Wednesday, January 30, 2013

ஜனவரி 30, 2013

விண்ணகத் தந்தையின் இரக்கமுள்ள முகத்தை
நாம் இயேசுவில் காண்கிறோம் - திருத்தந்தை

   வத்திகானின் பாப்பிறை ஆறாம் பவுல் மண்டபத் தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு புதன் பொது மறைபோதகம் வழங்கிய திருத்தந்தை 16ம் பென டிக்ட், தந்தையாம் கடவுளின் அன்பைப் பற்றி எடுத் துரைத்தார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   கடந்த வார மறைபோதகத்தில், விசுவாச அறிக்கையின் "நான் கடவுளை நம்புகிறேன்" என்ற வார்த்தைகளைப் பற்றி பார்த்தோம். அவரே, 'விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுள்' என்று உறுதிபடுத்துகிறது. கடவுளைப் பற்றி விசுவாச அறிக்கை நமக்கு தரும் அடிப்படை வரையறை: அவர் நமது தந்தை. தந்தை பண்பைப் பற்றி இக்காலத்தில் பேசுவது எப்பொழுதும் எளிதாக இருப்பதில்லை. பணி அதிகரிப்பு, குடும்ப பிரிவினைகள், ஊடகங்களின் தாக்கங்கள் போன்றவை தந்தை - பிள்ளைகள் இடையிலான அமைதியான உறவுக்கு இடையூறாக உள்ளன. கடவுளை தந்தையாக சிந்திப்பதிலும் பிரச்சனையாக மாறியுள்ளது. தந்தையைப் பற்றிய தெளிவான புரிதல் இல்லாதபோது, கடவுளைத் தந்தையாக ஏற்று, அவரிடம் தம்மை ஒப்படைப்பது ஒருவருக்கு எளிதானது அல்ல.
   இத்தகைய பிரச்சனைகளை வெற்றிகொள்ள, விவிலியத்தில் காணப்படும் கடவுள் நமக்கு தந்தையாக இருப்பதன் பொருளை எடுத்துரைக்கும் வெளிப்பாடு உதவுகிறது. மனிதகுல மீட்புக்காக தம் சொந்த மகனையே கையளிக்கும் அளவுக்கு அன்புகூர்ந்த கடவுளின் முகத்தை நற்செய்தி சிறப்பாக வெளிப்படுத்துகிறது. கடவுளை தந்தை உருவத்தில் காண்பது கடவுளின் அன்பை முடிவற்ற வகையில் புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறது. இயேசு நமக்கு தந்தையின் முகத்தை காட்டுகிறார்: "உங்களுள் எவராவது ஒருவர் அப்பத்தைக் கேட்கும் தம் பிள்ளைக்குக் கல்லைக் கொடுப்பாரா? அல்லது, பிள்ளை மீன் கேட்டால் பாம்பைக் கொடுப்பாரா? தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணுலகில் உள்ள உங்கள் தந்தை தம்மிடம் கேட்போருக்கு இன்னும் மிகுதியாக நன்மைகள் அளிப்பார் அல்லவா!" (மத்தேயு 7:9-11). உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மை ஆசீர்வதித்து, கிறிஸ்து வழியாகத் தம் பிள்ளைகளாகத் தேர்ந்தெடுத்தார்.
   அவர், இயேசுவில் வெளிப்படுத்தியது போன்று, விதைக்காத, அறுக்காத வானத்து பறவைகளுக்கும் உணவளிக்கிறார், சாலமோன் கூட அணிந்திராத அருமையான வண்ணங்களால் காட்டுமலர்ச் செடிகளை போர்த்துகிறார். நாம் இந்த மலர்களையும், வானத்து பறவைகளையும் விட மேலானவர்கள் என்றும் இயேசு கூறுகிறார். மேலும், கடவுள் எவ்வளவு நல்லவராக இருக்கிறாரெனில், "அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்" (மத்தேயு 5:45). நாம் தவறு செய்தாலும், எப்பொழுதும் பயமின்றி, முழு உறுதியோடு இந்த தந்தையின் மன்னிப்பில் நம்பிக்கை வைக்க முடியும். மனந்திரும்பி வரும் வழிதவறிய மகனை வரவேற்று அரவணைக்கும் நல்ல தந்தையாக கடவுள் இருக்கிறார். அவர் கேட்பவருக்கு தம்மை இலவசமாக கொடுப்பதுடன், விண்ணக உணவையும், என்றென்றும் உயிர் தரும் வாழ்வின் நீரையும் அளிக்கின்றார்.
   திருப்பாடல் 27ல் எதிரிகளால் சூழப்பட்டவர் ஆண்டவரின் உதவியை இறைஞ்சும் செபம் இவ்வாறு கூறுகிறது: "என் தந்தையும் தாயும் என்னைக் கைவிட்டாலும் ஆண்டவர் என்னை ஏற்றுக்கொள்வார்" (27:10). தந்தையாக இருக்கும் கடவுள் தம் பிள்ளைகளை ஒருபோதும் கைவிடுவதில்லை, மனிதருக்கு நம்பிக்கைக்குரிய விதத்தில் ஒரு அன்பு தந்தையாக ஆதரித்து, உதவி செய்து, வரவேற்று, மன்னித்து, மீட்பளித்து நித்திய பரிமாணத்துக்கு திறக்கிறார். மீட்பின் வரலாற்றில் "என்றும் உள்ளது அவரது பேரன்பு" என திருப்பாடல் 136 மீண்டும் மீண்டும் எடுத்துரைக்கிறது. கடவுளின் அன்பு எப்போதும் தோற்காது, ஒருபோதும் நம்மில் சோர்வுறாது, தம் மகனையே பலியாக்கும் அளவுக்கு இந்த அன்பு தீவிரமானது. விசுவாசமே நம் வாழ்வுக்கு உறுதியைத் தருகிறது; துன்பம் மற்றும் ஆபத்து வேளைகளிலும், இருளையும், பிரச்சனையையும், வழியையும் உணரும் நேரங்களிலும் கடவுள் நம்மை கைவிடமாட்டார், நம்மை மீது வாழ்வுக்கு கொண்டு செல்ல எப்போதும் நம் அருகில் இருக்கிறார்.
   ஆண்டவர் இயேசுவில், நாம் விண்ணகத்தில் இருக்கும் தந்தையின் இரக்கமுள்ள முகத்தைக் காண்கிறோம். அவரை அறிவதில், நாம் தந்தையை அறிந்துகொள்ள முடியும், அவரைக் காண்பதில் நாம் தந்தையைக் காண முடியும், ஏனெனில் அவர் தந்தையுள்ளும், தந்தை அவருள்ளும் இருக்கிறார்கள். கொலோசையருக்கு எழுதிய திருமுகத்தில் கூறப்படுவது போன்று, "அவர் கட்புலனாகாத கடவுளின் சாயல்; படைப்பனைத்திலும் தலைப்பேறு ... இறந்து உயிர்த்தெழுவோருள் அவர் தலைப்பேறு ஆனார்." அவர் வழியாகவே நாம் பாவ மன்னிப்பையும், மீட்பையும் கொண்டுள்ளோம். சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்." தந்தையில் கொள்ளும் விசுவாசம், தூய ஆவியின் செயல் வழியாக மகனில் நம்பிக்கை கொள்ளவும், இறுதியாக சிலுவையில் வெளிப்பட்ட இறையன்பை அடையாளம் காணவும் அழைக்கிறது. நம் தந்தையாம் கடவுள் நமக்காக தம் மகனையே கொடுக்கிறார், நம் பாவங்களை மன்னிக்கிறார், உயிர்ப்பு வாழ்வின் மகிழ்ச்சிக்கு நம்மை கொண்டு செல்கிறார், நம்மை அவரது பிள்ளைகளாக்கி அவரை "அப்பா, தந்தையே" என்று அழைக்க அனுமதிக்கும் ஆவியை நமக்கு தருகிறார். எனவேதான், நமக்கு செபிக்க கற்றுக்கொடுத்த இயேசு, "எங்கள் தந்தையே" என்று கூற அழைக்கிறார்.
   கடவுளின் தந்தை பண்பு, எல்லையற்ற அன்பும், பலவீனமான குழந்தைகளாகிய நம் அனைத்து தேவைகளையும் அறிவதில் மென்மையும் கொண்டது. திருப்பாடல் 103 இறை இரக்கத்தை இவ்வாறு அறிவிக்கிறது: "தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர் மீது இரங்குகிறார். அவர் நமது உருவத்தை அறிவார்; நாம் தூசி என்பது அவர் நினைவிலுள்ளது" (103:13-14). நமது சிறுமை நிலையிலும், பலவீனமான மனித இயல்பிலும் ஆண்டவரின் இரக்கத்துக்காக வேண்டுகிறோம். நமது அழைப்புக்கு பதிலளிக்கும் வகையில் தம் மகனை அவர் அனுப்பினார், அவர் நமக்காக இறந்து, உயிர்த்தெழுந்தார்; அவர் நம் அழிவுக்குரிய இயல்பில் நுழைந்து, ஒரு மாசற்ற ஆட்டுக்குட்டியாக உலகின் பாவங்களை தம்மீது சுமந்து கொண்டார்; நாம் கடவுளோடு ஒன்றிப்பதற்கான வழியை மீண்டும் திறந்து, நம்மை கடவுளின் உண்மையான பிள்ளைகளாக மாற்றினார். பாஸ்கா மறைபொருளில் தந்தையின் தெளிவான பங்கு முழுமையான ஒளியில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. மாட்சிமிகு சிலுவையில், எல்லாம் வல்ல தந்தையாம் கடவுளின் மேன்மை முழுமையாக வெளிப்படுகிறது.
   உண்மையிலேயே வலிமை வாய்ந்த ஒருவரே வலியைத் தாங்கிக்கொண்டு, இரக்கம் காண்பிக்கவும், அன்பின் வலிமையை முழுமையாக செயல்படுத்தவும் முடியும். அனைத்தையும் படைத்த கடவுள், ஒவ்வொருவரையும் ஒவ்வொரு பொருளையும் அன்பு செய்வதில் தம் வலிமைமிகு அன்பை வெளிப்படுத்துகிறார். கடவுள் நமது மனமாற்றத்திற்காக காத்திருக்கிறார். கடவுளின் வலிமைமிகு அன்புக்கு எல்லையில்லை, எனவே "தம் சொந்த மகனென்றும் பாராது நம் அனைவருக்காகவும் கடவுள் அவரை ஒப்புவித்தார்" (உரோமையர் 8:32). அதனால் உண்மையாகவே தீமை வீழ்த்தப்பட்டது, சாவும் தோற்கடிக்கப்பட்டது ஏனெனில் அது வாழ்வின் கொடையாக மாற்றப்பட்டு விட்டது. "எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நான் நம்புகிறேன்" என்று நாம் கூறும்போது, இறந்து, உயிர்த்தெழுந்த அவரது மகனில் இருந்த கடவுளின் அன்பின் ஆற்றலுக்குள் நமது விசுவாசத்தை அறிக்கையிடுகிறோம். விசுவாசத்தை நடைமுறையில் வாழவும், தந்தையின் அன்பிலும், நம்மை மீட்கின்ற அவரது எல்லாம் வல்ல இரக்கத்திலும் நம்பிக்கை கொண்டு, நமது பிள்ளைக்குரிய கொடையை பெற்றுக்கொள்ள கடவுள் அருள்புரிவாராக!

