால் அவருடன் நெருங்கியிருப்போம்.
   என் உடன் சகோதர கர்தினால்கள், ஆயர்கள், குருக்கள், திருத்தொண்டர்கள், இருபால் துறவியர் மற்றும் அனைத்து விசுவாசிகளுக்கும் என் அன்பு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். ஏனைய கிறிஸ்தவ சபைகளிலிருந்தும், யூதக் குழுமத்திலிருந்தும், பிற மதங்களிலிருந்தும் வந்திருக்கும் பிரதிநிதிகளுக்கு என் நன்றி. பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருக்கும் அரசுத் தலைவர்களுக்கும், ஏனைய அரசுகளின் பிரதிநிதிகளுக்கும் என் வாழ்த்துக்கள்.
   “யோசேப்பு, ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்” (மத்தேயு 1:24) என்று இன்றைய நற்செய்தியில் வாசிக்கக் கேட்டோம். புனித யோசேப்புக்கு இறைவன் வழங்கிய பணி இங்கு தெளிவாகிறது, அதாவது, பாதுகாவலர் என்பதே அவருக்கு வழங்கப்பட்ட பணி. யாருக்கு அவர் பாதுகாவலர்? மரியாவுக்கு, இயேசுவுக்கு பாதுகாவலர்; ஆனால், இந்த பாதுகாவல் திருச்சபையையும் உள்ளடக்குகிறது. "புனித யோசேப்பு, மரியாவைப் பாதுகாத்து, இயேசுவை நல்முறையில் வளர்க்க தன்னையே அர்ப்பணித்ததுபோல், கிறிஸ்துவின் மறையுடலான திருச்சபையையும் பாதுகாத்து வருகிறார்" என்று அருளாளர் இரண்டாம் ஜான் பால் கூறியுள்ளார்.
   பாதுகாவலர் என்ற பணியை புனித யோசேப்பு எவ்விதம் ஆற்றுகிறார்? அமைதியாக, தாழ்ச்சியாக, எவ்வித பதட்டமுமின்றி ஆற்றுகிறார். அனைத்தையும் புரிந்துகொள்ள முடியாதச் சூழலிலும், மாறாத நம்பிக்கையுடன் தன் பணியை ஆற்றுகிறார். மரியாவை மனைவியாக ஏற்றுக்கொண்ட நேரத்திலிருந்து, பன்னிரு வயதில் எருசலேம் கோவிலில் இயேசுவைக் கண்டுபிடிக்கும்வரை, ஒவ்வொரு நொடிப்பொழுதும் அன்புடன் பாதுகாத்து வருகிறார். மரியாவின் இன்பத் துன்பங்களில் பங்கேற்கிறார். எகிப்திற்குத் தப்பித்து ஓடியபோதும், பின்னர் நாசரேத்தில் அமைதி வாழ்வு வாழ்ந்தபோதும், இயேசுவுக்குத் தன் தொழிலைக் கற்றுத் தந்தபோதும் புனித யோசேப்பு அருகிருந்தார்.
   கடவுளின் வார்த்தைகளைக் கேட்டு, அவரது திட்டங்களை திறந்த மனதுடன் ஏற்றதால், பாதுகாவலர் என்ற அழைப்பை புனித யோசேப்பால் நிறைவேற்ற முடிந்தது. இன்றைய முதல் வாசகத்தில் நாம் கேட்டதுபோல், இத்தகைய மனப்பான்மையையே தாவீதிடம் கடவுள் கேட்கிறார். மனிதக் கைகளால் கட்டப்பட்ட ஓர் இல்லத்தைக் காட்டிலும், கடவுளின் வார்த்தைகளை நம்பி, அவரது திட்டத்தின் பேரில் கட்டப்படும் இல்லத்தையே அவர் விரும்புகிறார். புனித யோசேப்பு தன்னைச் சுற்றி நிகழ்ந்தவற்றை ஓர் எதார்த்தப் பார்வையுடன் நோக்கி, தன் சூழல் அனைத்தையும் மென்மையாக புரிந்துணர்ந்ததால், அவரால் அறிவார்ந்த முடிவுகளை எடுக்க முடிந்தது. புனித யோசேப்புவிடமிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். கிறிஸ்துவை நம் வாழ்வில் பாதுகாக்க வேண்டும், அதன் வழியாக நாம் மற்றவர்களையும், படைப்பு அனைத்தையும் காக்க முடியும்.
