Sunday, July 29, 2012

ஜூலை 29, 2012

நன்றி செலுத்தி பகிர்ந்து அளிக்கப்படும் அப்பம்
நற்கருணையை நினைவூட்டுகிறது - திருத்தந்தை

  திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லமான காஸ் தல் கந்தல்போவில் இருந்து மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இஞ் ஞாயிறு நற்செய்தியில் இயேசு அப்பங்களைப் பலுகச் செய்தது குறித்த கருத்தை எடுத்துரைத்தார்.
அன்பு சகோதர, சகோதரிகளே,
   இன்று நாம் யோவான் நற்செய்தியின் 6ஆம் அதி காரத்தை வாசிக்க தொடங்குகிறோம். இது அப்பங் களைப் பலுகச் செய்த நிகழ்வோடு தொடங்குகிறது, பின்னர் கப்பர்நாகும் தொழுகைக்கூடத்தில் இயேசு தன்னை வாழ்வு தரும் உணவாக அடையாளப்படுத்துகிறார். இயேசுவின் செயல்கள் இறுதி இரவுணவுக்கு இணையா னதாக அமைந்துள்ளன: 'அவர் அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார்' என்று நற்செய்தி கூறுகிறது. நன்றி செலுத்தி, பகிர்ந்து அளிக்கப்படும் அப்பம் உலகின் மீட்புக்காக பலியான கிறிஸ்துவின் நற் கருணையை நினைவூட்டுகிறது.
   பாஸ்கா விழா அண்மையில் நிகழ இருந்ததாக நற்செய்தியாளர் குறிப்பிடுகிறார். பார்வை அன்பின் கொடையான சிலுவையையும், இந்த கொடையின் நிலைப்பேறான நற்கருணையையும் நோக்கிச் செல்கிறது. புனித அகஸ்டின் கூறுகிறார்: "கிறிஸ்துவே அன்றி விண்ணக அப்பம் யார்? வானதூதர்களின் ஆண்டவர் மனிதரானதால்தானே, வானதூதர்களின் அப்பத்தை மனிதர் உண்ண முடிகிறது. இது நடக்கவில்லை என்றால், நாம் அவரது உடலை, அவரது சொந்த உடலை, திருப்பீடத்தின் அப்பத்தைப் பெற்றிருக்க முடியாது." நற்கருணை என்பது கடவுளுடன் பெரிய அளவில் நீடிக்கும் சந்திப்பு, ஆண்டவர் நமது உணவாக மாறும்போது, நம்மை அவருக்குள் உருமாற்ற தன்னையே வழங்குகிறார்.
   பலுகல் நிகழ்வில் பெரிய அளவிலான மக்கள் கூட்டத்துக்கு உணவு வழங்கும் இக்கட்டான நிலையில் காணப்படும் சிறுவன், சிறிய அளவில் ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் பகிர்ந்து கொள்கிறான். சிறுவன் தன்னிடம் இருந்தவற்றைக் கொண்டு தொடங்கிய முதல் சிறிய பகிர்தலால்தான் இந்த அற்புதம் நிகழ்ந்தது. இயேசு நம்மிடம் இல்லாததைக் கேட்கவில்லை, ஒவ்வொருவரும் சிறிய அளவில் கொடுத்தாலே நாம் மீண்டும் மீண்டும் அற்புதத்தை நிறைவேற்ற முடியும்: நமது சிறிய அன்பு செயல்களைப் பெருகச்செய்யவும், தனது கொடையில் பங்குபெறுபவர்களாக நம்மை மாற்றவும் கடவுளால் முடியும். மக்கள் அற்புதத்தின் தாக்கத்தைப் பெற் றிருந்தனர்: அவர்கள் இயேசுவை புதிய மோசேயாகவும், அதிகாரத்துக்கு உரியவ ராகவும் பார்த்ததோடு, அவர்கள் உண்ட