Sunday, January 27, 2013

ஜனவரி 27, 2013

மீட்பு அளிப்பதற்காக கடவுள் உங்களை அழைக்கும்
நாளை பற்றிக் கொள்ளுங்கள்! - திருத்தந்தை

   வத்திக்கான் தூய பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், ஆண்டவரின் நாளான ஞாயிற்றுக்கிழமையின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   இன்றைய திருவழிபாடு லூக்கா நற்செய்தியின் இருவேறு பகுதிகளை நமக்கு இணைத்து தருகிறது. முதல் பகுதி (1:1-4), 'கடவுளின் நண்பர்' என்ற பொருள் கொண்ட பெயருடைய 'தியோபில்' என்பவருக்கு எழுதப்பட்ட முன்னுரையைத் தருகிறது. நற்செய்தியை அறிந்துகொள்ள விரும்பி, கடவுளுக்கு தன்னைத் திறக்கும் ஒவ்வொரு நம்பிக்கையாளரையும் அவரில் நாம் காண முடியும். இரண்டாம் பகுதி (4:14-21), தூய ஆவியின் வல்லமை உடையவராய் ஓய்வுநாளில் தொழுகைக்கூடத்திற்குச் சென்ற இயேசுவைப் பற்றிய செய்தியை நமக்கு வழங்குகிறது. ஓர் உண்மையான நம்பிக்கையாளராக வாராந்திர வழிபாட்டு நிகழ்வைப் புறக்கணிக்காமல், தன் மக்களோடு செபிக்கவும் மறைநூலைக் கேட்கவும் ஆண்டவர் திருஅவைக்கு செல்கிறார். இந்த திருச்சடங்கில் ஐந்நூல்கள் அல்லது இறைவாக்கினர் நூல்களில் இருந்து வாசகமும் அதற்கான சிந்தனையும் இடம்பெறும். அந்நாளில், இயேசு எழுந்து நின்று இறைவாக்கினர் எசாயா நூலின் பின்வரும் பகுதியை வாசிக்க தொடங்கினார்: "ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள் பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் என்னை அனுப்பியுள்ளார்" (61:1-2).
   ஓரிஜன் இவ்வாறு கூறுகிறார்: "இயேசு மறைநூலைத் திறந்து, அவரைப் பற்றிய இறைவாக்குகளை வாசித்தது தற்செயல் அல்ல, அது கடவுளின் முன்னறிவின் திட்டத்தாலே நிகழ்ந்தது." இயேசு அதை வாசித்து முடித்ததும், அனைவரும் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தபோது, "நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று'' என்றார் (லூக்கா 4:21). அலக்சாண்ட்ரியா புனித சிரில் இவ்வாறு கூறுகிறார்: "கிறிஸ்துவின் முதல் மற்றும் இறுதி வருகைக்கும் இடைப்பட்டதாக, நம்பிக்கையாளர் கேட்பதற்கும் மனந்திரும்புவதற்கும் ஏற்றதாக 'இன்று' இருக்கிறது." மேலும் தீவிரமான பொருளில், மீட்பு வரலாற்றில் இயேசுவே இன்றாக இருக்கிறார், ஏனெனில் அவரே மீட்பின் முழுமையைக் கொண்டு வந்து நிறைவு செய்திருக்கிறார். "இன்று" எனும் வார்த்தை, புனித லூக்காவின் அன்புக்குரியது, நற்செய்தியாளரால் முன்வைக்கப்படும் கிறிஸ்தியல் பெயரான "மீட்பர்" என்பதற்கு நம்மை இட்டுச் செல்கிறது. குழந்தைப் பருவ நற்செய்தியில், ஏற்கனவே இது வானதூதரின் வார்த்தைகளில் இடையர்களுக்கு அறிவிக்கப்படுகிறது: "இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்" (லூக்கா 2:11).
   இந்த நற்செய்தி பகுதி "இன்று" நமக்கு சவால் விடுகிறது. அனைத்திற்கும் முதலாவதாக, நாம் ஞாயிறன்று எப்படி இருக்க வேண்டும் என்பதை சிந்திக்க தூண்டுகிறது: அது ஓய்வு மற்றும் குடும்பத்துக்கான நாளாக, அதிகமாக ஆண்டவருக்கு அர்ப்பணிக்கும் நாளாக, நற்கருணை விருந்தில் பங்கேற்று, கிறிஸ்துவின் உடல் மற்றும் இரத்தத்தாலும், அவரது வாழ்வு தரும் வார்த்தையாலும் ஊட்டம் பெறுவதாக உள்ளது. இரண்டாவது, கவனச்சிதறல்கள் நம்மை திசைத்திருப்பும் இக்காலத்தில், நமது கேட்கும் திறனை நாம் அறிய இந்த நற்செய்தி அழைப்பு விடுக்கிறது. நாம் கடவுளைப் பற்றியும், கடவுளோடும் பேசுவதற்கு முன்பு, நாம் கேட்க வேண்டும், நம்மோடு பேசும் ஆண்டவரின் குரலைக் கேட்கும் கல்விக்கூடமாக திருச்சபையின் திருவழிபாடு அமைந்துள்ளது. இறுதியாக அவர் நமக்கு கூறுவது, ஒவ்வொரு கணமும் நமது மனமாற்றத்துக்கு ஏற்புடையது. ஒவ்வொரு நாளும் நமது மீட்பின் நாளாக மாற முடியும், ஏனெனில் மீட்பு என்பது திருச்சபைக்கும், கிறிஸ்துவின் அனைத்து சீடருக்கும் தொடர் கதையாக இருக்கிறது. இதுதான் "பற்றிக் கொள்ளுதல்" கிறிஸ்தவப் பொருள்: உங்களுக்கு மீட்பு அளிப்பதற்காக கடவுள் உங்களை அழைக்கும் நாளை பற்றிக் கொள்ளுங்கள்! மனித குலம் அனைத்தின் மீட்பரான கடவுளின் உடனிருப்பை நம் அன்றாட வாழ்வில் கண்டறிந்து வரவேற்க, கன்னி மரியா எப்பொழுதும் நம் முன்மாதிரியும் வழிகாட்டியுமாக திகழ்வாராக!

