Sunday, March 31, 2013

மார்ச் 31, 2013

தீமையைவிடவும் மரணத்தைவிடவும் வலிமை
கொண்டது கடவுளின் அன்பு - திருத்தந்தை

   இஞ்ஞாயிறு காலை திருத்தந்தை பிரான்சிஸ், வத்திக்கான் தூய பேதுரு பேராலய வளாகத்தில் உயிர்ப்பு பெருவிழா திருப்பலி நிகழ்த்தினார். அதை தொடர்ந்து திருத்தந்தை வழங்கிய 'ஊருக்கும் உலகுக்கும்' (Urbi et Orbi) செய்தி பின்வருமாறு:
அன்பு சகோதர சகோதரிகளே,
   உங்கள் அனைவருக்கும் உயிர்ப்பு பெருவிழா வாழ்த்துக்கள்! கிறிஸ்து உயிர்த்து விட்டார். இச்செய்தியை அறிவிப்பதில் எத்தனை மகிழ்ச்சி எனக்கு! ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும், குறிப்பாக அதிக துன்பங்கள் காணப்படுமிடங்களுக்கு, மருத்துவமனைகளுக்கு, சிறைச்சாலைகளூக்கு இச்செய்தியுடன் நேரடியாகச் செல்ல ஆசைப்படுகிறேன். அனைத்திற்கும் மேலாக, ஒவ்வொரு இதயத்திற்குள்ளும் நுழைய ஆசைப்படுகிறேன். ஏனெனில் அங்குதான் இறைவன், 'இயேசு உயிர்த்துவிட்டார்’ என்ற செய்தியை விதைக்க ஆசைப்படுகிறார். உங்களுக்கு நம்பிக்கைக் காத்திருக்கிறது, நீங்கள் பாவத்தின், தீமையின் பிடியிலில்லை. அன்பு வெற்றிவாகை சூடியுள்ளது. கருணை வெற்றியடைந்துள்ளது.
   கல்லறை காலியாக இருப்பதைக் கண்ட இயேசுவின் பெண் சீடர்களைப்போல் நாமும் இந்நிகழ்வு தரும் பொருள் குறித்து திகைக்கலாம். இயேசு உயிர்த்துவிட்டார் என்பதன் அர்த்தம் என்ன? கடவுளின் அன்பு தீமையைவிடவும் மரணத்தைவிடவும் வலிமை கொண்டது. மேலும், கடவுளின் அன்பு நம் வாழ்வை மாற்றவல்லது என்பதுடன் நம் இதயத்தின் பாலைவனப் பகுதிகளில் பூக்களை மலரச்செய்ய வல்லது என்பதே இதன் பொருள். இறைமகன் மனிதனாகப் பிறந்து, இறுதி எல்லை வரை தாழ்ச்சி எனும் பாதையைப் பின்பற்றி, அதே அன்பிற்காக தன்னையே முற்றிலுமாகக் கையளித்தார். இதே கருணைமிகு அன்புதான் இயேசுவின் இறந்த உடலை ஒளியால் நிறைத்து, அதனை உருமாற்றி, முடிவற்ற வாழ்வுக்குக் கடந்துசெல்லச் செய்தது. இயேசு தன் பழைய வாழ்வுக்கு, அதாவது இவ்வுலக வாழ்வுக்குத் திரும்பவில்லை, மாறாக நம் மனிதத்தன்மையோடு இறைவனின் மகிமைநிறை வாழ்வுக்குள் நுழைந்ததன் மூலம் நமக்கு நம்பிக்கையின் வருங்காலத்தைத் திறந்துள்ளார். இதுதான் உயிர்ப்பு விழா. ஆம். இதுவே விடுதலைப்பயணம். பாவத்திற்கும் தீமைகளுக்கும் அடிமைகளாக இருந்த மனித குலத்தை அன்பு மற்றும் நன்மைத்தனம் நோக்கிய சுதந்திரத்துக்கு அழைத்துச்செல்வது. கடவுளே வாழ்வு, வாழ்வு மட்டுமே என்பதால் கடவுளின் மகிமை என்பது மனிதனே.
