Monday, September 5, 2011

செப்டம்பர் 4, 2011

குற்றமிழைக்கும் சகோதரரை அன்பினால் திருத்தவும் இணைந்து செபிக்கவும் திருத்தந்தை அழைப்பு

  சகோதரத்துவ உணர்வுடன் கூடிய திருத்தங்களில் ஈடுபடுவதுடன் ஒன்றிணைந்து செபிப்பது நமது இலக்கணமாக இருக்கட்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
   இஞ்ஞாயிறு திருப்பலி வாசகங்களையொட்டி நண்பகல் மூவேளை செப உரையை காஸ்தல் கந்தோல்ஃபோ கோடை விடுமுறை இல்லத்தில் இருந்து வழங்கிய திருத்தந்தை, பிறரைத் திருத்தும் போது சகோதரத்துவ உணர்வுடன் செயல்படுவது என்பது, இதயத்தில் எளிமையையும் தாழ்ச்சியையும் எதிர்பார்க்கிறது என்றார். ஒன்றிணைந்த குடும்பமாக செபிப்பது அதற்கு மேலும் உதவும் எனவும் கூறினார் பாப்பிறை.
   சகோதரத்துவ அன்பு என்பது இருபக்கத்துப் பொறுப்புணர்வுடன் இணைந்து வருகிறது என்பதால், நம் சகோதரன் நமக்கு எதிராகக் குற்றமிழைக்கும்போது சகோதரனுடன் தனியாகப் பேச முயல வேண்டும் என்றார். தனக்குச் செவிமடுக்காத சகோதரனிடம் எவ்விதம் அன்பு கொண்டு திருத்த முயல வேண்டும் என இயேசு வழங்கியுள்ள அறிவுரைகளையும் சுட்டிக்காட்டினார் பாப்பிறை.
   தனிப்பட்ட முறையில் செபிப்பது முக்கியத்துவம் நிறைந்தது எனினும், குழுவாக இணைந்து செபிப்பதன் அவசியத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் தன் நண்பகல் மூவேளை செப உரையில் மேலும் எடுத்துரைத்தார் பாப்பிறை.

ஞாயிறு நற்செய்தி: மத்தேயு 18:15-20
   அக்காலத்தில் இயேசு சீடர்களிடம் கூறியது: "உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும். இல்லையென்றால் 'இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தால் அனைத்தும் உறுதி செய்யப்படும்' என்னும் மறைநூல் மொழிக்கு ஏற்ப உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக்கொண்டு போங்கள். அவர்களுக்கும் செவி சாய்க்காவிடில் திருச்சபையிடம் கூறுங்கள். திருச்சபைக்கும் செவிசாய்க்காவிடில் அவர் உங்களுக்கு வேற்று இனத்தவர் போலவும் வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும். மண்ணுலகில் நீங்கள் தடை செய்பவை அனைத்தும் விண்ணுலகிலும் தடை செய்யப்படும்; மண்ணுலகில் நீங்கள் அனுமதிப்பவை அனைத்தும் விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார். ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்."