உணவின் காரணமாக பாதுகாப்பான எதிர் காலத்தையும் கண்டனர். அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக்கொண்டு போய் அரச ராக்க போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார். இயேசு அதிகாரம் செலுத்தும் உலகு சார்ந்த அரசர் அல்ல, உணவுக்கான பசியோடு, உண்மை மற்றும் கடவுளுக்கான பசியையும் போக்க பணியாற்றும் அரசர்.
   அன்பு சகோதர, சகோதரிகளே, உணவை மட்டுமின்றி, உண்மை, கிறிஸ்துவின் அன்பு ஆகியவற்றையும் ஊட்ட ஆண்டவரை வேண்டுவோம். கிறிஸ்துவின் உடலா கிய நற்கருணை திருவிருந்தில் விழிப்புணர்வுடனும், விசுவாசத்துடனும் பங்கேற் போம். உண்மையில் நாம் அவரோடு நெருக்கமாக இணைக்கப்படுகிறோம்: "நற் கருணை நமக்கு உணவாக மாறாமல், நம்மை மறைமுகமாக உருமாற்றுகிறது. கிறிஸ்து நம்மை தன்னோடு இணைப்பதன் மூலம் நமக்கு ஊட்டம் அளித்து, அவ ருக்குள் நம்மை ஈர்த்துக்கொள்கிறார்." அதே நேரத்தில், வன்முறை ஆயுதங்களினால் அன்றி அன்பினாலும் பகிர்தலினாலும் ஏற்றத்தாழ்வுகளை களைய நாம் செபிப்போம். நமக்காகவும், நம் அன்புக்குரியவர்களுக்காகவும் கன்னி மரியாவின் பரிந்துரையை வேண்டுவோம்.
   மூவேளை செபத்துக்கு பின் திருப்பயணிகளிடம் பேசிய திருத்தந்தை, சிரியா மற்றும் ஈராக்கில் அமைதி ஏற்பட அழைப்பு விடுத்தார்: "சிரியாவில் தொடரும் துயரம் நிறைந்த வன்முறை நிகழ்வுகள் கவலை அளிக்கின்றன. அதிகரித்து வரும் உள்நாட்டு கலவரத்தால், இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஓராண்டுக்கும் மேலாக மறை விடங்களில் வசித்து வருகின்றனர். தங்கள் வீடுகளை விட்டுவிட்டு, சொந்த நாட்டி லேயே பலரும் அகதிகளாக வாழும் நிலை ஏற்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. பாதிக் கப்பட்ட அனைவருக்கும் மனிதநேய உதவிகள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது அருகாமையையும் செபங்களை யும் வாக்களிக்கிறேன். இந்த இரத்தம் சிந்தும் வன்முறைகளை நிறுத்தவும், அமைதி மற்றும் ஒப்புரவுக்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, சரியான அரசியல் தீர்வு காணவும் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். ஈராக்கில் கடந்த வாரம் நிகழ்ந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களை எனது செபங்களில் நினைத்துப் பார்க்கிறேன். அங்கு ஒரே நாளில் நூற்றுக்கும் மேற் பட்டோரைக் கொன்ற தீவிரவாத தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கவை. அந்த பெரிய நாடு மீண்டும் நிலைத்தன்மையையும், ஒப்புரவையும் அமைதியையும் காணட்டும்."