Saturday, January 26, 2013

ஜனவரி 25, 2013

கிறிஸ்துவில் ஒன்றிப்பதன் முதல் எடுத்துக்காட்டாக
கிறிஸ்தவர்கள் ஒளிர வேண்டும் - திருத்தந்தை

   கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான செப வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை, ரோம் புனித பவுல் பேராலயத்தில் மாலை ஆராதனை வழிபாட்டை பிற கிறிஸ்தவ சபை பிரதிநிதிகள் முன்னிலையில் நிகழ்த்திய திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பின்வரும் கருத்துகளை எடுத்துரைத்தார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான செப வாரத்தின் இறுதியில், திருத்தூதர் பவுலின் கல்லறையை சூழ்ந்திருப்பது எப்பொழுதும் மகிழ்ச்சியையும் சிறப்பான அருளையும் கொண்டு வருகிறது. இந்த கொண்டாட்டம் விசுவாச ஆண்டின் ஒரு பகுதியாக இருக்கிறது. ஒரே விசுவாசத்தில் ஒன்றிப்பதே கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு அடிப்படை. உண்மையில், ஒற்றுமை என்பது விசுவாசத்தில் இருந்து பிரிக்க முடியாததாக கடவுள் தந்தது. புனித பவுல் இவ்வாறு கூறுகிறார்: "நீங்கள் ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒரே எதிர்நோக்கு இருப்பது போல, உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே. அவ்வாறே ஆண்டவர் ஒருவரே; நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே; திருமுழுக்கு ஒன்றே. எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே; அவர் எல்லாருக்கும் மேலானவர்; எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்; எல்லாருக்குள்ளும் இருப்பவர்" (எபேசியர் 4:4-6).
   தம் மகன் இயேசு கிறிஸ்துவில் தம்மை வெளிப்படுத்திய தந்தையும் படைப்பாளருமான கடவுள், வாழ்வும் புனிதமும் வழங்கும் ஆவியைப் பொழிந்து திருமுழுக்கு விசுவாச அறிக்கையில் கிறிஸ்தவர்களை ஏற்கனவே இணைத்திருக்கிறார். கடவுளின் முதன்மை கொடையான விசுவாசத்தை தவிர்த்து, முழு கிறிஸ்தவ ஒன்றிப்பு இயக்கத்தையும் பொது ஆர்வத்துக்காக ஒரு ஒப்பந்த வடிவமாக குறைக்க வேண்டியது மனிதரின் கடமை. இரண்டாம் வத்திக்கான் சங்கம், "தந்தை, வார்த்தை, தூய ஆவியுடன் ஒன்றிக்கும் நெருக்கமான தோழமை ஆழ்ந்த சகோதரத்துவத்தை எளிமையாக வளர்க்கும். நம்மை பிரித்து வைத்திருக்கும் கோட்பாடு சார்ந்த பிரச்சனைகள் இன்னும் குறைக்கப்படவில்லை. ஒருவருக்கொருவர் மதிப்பளித்து சகோதரத்துவ உணர்வுடன் தைரியமாக அவை அணுகப்படவில்லை. விசுவாசத்தை முதன்மையாக கொண்ட உரையாடல், கடவுளின் செயல்பாட்டுக்கு வழி திறக்காமல் நாம் ஒற்றுமையை கட்டியெழுப்ப முடியாது, வெவ்வேறு சபைகளிலும், திருப்பணி சமூகங்களிலும் உள்ள ஆன்ம வளங்கள் மூலம் தூய ஆவியே நம்மை முழு ஒன்றிப்பை நோக்கி வழிநடத்துகிறார்.
   இன்றைய சமூகத்தில் தனி நபரிலும், கூட்டு வாழ்விலும் கிறிஸ்தவ செய்தியின் தாக்கம் குறைந்துவிட்டது போன்று தெரிகிறது, இது அனைத்து திருச்சபைகளுக்கும் திருப்பணி சமூகங்களுக்கும் சவாலாக இருக்கிறது. மீட்பரை இதுவரை அறிந்துகொள்ளாதோரிடம் நம்பிக்கைக்குரிய விசுவாசத்தை அறிவிக்க ஒற்றுமை முக்கிய தேவையாக இருக்கிறது. மறைபணி நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்கும் பிரிவினையே இன்று நாம் காணும் கிறிஸ்தவ ஒன்றிப்பு இயக்கம் உருவாக காரணமாக இருந்தது. கிறிஸ்தவர்களிடையே காணப்படும் முழு ஒன்றிப்பு புரிந்துகொள்ளத்தக்கது, உண்மையில் தெளிவாக சான்று பகர்வதற்கு அடிப்படை பண்பாக உள்ளது. நாம் முழு ஒற்றுமையை நோக்கிய பாதையில் இருக்கும்போது, தற்கால உலகத்துக்கு கடந்து செல்லும் விசுவாசத்தின் நன்மைக்காக கிறிஸ்துவின் அனைத்து சீடர்களும் நடைமுறை ஒத்துழைப்பை தொடர்வது தேவையாக இருக்கிறது. ஒப்புரவு, உரையாடல் மற்றும் புரிந்துகொள்தல் ஆகியவை கிறிஸ்தவர்களின் வலிமையான இருப்பை உணர்த்துவது இக்காலத்தின் மாபெரும் தேவையாக இருக்கிறது.
   கடவுளில் கொள்ளும் உண்மையான விசுவாசம் தனிப்பட்ட புனிதத்துவம், நீதி வேட்கை ஆகியவற்றில் இருந்து பிரிக்க முடியாதது. இன்று நிறைவடையும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் தியான மையப்பொருளாக "ஆண்டவர் நம்மிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்?" என்ற கருத்து இறைவாக்கினர் மீக்காவின் வார்த்தைகளில் (6:6-8) இருந்து உந்துதல் பெற்று இந்திய கிறிஸ்தவ குழுவினரால் தேர்வு செய்யப்பட்டது. கடின சூழ்நிலைகளிலும் தங்கள் விசுவாசத்திற்கு சான்று பகரும் இந்திய கிறிஸ்தவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதோடு, என் செபங்களையும் உறுதி அளிக்கிறேன். "கடவுளுடன் தாழ்ச்சியாக நடத்தல்" என்பது தீவிர விசுவாசத்தின் முதல் நடை, ஆபிரகாமைப் போன்று கடவுளில் நம்பிக்கை வைப்பது. புனித பவுல் கூறுவது போன்று, எத்தகைய பிரிவினைகள் நடுவிலும் கிறிஸ்துவில் ஒப்புரவாகி ஒன்றிப்பதன் முதல் எடுத்துக்காட்டாக கிறிஸ்தவர்கள் ஒளிர வேண்டும். பிற இனத்தாரின் திருத்தூதர் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்தில் இவ்வாறு கூறுகிறார்: "கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை அணிந்து கொண்டீர்கள். இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை: ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை: கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள்" (3:27-28).
   உண்மை மற்றும் அன்பில் ஒன்றிப்பதற்கான நமது தேடலில், கிறிஸ்தவ ஒன்றிப்பு என்பது நமது முயற்சிகளுக்கு அப்பால் தூய ஆவியின் செயலும் கொடையும் என்ற பார்வையை இழந்துவிடக் கூடாது. எனவே, ஆன்மீக ஒன்றிப்பு, செபமே கிறிஸ்தவ ஒன்றிப்பின் இதயமாக விளங்குகிறது. இரண்டாம் வத்திக்கான் சங்கம் கூறுவது போன்று, "உள் மனமாற்றம் இல்லாமல் உண்மையான கிறிஸ்தவ ஒன்றிப்பு சாத்தியமாகாது." இறைவாக்கினர் பரிந்துரைப்பதும், திருத்தூதர் பவுலில் திகழ்வதுமான உண்மையான மனமாற்றமே நம் வாழ்வின் மையத்தில் நம்மை கடவுளுக்கு நெருக்கமாகவும், ஒருவர் மற்றவருக்கு நெருக்கமாகவும் கொண்டு வரும். நமது இதயம் மற்றும் உள்ளத்தின் அகவாழ்வை புதுப்பித்து, அன்றாட வாழ்வில் பிரதிபலித்தால், ஒப்புரவு மற்றும் உரையாடல் வழியாக, மதிப்பிலும் அன்பிலும் கிறிஸ்தவ ஒன்றிப்பை புரிந்துகொள்ள முடியும், "இதனால் உலகம் நம்பும்." (யோவான் 17:21).
   அன்பு சகோதர சகோதரிகளே, திருச்சபையின் நற்செய்தி பணிக்கு ஒப்பற்ற முன்மாதிரியாகவும், கடவுளுடனான நெருக்கமான ஒன்றிப்பு மற்றும் மீட்பர் கிறிஸ்துவில் அனைத்து மனிதரிடையேயான ஒன்றிப்புக்கு அடையாளமாகவும் கருவியாகவும் விளங்கும் கன்னி மரியாவின் பரிந்துரையை வேண்டுவோம். ஆமென்.