   அன்பு சகோதர சகோதரிகளே, கிறிஸ்து உறுதியாக, ஒவ்வொருவருக்காக இறந்து உயிர்த்துவிட்டார். ஆனால், பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து நன்மைத்தனத்தின் விடுதலை நோக்கிய பயணம், அதாவது உயிர்ப்பு, ஒவ்வொரு காலத்திலும், நம்முடைய தினசரி வாழ்விலும் நிகழவேண்டும். இக்காலத்திலும் எத்தனை பாலைவனங்களை மனிதர்கள் கடந்துச் செல்லவேண்டியுள்ளது! குறிப்பாக நமக்குள் இருக்கும் பாலைவனங்களை, அதாவது, கடவுள் மீதும் நம் அயலார் மீதும் அன்பின்றி செயல்படும்போது, கடவுள் நமக்குத் தந்த மற்றும் தந்துகொண்டிருக்கின்ற அனைத்தையும் பாதுகாக்கவேண்டியவர்கள் நாம் என்பதை உணராமல் செயல்படும்போது. கடவுளின் கருணை என்பது வறண்ட நிலங்களையும் பூந்தோட்டங்களாக மாற்றவல்லது, உலர்ந்துபோன எலும்புகளுக்கும் உயிரூட்ட வல்லது (எச.37: 1-14).
   எனவே, கிறிஸ்துவின் உயிர்ப்பு அருளை நாம் ஏற்றுக்கொள்வோம் என்பதே நான் இன்று உங்களுக்கு விடுக்கும் அழைப்பு. நாம் இறை இரக்கத்தால் புதுப்பிக்கப்படவும், இயேசுவால் அன்புகூரப்படவும், அவர் அன்பின் சக்தி கொண்டு நம் வாழ்வை மாற்றியமைக்கவும் உதவுவோம். மேலும், இக்கருணையை மக்களுக்குக் கொணரும் இணைப்பாளராவோம். நம் வழியாக இறைவன் இவ்வுலகிற்கு நீரூற்றி, இவ்வுலகின் படப்புகளனைத்தையும் பாதுகாத்து, நீதியும் அமைதியும் செழிக்கச் செய்வாராக. சாவையே வாழ்வாக மாற்றிய உயிர்த்த கிறிஸ்துவிடம், பகைமையை அன்பாகவும், பழிவாங்குதலை மன்னிப்பாகவும், போரை அமைதியாகவும் மாற்றும்படி வேண்டுவோம். 
   ஆம். கிறிஸ்துவே நம் அமைதி. அவர் வழியாகவே, இவ்வுலகம் முழுவதற்கும் அமைதி வழங்க நாம் இறைஞ்சுகின்றோம். மத்தியக் கிழக்குப் பகுதிக்காக; குறிப்பாக, இணக்கத்தின் பாதையை கண்டுகொள்ள முயலும் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனுக்கும் இடையே அமைதி நிலவ; நீண்ட காலமாக தொடர்ந்துவரும் சண்டைகள் நிறுத்தப்படுவதற்கு உதவும் பேச்சுவார்த்தைகள் ஆர்வமுடனும் மன உறுதியுடனும் மீண்டும் துவக்கப்பட; ஈராக்கின் அமைதிக்காக; அங்கு அனைத்து வன்முறைகளும் நிறுத்தப்பட; எல்லாவற்றிற்கும் மேலாக, அன்பு நிறை சிரியா நாட்டிற்காக. அங்கு மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக; மற்றும் உதவியும் ஆறுதலும் எதிர்நோக்கி நிற்கும் எண்ணற்ற அகதிகளுக்காக; எவ்வளவு இரத்தம் சிந்தப்பட்டுள்ளது!. அந்நாட்டின் நெருக்கடிகளுக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்படுவதற்குமுன் இன்னும் எவ்வளவு துன்பங்களை அவர்கள் அனுபவிக்க வேண்டியிருக்கும்?