Sunday, July 22, 2012

ஜூலை 22, 2012

வழி தவறிப்போன ஆடுகளின் ஆயராக
இயேசு தன்னை வழங்குகிறார் - திருத்தந்தை

  திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லமான காஸ்தல் கந்தல்போவில் இருந்து மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இஞ்ஞாயிறு நற்செய்தியில் இயேசு நல்ல ஆயராக செயல்பட்டது குறித்த கருத்தை எடுத் துரைத்தார். 
   மனித குலத்தின் ஆயராக விளங்கும் கடவுள் நம்மை நல்ல மேய்ச்சல் நிலத்துக்கு, அதாவது 'வாழ்வின் முழுமை'க்கு அழைத்துச்செல்ல விரும்புகிறார். இன்றைய உலகில், ஒவ் வொரு தந்தையும், ஒவ்வொரு தாயும் தங்கள் குழந்தைகளுக் காக விரும்புவது: ஒரு நல்ல வாழ்க்கை, மகிழ்ச்சி, சாதனை. இயேசு இஸ்ரயேலில் வழிதவறிப்போன ஆடுகளின் ஆயராக தன்னை வழங்குகிறார். அந்த வழிதவறிய ஆடுகளின் மத்தியில் மகதலா மரியா, நற்செய்தியாளர் லூக்கா போன்ற புனிதர்களும் இருந்தார்கள். கடவுளின் ஆழ்ந்த குணப்படுத்தல் இயேசுவின் வழியாக வெளிப்பட்டது, அதில் உண்மை அமைதி மற்றும் ஒப்புரவின் கனிகள் அடங்கியுள்ளன. போரின் தீய விதை மத்தியில், கடவுள் அமைதியை உருவாக்குகிறார்.
  மூவேளை செபத்துக்கு பின் திருப்பயணிகளிடம் பேசிய திருத்தந்தை, இந்த வாரம் அமெரிக்காவின் அரோரா டென்வரில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். 12 பேர் கொல்லப்பட்ட இந்த நிகழ்வை 'அறிவற்ற வன்முறை' என்று அவர் விமர்சித்தார். இறுதியாக லண்டனில் ஜூலை 27ந்தேதி நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளைப் பற்றியும் பேசினார்: "ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்கள், விளையாட்டு வீரர்கள், பார்வையாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் சர்வதேச விளையாட்டு நிகழ் வான ஒலிம்பிக் கொண்டு வரும் அமைதி, நல்லெண்ணம் ஆகியவற்றின் விளைவாக உலகெங்கும் அமைதியும் ஒப்புரவும் பரவ நான் செபிக்கிறேன். லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்போர் அனைவர் மீதும் எல்லாம் வல்ல கடவுளின் நிறைவான ஆசீரை நான் வேண்டுகிறேன்."