Wednesday, January 23, 2013

ஜனவரி 23, 2013

நம்பிக்கையாளரான ஆபிரகாம் உண்மையான
தாய்நாட்டை நமக்கு காட்டுகிறார் - திருத்தந்தை

   வத்திகானின் பாப்பிறை ஆறாம் பவுல் மண்டபத் தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு புதன் பொது மறைபோதகம் வழங்கிய திருத்தந்தை 16ம் பென டிக்ட், கிறிஸ்தவர்கள் ஆபிரகாமைப் பின்பற்றி விசுவாச வாழ்வு வாழ்வது குறித்து எடுத்துரைத்தார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   இந்த விசுவாச ஆண்டில், நமது வாழ்வை நம்பிக்கையாளர்களாக செலவிட உதவும் விசுவாச அறிக்கை பற்றிய போதகத்தை இன்று தொடங்க விரும்புகிறேன். "நான் கடவுளை நம்புகிறேன்" என்று விசுவாச அறிக்கை தொடங்குகிறது. இது அடிப்படையான உறுதிநிலை, ஆண்டவரோடும் அவரது மறைபொருளோடும் நாம் கொண்டுள்ள உறவின் முடிவற்ற உலகை திறப்பதாக இதன் சாரம் அமைந்துள்ளது. கடவுளை நம்புதல் என்பது அவரில் இணைந்து, அவரது வார்த்தையை வரவேற்று, அவரது வெளிப்பாட்டுக்கு மகிழ்ச்சியோடு கீழ்படிவதாகும். கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி நமக்கு போதிப்பது போன்று, "விசுவாசம் என்பது தனிப்பட்ட செயல் - தம்மை வெளிப்படுத்திய கடவுளின் முயற்சிக்கு மனிதர் சுதந்திரமாக பதிலளிப்பது." நாம் கடவுளை நம்புகிறோம் என்று சொல்ல இயல்வது கொடையாகவும் கடமையாகவும் இருக்கிறது, அன்பினால் மனிதரை நண்பர்களாக கருதி பேசும் கடவுளுடனான உரையாடலின் அனுபவத்தில், இது கடவுளின் அருளாகவும் மனிதரின் பொறுப்பாகவும் இருக்கிறது, நம்மோடு பேசியிருப்பதால், விசுவாசத்தில், விசுவாசத்தோடு நாம் அவருடனான ஒன்றிப்பில் நுழைகிறோம்.
   கடவுள் நம்மோடு பேசிக் கொண்டிருப்பதை எங்கு நாம் கேட்க முடியும்? திருமறைநூலே அடிப்படை, அதில் கடவுளின் வார்த்தை நமக்கு கேட்கிறது, கடவுளின் நண்பர்களாக நம் வாழ்வை அமைக்க ஊட்டம் அளிக்கிறது. முழு விவிலியமும் மனிதருக்கான கடவுளின் வெளிப்பாட்டை எடுத்துரைக்கிறது, முழு விவிலியமும் விசுவாசத்தைப் பற்றி பேசுவதுடன், கடவுளின் வெளிப்பாடு ஆண்டவர் இயேசுவில் முழுமை அடைவது வரை, தம்மில் நம்பிக்கை கொண்ட பல மனிதர்கள் வழியாக கடவுளின் மீட்புத் திட்டத்தை செயல்படுத்தி மனிதரைத் தமக்கு நெருக்கமாக்கி கொண்டதையும் பற்றி கூறி விசுவாசத்தை நமக்கு கற்றுத் தருகிறது. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தில் விசுவாசம் குறித்து அழகாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது: "நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி: கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை" (11:1).
   இவ்வாறு விசுவாச கண்களால் காணப்படாதவற்றையும் பார்க்க முடியும், நம்பிக்கையாளரின் விசுவாசம் அனைத்து நம்பிக்கைகளையும் மேலானதாக இருக்க முடியும், ஆபிரகாமைப் பற்றி பவுல் இவ்வாறு கூறுகிறார்: "அவர் எதிர்நோக்கினார்; தயங்காமல் நம்பினார்" (உரோமையர் 4:18). நான் எனது கவனத்தை ஆபிரகாம் பக்கம் திருப்ப விரும்புகிறேன். ஏனெனில் கடவுளில் நம்பிக்கை கொண்டவர்களில் முதன்மையானவராக குறிப்பிடப்படும் ஆபிரகாம், முதுபெரும் தலைவராகவும், முன்மாதிரியாகவும், விசுவாசிகள் அனைவரின் தந்தையாகவும் விளங்குகிறார். எபிரேயருக்கான திருமுகத்தில் இவ்வாறு கூறப்படுகிறது: "ஆபிரகாம் தாம் அழைக்கப்பட்டபோது கீழ்ப்படிந்து, உரிமைப்பேறாகப் பெறவிருந்த இடத்திற்குச் சென்றதும் நம்பிக்கையினால்தான். தாம் எங்கே போக வேண்டும் என்று தெரியாதிருந்தும் அவர் புறப்பட்டுச் சென்றார். வாக்களிக்கப்பட்ட நாட்டில் அவர் குடியேறி ஒர் அன்னியரைப் போல் வாழ்ந்தது நம்பிக்கையினாலேயே. அதே வாக்குறுதிக்கு உடன் உரிமையாளர்களான ஈசாக்குடனும், யாக்கோபுடனும் அவர் கூடாரங்களில் குடியிருந்தார். ஏனெனில், அவர் அசையாத அடித்தளமுள்ள ஒரு நகரை எதிர்நோக்கியிருந்தார். அதைத் திட்டமிட்டவரும் கட்டியவரும் கடவுளே" (11:8-10).
   எபிரேயருக்கான திருமுகத்தின் ஆசிரியர், தொடக்கநூலில் கூறப்படும் ஆபிரகாமின் அழைப்பை பற்றி இங்கு பேசுகிறார். கடவுள் அவரிடம் சொந்த நாட்டை விட்டுவிட்டு, அவர் காட்டும் நாட்டுக்கு செல்லுமாறு கூறுகிறார், "உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல்" (தொடக்கநூல் 12:1). இத்தகைய அழைப்புக்கு நாம் எவ்வாறு பதில் அளிப்போம்? உண்மையில், இருள் சூழ்ந்த வேளையில் கடவுள் எங்கு அழைத்து செல்வார் என்பது தெரியாமல் புறப்படுகிறார், இந்த பயணம் கீழ்ப்படிதலுக்கும் நம்பிக்கைக்கும் அழைப்பு விடுக்கிறது, விசுவாசம் இருந்தால் மட்டுமே இதை செயல்படுத்த முடியும். கடவுளின் வாக்குறுதி ஆபிரகாமின் வாழ்வுக்கு எதிர்காலத்தின் முழுமையைத் திறந்துவிடுகிறது: "உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; ... உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்" (தொடக்கநூல் 12:2,3). மறைநூலில் கூறப்படும் ஆசி முதன்மையாக வாழ்வின் கொடையாக விளங்குகிறது. மேலும், இது சுதந்திரத்தில் வாழ்வதற்கும் வளர்வதற்குமான இடத்தை உரிமையாக்கிக் கொள்ளவும், கடவுளுக்கு பயந்து, உடன்படிக்கைக்கு உண்மையான "குருத்துவ அரசாகவும், தூய மக்களினமாகவும்" (விடுதலைப்பயணம் 19:6) வாழும் சமூகத்தை கட்டி எழுப்பவும் தேவையான ஆசியாகவும் திகழ்கிறது.
   கடவுளின் திட்டத்தில், ஆபிரகாம் மக்களினங்களின் தந்தையாகவும் வாழ்விற்கான புதிய இடத்தில் நுழைபவராகவும் மாறுகிறார். விசுவாசமே ஆபிரகாமின் பயணத்தை வழிநடத்துகிறது. கடவுளின் வழிகள் அவருக்கு மறைபொருளாக இருந்தாலும், ஆபிரகாம் நம்பிக்கை கொண்டவராக இருந்ததால் ஆசி பெற்றவராக விளங்கினார். ஆபிரகாமைப் போன்றே நாமும், "ஆண்டவரே, நான் உம்மை நம்புகிறேன், என்னை உம்மிடம் அர்ப்பணிக்கிறேன்" என்று கூற வேண்டும். ஒவ்வொரு முறையும் நாம் திருமுழுக்கில் பங்கேற்கும் பொழுது, விசுவாசத்தின் மாபெரும் கொடையை ஒவ்வொரு நாளும் எப்படி வாழ்கிறோம் என்பதை நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். நம்பிக்கையாளரான ஆபிரகாம், நமக்கு விசுவாசத்தை கற்பிப்பதோடு, உலகில் ஓர் அந்நியராக, உண்மையான தாய்நாட்டை நமக்கு காட்டுகிறார். விசுவாசம் நம்மை உலகில் பயணிகள் ஆக்குகிறது, விண்ணக தாய்நாட்டுக்கான வழியில், உலகிலும் வரலாற்றிலும் நுழைக்கிறது. விசுவாசத்தை வாழ்வதற்காக எத்தகைய சோதனையையும் எதிர்கொள்ள கிறிஸ்தவர்கள் தயங்கக்கூடாது.
   பல சமூகங்களில் கடவுள் 'இல்லாதவராக' மாறிவிட்டார், அங்கு அனைத்துக்கும் மேலான அவரது இடத்தை பலவிதமான சிலைகள் பெற்றிருக்கின்றன. அறிவியலும் தொழில்நுட்பமும், தன்னிறைவும் எல்லாம் வல்லவரை மனிதருக்கு மாயத்தோற்றமாக காட்டுகின்றன. இருப்பினும் கடவுள் மீதான தாகம் இருப்பதையும், நற்செய்தி தொடர்வதையும் ஏராளமான ஆண், பெண் விசுவாசிகளில் காண்கிறோம். நம்பிக்கையாளர்களின் தந்தையாகிய ஆபிரகாமின் பாதச்சுவட்டைப் பின்பற்றி அவரது குழந்தைகள் பலர், கடவுளின் அழைப்புக்கு கீழ்ப்படிந்து, அவரது இருப்பை முழுமையாக நம்பி, அவரது ஆசியைப் பெற்று மற்றவர்களுக்கு ஆசியாக திகழ்கிறார்கள். ஆண்டவர் இயேசுவை தயங்காமல் பின்பற்றி, விசுவாசத்தால் ஆசிபெற்ற இந்த உலகில் நடைபோட நாம் அழைக்கப்பட்டுள்ளோம். சில நேரங்களில் இது கடினமான பயணமாக இருந்தாலும், இது வாழ்வுக்கு திறக்கிறது, விசுவாசத்தின் கண்களாலேயே அதிகமாக பார்க்கவும் மகிழவும் முடியும். "நான் நம்புகிறேன்" என்று கூறுவது, ஆபிரகாமைப் போன்று நம்மை விசுவாசத்தில் நிலைநிறுத்த வேண்டும். நமது அன்றாட வாழ்வின் உண்மைநிலை, வரலாற்றில் கடவுளின் இருப்பை உணர்த்துகிறது. இன்றளவும் தொடரும் அந்த உடனிருப்பு நமக்கு வாழ்வையும் மீட்பையும் கொணர்வதுடன், அவருடனான எதிர்கால நிறைவாழ்வுக்கும் நமக்கு வழி திறக்கிறது.

