Friday, June 29, 2012

ஜூன் 29, 2012

கிறிஸ்துவைப் பின்பற்றியதால் பேதுருவும் பவுலும் இணை பிரியாதோராய் மாறினார்கள் -திருத்தந்தை

   ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 29ம் தேதி கொண்டா டப்படும் புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவின் போது, பேராயர்களாக நியமனம் பெற்றவர்களுக்கு திருத்தந்தை 'பாலியம்' வழங்குவது வழக்கம். இவ் வெள்ளியன்று கொண்டாடப்பட்ட புனித பேதுரு, பவுல் பெருவிழாவின் போது, கடந்த ஓராண்டில் நியமனம்பெற்ற 44 பேராயர்களுக்கு, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் பாலியம் வழங்கும் திருப்பலி நிகழ்த்தி மறையுரை வழங்கிய திருத் தந்தை 16 ம் பெனடிக்ட் பின்வரும் கருத்துக்களை எடுத்துரைத்தார். 
   (ஆர்த்தடாக்ஸ் சபைகளின் பிரதிநிதிகள் உட்ட) பல்வேறு சபைகளும் இணைந்து வந்திருக்கும் இந்தப் பெருவிழாவின் புனிதர்கள் கிறிஸ்தவ சமூகத்தை இன்னும் ஆழமாய் இணைக்கவேண்டும். திருச்சபையின் இரு பெரும் தூண்களாகக் கருதப் படும் புனிதர்கள் பேதுருவும், பவுலும் கிறிஸ்தவ பாரம்பரியத்தில் நற்செய்தியின் முழு வடிவமாக, இணைபிரியாத இருவராகக் கருதப்படுகின்றனர். உரோமில் அவர்களது விசுவாச சகோதரப் பிணைப்பு முக்கியத்துவம் பெறுகிறது. காயினும் ஆபேலும் உடன் பிறந்தவர்களாய் இருந்தாலும் பாவம் அவர்களை வேறுபடுத்தியது. பேதுருவும் பவுலும் மனித முறையில் வேறுபட்டவர்களாகவும், உறவில் முரண் பாடுகளைக் கொண்டவர்களாகவும் இருந்தனர். ஆனாலும் நற்செய்தியின்படி அவர் கள் வாழ்ந்ததால், கிறிஸ்துவின் அருள் அவர்களில் செயல்பட்டு புதிய முறையில் சகோதரர்கள் ஆனார்கள். கிறிஸ்துவைப் பின்பற்றுவதன் மூலம் ஒருவர் புதிய சகோதரத்துவ வாழ்வுக்கு செல்ல முடியும்.
   இயேசுவைப் பின்பற்றினால் மட்டுமே இந்த சகோதரத்துவ உறவுக்குள் ஒருவர் நுழைய முடியும் என்பதே இன்றைய பெருவிழா நம் ஒவ்வொருவருக்கும் தரும் முதன்மையான செய்தி. இதன் முக்கியத்துவம் முழுமையான ஒன்றிப்பை அக்க றையுடன் எதிர்நோக்கும் கிறிஸ்தவர்கள் அனைவரின் ஆசையில் பிரதிபலிக்கிறது. இன்றைய நற்செய்தியில் (மத்தேயு 16:13-19) பேதுரு, இயேசுவின் அடையாளத்தை மனிதத்திறன் அடிப்படையில் இல்லாமல் தந்தையாம் கடவுளின் வெளிப்பாடு மூலம் ஏற்றுக் கொள்கிறார். இயேசு மெசியா என்ற உண்மையை, இறைவனின் தூண்டுத லால் பேதுரு கூறியபோது, அவரைப் பாறை என்றும், மனித அறிவைக் கொண்டு இயேசுவின் பாடுகள் நிகழக்கூடாது என்று சொன்னபோது அவரைச் 'சாத்தான்' என்றும் இயேசு அழைக்கிறார். இங்கு மனிதத்திறனுக்கும் கடவுளின் கொடைக்கும் இடையே ஏற்படும் பதற்றத்தைக் காண்கிறோம். இரண்டு உணர்வுகளும் இணைந் திருக்கும் இந்த காட்சி திருஆட்சிப் பீடத்தின் வரலாற்றை குறிப்பதாக அமைந்துள்ளது. ஒருபுறம் உன்னதத்தில் இருந்து வரும் ஒளியாலும் பலத்தாலும் வரலாற்று பயணத்தில் திருச்சபைக்கு அது அடித்தளம் அமைத்தது; மறுபுறம் மனித பலவீ னங்களின் காரணமாக கடவுளின் செயலால் மட்டுமே நிலைத்திருக்கிறது.
   இறுதியாக பேதுருவின் பணியை அடையாளப்படுத்தும் திறவுகோல்கள்
தற்போ தைய பொது உரையாடலின் நிலையைக் குறித்து நிற்கிறது. 'இணைப்பதையும் தளர்த்துவதையும்' சுட்டிக்காட்டும் இரண்டு திறவுகோல்களும் ஒன்றையொன்று பலப்படுத்தும் ஒரே பொருளைத் தருகின்றன. போதகர்களின் மொழியில் இது ஒரு புறம் கோட்பாட்டு முடிவுகளை மேற்கொள்வதையும், மறுபுறம் ஒழுக்கம் சார்ந்த அதிகாரத்தை, அதாவது திருச்சபையில் இருந்து புறம்பாக்குதல் மற்றும் அதை நீக்குதல் ஆகியவற்றையும் குறிக்கிறது. விண்ணகத்திலும் மண்ணகத்திலும் இணை யான அதிகாரம் வழங்கப்படுவது, திருச்சபையில் பேதுரு மேற்கொள்ளும் முடிவுகள் கடவுளின் பார்வையில் மதிப்புடையவை என்பதை உறுதிப்படுத்துகின்றன. பேராயர் களுக்கு வழங்கப்படும் பாலியம், கிறிஸ்து என்ற மூலைக்கல் மீதும், பேதுரு என்ற பாறையின் மீதும் கட்டப்பட்டுள்ள திருச்சபையை பேராயர்கள் கட்டிக்காக்க வேண்டும் என்பதை நினைவுறுத்தும் ஓர் அடையாளமாக உள்ளது.

   புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவையொட்டி நண்பகல் மூவேளைச் செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், பின்வருமாறு கூறினார்.
   கலிலேயக் கடல் பகுதியில் வாழ்ந்த ஓர் எளிய மீன்பிடித் தொழிலாளரும், புறவினத்தாரின் திருத்தூதரும் உரோம் நகரின் வரலாற்றில் ஆழமாய் பதிந்த இரு பெரும் நாயகர்கள். இவ்விருப் புனிதர்களும் திருச்சபையின் ஒன்றிப்புக்கு மாபெரும் அடையாளங்கள். புனித பேதுருவின் தியாகத்திற்கு ஒரு சிறந்த நினைவுச் சின்னமாக இப்புனித பேராலய பசிலிக்காவும், நாம் நின்றுகொண்டிருக்கும் சதுக்கமும் விளங்கு கிறது, அதேபோல், புனித பவுலின் வாழ்வுக்கும், தியாகத்திற்கும் சாட்சியாக உரோம் நகரின் புறப்பகுதியில் உள்ள புனித பவுல் பசிலிக்கா அமைந்துள்ளது. இந்த இரண்டு புனிதர்களின் நினைவுகள் நினைவுச்சின்னங்களில் மட்டும் இருந்து விடாமல், நமது மனங்களிலும் நிலைத்திருக்கவேண்டும். அவர்கள் காட்டிய நற்செய்தி வழியில் நாமும் நடக்க அவர்களின் பரிந்துரை நமக்குத் தேவை.
   மூவேளை செப உரையின் இறுதியில் இப்பெருவிழாவன்று
பாலியம் பெற்ற பேராயர்களைச் சிறப்பாக வாழ்த்திய திருத்தந்தை, இப்பேராயர்களுடன் இணைந்து இவ்விழாவில் பங்கேற்க பல நாடுகளிலிருந்தும் வந்திருந்த விசுவாசிகளையும் சிறப் பாக வாழ்த்தினார். இறுதியில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.

Wednesday, June 27, 2012

ஜூன் 27, 2012

புதன் மறைபோதகம்: நம்மையே நாம் தாழ்த்தும்போது 
கடவுளிடம் உயர்த்தப்படுகிறோம் - திருத்தந்தை

   மே மாதம் இருவேறு நாட்களில் நிலநடுக்கங் களுக்கு உள்ளான எமிலியா, ரொமாக்னா பகுதிகளை இச்செவ்வாயன்று பார்வையிட்டு, அங்குள்ள மக்க ளுக்குத் தன் ஆறுதலான வார்த்தைகளையும், செபங் களையும் வழங்கியத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இப்புதன் காலை 10.30 மணியளவில் திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்திற்கு வந்தார். அரங்கத்தில் கூடி யிருந்த ஆயிரக்கணக்கான மக்களின் ஆரவாரமான வரவேற்பை புன்னகையுடன் ஏற்றுக்கொண்ட திருத் தந்தை, அவர்களுக்கு புதன் பொது மறைபோதகத்தை வழங்கினார்.
   புனித பவுல் அடிகளார் செபத்தைப்பற்றிக் கூறும் கருத்துகளை கடந்த வாரங்களில் சிந்தித்து வந்துள்ளோம். அவற்றின் தொடர்ச்சியாக, இன்று பவுல் அடிகளார் பிலிப் பியருக்கு எழுதியத் திருமுகத்தில் எழுதியுள்ள புகழ் பெற்றதொரு பகுதியைப்பற்றி சிந்திப்போம். பிலிப்பியருக்கு எழுதியத் திருமுகம் 2ஆம் அதிகாரத்தில் காணப்படும் இப்பகுதி 'கிறிஸ்தியல் பாடல்' என்று பாரம்பரியமாகச் சொல்லப்படுகிறது. நற் செய்திக்காகச் சிறைவாழ்வை ஏற்ற பவுல் அடிகளார், கிறிஸ்துவைப் போன்ற மனநிலை கொண்டிருந்தால், ஆழ்ந்த மகிழ்வைப் பெறமுடியும் என்று கூறுகிறார். தந்தையின் திருவுளத்திற்கு கிறிஸ்து தன்னையே முழுமையாக அர்ப்பணித்ததால், ஆதாமினால் விளைந்த பாவங்கள் தீர்க்கப்பட்டு, நாம் மீண்டும் நமது இயல்பான நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளோம். கிறிஸ்து சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக் கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். (பிலிப்பியர் 2: 8-9) தன்னையே தாழ்த் தியதால் கிறிஸ்து உயர்த்தப்பட்டதுபோல், நாம் அன்பிலும், தாழ்ச்சியிலும் நம்மை யேத் தாழ்த்தும்போது கடவுளிடம் நாம் உயர்த்தப்படுகிறோம். எனவே, நமது செபங் களில் கிறிஸ்துவின் முன் மண்டியிடுவோம். படைப்பு அனைத்திற்கும் ஆண்டவரான கிறிஸ்துவின் இறைமையை உணர்ந்து அவர் முன் பணிவோம். நமது சொல்லாலும், செயலாலும் கிறிஸ்துவின் மாட்சியை வெளிப்படுத்தும் சாட்சிகளாக நாம் மாற நமது செபங்களை எழுப்புவோம்.
   இவ்வாறு தன் மறையுரையை வழங்கியத் திருத்தந்தை, கொரியாவில் இருந்து வந்திருந்த கிறிஸ்தவ ஒன்றிணைப்பு அமைப்பின் பிரதிநிதிகளைச் சிறப்பாக வர வேற்றார். நைஜீரியா, தென்ஆப்ரிக்கா, சுவாசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து வந்தி ருந்த திருப்பயணிகளையும் வாழ்த்தினார். அதேபோல், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், அயர்லாந்து, நார்வே, ஆஸ்திரேலியா, பகாமாத்தீவுகள், அமெரிக்க ஐக்கிய நாடு என பல நாடுகளிலிருந்தும் வந்திருந்த ஆங்கில மொழி பேசும் திருப்பயணிகளை ஆங்கிலத்தில் வாழ்த்தினார். பின்னர் கூடியிருந்த அனைவருக்கும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.