Sunday, July 15, 2012

ஜூலை 15, 2012

இயேசு சில சீடர்களை தனது பணியில்
நேரடியாக ஈடுபட அழைக்கிறார் - திருத்தந்தை

   இஞ்ஞாயிறு இத்தாலியின் பிரஸ்காட்டி மறைமா வட்ட கதீட்ரல் ஆலயத்துக்கு சென்ற திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அங்கு திருப்பலி நிறைவேற்றி பின் வருமாறு மறையுரை வழங்கினார். 
அன்பு சகோதர, சகோதரிகளே!
   நான் உங்களோடு இணைந்து இன்றைய திருப் பலியை சிறப்பித்து, இந்த மறைமாவட்ட சமூகத் தோடு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
   இன்றைய ஞாயிறு நற்செய்தியில், இயேசு பன்னிரு அப்போஸ்தலர்களையும் ஒரு பணிக்காக அனுப்புகிறார். உண்மையில் 'அப்போஸ்தலர்' என்ற சொல்லுக்கு 'தூதுவர், தூதர்' என்பது பொருள். கிறிஸ்துவின் உயிர்ப்புக்கு பின்பு பெந்தக்கோஸ்தில் தூய ஆவியைக் கொடையாக பெற்ற பிறகு, அவர்களது பணி முழுமையாக உணரப்பட்டது. எப்படி இருந்தாலும், தொடக்கத்தில் இருந்தே பன்னிருவரையும் தனது பணியில் ஈடுபடுத்த வேண்டுமென்று இயேசு விரும்பியது முக்கியத்துவம் வாய்ந்தது. இது அவர்களுக்கு காத்திருந்த மாபெரும் பொறுப்புக்கான ஒரு வாய்ப்பு. உண்மையில் அவரது அன்பை வெளிப்படுத்தும் வகையில், இயேசு சில சீடர்களை தனது பணியில் நேரடியாக ஈடுபட அழைக்கிறார். அவர் மற்ற மனிதர்களின் பங்கேற்பு உதவியைப் புறக்கணிக்கவில்லை, அவர் அவர்களது எல்லைகளையும் பலவீனங்களையும் அறிந் திருந்தாலும் அவர்களைத் தூற்றவில்லை, உண்மையில், அவர்கள் தனது தூதுவர் களாக இருக்கும் மதிப்பை அவர் அளித்தார். இயேசு அவர்களுக்கு அறிவுரை வழங்கி, அவர்களை இருவர் இருவராக அனுப்பியதை நற்செய்தியாளர் சில வாக்கியங்களில் விவரிக்கிறார். முதலாவது பிரிப்பின் ஆவியைப் பற்றியது: திருத்தூதர்கள் பணம் மற்றும் வசதி களோடு இணைந்திருக்கக்கூடாது. பின்பு இயேசு, சீடர்கள் எப்போதும் நல்ல வர வேற்பை பெற முடியாது என்று எச்சரிக்கிறார்: சில நேரங்களில் அவர்கள் புறக் கணிக்கப்படுவார்கள், மேலும் துன்புறவும் நேரிடும். ஆனால் அது அவர்களை பாதிக்கக்கூடாது: தங்கள் வெற்றியைப் பற்றி கவலைப்படாமல், அவர்கள் இயேசு வின் பெயரால் பேசி இறையரசை அறிவிக்க வேண்டும். கடவுளின் கைகளில் அவர் கள் வெற்றியை விட்டுவிட வேண்டும்.
   இன்றைய முதல் வாசகமும், கடவுளின் தூதர்கள் நல்லமுறையில் ஏற்றுக்கொள் ளப்பட மாட்டார்கள் என்ற இதே கருத்தை நமக்கு வழங்குகிறது. இறைவாக்கினர் ஆமோஸ், இஸ்ரயேல் அரசின் புனித இடமான பெத்தேலுக்கு இறைவாக்குரைக்க கடவுளால் அனுப்பப்படுகிறார். அநீதிகளுக்கு எதிராக, குறிப்பாக கடவுளின் உள்ளத் தைப் புண்படுத்தும் வகையில் அரசனும் தலைவர்களும் மேற்கொண்ட வீணான வழிபாடுகளைக் கண்டித்து பேராற்றலுடன் போதிக்கிறார். எனவே பெத்தேலின் குருவாகிய அமட்சியா, ஆமோசை அங்கிருந்து வெளியேறச் சொல்கிறார். அதற்கு ஆமோஸ், இந்த பணியை அவராக தேர்ந்துகொள்ளவில்லை என்றும், ஆண்டவரே தன்னை ஒரு இறைவாக்கினராக உருவாக்கி இஸ்ரயேல் அரசுக்கு அனுப்பிவைத்த தாகவும் பதிலளிக்கிறார். எனவே ஏற்றுகொண்டாலும் நிராகரித்தாலும், மக்கள் கேட்க விரும்புவதை அல்ல, கடவுள் சொல்வதை அவர் போதித்து இறைவாக்குரைப்பார். இதுவே திருச்சபையின் நோக்கமாக உள்ளது: அதிகாரத்தில் உள்ளவர்கள் கேட்க விரும்புவதை அது போதிப்பது இல்லை. மனித ஆற்றலுக்கும், எதிர்பார்ப்புக்கும் எதி ராக அமைந்தாலும் உண்மையும் நீதியுமே அதன் அடிப்படை.