Sunday, January 20, 2013

ஜனவரி 20, 2013

கிறிஸ்தவ ஒன்றிப்போடு சேர்த்து அமைதிக்காகவும்
செபிக்க வேண்டிய தேவை இருக்கிறது - திருத்தந்தை

   வத்திக்கான் தூய பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கிறிஸ்தவ ஒன்றிப்பு குறித்த கருத்துகளை எடுத்துரைத்தார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   இன்றைய வழிபாடு கானாவூர் திருமணத்தைப் பற்றிய பகுதியை, அதை நேரில் பார்த்த சாட்சியான யோவான் எழுதியதில் இருந்து எடுத்துரைக்கிறது. கானாவூர் திருமணம் உண்மையில் அரும் அடையாளங்களின் தொடக்கம், பொது வாழ்வில் இயேசுவின் மாட்சியை வெளிப்படுத்தி, சீடர்களை அவரிடம் நம்பிக்கை கொள்ளச் செய்த முதல் அற்புதம். கலிலேயாவின் கானாவூர் திருமணத்தில் என்ன நடந்தது என்று சுருக்கமாக காண்போம். திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது என்பதை இயேசுவின் தாய் மரியா, தன் மகனிடம் சுட்டிக் காட்டுகிறார். தனது நேரம் இன்னும் வரவில்லை என்று அவர் பதில் அளித்தாலும், மரியாவின் கோரிக்கையைத் தொடர்ந்து, ஆறு கல்தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டது, தண்ணீர் அருமையான திராட்சை இரசமானது. இந்த அரும் அடையாளத்தால், இயேசு தன்னை புதிய நிலையான உடன்படிக்கையை நிறைவேற்ற வந்த மணமகன் மெசியாவாக வெளிப்படுத்துகிறார், இறைவாக்கினரின் வார்த்தைகளில் இவ்வாறு கூறலாம்: "மணமகன் மணப்பெண்ணில் மகிழ்வதுபோல் உன் கடவுள் உன்னில் மகிழ்வார்" (எசாயா 62:5). மேலும் திராட்சை இரசம் என்பது அன்பின் மகிழ்ச்சிக்கு அடையாளம், அதே வேளையில் மனித குலத்துடனான தனது திருமண உடன்படிக்கையை நிறைவேற்றுவதற்கான விலையாக இயேசு சிந்த இருந்த இரத்தத்தையும் குறித்துக் காட்டுகிறது.
   கிறிஸ்துவின் மணப்பெண்ணாக இருக்கும் திருச்சபையை, அதன் அருளால் அவர் தூயதாகவும் அழகானதாகவும் மாற்றுகிறார். மனிதர்களால் உருவாக்கப்படும் இந்த மணவாட்டி, எப்பொழுதும் தூய்மை பெற வேண்டிய தேவை இருக்கிறது. திருச்சபையின் முகத்தை உருவிழக்கச் செய்யும் மிகக் கடுமையான பாவங்களில் ஒன்றாக, அதன் காணக்கூடிய ஒன்றிப்புக்கு எதிராக வெற்றிகொள்ள முடியாத வகையில் கிறிஸ்தவர்களைப் பிரித்துள்ள வரலாற்று பிரிவினைகள் உள்ளன. இந்த வாரத்தில், ஜனவரி 18 முதல் 25 வரை கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான செபம் நடைபெறுகிறது. முழுமையான ஒன்றிப்பு ஏற்படுவதற்கான ஆவலைத் தட்டி எழுப்பி, அதற்காக தங்களை அர்ப்பணிப்பதற்கு அனைத்து எல்லா விசுவாசிகளையும், சமூகங்களையும் வரவேற்கும் தருணமாக இது இருக்கின்றது. இந்த பொருளில், ஒரு மாதத்துக்கு முன்பு ஆயிரக்கணக்கான ஐரோப்பிய இளையோருடனும், டைசே பொது ஒன்றிப்புக் குழுவுடனும் இந்த சதுக்கத்தில் நான் முக்கியத்துவம் வாய்ந்த திருவிழிப்பை சிறப்பித்தேன்: அந்த அருளின் தருணத்தில், ஒரே கிறிஸ்துவின் உருவில் இருப்பதன் அழகை நாங்கள் அனுபவித்தோம். சேர்ந்து செபிக்க ஒவ்வொருவரையும் நான் ஊக்குவிக்கிறேன், அதன் மூலம் "ஆண்டவர் நம்மிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்?" என்ற இவ்வாரத்தின் மையப்பொருளின் கருத்தை உணர்ந்து, அதை அடைய முடியும். இந்த செப நாட்களின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை, பிற சபைகள் மற்றும் பொது சமூகங்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் நான் புனித பவுல் பேராலயத்தில் மாலை ஆராதனை நடத்த இருக்கிறேன்.
   அன்பு நண்பர்களே, கிறிஸ்தவ ஒன்றிப்போடு சேர்த்து மீண்டும் அமைதிக்காகவும் செபிக்க வேண்டிய தேவை இருக்கிறது. ஏனெனில், எதிர்பாராத விதமாக பல இடங்களில் நடைபெறும் வெவ்வேறு மோதல்களில் ஆயுதமற்ற அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்படவும், அனைத்து வன்முறைகளும் முடிவுக்கு வரவும், சண்டைகளைப் புறக்கணித்து உரையாடலில் ஈடுபடுவதற்கானத் துணிவு பிறக்கவும் வேண்டியுள்ளது. இந்த இரண்டு கருத்துகளுக்காகவும், அருளின் இடைநிலையாளரான மரியாவின் பரிந்துரையை வேண்டுவோம்.

