Wednesday, January 16, 2013

ஜனவரி 16, 2013

கடவுள் தமது திருமுகத்தை இயேசு
கிறிஸ்துவில் காண்பித்தார் - திருத்தந்தை

   வத்திகானின் பாப்பிறை ஆறாம் பவுல் மண்டபத் தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு புதன் பொது மறைபோதகம் வழங்கிய திருத்தந்தை 16ம் பென டிக்ட், இயேசு கிறிஸ்துவில் நிகழ்ந்த கடவுளின் வெளிப்பாட்டைக் குறித்து எடுத்துரைத்தார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் எடுத்துரைப்பது போன்று, 'இடைநிலையாளராகவும், வெளிப்பாடுகளின் நிறைவாகவும் விளங்கும் கிறிஸ்துவில்' கடவுளின் நெருக்கமான உண்மை வெளிப்பாடு நமக்காக ஒளிர்கிறது. இஸ்ரயேல் மக்களின் வரலாற்றின் நெடியப் பயணத்தில், கடவுள் தம்மை அறியச் செய்ததையும், தம்மை வெளிப்படுத்தியதையும் காண்கிறோம். இந்த பணிக்காக மோசே, நீதித்தலைவர்கள், இறைவாக்கினர்கள் மூலம் தமது விருப்பங்களை மக்களுக்கு வெளிப்படுத்தி, உடன்படிக்கையில் நம்பிக்கை உள்ளவர்களாக இருப்பது மற்றும் இறை வாக்குறுதிகளின் தெளிவான முழுமையை எதிர்பார்த்து வாழ்வது ஆகியவற்றின் தேவையை நமக்கு நினைவூட்டுகிறார்.
   இந்த வாக்குறுதிகளின் நிறைவை கிறிஸ்து பிறப்பில் நாம் தியானிக்கிறோம்: கடவுளின் வெளிப்பாடு அதன் உச்சத்தையும் முழுமையையும் அடைகிறது. நாசரேத்தூர் இயேசுவில் கடவுள் தம் மக்களை சந்தித்தார், அனைத்து எதிர்பார்ப்புகளுக்கும் அப்பாற்பட்ட வகையில் அவர் மனிதகுளத்தை சந்தித்தார்: அவர் தம் ஒரே பேறான மகனை மனித உருவில் அனுப்பினார். இயேசு நமக்கு கடவுளைப் பற்றி கூறுகிறார், அவர் தந்தையைப் பற்றி பேசுவது மட்டுமின்றி, கடவுளின் வெளிப்பாடாகவும் இருக்கிறார். யோவான் தனது நற்செய்தியின் முன்னுரையில் இவ்வாறு எழுதுகிறார்: "கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை; தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள்தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார்" (யோவான் 1:18).
   ஒருமுறை பிலிப்பு, இயேசுவிடம், "ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்" என்றார் (யோவான் 14:8). பிலிப்பு மிக இயல்பாக நாம் கேட்க விரும்புவதை கேட்கிறார்: அவர் தந்தையின் முகத்தை காட்டுமாறு கேட்கிறார். அதற்கு ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: "என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும்" (யோவான் 14:9); இயேசுவின் பதில், பிலிப்புக்கு மட்டுமின்றி நமக்கும் கிறிஸ்தியல் விசுவாசத்தின் மையத்தை அறிமுகம் செய்கிறது. இந்த கருத்து புதிய ஏற்பாட்டின் முழுமையை எடுத்துரைக்கிறது: கடவுளைக் காண முடியும், அவர் தமது திருமுகத்தை இயேசு கிறிஸ்துவில் காண்பித்தார்.