   இதே போன்ற நிராகரிப்பை சில இடங்களில் பன்னிருவரும் எதிர்கொள்ளலாம் என்று இயேசு எச்சரிப்பதை நற்செய்தியில் காண்கிறோம். இவ்வாறு நிகழும்போது, கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிட்டு வெளியேற வேண்டுமென்பது, இரண்டு விதமான பொருள்களை அடையாளப்படுத்துகிறது: அறநெறி சார்ந்த பிரிவு - உங்க ளுக்கு அறிவிக்கப்பட்டவற்றை நீங்கள் நிராகரித்துவிட்டீர்கள், பொருள் சார்ந்த பிரிவு - உங்களிடமிருந்து நாங்கள் எதையும் எங்களுக்காக விரும்பவில்லை என்பவற்றை உணர்த்துகின்றன. மேலும் மனமாற்றத்தை அறிவிப்பதில் மட்டுமே பன்னிருவரின் பணி முடிந்துவிடவில்லை என்று நற்செய்தி சுட்டிக்காட்டுகிறது: இயேசுவின் அறி வுறுத்தல்களுக்கு ஏற்ப அவரது எடுத்துக்காட்டைப் பின்பற்றி, அவர்கள் போதிப்பதுடன் நோயுற்றோரை குணப்படுத்தவும் வேண்டும். உடல் மற்றும் ஆன்மீக ரீதியிலான அக்கறை தேவை. உடல் நோய்களை குணப்படுத்துவது, பேய்களை ஓட்டுவது அதா வது மனித உள்ளத்தை தூய்மைப்படுத்துவது மற்றும் சொந்த கருத்தியல்கள் மூலம் கடவுளை காண முடியாமல் இருப்போரின் ஆன்மக் கண்களை சுத்தம் செய்வது ஆகியவை பற்றி இங்கு பேசப்படுகிறது. உடல் மற்றும் ஆன்மாவை குணமாக்கும் இந்த இரட்டைப் பணியே கிறிஸ்துவின் சீடர்கள் அனைவருடைய நோக்கம். திருத் தூதர் பணி என்பது கடவுளின் வார்த்தையை அறிவிப்பதையும், அவரது நன்மைத் தனத்தை பிறரன்பு செயல்கள், சேவை மற்றும் அர்ப்பணிப்பில் வெளிப்படுத்து வதையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
   அன்பு சகோதர, சகோதரிகளே! உங்களிடையே ஒற்றுமையுடனும், அதே நேரத்தில் திறந்த உள்ளம் கொண்டவர்களாகவும், மறைபணியாளர்களாகவும் இருங்கள். விசுவா சத்தில் உறுதியாக இருங்கள், இறைவார்த்தை மற்றும் நற்கருணை வழியாக கிறிஸ் துவில் வேரூன்றி நில்லுங்கள்; செபத்தின் மக்களாக, திராட்சைக்கொடியின் கிளை களாக இயேசுவோடு இணைந்திருங்கள், அதேநேரத்தில் வெளியே சென்று அவரது செய்தியை எல்லோருக்கும், குறிப்பாக சிறியோர், எளியோர், துன்புறுவோருக்கு கொண்டு செல்லுங்கள். ஒவ்வொரு சமூகத்திலும், ஒருவர் ஒருவரை அன்புசெய் யுங்கள், பிளவுபடாமல் சகோதர சகோதரிகளாக வாழுங்கள், அதன் மூலம் இயேசு தனது திருச்சபையில் வாழ்கிறார் என்பதையும், இறையரசு நெருங்கி வந்துவிட்டது என்பதையும் இந்த உலகம் நம்பும். பிரஸ்காட்டி மறைமாவட்டத்தின் பாதுகாவலர் களாக திருத்தூதர்களில் இருவரான பிலிப்பு, யாக்கோபு ஆகியோர் உள்ளனர். அவர் களின் பரிந்துரையால், விசுவாசத்தில் புதுப்பிக்கப்பட்டு, பிறரன்பு செயல்களில் தெளி வான சான்று பகர்ந்து உங்கள் சமூகம் பயணத்தைத் தொடரட்டும்! ஆமென்.

   திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லமான காஸ்தல் கந்தல்போவில் இருந்து மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், பின்வரும் கருத்துகளை எடுத்துரைத்தார்.
   திருவழிபாட்டு நாட்காட்டியில், ஜூலை 15ஆம் தேதி நாம் புனித பொனவெந்தூரை நினைவுகூர்கின்றோம். அவர் தனது மடல்களில் இவ்வாறு எழுதுகிறார்: "திருச்சபை யின் தொடக்கத்தையும் வளர்ச்சியையும் போன்றே புனித பிரான்சிசின் வாழ்க்கை அமைந்திருந்ததே, அதை நான் விரும்ப காரணம் என்று கடவுள் முன்னிலையில் ஒத்துக்கொள்கிறேன்." இந்த வார்த்தைகள், இயேசு தனது பன்னிரு திருத்தூதர்களை யும் முதல்முறையாக அனுப்பும் இஞ்ஞாயிறு நற்செய்தியோடு நேரடித் தொடர்பு உடையவை. புனித மாற்கு நமக்கு கூறுகிறார்: 'இயேசு பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார். ... "பய ணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக்கொண்டு போகவேண்டாம்'' என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.' அசிசி புனித பிரான்சிஸ் தனது மனமாற்றத்துக்கு பிறகு, இந்த நற்செய்தியை நடைமுறைப்படுத்தி, இயேசுவின் நம்பிக்கைக்குரிய ஒரு சாட்சியாக மாறியதுடன், புனித பொனவெந்தூர் கூறுவது போன்று, "சிலுவை மறைபோருளோடு சிறப்பான விதத்தில் இணைந்து, 'மறு கிறிஸ்து'வாக மாற்றம் பெற்றார்."
   புனித பொனவெந்தூரின் முழு வாழ்க்கையும், அவரது இறையியலும் இயேசு கிறிஸ்துவை அடிப்படை உந்துதலாக கொண்டே அமைந்திருந்தன. இந்த கிறிஸ்து மைய சிந்தனையை இன்றைய திருப்பலியின் இரண்டாம் வாசகத்தில் காணலாம். பவுல் கொரிந்தியருக்கு எழுதிய திருமுகத்தில் காணப்படும் புகழ்பெற்ற பாடல் இவ்வாறு தொடங்குகிறது: "நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றி! அவர் விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி அனைத்தை யும் கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார்." பின்பு, இந்த ஆசி கிறிஸ்து வழியாக வடிவமைக்கப்பட்டுள்ள விதத்தை நான்கு படிநிலைகளில் திருத்தூதர் நமக்கு உணர்த்தி காண்பிக்கிறார். "உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார். கிறிஸ்து இரத்தம் சிந்தி தம் அருள் வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார். கிறிஸ்து வழியாய் கடவுளுடைய மாட்சியைப் புகழ்ந்துபாடுமாறு அவரது உரிமைப்பேற்றுக்கு உரியவரானோம். நற்செய்தியைக் கேட்டு அவர்மீது நம்பிக்கை கொண்டு, வாக்களிக்கப்பட்ட தூய ஆவியால் அவருக் குள் முத்திரையிடப்பட்டிருக்கிறோம்." பவுலின் பார்வையில் வரலாற்றை விளக் கும் இந்த பாடலே புனித பொனவெந்தூர் திருச்சபையைப் பரப்ப உதவியது: அவர் வரலாறு முழுவதிலும் கிறிஸ்துவை மையப்படுத்தி இருக்கிறார். இயேசுவில், கடவுள் பேசியிருப்பதுடன் அனைத்தையும் தந்திருக்கிறார். அவர் குறையாத புதையலாக இருப்பதால், அவரது மெய்யான மறைபொருளை வெளிப்படுத்துவதை தூய ஆவி எப்போதும் நிறுத்துவதில்லை. எனவே, கிறிஸ்து மற்றும் திருச்சபையின் பணி ஒருபோதும் பின்னடைவதில்லை, எப்போதும் முன்னோக்கியே செல்கிறது.
   அன்பு நண்பர்களே, கடவுளின் அழைப்புக்கு தாராள மனதுடன் செவிசாய்த்து, அவரது மீட்பின் நற்செய்தியை நமது வார்த்தைகளாலும், அனைத்துக்கும் மேலாக நமது வாழ்வாலும் அறிவிக்க உதவுமாறு, நாளை நாம் சிறப்பிக்கும் தூய கார்மேல் அன்னை மரியா, புனித பிரான்சிஸ் மற்றும் புனித பொனவெந்தூர் ஆகியோரின் பரிந்துரையை வேண்டுவோம்.
   மூவேளை செபத்துக்காக இங்கு வந்திருக்கும் உங்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன். இஞ்ஞாயிறு நற்செய்தியில், இயேசு பன்னிருவருக்கும் போதிக்க வும், தீய ஆவிகளை விரட்டவும் அதிகாரம் அளிக்கிறார். அவரது வல்லமையை மட்டும் நம்பியே, அவர்களின் முயற்சி பலனளிக்கிறது. நமது வாழ்வை கிறிஸ்துவில் வேரூன்றியதாக வைத்திருக்க போராடும்போது, நாமும் நற்செய்தியின் பயனுள்ள கருவிகளாக திகழ முடியும். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக!