Wednesday, January 16, 2013

ஜனவரி 16, 2013

கடவுள் தமது திருமுகத்தை இயேசு
கிறிஸ்துவில் காண்பித்தார் - திருத்தந்தை

   வத்திகானின் பாப்பிறை ஆறாம் பவுல் மண்டபத் தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு புதன் பொது மறைபோதகம் வழங்கிய திருத்தந்தை 16ம் பென டிக்ட், இயேசு கிறிஸ்துவில் நிகழ்ந்த கடவுளின் வெளிப்பாட்டைக் குறித்து எடுத்துரைத்தார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் எடுத்துரைப்பது போன்று, 'இடைநிலையாளராகவும், வெளிப்பாடுகளின் நிறைவாகவும் விளங்கும் கிறிஸ்துவில்' கடவுளின் நெருக்கமான உண்மை வெளிப்பாடு நமக்காக ஒளிர்கிறது. இஸ்ரயேல் மக்களின் வரலாற்றின் நெடியப் பயணத்தில், கடவுள் தம்மை அறியச் செய்ததையும், தம்மை வெளிப்படுத்தியதையும் காண்கிறோம். இந்த பணிக்காக மோசே, நீதித்தலைவர்கள், இறைவாக்கினர்கள் மூலம் தமது விருப்பங்களை மக்களுக்கு வெளிப்படுத்தி, உடன்படிக்கையில் நம்பிக்கை உள்ளவர்களாக இருப்பது மற்றும் இறை வாக்குறுதிகளின் தெளிவான முழுமையை எதிர்பார்த்து வாழ்வது ஆகியவற்றின் தேவையை நமக்கு நினைவூட்டுகிறார்.
   இந்த வாக்குறுதிகளின் நிறைவை கிறிஸ்து பிறப்பில் நாம் தியானிக்கிறோம்: கடவுளின் வெளிப்பாடு அதன் உச்சத்தையும் முழுமையையும் அடைகிறது. நாசரேத்தூர் இயேசுவில் கடவுள் தம் மக்களை சந்தித்தார், அனைத்து எதிர்பார்ப்புகளுக்கும் அப்பாற்பட்ட வகையில் அவர் மனிதகுளத்தை சந்தித்தார்: அவர் தம் ஒரே பேறான மகனை மனித உருவில் அனுப்பினார். இயேசு நமக்கு கடவுளைப் பற்றி கூறுகிறார், அவர் தந்தையைப் பற்றி பேசுவது மட்டுமின்றி, கடவுளின் வெளிப்பாடாகவும் இருக்கிறார். யோவான் தனது நற்செய்தியின் முன்னுரையில் இவ்வாறு எழுதுகிறார்: "கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை; தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள்தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார்" (யோவான் 1:18).
   ஒருமுறை பிலிப்பு, இயேசுவிடம், "ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்" என்றார் (யோவான் 14:8). பிலிப்பு மிக இயல்பாக நாம் கேட்க விரும்புவதை கேட்கிறார்: அவர் தந்தையின் முகத்தை காட்டுமாறு கேட்கிறார். அதற்கு ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: "என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும்" (யோவான் 14:9); இயேசுவின் பதில், பிலிப்புக்கு மட்டுமின்றி நமக்கும் கிறிஸ்தியல் விசுவாசத்தின் மையத்தை அறிமுகம் செய்கிறது. இந்த கருத்து புதிய ஏற்பாட்டின் முழுமையை எடுத்துரைக்கிறது: கடவுளைக் காண முடியும், அவர் தமது திருமுகத்தை இயேசு கிறிஸ்துவில் காண்பித்தார்.
   கடவுளின் திருமுகத்தைக் காணும் ஆவல் பற்றிய மையப்பொருள் பழைய ஏற்பாடு முழுவதும் காணப்படுகிறது. கடவுளின் இடத்தை வேறு எந்தப் பொருளும் பிடித்துவிடக்கூடாது என்பதற்காகவே, யூதர்களிடையே உருவங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. கடவுள் அனைத்திலும் பெரியவராக இருந்தாலும், அவர் நம் பக்கம் திரும்பி நமக்கு செவிசாய்க்கிறார், உடன்படிக்கைகளை ஏற்படுத்துகிறார், அவர் அன்புக்கு உரியவர். மனிதகுலத்துடனான கடவுளின் உறவாக மீட்பின் வரலாறு இருக்கிறது, இந்த உறவில் அவர் தம்மை சிறிது சிறிதாக மனிதருக்கு வெளிப்படுத்துகிறார், தமது திருமுகத்தையும் அறியச் செய்கிறார். ஜனவரி முதல் நாளில் நாம் அழகான ஆசீரைக் கேட்கிறோம்: "ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!" (எண்ணிக்கை 6:24-26).
   உண்மை இறைவனும் உண்மை மனிதருமான இயேசு, நிலையான புதிய உடன்படிக்கையின் இடைநிலையாளராக இருக்கிறார். "கடவுள் ஒருவரே. கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் ஒருவரே. அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர்" (1 திமோத்தேயு 2:5). அவரில் நாம் தந்தையைக் கண்டு சந்திக்கிறோம், அவரில் நாம் கடவுளை "அப்பா, தந்தையே" என்று இறைஞ்சுகிறோம், அவரிலேயே நமக்கு மீட்பு கொடையாக வழங்கப்பட்டிருக்கிறது. உண்மையாகவே கடவுளை அறியவும், அவரது திருமுகத்தைக் காணவும் ஒவ்வொரு மனிதரும், நாத்திகரும் கூட  ஆசை கொண்டுள்ளார். நாம் அறிவார்ந்த முறையில் அவர் யார் என்பதையும், அவர் நமக்கு யார் என்பதையும் காண விரும்புகிறோம். இந்த ஆவல் கிறிஸ்துவைப் பின்பற்றுவதன் மூலம் மட்டுமே நிறைவேறும், அதன் மூலம் கடவுளை நண்பராகக் கண்டு, கிறிஸ்துவின் திருமுகத்தில் அவரது திருமுகத்தைக் காண முடியும். நமது தேவைகளின்போதோ, நமக்கு நேரம் கிடைக்கும் பொழுதோ மட்டுமல்ல, நமது வாழ்வு முழுவதும் அவரைப் பின்பற்றுவது அவசியம்.
   நமது இருப்பு முழுவதும் அவரை சந்திப்பதையும், அவரை அன்பு செய்வதையும் நோக்கி திருப்பப்பட வேண்டும்; அடுத்திருப்போரை அன்பு செய்வதும் மைய இடம் பெறுகிறது, திருச்சிலுவையின் ஒளியில் தோன்றும் அன்பு, ஏழைகள், பலவீனர்கள், துன்புருவோரில் நாம் இயேசுவின் முகத்தைக் கண்டுணரச் செய்கிறது. அவரது வார்த்தையைக் கேட்பதிலும், சிறப்பாக நற்கருணை மறைபொருளிலும் இயேசுவின் உண்மையான முகம் நமக்கு பழக்கமானால் மட்டுமே இது முடியும். லூக்கா நற்செய்தியில் இரண்டு எம்மாவு சீடர்கள், அப்பத்தைப் பிட்டபோது இயேசுவைக் கண்டுணர்ந்த நிகழ்வு முக்கியமானது. நமக்கு கடவுளின் திருமுகத்தைக் காணப் பயிலும் மாபெரும் பள்ளிக்கூடமாக நற்கருணை விளங்குகிறது, அதன் மூலம் நாம் அவருடன் நெருங்கிய உறவில் நுழையும் அதே நேரத்தில், அவரது திருமுக ஒளியால் நம்மை நிரப்பும் வரலாற்றின் இறுதி தருணத்தை நோக்கி நம் பார்வையைத் திருப்பக் கற்றுக்கொள்கிறோம். இறையரசின் வருகைக்கான மகிழ்ச்சிநிறை எதிர்பார்ப்புடன், இந்த முழுமையை நோக்கி இவ்வுலகில் நாம் நடை பயில்வோம்.
   இவ்வாறு புதன் பொதுமறைபோதகத்தை நிறைவு செய்தபின், வெள்ளிக்கிழமை தொடங்க உள்ள ‘கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான செப வாரம்’ பற்றி குறிப்பிட்ட திருத்தந்தை, ஆண்டவரின் சீடர்கள் அனைவரிடையேயும் ஒன்றிப்பு எனும் மிகப்பெரும் கொடையை இறைவன் வழங்க செபிக்குமாறு அழைப்பு விடுத்தார்.