Sunday, June 24, 2012

ஜூன் 24, 2012

இயேசுவை மக்களுக்கு முதலில் வெளிப்படுத்தியவர்
திருமுழுக்கு யோவான் - திருத்தந்தை

   உரோம் தூய பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த ஏராளமான மக்களுக்கு மூவேளை செப உரை வழங் கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இன்று புனித திரு முழுக்கு யோவானைப் பற்றி எடுத்துரைத்தார்.
  இஞ்ஞாயிறு நாம், நமது ஆண்டவருக்காக வழியை தயார் செய்த மாபெரும் புனிதரான திருமுழுக்கு யோவானின் பிறப்பைக் கொண்டாடுகிறோம். கடவு ளின் மக்களை மனந்திரும்ப அழைக்கும் பாலை நிலக் குரலாக யோவான் இருந்தார். நாம் இன்று அவரது வார்த்தைகளுக்கு செவிமடுத்து, ஆண்டவருக்காக நம் இதயங்களில் ஓர் அறையை உருவாக்குவோம். மரியாவின் முதிர்ந்த வயது உறவினரான எலிசபெத் யோவானை கருத்தரித்தது 'கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை' என்பதற்கான ஓர் அடையாளம். இயேசுவின் முன்னோடியாகவும், இறைமகனுக்காக வழியைத் தயார் செய்யும் ஒரு தூதுவராகவும் திருமுழுக்கு யோவான் பிறந்தார். முப்பது ஆண்டு களுக்கு பின் யோர்தான் நதியில் மக்களுக்கு திருமுழுக்கு வழங்கத் தொடங்கியதால், யோவான் திருமுழுக்காளர் ஆனார். மெசியாவின் உடனடி வருகைக்காக மக்களை மனந்திருப்பி தயார்செய்ய வேண்டுமென்று அவர் விரும்பினார். கடவுள் இந்த மாபெ ரும் புனிதருக்காக ஒரு பணியை வைத்திருந்தார். இயேசுவுக்கு திருமுழுக்கு வழங் கியவராகவும், தனது கொடூர மரணத்தால் இறைமகனுக்கு சான்று பகர்ந்தவராகவும், இயேசுவை மக்களுக்கு முதலில் வெளிப்படுத்தியவராகவும் அவர் இருந்தார்.
   மூவேளை செபத்துக்கு பின் பேசிய திருத்தந்தை, வட இத்தாலியில் சமீபத்தில் நிலநடுக்கம் பாதித்த பகுதிகளை வருகின்ற செவ்வாய்க்கிழமை தான் பார்வையிட உள்ளதாக கூறினார். பாதிக்கப்பட்டவர்களோடு திருச்சபை முழுவதன் ஒருமைப்பாட் டினைத் தெரிவித்துக்கொண்ட அவர், தேவையில் இருப்போர் அனைவருக்காகவும் செபிக்குமாறு விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டார்.

Wednesday, June 20, 2012

ஜூன் 20, 2012

புதன் மறைபோதகம்: கடவுளின் மீட்புத் திட்டத்தை நாம் கண்டுணர பவுலின் செபம் உதவுகிறது - திருத்தந்தை

   உரோம் நகரில் கோடை வெயிலின் தாக்கம் அதிக மாகியுள்ளதால், திருத்தந்தை 6ம் பவுல் மண்டபத் தில் இப்புதன் பொது மறைபோதகத்தைத் திருத் தந்தை 16ம் பெனடிக்ட் வழங்கினார்.
    செபத்தைப் பற்றி புனித பவுல் கூறியுள்ள சிந்த னைகளைக் கடந்த வாரங்களில் சிந்தித்து வந்தது போல் இவ்வாரமும் நாம் தொடர்ந்து சிந்திப்போம். எபேசியருக்கு எழுதியத் திருமுகத்தின் தொடக்கத் தில் இறைவனைப் புகழ்ந்தும், இறை ஆசீரை வேண் டியும் புனித பவுல் எழுதியுள்ள வார்த்தைகளை நாம் இன்று சிந்திப்போம். முடிவற்ற வாழ்வில் நாம் பகிரவிருக்கும் நமது மீட்பின் திட்டத்தை கிறிஸ்துவின் வழியாக நமக்கு அறிவித்த இறைவனுக்கு பவுல் அடியார் நன்றி கூறுகிறார். உலகம் உரு வாவதற்கு முன்பே கிறிஸ்து வழியாகக் கடவுள் விரும்பிச் செய்த தீர்மானமாக நம்மைத் தேர்ந்து, அவர் தமது திருவுளத்தின் மறைபொருளை நமக்குத் தெரியப் படுத்தியுள்ளார். சிலுவையில் கிறிஸ்து சிந்திய இரத்தத்தின் வழியாக, நமது பாவங்களை மன்னித்து, இறைவனுடன் நாம் மீண்டும் ஒப்புரவுகொள்ளச் செய்தார். தூய ஆவியாரை நமக்குக் கொடையாக வழங்கி, உறுதியான மீட்புக்கு நம்மை உரிமையாளராக்கினார். கடவுள் நமக்களிக்கும் மீட்பின் திட்டத்தை ஆழமாக தியா னிக்கவும், அதன் பயனாக, இன்றையச் சூழலில் கடவுளின் மீட்புத் திட்டத்தை நாம் கண்டுணரவும் புனித பவுலின் இந்தச் செபம் நமக்கு உதவுகிறது. மூவொரு இறைவன் நம் வாழ்வை மாற்றியமைக்கவும், கிறிஸ்துவின் வழியாக நாம் அடையும் உரிமைப் பேற்றுக்காக நன்றி சொல்லவும் நமது செபங்கள் வழியே முயல்வோம்.
   இவ்வாறு தன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அதன் இறுதியில் நைஜீரியாவில் நடைபெறும் வன்முறைகள் பற்றி எடுத்துரைத்து, அங்கு அமைதி நிலவ வேண்டுகோள் விடுத்தார். அந்நாட்டில் நிகழும் வன்முறைகள் கிறிஸ்தவர் களுக்கு எதிராகவே நிகழ்ந்து வருவதை தான் காண்பதாக கூறிய அவர், இவற்றைத் தொடர்ந்து செய்துவரும் குழுக்கள் உடனடியாகத் தங்கள் வன்முறைகளைக் கைவிடு மாறும் கேட்டுக்கொண்டார். நைஜீரியாவின் அனைத்துத் தரப்பினரும் அமைதியான, ஒப்புரவான சமுதாயத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமென்றும் திருத்தந்தை வேண்டு கோள் விடுத்தார். இந்தோனேசியாவில் இருந்து வந்திருந்த பல்சமய உறவுகள் குழுவினரையும், அமெரிக்காவில் இருந்து வந்திருந்த 'காயப்பட்ட போராளிகள்' என்ற குழுவினரையும் திருத்தந்தை சிறப்பாக வாழ்த்தினார். அதேபோல், ஸ்காட்லாந்து, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, ஜப்பான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வந்திருந்த பயணிகளை ஆங்கிலத்தில் வாழ்த்தினார். இறுதியில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.

