வாழும் உணவாகிய இயேசுவை உண்பதன் மூலம்
புதிய மனிதராக மாற முடியும் - திருத்தந்தை
திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லமான காஸ்தல் கந்தல்போவில் இருந்து
மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இஞ் ஞாயிறு
நற்செய்தியில் இயேசு வாழ்வு தரும் உண வாக தன்னை வெளிப்படுத்துவது குறித்த கருத்தை
எடுத்துரைத்தார்.
அன்பு சகோதர, சகோதரிகளே,
ஐந்து
அப்பங்களை பலுகச் செய்து ஐயாயிரம் பேருக்கு உணவளித்த பிறகு, நிலைவாழ்வு
தரும் உணவைப் பற்றி இயேசு பேசுவதை இன்றைய நற் செய்தி எடுத்துரைக்கிறது.
அப்பம் பலுகச் செய்யப் பட்ட அற்புதத்தின் ஆழ்ந்த பொருளை அவர்கள்
புரிந்துகொள்ள இயேசு உதவுகிறார்: அப்பங்களால் அவர்களது பசியைப் போக்கி
நிறைவளித்த அவர், நிலையாக நிறைவு தரும் விண்ணக உணவாகிய தன்னை அவர்கள்
ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று அழைப்பு விடுக்கிறார். யூத மக்களின் பாலைநிலப்
பயணத்தில் வானிலிருந்து பொழியப்பட்ட உணவான மன்னாவை உண்ட அனுபவம்
பெற்றிருந்தார்கள், அது வாக்களிக்கப்பட்ட நாட்டை அடையும் வரை அவர்களுக்கு
வாழ்வளித்தது. இப்பொழுது இயேசு, விண்ணகத்தில் இருந்து இறங்கி வந்த
உண்மையான, எப்பொழுதும் வாழ்வளிக்கும் உணவாகிய தன்னைப் பற்றி பேசுகிறார்.
அவரே நிலைவாழ்வு தரும் உணவு, ஏனெனில் அவர் கடவுளின் ஒரேப் பேறான மகன்.
தந்தையின் அன்புக்குரிய அவரில் மனிதரின் வாழ்வு முழுமையைக் காண்கிறது,
கடவுளின் வாழ்வில் மனிதருக்கு அறிமுகம் கிடைக்கிறது.
கடவுளின்
திருவுளத்தை அறிந்து, வாழ்வின் சரியான பாதையை கண்டுகொள்ள உதவும் மோசேயின்
சட்டத்தில் இருந்த கடவுளின் வார்த்தையே வானிலிருந்து இறங்கி வந்த உண்மையான
உணவு என்பது யூதர்களின் எண்ணம். இப்பொழுது இயேசு, விண்ணக உணவாக
அவதரித்திருக்கிறார், தானே கடவுளின் வார்த்தை, மனித உடலெடுத்த வார்த்தை
என்பதை அவர் தெளிவுபடுத்துகிறார். இன்றைய நற் செய்தி பகுதியில் காணப்படும்
யூதர்களைப் போல இயேசுவின் இறைத்தன்மையில் சந்தேகம் கொள்வது கடவுளின் செயலை
எதிர்ப்பதாகும். "இவர் யோசேப்பின் மக னாகிய இயேசு அல்லவா? இவருடைய தாயும்
தந்தையும் நமக்குத் தெரியாதவர் களா?" என்று அவர்கள் கூறுகிறார்கள். மனித தோற்றங்களைத் தாண்டிச் சென்று, மனித உடலெடுத்த கடவுளின் வார்த்தையை
ஏற்றுக்கொள்ள அவர்கள்
மறுக்கிறார் கள். புனித அகுஸ்தீன் இவ்வாறு விளக்குகிறார்:
"அவர்கள் அந்த விண்ணக உணவில் இருந்து தூரமாக இருந்தார்கள், அவர்களால்
அதற்கான பசியை உணர முடிய வில்லை. அவர்களது இதயத்தின் வாயில் நோய் உள்ளது ...
உண்மையில், இந்த உணவு மனிதனின் உள்ளார்ந்த பசியைப் போக்கும்."
உண்மையாகவே நாம் கடவுளின் வார்த்தைக்கானப் பசியை உணர்கிறோமா என்று நம்மையே
நாம் கேட்க வேண்டும். தந்தையாம் கடவுளால் ஈர்க்கப்பட்டு அவரது வார்த்தையைக்
கேட்பவர்கள் மட்டுமே, இயேசுவில் நம்பிக்கை கொள்ளுமாறு வழி நடத்தப்பட்டு
அவரை சந்திப்பார்கள். அவரால் ஊட்டம் பெற்று உண்மை வாழ்வையும், வாழ்வின்
பாதையில் நீதி, உண்மை, அன்பு ஆகியவற்றையும் கண்டடைவார்கள். அகுஸ்தீன்
மேலும் கூறுகிறார்: "... விண்ணகத்தில் இருந்து இறங்கி வந்த உணவாகிய
ஆண்டவர், அவரில் நம்பிக்கை கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார். அவரில் நம்பிக்கை
கொள்ளுமாறு, வாழும் உணவாகிய இயேசுவை உண்ண வேண்டும். அவரை உண் பதன் மூலம்,
காண முடியாத மறுபிறப்பை அடைந்து, புதிய மனிதராக மாற முடியும். இயேசுவை
சந்தித்து, அவருடனான நட்புறவில் வளர வழிநடத்துமாறு மரியன்னை யிடம் கேட்போம். அவருடைய திருமகனது அன்பின் முழுமையான ஒன்றிப்புக்கு நம்மை அறிமுகம் செய்து
வைக்குமாறும் அவரிடம் வேண்டுவோம். அதன் மூலம், விண்ணகத்தில் இருந்து
இறங்கி வந்த வாழும் உணவாகிய இயேசுவால் நாம் ஆழ மாகப் புதுப்பிக்கப்படுவோம்.
மூவேளை
செபத்துக்கு பின் பேசிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், ஈரானில்
நில நடுக்கத்தாலும், சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில்
வெள்ளப்பெருக்காலும் பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூர்ந்தார். இறுதியில் அவர் அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.