Sunday, January 13, 2013

ஜனவரி 13, 2013

கடவுளின் குழந்தையாக வாழ்வதன் அழகை
மீண்டும் கண்டறிய வேண்டும் - திருத்தந்தை

   ஆண்டவரின் திருமுழுக்கு விழாவை சிறப்பிக்கும் இன்று, வத்திகானில் உள்ள சிஸ்டைன் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் 20 குழந்தைகளுக்கு திருமுழுக்கு வழங்கினார். அதன் பிறகு, வத்திக்கான் சதுக்கத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு அவர் பின்வருமாறு மூவேளை செப உரை வழங்கினார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   திருக்காட்சிக்கு பின் வரும் இஞ்ஞாயிறன்று கிறிஸ்து பிறப்பு காலம் முடிவடைகிறது: ஒளியின் காலம், மனிதகுலத்தின் மீது புதிய சூரியனாக தோன்றியிருக்கும் கிறிஸ்துவின் ஒளி, தீமை மற்றும் அறியாமையின் இருளை அகற்றுகிறது. இன்று நாம் இயேசுவின் திருமுழுக்கு விழாவைக் கொண்டாடுகிறோம்: பிறப்பின் மறைபொருளில் கன்னி மரியாவின் மகனாக, குழந்தையாக சிந்தித்தவரை, ஒரு வளர்ந்த இளைஞராக யோர்தான் நதியில் காண்கிறோம். கிழக்கத்திய மரபு சான்று பகர்வது போன்று, நீரும் பிரபஞ்சம் முழுவதுமே இவ்வாறு புனிதம் அடைந்தது.
   ஆனால் பாவ நிழல் இல்லாத இயேசு, ஏன் யோவானிடம் திருமுழுக்கு பெற வேண்டும்? மெசியாவின் வருகைக்காக தயாரிக்க விரும்பிய பெரும்பாலான மக்களோடு இணைந்து, தபம் மற்றும் மனமாற்றத்தின் அடையாளத்தை நிறைவேற்ற விரும்பினார். இந்த செயலே இயேசுவின் பொது வாழ்வைக் குறிக்கிறது, உன்னத கடவுளிடம் இருந்து இறங்கி வந்த மனுவுருவான நிகழ்வுடன் பொருந்துச் செல்கிறது.
   கடவுளின் இந்த கீழ்நோக்கிய இயக்கத்தை ஒரு வார்த்தையில் சுருக்கி கூறலாம்: அன்பு, அது கடவுளின் பெயர். திருத்தூதர் யோவான் இவ்வாறு எழுதுகிறார்: "நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது. அவர் நம்மீது அன்புகொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார்" (1 யோவான் 4:9-10). எனவேதான், இயேசுவின் பொது வாழ்வில் முதல் செயலாக, "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்" (யோவான் 1:29) என்ற யோவானிடம் திருமுழுக்கு பெற்ற நிகழ்வு உள்ளது.
   "இயேசு திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது வானம் திறந்தது. தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்கியது. அப்பொழுது, 'என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன்' என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது" என்று நற்செய்தியாளர் லூக்கா (3:21-22) குறிப்பிடுகிறார்.
   கடவுளின் மகனான இந்த இயேசு தந்தையின் அன்பு திருவுளத்துக்கு முழுமையாக உட்படுத்தினார். இப்போது இறங்கி வந்து அருட்பொழிவு செய்த அதே தூய ஆவியின் வல்லமையால், இந்த இயேசு சிலுவையில் இறந்து உயிர்த்தெழுந்தார். இந்த இயேசு, கடவுளின் மகனாக அன்பில் வாழ விரும்பிய புதிய மனிதர்; உலகின் தீய முகத்தில் தாழ்ச்சி மற்றும் பொறுப்புணர்வின் வழியைத் தேர்ந்தெடுத்து, தனது சொந்த வாழ்வை உண்மைக்காகவும் நீதிக்காகவும் கையளித்தார்.
   இப்படி வாழ்வதுதான் கிறிஸ்தவ வாழ்வு, இத்தகைய வாழ்வு மறுபிறப்பை உள்ளடக்கியது: மேலிருந்து, கடவுளிடம் இருந்து, அருளால் பிறப்பது. இந்த மறுபிறப்பே திருமுழுக்கு, மனிதர் புதிய வாழ்வை உருவாக்குவதற்காக கிறிஸ்துவால் இது திருச்சபைக்கு வழங்கப்பட்டது. புனித ஹிப்போலிட்டசின் பழமை வாய்ந்த எழுத்துக்கள் இவ்வாறு கூறுகின்றன: "இந்த மறுபிறப்பின் முழுக்கில் விசுவாசத்தோடு நுழைபவர், அலகையை விடுத்து கிறிஸ்துவின் பக்கத்தில் இருக்கிறார், பகைவனை மறுத்து கிறிஸ்துவை கடவுளாக கண்டு கொள்கிறார், அடிமைத்தளையை களைந்து, தத்துப் பிள்ளைக்குரிய உடையை அணிந்து கொள்கிறார்."
   பாரம்பரிய முறைப்படி, இன்று காலை கடந்த மூன்று, நான்கு மாதங்களுக்குள் பிறந்த நிறைய குழந்தைகளுக்கு திருமுழுக்கு வழங்கிய மகிழ்ச்சியை அனுபவித்தேன். புதிதாக பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் இந்த நேரத்தில் எனது செபத்தையும் ஆசீரையும் உரித்தாக்குகிறேன். சிறப்பாக ஒவ்வொருவரும் அவரது சொந்த நிலை வாழ்வுக்கு வழியைத் திறக்கும் ஆன்மீக மறுபிறப்புக்கான திருமுழுக்கை நினைவுகூர ஊக்குவிக்கிறேன். ஒவ்வொரு கிறிஸ்தவரும், இந்த விசுவாச ஆண்டில் மேலிருந்தும், கடவுளின் அன்பில் இருந்தும் பிறப்பது மற்றும் கடவுளின் குழந்தையாக வாழ்வதன் அழகை மீண்டும் கண்டறிய வேண்டும்.

Wednesday, January 9, 2013

ஜனவரி 9, 2013

இயேசுவில், கடவுள் நம்மைப் போன்று
உருவெடுத்து மனிதரானார் - திருத்தந்தை

   வத்திகானின் பாப்பிறை ஆறாம் பவுல் மண்ட பத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு புதன் பொது மறைபோதகம் வழங்கிய திருத்தந்தை 16ம் பென டிக்ட், இயேசுவில் கடவுள் மனுவுரு எடுத்த மறை யுண்மை குறித்து எடுத்துரைத்தார்.
   விண்ணகத் தந்தையின் தத்துப்பிள்ளைகளாக நாம் மாறும் வண்ணம், நம் மீட்புக்காக மனிதனாகப் பிறந்த இறைமகனின் மனுவுரு எனும் மறையுண் மையை கிறிஸ்து பிறப்பு பெருவிழாக் காலத்தில் நாம் கொண்டாடுகிறோம். இயேசுவில், கடவுள் உருவெடுத்தார்; அவர் நம்மைப் போன்று மனிதரானார். இதன் மூலம் அவரோடு முழுமையாக ஒன்றிக்குமாறு, விண்ணகத்தின் கதவுகளை நமக்கு திறந்துவிட்டார். பெத்லகேம் குழந்தையில் இறைவன் நமக்கு மிகப்பெரும் கொடை ஒன்றை வழங்கினார். ஆம். தன்னையே கொடையாகத் தந்தார். நமக்காக இறைவன் நம்மைப்போல் ஒருவரானார். நம் மனித வாழ்வை முழுமையாகப் பகிர்ந்துகொண்டு அதற்குக் கைமாறாக, தன் தெய்வீக வாழ்வில் நமக்குப் பங்களித்தார். இந்த உன்னத மறையுண்மை, கடவுள் நம் மீது கொண்டிருக்கும் அன்பின் ஆழத்தையும் உண்மைத்தன்மையையும் வெளிப்படுத்தி நிற்கிறது.
   இறைவார்த்தையின் உண்மைகளை ஏற்று நம் அன்றாட வாழ்வை மேம்படுத்தும் விசுவாசத்தில் நாம் இறைவனுக்குப் பதிலுரைக்க இம்மறையுண்மை அழைப்பு விடுக்கிறது. இறைவன் மனுவுருவெடுத்த மறையுண்மை குறித்து நாம் ஆழமாக சிந்திக்கும்போது, கிறிஸ்துவில் நாம் புதிய ஆதாமைப் பார்க்கிறோம். இறைமகன், ஒரு முழுநிறைவான மனிதனாக புதுப்படைப்பைத் தொடங்கி வைக்கிறார். இறைச் சாயலை நமக்கு மீண்டும் பெற்றுத்தருவதோடு, நம் அழைப்பையும் மேன்மைமிகு மனித மாண்பையும் நமக்கு வெளிப்படுத்துகிறார். மனுவுரு எனும் மறையுண்மை குறித்து இந்த கிறிஸ்துமஸ் காலத்தின் இறுதி நாட்களில் ஆழமாக சிந்தித்து வரும் நாம், இறைவனின் மகிமை எனும் ஒளியில் முழுமையான மகிழ்வைக் கண்டு, மனிதனாக உருவெடுத்த இறைமகனின் திருவுருவுக்கு ஒத்த வகையில் மேலும் சிறப்பான விதத்தில் மாறுவோமாக!
   இவ்வாறு தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவ ருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Sunday, January 6, 2013