Sunday, June 17, 2012

ஜூன் 17, 2012

நற்கருணை மறைபொருளில் இயேசு நம்மோடு
தங்கியிருக்க விரும்புகிறார் - திருத்தந்தை

   உரோம் தூய பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த ஏராளமான மக்களுக்கு மூவேளை செப உரை வழங் கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இஞ்ஞாயிறு நற் செய்தியில் இடம்பெற்றுள்ள கிறிஸ்துவின் உவமை களைப் பற்றி எடுத்துரைத்தார்.
   விதைத்தவர் ஓய்வில் இருக்கும்போதே தானாக முளைத்து வளரும் விதையின் உவமை, "படைப்பு மற்றும் மீட்பின் மறைபொருளை, வரலாற்றில் கடவு ளின் கனிதரும் பணியைக் குறிக்கிறது." இந்த உவ மையின் இறுதி அறுவடை, காலத்தின் முடிவில் அமையும் கடவுளின் அரசை முழுமையாக உணர நமக்கு நினைவூட்டுகிறது. தற்பொழுது விதைப்பின் நேரம், மேலும் விதையின் வளர்ச்சியை ஆண்டவர் உறுதி செய்கிறார். அனைத்து கிறிஸ்த வரும் தன்னால் முடிந்தவற்றை செய்ய வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும், ஆனால் இறுதி முடிவுகளோ கடவுளைச் சார்ந்திருக்கும். இந்த அறிவு அவரது அன் றாட பணிகளை, குறிப்பாக கடினமான சூழ்நிலைகளில் தாங்கி நிற்கும். இன்றைய நற்செய்தியில் ஆண்டவர், இறையாட்சி என்பது எல்லாச் செடிகளையும் விடப் பெரிதாக வளரும் சிறிய கடுகு விதையைப் போன்றது என்று நமக்கு கற்பிக்கிறார். கடவுள் நமது பலவீனமும் உண்மையுமான ஆசைகளை, அவருக்கும் நமக்கு அடுத் திருப்போருக்குமான சிறந்த அன்பு பணிகளாக மாற்ற ஆர்வமுடன் செபிப்போம்.
   மூவேளை செபத்துக்கு பின் பேசிய திருத்தந்தை, ஜூன் 20ந்தேதி ஐ.நா.வால் அனு சரிக்கப்படும் உலக அகதிகள் தினத்தைப் பற்றி குறிப்பிட்டார். அகதிகளுக்கு தனது செபங்களையும் அக்கறையையும் உறுதி அளித்த அவர், அவர்களது உரிமைகள் மதிக் கப்படும் என்றும், அவர்கள் தங்கள் குடும்பங்களோடு விரைவில் இணைவார்கள் என் றும் நம்பிக்கை தெரிவித்தார். அயர்லாந்தில் நடைபெற்ற நற்கருணை மாநாடு இன்று நிறைவு பெறுவதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, "நாம் கடவுளோடும் நமக்கிடை யிலும் ஒன்றித்திருக்க வேண்டுமென்பதற்காக, நற்கருணை மறைபொருளில் இயேசு நம்மோடு தங்கியிருக்க விரும்புகிறார்" என்று கூறினார். இறுதியில் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து, அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Wednesday, June 13, 2012

ஜூன்13, 2012

புதன் மறைபோதகம்: ஆன்ம வறட்சியான நேரங்களிலும்
நாம் இடைவிடாமல் செபிக்க வேண்டும் - திருத்தந்தை

   உரோமையில் கோடை வெயிலின் தாக்கம் தெரிய ஆரம்பித்துள்ளது. எனவே இவ்வாரப் புதன் பொது மறைபோதகம், பாப்பிறை 6ம் பவுல் அரங்கத்தில் நடைபெற்றது. இம்மறைபோதகத்திற்கு முன்னர் வத் திக் கான் தூய பேதுரு பசிலிக்காவைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் சந்தித்தார். பின்னர் அவர் வழங்கிய பொதுமறைபோதகத்தில் புனித பவுலின் திருமடல் களில் செபம் குறித்த சிந்தனைகளைத் தொடர்ந்தார்.
   அன்பு சகோதர சகோதரிகளே, திருத்தூதர் புனித பவுல், ஆழ்நிலை செபத்தில் தனக்குக் கிடைத்த சொந்த அனுபவத்திற்கு அவரே வழங்கும் சான்று குறித்து இன்று பார்ப்போம். தானும் ஒரு திருத்தூதர் என்ற உரிமையை வலியுறுத்திய பவுல், இதற்கெல்லாம் மேலாக செபத்தில் அவர் ஆண்டவரிடம் கொண்டிருந்த ஆழமான நெருக்கத்தை விளக்கினார். இந்தச் செப நேரங்கள் காட்சிகளாலும், வெளிப்பாடு களாலும் பரவசங்களாலும் நிறைந்திருந்தன. இருந்தபோதிலும், பவுல் தனது சோதனைகள் பற்றியும் பேசுகிறார். அவர் தனக்கு அருளப்பட்ட வெளிப்பாடுகளால் இறுமாப்பு அடையாதவாறு ஆண்டவர் பெருங்குறை ஒன்றை அவருக்கு அனுப்பினார். அது அவர் உடலில் புதிரான முள்போல் வருத்திக்கொண்டே இருந்தது பற்றிப் பேசுகிறார். எனவே பவுல் கிறிஸ்துவின் வல்லமை அவரில் தங்கும் பொருட்டு தனது வலுவின்மையில் மனதாரப் பெருமைப்பட்டார். இந்த ஆழ்நிலை செப அனுபவத்தின் மூலம், கடவுளின் அரசு தனது சொந்த முயற்சிகளால் அல்ல, மாறாக, எளிய மண்பாண்டங்களாகிய நம் வழியாக, கடவுளின் சுடர்விடும் அருளின் சக்தியினால் வருகின்றது என்று உணர்ந்தார். ஆழ்நிலை செபத்தில் கடவுளன்பின் அழகையும் நமது சொந்த பலவீனத்தையும் நாம் அனுபவிப்பதால் இந்தச் செபமானது புகழ்ச்சிக்குரிய தாகவும் கலக்கம் அளிப்பதாகவும் நமக்குத் தெரிகின்றது. பவுல் இடைவிடா தினசரி செபத்தின் தேவையை நமக்குப் போதிக்கிறார். ஆன்மாவின் வறட்சியான மற்றும் துன்பம் நிறைந்த நேரங்களிலும் நாம் இடைவிடாது செபிக்க வேண்டும். ஏனெனில் செபத்தில்தான் வாழ்வை மாற்றும் இறையன்பின் வல்லமையை நாம் அனுபவிக் கிறோம்.
   இவ்வாறு மறைபோதகத்தை நிறைவு செய்த திருத்தந்தை, அயர்லாந்து நாட்டு டப்ளினில் தற்போது நடைபெற்றுவரும் 50வது அனைத்துலக
திவ்விய நற்கருணை மாநாட்டில் பங்கு கொள்வோர் குறித்துப் பேசினார். 'திவ்விய நற்கருணை : கிறிஸ்து வோடும் நம்மோடும் ஒன்றிப்பு' என்ற தலைப்பில் நடைபெறும் இம்மாநாடு, திருச் சபையின் வாழ்வில் நற்கருணை கொண்டிருக்கும் மையத்தை மீண்டும் உறுதிப் படுத்துவதற்கு விலைமதிப்பற்ற தருணம் என்று கூறிய திருத்தந்தை, நம் ஆண்டவர் திவ்விய நற்கருணையில் தம்மையே கொடையாக வழங்குவதை அதிகமாக உணரக் கூடிய வளமையான ஆன்மீகக் கனிகளை இம்மாநாடு வழங்குவதற்குத் தன்னோடு இணைந்து அனைவரும் செபிக்குமாறும் அழைப்பு விடுத்தார். பின்னர் இப்பொது மறைபோதகத்தில் கலந்து கொண்ட எல்லாரையும் வாழ்த்தி தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Sunday, June 10, 2012