   'பாதுகாவலர்' என்ற அழைப்பு கிறிஸ்தவர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ள அழைப்பு அல்ல; மனிதராய்ப் பிறந்த அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ள அழைப்பு இது. தொடக்க நூல் கூறுவது போலவும், அசிசி நகர் புனித பிரான்சிஸ் வாழ்ந்தது போன்றும், இந்த அழகிய உலகையும், படைப்பு அனைத்தையும் காப்பது நமது கடமை. கடவுளின் படைப்பையும், நமது சுற்றுச்சூழலையும் காப்பது; ஒவ்வோரு மனிதரையும் காப்பது; முக்கியமாக, மனிதர்களிடையில் நாம் அதிகம் சிந்தித்துப் பார்க்காதவர்களான குழந்தைகள், வயது முதிர்ந்தோர், தேவைகள் அதிகம் உள்ளோர் ஆகியோரைக் காப்பது நமது கடமை.
   நமது பாதுகாக்கும் பணி குடும்பங்களில் ஆரம்பமாக வேண்டும். கணவனும் மனைவியும் முதலில் ஒருவர் ஒருவரை பாதுக்காக்க வேண்டும், பின்னர் தங்கள் குழந்தைகளைக் காக்க வேண்டும், குழந்தைகள் வளர்ந்ததும் தங்கள் பெற்றோரைக் காக்க வேண்டும். இறைவன் நமக்கு வழங்கியுள்ள அனைத்து கொடைகளையும் பாதுக்காப்பது நமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு. நம் சகோதர சகோதரிகளையும், படைப்பையும் நாம் பாதுகாக்கத் தவறும்போது, அழிவை நோக்கிய பாதையை நாம் திறந்துவிடுகிறோம். வரலாற்றின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மரணத்தையும், அழிவையும் விளைவிக்கவும், மனித குலத்தின் முகத்தைக் குலைக்கவும் எழும் ஏரோதுகள் நம்மிடையே உள்ளனர்.
   பொருளாதாரம், அரசியல் மற்றும் சமுதாய தளங்களில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் தலைவர்களுக்கும், அனைத்து நல்மனம் கொண்டோருக்கும் நான் முக்கியமான ஒரு வேண்டுகோளை விடுக்கிறேன். கடவுளின் திட்டம் ஆழப் பதிந்துள்ள படைப்பின் பாதுகாவலர்களாக நாம் இருப்போம். பிறரையும், படைப்பையும் பாதுக்காப்பதற்கு முன், நம்மைக் கவனமுடன் கண்காணிக்க வேண்டும். நமக்குள் எழும் வெறுப்பு, கர்வம், பொறாமை ஆகிய உணர்வுகளே நம்மை உருக்குலைக்கின்றன என்பதைக் கவனமுடன் கண்டுணர வேண்டும். நன்மைத்தனத்தையும், மென்மையான உணர்வுகளையும் கண்டு நாம் பயப்படத் தேவையில்லை.