ஜனவரி 6, 2013

கிறிஸ்துவின் மிகத் ஒளி தெளிவானதாகவும்
உறுதியானதாகவும் இருக்கிறது - திருத்தந்தை

   வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு இஞ்ஞாயிறு நண்பகலில் மூவேளை செப உரை வழங்கியத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், திருக்காட்சித் திருவிழாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். 
அன்பு சகோதர சகோதரிகளே,
   இன்று நாம், மக்களுக்காக மனித உடலெடுத்த ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழாவை சிறப்பிக் கிறோம்; கிழக்கத்திய திருச்சபைகள் பலவும் இதே நாளில் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவை சிறப்பிக் கின்றன. மரியா, யோசேப்பு, இடையர்கள் ஆகியோ ரின் விசுவாசத்தை கிறிஸ்துமஸ் காட்டும் அதே வேளை, திருக்காட்சி பெருவிழா கீழ்த்திசை ஞானிகளின் விசுவாசத்தை காட்டுகிறது.
   இயேசு கிறிஸ்து, அனைத்து மக்களின் பாதையை வழிநடத்தும் உலகின் ஒளி என்பதை, மூன்று கீழ்த்திசை ஞானிகள் குழந்தை இயேசுவைப் பார்த்த நிகழ்வை நாம் சிறப்பிக்கும் திருக்காட்சித் திருவிழா நமக்குக் காட்டுகின்றது. கீழ்த்திசை ஞானிகள், கடவுளின் அமைதி, நீதி, உண்மை மற்றும் சுதந்திரத்தின் ஆட்சியைத் தேடும் பாதைகளாகிய மக்கள், கலாச்சாரங்கள், பண்பாடுகள், மதங்கள் ஆகியவற்றை குறித்து நிற்கின்றனர். விண்மீனால் வழிநடத்தப்பட்டு பெத்லகேம் குடிலை நோக்கித் தங்களது பயணத்தைத் தொடர்ந்த இந்த மூன்று ஞானிகள், இயேசு கிறிஸ்துவை நோக்கிய நாடுகளின் திருப்பயணத்தின், மனித வரலாறு முழுவதும் நடைபெற்றுக் கொண் டிருக்கும் பெரிய ஊர்வலத்தின் தொடக்கமாக இருக்கிறார்கள்.
   கன்னி மரியா, அவரது கணவரோடு இணைந்து இஸ்ரயேலின் கிளையையும், இறைவாக்கினர்கள் மெசியா குறித்து முன்னுரைத்த கூற்றையும் குறித்து நிற்கிறார். காலம் நிறைவேறியபோது, இஸ்ரயேல் மக்களின் விசுவாசம் மரியாவில் முழுமை அடைந்தது. மரியாவின் விசுவாசம், புதிய உடன்படிக்கையின் மக்களாகிய, திருச் சபையின் விசுவாசத்தின் முதல் கனியாகவும், எடுத்துக்காட்டாகவும் இருக்கின்றது. புதிய உடன்படிக்கையின் மக்கள் தொடக்கத்திலிருந்தே உலகளாவியத் தன்மையைக் கொண்டிருந்தனர், இதனை இன்று கீழ்த்திசை ஞானிகளின் உருவத்தில் பார்க்கிறோம். இந்த ஞானிகள் விண்மீனின் ஒளி மற்றும் மறைநூல்களின் குறிப்புகளைப் பின் தொடர்ந்து பெத்லகேம் சென்றவர்கள்.
   மரியாவின் விசுவாசத்தை ஆபிரகாமின் நம்பிக்கையோடு ஒப்பிடலாம்: இது வாக்களிக்கப்பட்ட கடவுளின் திட்டத்தில் ஒரு புதிய தொடக்கம், அது இப்பொழுது இயேசு கிறிஸ்துவில் நிறைவைக் காண்கிறது. கிறிஸ்துவின் ஒளி மிகத் தெளிவான தாகவும் உறுதியானதாகவும் இருக்கின்றது, இது பிரபஞ்சத்தின் மொழியை உரு வாக்குவதுடன் மறைநூல்களை தெளிவுபடுத்துகிறது. இந்த ஞானிகளைப் போன்று உண்மைக்குத் திறந்தவர்களாய் இருப்பவர்கள் அனைவரும், அதைக் கண்டறிந்து உலகின் மீட்பரைத் தியானிப்பதற்கு இணைய முடியும். புனித பெரிய லியோ கூறுவது போன்று, "இந்த பிரபஞ்சத்தைப் படைத்தவரை மக்கள் அனைவரும் ஆராதிப்பார்க ளாக; யூதேயாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் கடவுளை அறிந்துகொள்வதாக!"

Wednesday, January 2, 2013

ஜனவரி 2, 2013

நம் மீட்புக்காக மனுவுரு எடுத்த இயேசுவை
ம் இதயங்களில் வரவேற்போம் - திருத்தந்தை

   திருத்தந்தை 16ம் பெனடிக்ட், 2013ஆம் ஆண்டில் தன் முதல் புதன் பொது மறைபோதகத்தை வத்திக்கானில் உள்ள பாப்பிறை ஆறாம் பவுல் மண்டபத்தில் உள்ளூர் நேரம் காலை 10.30 மணிக்கு வழங்கினார்.
   நம் மீட்புக்காக மனுவுரு எடுத்த புதிய ஆதாமாம் இயேசுவை, நமது இதயங்களில் வரவேற்போம். இவ் வுலகில் நம் வாழ்வை உருமாற்ற வல்ல நம்பிக் கையைக் கொணரும் இயேசுவின் பிறப்பைச் சூழ்ந் திருக்கும் ஒளி குறித்து இந்தக் கிறிஸ்து பிறப்புக் காலத்தில் நாம் மகிழ்கிறோம். நம் மீட்புக்காக மனிதனாகப் பிறப்பெடுத்த இறைவனின் ஒரே மகனாம் இயேசுவின் தனித்தன்மை குறித்து ஆழ்ந்து சிந்திக்க ஒவ்வோர் ஆண்டும் இச்சிறப்புக் கொண் டாட்டங்கள் நம்மை அழைத்துச் செல்கின்றன. கன்னி மரியாவிடம் பிறந்த அவரே உண்மையில் இம்மானுவேல், 'கடவுள் நம்மோடு'. இறைவன் மனுவுரு எடுத்ததை நம் விசுவாச அறிக்கையில் நாம் வெளியிடும்போது நாம் சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்.
   அன்னை மரியாவின் சுதந்திர விருப்ப ஒத்துழைப்புடன் தூய மூவொரு கடவுள் ஆற்றிய பணியே 'மனுவுருவெடுத்தல்' என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். மனுவுரு வெடுத்தல் என்பது புதிய படைப்பின் தொடக்கம். தூய ஆவியின் வல்லமையால் கருவில் உருவான இயேசு கிறிஸ்துவே புதிய ஆதாம். அவரே, திருமுழுக்குத் தண்ணீரின் வழியாக மனிதகுலத்திற்கு புதுப்பிறப்பை வழங்குகிறார். இதன் வழியாக நாம் வானகத் தந்தையின் புதல்வர், புதல்வியராக மாறுகிறோம். புதிய படைப்பின் விடியலுக்கு மகிழ்வுநிறைச் சாட்சியாக விளங்கவும், நம் பலவீனங்களை உருமாற்றி பலத்தை வழங்கும் இறைவல்லமையை நம்மில் அனுமதிக்கவும் உதவும் பொருட்டு, இந்தப் புனித காலத்தில் நம் மீட்பரை இதயங்களில் வரவேற்போம்.
   இவ்வாறு தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவ ருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Tuesday, January 1, 2013

ஜனவரி 1, 2013

செபம் மற்றும் மன்னிப்பின் வழி, தீமையை நன்மையால் வெல்வோரே அமைதி ஏற்படுத்துவோர் - திருத்தந்தை

   திருச்சபை உலக அமைதி நாளாக சிறப்பிக்கும் புத்தாண்டு முதல் நாள் காலை திருப்பலியை நிறைவு செய்த பின், புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகள் மற்றும் உல்லாசப் பயணிகளுக்கு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத் தந்தை 16ம் பெனடிக்ட் பின்வருமாறு கூறினார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   "ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண் டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!" என்ற விவிலிய இறைஆசீரோடு 2013ம் ஆண்டின் முதல் நாளில் உங்களை வாழ்த்த ஆவல் கொள்கிறேன். ஒளியும் வெப்பமும் எவ்வாறு உலகிற்கு ஆசீராக உள்ளதோ அவ்வாறே இறைவனின் ஒளியும் மனித குலத்திற்கு உள்ளது. முதலில் அன்னை மரியாவுக்கும், யோசேப்புக்கும், சில இடையர்களுக்கும் பெத்லகேமில் தோன்றிய இந்த ஒளி, பின்னர், சூரியன் உதித்து மேலெழும்பி வருவதுபோல் உலகம் முழுவதும் பரவியது.
   புனித பூமியில் மட்டுமல்ல, உலகம் முழுமைக்கும் அமைதியின் நற்செய்தியை இயேசு வழங்கினார். "உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவ ருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!" என்று அன்று வானதூதர்கள் பாடியது இன்றும் பேச்சுவார்த்தைகளை கட்டியெழுப்பவும், புரிந்துகொள்ளுதலையும் ஒப்புர வையும் ஊக்குவிக்கவும் தேவைப்படும் அன்பின் நடவடிக்கைகளுக்கான நாதமாக உள்ளது. இதனாலேயே, இயேசு பிறந்த எட்டு நாட்களுக்குப் பின் நாம் உலக அமைதி தினத்தைச் சிறப்பிக்கின்றோம். குழந்தை இயேசு இவ்வுலகம் தர முடியாத அமைதி யைத் தர வந்தார். அவரே பகைமைகளின் சுவரைத் தகர்த்தெறிந்தார்.
   அவரே தன் மலைப்பொழிவில், "அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெ னில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்" என அறிவித்தார். அமைதி ஏற்படுத்துவோர் யார்? தீமையை நன்மையால் வெல்வோர், உண்மையின் சக்தி யுடனும், செபம் மற்றும் மன்னிப்பு எனும் ஆயதங்களுடனும், நேர்மையான செயல் பாடுகளின் வழியாகவும், அறிவியல் ஆய்வுகள் மூலமான வாழ்வின் பணிகளுடனும், கருணை நடவடிக்கைகள் மூலமும் செயலாற்றுவோரே அவர்கள். அமைதியான வழியில் ஆரவாரமின்றி மனித குல முன்னேற்றத்திற்கு பணியாற்றுவோரே அவர்கள்.
   இந்த புதிய ஆண்டு அனைத்து மக்களுக்கும் குடும்பங்களுக்கும் நாடுகளுக்கும் உலகம் முழுமைக்கும் அமைதியின் பாதையாக இருக்க உதவுமாறு அன்னை மரியா வின் பரிந்துரையை வேண்டுகிறேன்.
   இவ்வாறு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.