ஜூன் 10, 2012

நற்கருணை ஆராதனை திருச்சபையின் மையப்
பகுதியாக அமைந்துள்ளது - திருத்தந்தை

   உரோம் தூய பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த ஏராளமான மக்களுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இஞ்ஞாயிறு உலகின் பல இடங்களில் கொண்டாடப்படும் கிறிஸ் துவின் திருஉடல் திருஇரத்தம் பெருவிழாவைப் பற்றி எடுத்துரைத்தார். அவர் இந்த விழாவில் கடைபிடிக்கப்படும் நற்கருணை பொது வழிபாட்டின் முக்கியத்துவம் குறித்தும், பல பங்குகளிலும் மறை மாவட்டங்களிலும் நடைபெறும் நற்கருணை பவனி குறித்தும் எடுத்துக்கூறினார். இந்த விழாவில் நடைபெறும் நற்கருணை ஆராதனை கிறிஸ்தவ தனிநபர்கள், விசுவாச சமூகங்கள், மற்றும் முழு திருச்சபையோடும் ஒன்றிணைந்த மையப் பகுதியாக அமைந்துள்ளது என்றும், கொண்டாட்டங்களின் நேரங்களையும் கடந்து நம் ஆண்டவர் நற்கருணை அருட்சாதனத்தில் என்றென்றும் பிரசன்னமாய் இருக்கிறார் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
   ஆங்கிலம் பேசும் திருப்பயணிகளுக்கு சிறப்புரை வழங்கிய திருத்தந்தை பின்வரு மாறு கூறினார்: "மூவேளை செபத்துக்காக இந்த சதுக்கத்தில் ஒன்று கூடியுள்ள ஆங்கிலம் பேசும் திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்துகிறேன். இன்றைய கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்தம் பெருவிழா, மிகப் புனிதமான நற்கருணையில் உள்ள ஆண்டவரின் மீட்பளிக்கும் பிரசன்னத்தைக் கொண்டாடுகிறது. இறுதி இர வுணவு வேளையில், தனது சிலுவை மரணத்துக்கு முந்திய இரவில், இயேசு கடவுளுக்கும் மனிதருக்கும் இடையிலான புதிய நித்திய உடன்படிக்கையின் அருட் சாதனமாக நற்கருணையை நிறுவினார். இந்த மன்னிப்பு மற்றும் ஒப்புரவின் பலி திருச்சபையை விசுவாசம், ஒற்றுமை மற்றும் புனிதத்தில் உறுதிப்படுத்துகிறது. உங்கள் அனைவர்மீதும் மகிழ்ச்சி மற்றும் அமைதியின் ஆசீரைப் பொழிய நான் ஆண்டவரை மன்றாடுகிறேன்."
   மூவேளை செபத்துக்கு பின் பேசிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், வருகிற வியாழக்கிழமை ஜூன் 14ந்தேதி உலக சுகாதார அமைப்பினால் கொண்டாடப்படும் உலக இரத்த தான தினத்தை கவனத்திற்கு கொண்டுவந்தார். இரத்த தானம் வழங்கும் ஒவ்வொருவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்ட அவர், பல நோயாளி களுக்கு இன்றியமையாததாகவும், ஒற்றுமையின் வடிவமாகவும் விளங்கும் இந்த செயலுக்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

Friday, June 8, 2012

ஜூன் 7, 2012

கடவுளின் தொடர்ந்த பிரசன்னம் தேவை என்பதாலே
நற்கருணை நமக்கு வழங்கப்பட்டுள்ளது - திருத்தந்தை