   இங்கு மற்றொரு எண்ணத்தைப் பகிர்ந்துகொள்ள விழைகிறேன். பாதுகாவல் என்ற பணிக்கு, நன்மைத்தனமும், மென்மையும் கொண்டிருப்பது அவசியம். புனித யோசேப்பு, உடலளவில் உறுதிவாய்ந்த தொழிலாளியாக இருந்தார் எனினும், மனதில் மென்மை உணர்வுகள் கொண்டிருந்ததால், அவர் பாதுகாவலராக இருக்க முடிந்தது. மென்மையான மனது கொண்டிருப்பதை வலுவிழந்த நிலையாகக் காண்பது தவறு, மென்மை உணர்வுகள் கொண்டோரிடமே, கனிவு, கருணை, பிறரின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது போன்ற நற்பண்புகள் காணப்படும். எனவே, நன்மைத்தனத்தையும், மென்மையான உணர்வுகளையும் கண்டு நாம் அஞ்சக்கூடாது.
   புனித யோசேப்பின் பெருவிழாவுடன், உரோம் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் (திருத்தந்தை) பணியின் தொடக்க விழாவையும் இன்று நாம் கொண்டாடுகிறோம். பேதுருவின் வழித்தோன்றல் என்ற நிலை அதிகாரமுள்ள ஒரு நிலை. இயேசு பேதுருவுக்கு அதிகாரம் அளித்தார். ஆனால், அது, எவ்வகை அதிகாரம்? தன் உயிர்ப்புக்குப் பின்னர் பேதுருவைச் சந்தித்த இயேசு, அவரிடமிருந்து மும்முறை அன்பின் வாக்குறுதியைப் பெறுவதிலிருந்தும், என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்; என் ஆடுகளை மேய் என்று சொன்னதிலிருந்தும் இது எவ்வகை அதிகாரம் என்பதைப் புரிந்துகொள்ளலாம். பணி புரிவதே உண்மையான அதிகாரம். இந்தப் பணியில் தன்னை முழுவதும் இணைத்து, இறுதியாக சிலுவையில் இணைவதே திருத்தந்தையின் அதிகாரம். சிறப்பாக, மனுக்குலத்தில் வறியோர், வலுவிழந்தோர், எவ்வகையிலும் முக்கியத்துவம் பெறாதோர் திருத்தந்தையின் பணியில் முதலிடம் பெறவேண்டும். மத்தேயு நற்செய்தியில், இறுதித் தீர்வையின்போது சொல்லப்பட்டுள்ள பசியுற்றோர், தாகமுற்றோர், அன்னியர், ஆடையற்றோர், நோயுற்றோர், சிறையில் இருப்போர் (மத். 25: 31-46) ஆகியோரே இப்பணிக்கு முக்கிய மனிதர்கள்.
   புனித யோசேப்பின் பணிவாழ்வில் விளங்கிய தாழ்ச்சியும், நம்பிக்கையும் திருத்தந்தையின் பணிவாழ்விலும் விளங்கவேண்டும். அன்புடன் பணிபுரிபவர்களால் மட்டுமே அகிலத்தைப் பாதுகாக்க முடியும். இன்றைய இரண்டாம் வாசகத்தில், ஆபிரகாமைப்பற்றி புனித பவுல் கூறும்போது, "எதிர்நோக்குக்கு இடம் இல்லாததுபோல் தோன்றினும், அவர் எதிர்நோக்கினார்: தயங்காமல் நம்பினார்" (உரோமையர் 4:18) என்று எழுதியுள்ளார். இன்று நம்மைச் சூழ்ந்துள்ள இருளுக்கு நடுவில், நாம் நம்பிக்கையின் ஒளியைக் காணவேண்டும், அந்த நம்பிக்கையை மனிதர்களுக்குக் கொணரவேண்டும். நம்பிக்கை தரும் பணிக்கே உரோமையின் ஆயர் அழைக்கப்பட்டிருக்கிறார்.
   கன்னி மரியா, புனித யோசேப்பு, புனிதர்கள் பேதுரு மற்றும் பவுல், புனித பிரான்சிஸ் ஆகியோரின் பரிந்துரையால், தூய ஆவியார் என் பணியில் உடனிருக்க நான் வேண்டுகிறேன். நீங்கள் அனைவரும் எனக்காகச் செபிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஆமென்.