   இன்னும் வன்முறை மோதல்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் ஆப்பிரிக்காவுக்கு அமைதி தேவை. மாலி நாட்டில் இணக்கமும் நிலையான தன்மையும் கொணரப்படட்டும். வன்முறைக் கும்பல்களால் குழந்தைகள் கூட பிணையக்கைதிகளாக வைக்கப்பட்டு, அப்பாவி மக்களின் வாழ்வு மிக அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவரும் வகையில் தாக்குதல்கள் தொடரும் நைஜீரியாவில் அமைதி திரும்பட்டும்! மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்படி, அச்சத்தில் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள மத்திய ஆப்ரிக்கக் குடியரசு, மற்றும் காங்கோ குடியரசின் கிழக்குப்பகுதியில் அமைதி திரும்பட்டும்!
   ஆசியாவில், குறிப்பாக கொரிய தீபகற்பத்தில் அமைதி திரும்பட்டும். இங்கு கருத்துமோதல்கள் வெற்றிகாணப்பட்டு ஒப்புரவின் புதுப்பிக்கப்பட்ட உணர்வு வளர்வதாக!
   இருபத்தோராம் நூற்றாண்டில் அடிமைத்தனத்தின் ஒரு வடிவமாக இருக்கும் மனித வியாபாரம் தொடர காரணமாக இருக்கும் சுயநலப்போக்குகளாலும், குடும்பத்தையும் மனித வாழ்வையும் அச்சுறுத்தும் சுயநலத்தின் காயங்களாலும், எளிதான இலாபம் தேடும் பேராசைகளாலும் இன்னும் துண்டுபட்டிருக்கும் இவ்வுலகம் முழுவதற்கும் அமைதி திரும்பட்டும். போதைப்பொருள் தொடர்புடைய வன்முறைகளாலும், இயற்கை வளங்கள் வரைமுறையின்றி சுரண்டப்படுவதாலும் துன்புறும் இவ்வுலகிற்கு அமைதி கிட்டுவதாக. நம் பூவுலகிற்கு அமைதி திரும்பட்டும். இயற்கை வளங்களின் பொறுப்புடைய பாதுகாவலர்களாக நம்மை மாற்றுவதுடன், இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலை நம் உயிர்த்த ஆண்டவர் கொணர்வாராக!
   அன்பு சகோதர சகோதரிகளே, உரோம் நகரிலிருந்தும் உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் எனக்குச் செவிமடுக்கும் உங்களுக்கு திருப்பாடலின் அழைப்பை முன்வைக்கிறேன்: "ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. 'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக!" (திருப்பா. 117:1-2).
   'ஊருக்கும் உலகுக்கும்' செய்திக்குப்பின் மீண்டும் ஒருமுறை தன் வாழ்த்துக்களை வெளியிட்டார் திருத்தந்தை. "உங்கள் குடும்பங்களுக்கும் நாடுகளுக்கும் மகிழ்வின், நம்பிக்கையின் செய்தியை எடுத்துச் செல்லுங்கள். மரணத்தை வெற்றி கண்டவர் நமக்கு பலத்தை வழங்குகிறார், குறிப்பாக பலவீனமானவர்களுக்கும் பிறர் உதவி தேவைப்படுபவர்களுக்கும். உங்கள் வருகைக்கும், விசுவாச சாட்சியத்துக்கும் நன்றி கூறுகிறேன். உயிர்த்த கிறிஸ்து நீதியையும் அன்பையும் அமைதியையும் மனித குலமனைத்திற்கும் வழங்குவாராக!" இவ்வாறு தன் வாழ்த்துச் செய்தியை வழங்கிய திருத்தந்தை அனைவருக்கும் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.