   இவ்வியாழன் மாலை உரோம் நகரின் புனித ஜான் லாத்தரன் பசிலிக்கா பேராலயத்தில் இயேசுவின் திரு உடல், திருஇரத்தத் திருவிழா திருப்பலியை நிகழ்த் திய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தன் மறையுரை யில் பின்வரும் கருத்துக்களை எடுத்துரைத்தார்.
   திருப்பலியின்போது சிறந்ததொரு வழியில் நம் மத்தியில் பிரசன்னமாகும் இறைமகன் இயேசு, தொடர்ந்து ஆலயங்களில் அமைதியாகப் பிரசன்ன மாகி, நம் தனிப்பட்ட வாழ்க்கைக்காகப் பரிந்து பேசு கிறார். நம் தந்தையாகிய கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது புனித மானவற்றை அழிக்க அல்ல, மாறாக புனிதத்தை நிறைவு செய்யவே! சமய நம்பிக்கையற்ற உலகை உருவாக்க விழையும் பல்வேறு சக்திகளால் புனித அடையாளங்கள் உலகிலிருந்து தொடர்ந்து நீக்கப்பட்டு வருவது குறித்து நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். ஏனெனில், இத்தகைய உலகில் மனசாட்சியின் குரல் பெரிதும் மௌனமாக்கப்படுகிறது. கடவுளின் தொடர்ந்த பிரசன்னம் நமக்குத் தேவை என்பதை உணர்ந்து அப்ப, இரச வடிவில் இயேசு  தன்னையே நம் மத்தியில் கொடையாக அளித்துச் சென்றுள்ளார்; அவர் தந்த இந்த அற்புதக் கொடைகளுக்கு நன்றி செலுத்தவே நாம் கூடி வந்திருக்கிறோம். திருப்பலி யில் நடைபெறும் நற்கருணை கொண்டாட்டத்திற்கும், நற்கருணை ஆராதனைக்கும் இடையே சமநிலை நிலவ வேண்டும். அது, தனிநபர் மற்றும் சமூகங்களின் ஆரோக் கியமான ஆன்மீக வாழ்வுக்கு தேவையானது. அவற்றை எதிர்ப்பது தவறானது. உண்மையில் திவ்விய நற்கருணை மரபு இந்த சமூகம் நற்கருணையை நன்றாகவும் உண்மையாகவும் கொண்டாட ஒரு ஆன்மீகச் சூழ்நிலையாக உள்ளது. இது தொடர்ந்து, விசுவாசம் மற்றும் வழிபாட்டின் உள் மனநிலையால் உடனிருந்து பின்பற் றப்பட்டால் மட்டுமே, இதன் முழு அர்த்தத்தையும் மதிப்பீட்டையும் வழிபாட்டுச் செயல் வெளிப்படுத்த முடியும்.
   ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இத்திருப்பலிக்குப் பின்னர், லாத்தரன் பசிலிக்காவில் இருந்து புனித மரியன்னை பசிலிக்கா பேராலயத்திற்கு மேற்கொள் ளப்பட்ட நற்கருணை பவனியில் கலந்துகொண்ட திருத்தந்தை, பவனியின் இறுதி யில் நற்கருணை ஆசீரையும் வழங்கினார்.

Wednesday, June 6, 2012

ஜூன் 6, 2012

புதன் மறைபோதகம்: குடும்பங்களின் நற்செய்தியை
முன்னோக்கி எடுத்துச்செல்வோம் - திருத்தந்தை

   உரோம் நகருக்கு வரும் திருப்பயணிகளின் கூட்டம் அதிகமாக இருப்பதால் இவ்வார புதன் பொதுமறை போதகம் தூய பேதுரு பேராலய வளாகத்திலேயே இடம்பெற்றது. திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தன் இவ்வார புதன் பொது மறைபோதகத்தில், கடந்த வார இறுதியில் மிலான் நகரில் இடம்பெற்ற அனைத் துலகக் குடும்ப மாநாடு குறித்துத் தன் கருத்துக்களை வெளியிட்டார்.
   குடும்பம் குறித்த ஏழாவது உலக மாநாட்டை யொட்டி கடந்தவார இறுதியில் நான் மிலானுக்குப் பயணம் மேற்கொண்டேன். 'குடும் பம்: பணியும் கொண்டாட்டமும்' என்பதை மையக்கருத்தாகக் கொண்டிருந்தது இம் மாநாடு. சமூக முதன்மைக்கூறாகவும், இல்லத் திருச்சபையாகவும், வாழ்வுக் காப்பக மாகவும், திருமணத்தை அடிப்படையாகக் கொண்ட அன்பு ஒன்றிப்பாகவும் இருக்கும் குடும்பத்தின் வளஞ்செறிந்த பல்வகை தனித்தன்மைகளுக்கு இந்த மகிழ்ச்சிநிறை மாநாடு, ஓர் எழுச்சிமிகு சாட்சியாக இருந்தது. கடவுளால் வழங்கப்படும் அன்பின் அழைப்பை கண்டுகொள்வதும், மற்றவர்களுடன் உறவில் நுழைவதும், இணக்கமாக ஒன்றிணைந்து நாம் வாழ்வதும் குடும்பங்களில்தான். ஞாயிற்றுக்கிழமைகளில்கூட குடும்ப அங்கத்தினர்கள் ஒன்றிணைந்து வருவதற்கான நேரம் கிடைக்காமை உட்பட, இன்றையக் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் குறித்து ஆழ்ந்து சிந்திப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குவதாக மிலான் மாநாட்டுச் சாட்சியக் கலந் துரையாடல் இருந்தது. இவ்வுலகை மாற்றவல்ல ஒரே வழியான தெய்வீக அன்பைக் கொண்டாடும் பொருட்டு, தலத்திருச்சபைச் சமூகங்கள் அனைத்தும் குடும்பங்களைப் போல் மேலும் மாறவேண்டும் என இம்மாநாட்டின் திருப்பலியின் இறுதியில் நான் ஊக்கமளித்தேன். அனைத்துலகக் குடும்பங்களின் இந்த சந்திப்பு, 'குடும்ப நற்செய் தியை' மேலும் முன்னோக்கி எடுத்துச் செல்வதுடன், நம் சமூகங்களின் எதிர்காலமாக இருக்கும் குடும்பங்களின் முக்கியத்துவம் குறித்த கவன ஈர்ப்பை வழங்குவதாக!
   இவ்வாறு தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவ ருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Sunday, June 3, 2012