   கடவுளின் திருமுகத்தைக் காணும் ஆவல் பற்றிய மையப்பொருள் பழைய ஏற்பாடு முழுவதும் காணப்படுகிறது. கடவுளின் இடத்தை வேறு எந்தப் பொருளும் பிடித்துவிடக்கூடாது என்பதற்காகவே, யூதர்களிடையே உருவங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. கடவுள் அனைத்திலும் பெரியவராக இருந்தாலும், அவர் நம் பக்கம் திரும்பி நமக்கு செவிசாய்க்கிறார், உடன்படிக்கைகளை ஏற்படுத்துகிறார், அவர் அன்புக்கு உரியவர். மனிதகுலத்துடனான கடவுளின் உறவாக மீட்பின் வரலாறு இருக்கிறது, இந்த உறவில் அவர் தம்மை சிறிது சிறிதாக மனிதருக்கு வெளிப்படுத்துகிறார், தமது திருமுகத்தையும் அறியச் செய்கிறார். ஜனவரி முதல் நாளில் நாம் அழகான ஆசீரைக் கேட்கிறோம்: "ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!" (எண்ணிக்கை 6:24-26).
   உண்மை இறைவனும் உண்மை மனிதருமான இயேசு, நிலையான புதிய உடன்படிக்கையின் இடைநிலையாளராக இருக்கிறார். "கடவுள் ஒருவரே. கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் ஒருவரே. அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர்" (1 திமோத்தேயு 2:5). அவரில் நாம் தந்தையைக் கண்டு சந்திக்கிறோம், அவரில் நாம் கடவுளை "அப்பா, தந்தையே" என்று இறைஞ்சுகிறோம், அவரிலேயே நமக்கு மீட்பு கொடையாக வழங்கப்பட்டிருக்கிறது. உண்மையாகவே கடவுளை அறியவும், அவரது திருமுகத்தைக் காணவும் ஒவ்வொரு மனிதரும், நாத்திகரும் கூட  ஆசை கொண்டுள்ளார். நாம் அறிவார்ந்த முறையில் அவர் யார் என்பதையும், அவர் நமக்கு யார் என்பதையும் காண விரும்புகிறோம். இந்த ஆவல் கிறிஸ்துவைப் பின்பற்றுவதன் மூலம் மட்டுமே நிறைவேறும், அதன் மூலம் கடவுளை நண்பராகக் கண்டு, கிறிஸ்துவின் திருமுகத்தில் அவரது திருமுகத்தைக் காண முடியும். நமது தேவைகளின்போதோ, நமக்கு நேரம் கிடைக்கும் பொழுதோ மட்டுமல்ல, நமது வாழ்வு முழுவதும் அவரைப் பின்பற்றுவது அவசியம்.
   நமது இருப்பு முழுவதும் அவரை சந்திப்பதையும், அவரை அன்பு செய்வதையும் நோக்கி திருப்பப்பட வேண்டும்; அடுத்திருப்போரை அன்பு செய்வதும் மைய இடம் பெறுகிறது, திருச்சிலுவையின் ஒளியில் தோன்றும் அன்பு, ஏழைகள், பலவீனர்கள், துன்புருவோரில் நாம் இயேசுவின் முகத்தைக் கண்டுணரச் செய்கிறது. அவரது வார்த்தையைக் கேட்பதிலும், சிறப்பாக நற்கருணை மறைபொருளிலும் இயேசுவின் உண்மையான முகம் நமக்கு பழக்கமானால் மட்டுமே இது முடியும். லூக்கா நற்செய்தியில் இரண்டு எம்மாவு சீடர்கள், அப்பத்தைப் பிட்டபோது இயேசுவைக் கண்டுணர்ந்த நிகழ்வு முக்கியமானது. நமக்கு கடவுளின் திருமுகத்தைக் காணப் பயிலும் மாபெரும் பள்ளிக்கூடமாக நற்கருணை விளங்குகிறது, அதன் மூலம் நாம் அவருடன் நெருங்கிய உறவில் நுழையும் அதே நேரத்தில், அவரது திருமுக ஒளியால் நம்மை நிரப்பும் வரலாற்றின் இறுதி தருணத்தை நோக்கி நம் பார்வையைத் திருப்பக் கற்றுக்கொள்கிறோம். இறையரசின் வருகைக்கான மகிழ்ச்சிநிறை எதிர்பார்ப்புடன், இந்த முழுமையை நோக்கி இவ்வுலகில் நாம் நடை பயில்வோம்.
   இவ்வாறு புதன் பொதுமறைபோதகத்தை நிறைவு செய்தபின், வெள்ளிக்கிழமை தொடங்க உள்ள ‘கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான செப வாரம்’ பற்றி குறிப்பிட்ட திருத்தந்தை, ஆண்டவரின் சீடர்கள் அனைவரிடையேயும் ஒன்றிப்பு எனும் மிகப்பெரும் கொடையை இறைவன் வழங்க செபிக்குமாறு அழைப்பு விடுத்தார்.