ஜூன் 3, 2012

இது குடும்பங்களின் நாள் - திருத்தந்தை

   இத்தாலியின் மிலான் மறைமாவட்டத்தில் நடை பெற்ற குடும்பங்களின் மாநாட்டில் கலந்துகொண்டு, நிறைவு திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பின்வருமாறு மறையுரை ஆற்றினார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   நற்கருணைப் பலியைக் கொண்டாடும் இந்த காலை நேரத்தில் நாம் பெருமகிழ்ச்சியையும், ஒற்றுமையை யும் உணர்கிறோம். பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருக்கும் விசுவாசிகள், பேதுருவின் வழிவருப வரோடு ஒன்றித்திருக்கும் ஒரு பெரும் ஒன்றுகூடல். நீங்கள் போய் எல்லா மக்க ளினத்தாரையும் சீடராக்குங்கள்; "தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திரு முழுக்குக் கொடுங்கள்" என்று நாம் இன்றைய  நற்செய்தியில் கேட்டது போன்று, இது இயேசுவால் அவரது திருத்தூதர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணியின் கனியும், கிறிஸ்துவால் நிறுவப்பட்ட ஒரே உலகளாவிய திருச்சபையின் ஓர் ஆற்றல்மிக்க சாயலாகவும் உள்ளது. கர்தினால் ஏஞ்சலோ ஸ்கோலா, மிலான் பேராயர் மற்றும் குடும்பத்துக்கான பாப்பிறை அவையின் தலைவர் கர்தினால் என்னியோ ஆன்ட்டோ னெல்லி, தங்கள் ஊழியர்களோடு இணைந்து இந்த ஏழாவது உலக குடும்பங்களின் சந்திப்பை வடிவமைத்தவர்கள், மிலான் துணை ஆயர்கள், மேலும் மற்ற ஆயர்கள் அனைவரையும் நான் அன்போடும் நன்றியோடும் வாழ்த்துகிறேன். இன்று இங்கி ருக்கும் அனைத்து அதிகாரிகளையும் நான் வாழ்த்த விரும்புகிறேன். மேலும் அன் பார்ந்த குடும்பங்களே, சிறப்பாக உங்களுக்கு எனது வரவேற்பை உரித்தாக்கி கொள் கிறேன். உங்கள் பங்கேற்புக்கு நன்றி!
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல், 'திருமுழுக்கின் வழியாக நாம் பெற்றுக்கொண்ட தூய ஆவியார், நம்மை கிறிஸ்துவின் சகோதரர்களாகவும் சகோ தரிகளாகவும் இணைத்து, நம்மை தந்தையின் பிள்ளைகளாக மாற்றுகிறார்; அத னால் நாம், "அப்பா, தந்தையே'' என அழைக்கிறோம்' என்று நமக்கு நினைவூட்டு கிறார். விண்ணக மகிமையில் தனது முழு நிறைவைப் பெறுகின்றவரை வளர வேண்டிய புதிய, தெய்வீக வாழ்வின் பொறி நமக்கு வழங்கப்பட்ட தருணத்தில், நாம் கடவுளின் குடும்பமாகிய திருச்சபையின் உறுப்பினர்களாக மாறினோம். புனித அம்புரோஸ் கூறுவது போன்று, "தந்தை, மகன், தூய ஆவியாரின் ஒன்றிப்பில் மக்கள் ஒன் றாகின்றனர்" என்று இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் கற்பிக்கிறது. இன்றைய மூவொரு இறைவன் பெருவிழா திருவழிபாடு, இந்த மறைபொருளை நாம் சிந்திக்க அழைப்பதுடன், திரித்துவ ஒற்றுமையின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி கடவுளோடும் பிறரோடும் நாம் ஒன்றித்து வாழவும் அழைப்பு விடுக்கிறது. இணக்கத்தின் ஆவியில் விசுவாச உண்மைகளில் பயணிக்கவும் பெற்றுக்கொள்ளவும், ஒருவர் மற்றவருக் காகவும் எல்லோருக்காகவும் நமது அன்பை வாழவும், இன்பங்களையும் துன்பங்களை யும் பகிர்ந்துகொள்ளவும், மன்னிப்பைத் தேடவும் வழங்கவும், ஆயர்களின் தலைமை யின்கீழ் வெவ்வேறு தலைமைப்பண்புகளை மதிப்பிடவும் நாம் அழைக்கப்பட்டுள் ளோம். திரித்துவத்தின் அழகை பிரதிபலிக்கும் வகையிலும், வார்த்தையிலன்றி, வாழும் அன்பின் பலத்தால் ஏற்படுத்தும் நற்செய்திப் பணியின் கதிவீச்சாலும், குடும்பங்களைப் போன்ற திருச்சபை சமூகங்களை கட்டியெழுப்பும் பணி நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
   திருச்சபை மட்டுமல்ல, ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே நடைபெறும் திருமணத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் குடும்பமும், மூன்று ஆள்களாக இருக்கும் ஒரே கடவுளின் சாயலாகத் திகழ்வதற்கு அழைக்கப்படுகின்றது. திருமண மான அன்புத் தம்பதியரே, நீங்கள் உங்களது திருமணத்தை வாழும்போது ஒருவருக் கொருவர் ஏதோ குறிப்பிட்ட ஒருபொருளை அல்லது செயலை வழங்குவதில்லை, ஆனால் உங்களது முழுவாழ்வையுமே வழங்குகிறீர்கள். உங்களது ஆசைகள், ஒருவர் மற்றவர் விருப்பத்தை நிறைவேற்றல், கொடுப்பதிலும் பெறுவதிலும் நீங்கள் அனுபவிக்கும் மகிழ்ச்சி ஆகியவற்றால் உங்களது அன்பு, முதலும் முக்கியமுமாக உங்களுக்கே பயனுள்ளதாக இருக்கின்றது. உங்களது பிள்ளைகளைப் பொறுப்புடனும் தாராளமனத்துடனும் பெற்றெடுத்து அவர்களது நலனில் அக்கறை காட்டி ஞானம் நிறைந்த கல்வியை அளிப்பதிலும் இது பயன்மிக்கதாக இருக்கின்றது. மனிதரை மதித்தல், நன்றிமனப்பான்மை, நம்பிக்கை, பொறுப்பு, ஒத்துழைப்பு, ஒருமைப்பாடு போன்ற சமூகப் பண்புகளின் முதல் கல்விக்கூடமாகவும் குடும்ப வாழ்வு அமைந் துள்ளதாலும் இது பயனுள்ளதாக இருக்கின்றது. அன்புத் தம்பதியரே, தொழில் நுட்பத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட இன்றைய உலகில் உங்களது பிள்ளைகள்மீது கண்ணும் கருத்துமாய் இருந்து, சலனமற்ற மனநிலை மற்றும் நம்பிக்கையோடு வாழ்வதற்கான அர்த்தங்களையும், விசுவாசத்தின் வல்ல மையையும் அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். உயர்ந்த இலட்சியங்களைச் சுட்டிக்காட்டி, அவர்களது பல வீனங்களில் அவர்களுக்கு ஆதரவாக இருங்கள். குடும்பங்களாக இருப்பதென்பது, கடவுள் உறவில் தொடர்ந்து நிலைத்திருந்து, திருச்சபையின் வாழ்க்கையில் பங்கு கொள்வதாகும். அதாவது, உரையாடலை வளர்த்து, ஒருவர் ஒருவரின் கண்ணோட் டத்தை மதித்து, சேவை செய்வதற்குத் தயாராக இருந்து, பிறர் தவறும்போது பொறுமை காத்து, பிறரை மன்னித்து, மன்னிப்புக் கேட்டு, மோதல்கள் ஏற்படும்போது அறிவு மற்றும் பணிவால் அவற்றைச் சமாளித்து, பிற குடும்பங்களுக்குத் திறந்த மனதாக இருந்து, ஏழைகள்மீது அக்கறை காட்டி, சமுதாயத்தில் பொறுப்புள்ளவர் களாய் வாழ்வதாகும்.
   திருமணமுறிவு பெற்றவர்கள் மற்றும் பிரிந்து வாழும் தம்பதியரையும் மறந்து விடாமல், அவர்களது போராட்டங்களில் நானும் திருச்சபையும் உடன் இருக்கிறோம். இவர்கள், குடும்பம் குறித்த திருச்சபையின் போதனைகளை ஏற்றுக்கொண்டாலும், இந்தப் பிரிவுகளின் வேதனையான அனுபவத்தைக் கொண்டுள்ளார்கள். கடவுள் சாயலில் ஆண் மற்றும் பெண்ணாக இருப்பது என்பது, வேலை, அறிவியல், தொழில் நுட்பம் ஆகியவற்றின் வழியாக உலகை மாற்றுவதற்கு கடவுளோடு ஒத்துழைப்ப தாகும். நவீனப் பொருளாதாரக் கொள்கைகளில் வேலை, உற்பத்தி மற்றும் சந்தை பற்றிய கருத்தியல், பயன்கருதியதாக இருக்கின்றது. ஆயினும், பயனீட்டுமுறை மற்றும் அதிகப்படியான இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட கூறுகள், நல் லிணக்கமான முன்னேற்றத்துக்கும், குடும்பத்தின் நலனுக்கும், நியாயமான சமுதா யத்தைக் கட்டியெழுப்புவதற்கும் சாதமாக இல்லை என்பதைக் கடவுளின் திட்டமும் நமது அனுபவமும் காட்டுகின்றன. ஏனெனில் இவை அச்சமூட்டும் போட்டிகளின் எழுச்சியில் சமத்துவமின்மைகளையும், சுற்றுச்சூழல் அழிவையும், நுகர்வுப்பொருள் களில் போட்டியையும், குடும்பத்தில் பதட்டங்களையும் உருவாக்குகின்றன. உண்மை யில் இந்தப் பயன்பாட்டு மனப்பான்மை, தனிப்பட்ட மற்றும் குடும்ப உறவுகளைப் பாதிக்கின்றது, உறுதியான சமூகத்தின் கட்டமைப்பை வலுவிழக்கச் செய்கின்றது, தனிப்பட்டவரின் ஆதாயத்தில் கவனம் குவிகின்றது.
   இறுதியாக ஒன்று: மனிதர் கடவுளின் சாயலாக ஓய்ந்திருக்கவும் கொண்டாடவும் அழைக்கப்படுகின்றனர். படைப்பு பற்றிய பதிவுகள் இந்த வார்த்தைகளுடன் நிறைவ டைகின்றன: "மேலும் கடவுள் தாம் செய்த வேலையை ஏழாம் நாளில் முடித்திருந் தார். அவர் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவுபெறச்செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். கடவுள் ஏழாம் நாளுக்கு ஆசி வழங்கி, அதைப் புனிதப்படுத் தினார்." கிறிஸ்தவர்களாகிய நமக்கு ஞாயிறே விழா நாள், ஆண்டவரின் நாள், வாராந்திர ஈஸ்டர். இது திருச்சபையின் நாள், நாம் இன்று செய்வதுபோல, அவரில் ஊட்டம்பெறவும், அவரது அன்பில் நுழையவும், அவரது அன்பால் வாழவும், வார்த் தையின் மற்றும் நற்கருணைப் பலியின் மேசையைச் சுற்றி ஆண்டவரால் ஒன்று கூட்டப்பட்ட அவை. இது மனிதர் மற்றும் அவர்களது மதிப்பீடுகளின் நாள்: நட்பு, மகிழ்ச்சி, பண்பாடு, இயற்கை, கலை, விளையாட்டு ஆகியவற்றுடனான நெருக்கம். கொண்டாட்டம், சந்திப்பு, பகிர்தல், திருப்பலியில் பங்கேற்றல் ஆகியவற்றின் மன நிலையை இணைந்து அனுபவிக்கும் குடும்பங்களின் நாள் இது. அன்பு குடும்பங் களே, நவீன உலகின் தாளங்கள் இடைவிடாமல் தொடர்ந்தபோதிலும், ஆண்டவரின் நாளுக் குரிய மனநிலையை இழந்துவிடாதீர்கள்! இது பாலைவனச் சோலையில் நின்று, சந்திப்பின் மகிழ்ச்சியை சுவைப்பதாகவும், கடவுளுக்கான நமது தாகத்தை தணிப்ப தாகவும் உள்ளது.
   குடும்பம், வேலை, கொண்டாட்டம்: இவை கடவுளின் கொடைகளில் மூன்று, இசைவான சமநிலைக்கு கொண்டுவரப்பட வேண்டிய நமது வாழ்வின் மூன்று பரி மாணங்கள். குடும்ப தேவைகளை வேலை நேரங்களுடனும், தாய்மையை தொழில் முறை வாழ்க்கையுடனும், கொண்டாட்டத்தை வேலையுடனும் இசைந்திருக்கச் செய்வது, இந்த சமூகத்தை மனிதத்தன்மையோடு கட்டியெழுப்ப முக்கியமான தாகும். இதில் முதலில் கட்டியெழுப்பவும், இரண்டாவது அழிப்பதை நிறுத்தவும் எப்பொழுதும் முன்னுரிமை அளிக்க வேண்டும். அனைத்திலும் முதன்மையாக நாம் குடும்பத்தில் கற்றுக்கொள்ள வேண்டியது, உண்மையான அன்பில், கடவுளிடம் இருந்து வரும் கனிவு நம்மை அவரோடு இணைக்கிறது, இதனால் இந்த கனிவு நம்மை 'நாமாக' அதாவது நமது பிரிவினைகளை நீக்கி, முடிவில் கடவுளே அனைத் திலும் அனைத்துமாய் இருக்கும் வரை நம்மை ஒன்றாக்குகிறது. - ஆமென்.