Sunday, July 8, 2012

ஜூலை 8, 2012

இந்த பிரபஞ்சத்தின் மாபெரும்
அற்புதம் இயேசுவே - திருத்தந்தை

  திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லமான காஸ்தல் கந்தல்போவில் இருந்து மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இஞ் ஞாயிறு நற்செய்தியில் இயேசு தனது சொந்த ஊர் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாதது பற்றிய கருத்து களை எடுத்துரைத்தார். 
   "சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்." உண்மையில் இது புரிந்துகொள்ளக் கூடிய ஒன்று தான். ஏனெனில் மனித நிலையில் புகழை விரும்புகின்றபோது, அதைக் கடந்து தெய்வீகப் பரிமாணத்துக்கு திறந்திருப்பது கடின மானது. இயேசு உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர, நாசரேத்தில் எந்த அற்புதத் தையும் செய்ய முடியவில்லை. ஏனெனில் அந்த மக்கள் ஆன்மீக பரிமாணத்துக்கு மூடப்பட்டிருந்தார்கள். இறைவன் நிகழ்த்தும் புதுமைகளைப் பெற வேண்டுமெனில் அவர்மீது நம்பிக்கை கொண்டு அவருக்குத் திறந்த மனம் உள்ளவர்களாய் வாழ்வது அவசியம் என்பதை இயேசு நசரேத்தூரில் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வு கோடிட்டுக் காட்டுகின்றது. கிறிஸ்துவின் அற்புதங்கள் வல்லமையின் வெளிப்பாடு அல்ல, மாறாக இறையன்பின் அடையாளங்கள், மனித ரிடத்தில் விசுவாசத்தைக் காணும் போது அவை நிகழும்.
   தனது சொந்த மக்களின் நம்பிக்கையின்மையைக் கண்டு இயேசு வியப்புற்றார். உண்மையின் ஒளியை அவர்கள் கண்டறிய முடியாமல் போனது எப்படி? நமது மனிதத்தன்மையைப் பகிர்ந்துகொண்ட கடவுளின் நன்மைத்தனத்துக்கு அவர்கள் ஏன் தங்களைத் திறக்கவில்லை? உண்மையில், நாசரேத்து இயேசு என்ற மனிதரில் கடவுள் கண்ணுக்கு தெரிபவராக வந்தார்; அவரில் கடவுள் முழுமையாக வாழ்கிறார். நாமும் எப்பொழுதும் வேறு அடையாளங்களையும், வேறு அற்புதங்களையும் தேடும் போது, அவரே உண்மையான அடையாளம் என்பதை நாம் உணர்வதில்லை, 'கடவுள் மனிதரானார்'; அவரே இந்த பிரபஞ்சத்தின் மாபெரும் அற்புதம்: கடவுளின் அன்பு அனைத்தும் ஒரு மனித இதயத்தில், ஒரு மனித முகத்தில் மறைக்கப்பட்டிருக்கிறது.
   நற்செய்தியை விளக்கிய பின்னர், திருப்பயணிகளை வாழ்த்திய திருத்தந்தை, "விசுவாசத்தால் ஊட்டம் பெற்ற திறந்த மற்றும் எளிய இதயத்தோடு நாம் வாழும் போது, நமது வாழ்வில் கடவுள் உடனிருப்பதை நாம் கண்டுணர்ந்து அவரது திரு வுளத்தைப் பின்பற்ற முடியும் என்பதை இன்றைய நற்செய்தியில் இயேசு நமக்கு நினைவுபடுத்துகிறார்" என்று கூறினார். இறுதியாக அவர், அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.

Sunday, July 1, 2012

ஜூலை 1, 2012

மனிதரின் உள்ளங்களை குணப்படுத்தி
மீட்பளிக்கவே இயேசு வந்தார் - திருத்தந்தை

   உரோம் தூய பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த ஏரா ளமான மக்களுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இஞ்ஞாயிறு நற்செய் தியை (மாற்கு 5:21-43) அடிப்படையாகக் கொண்டு தன் கருத்துகளை எடுத்துரைத்தார்.
   இந்த ஞாயிறு மாற்கு நற்செய்தியாளர், தொழு கைக்கூடத் தலைவர்களில் ஒருவரான யாயிரின் மகள் மற்றும் இரத்தப்போக்கால் வருந்திய பெண் ஆகியோருக்கு இயேசு நலமளித்த நிகழ்வை எடுத் துரைக்கிறார். இந்த இரு நிகழ்வுகளில் இரண்டு நிலை விளக்கங்கள் உள்ளன. முழுமையாக உடல் சார்ந்தது: மனிதரின் துன்பங்களை சந்திக்க இயேசு கீழே குனிந்து, உடலை நலமாக்குகிறார்; மற்றும் ஆன்மா சார்ந் தது: மனித உள்ளத்தை குணப்படுத்தி மீட்பளிக்க வந்த இயேசு, அவரில் நம்பிக்கை வைக்குமாறு கேட்கின்றார்.
   முதல் பகுதியில், யாயிரின் மகள் இறந்துவிட்டாள் என்ற செய்தி கிடைத்ததும், தொழுகைக்கூடத் தலைவரிடம் கூறுகிறார்: "அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்!" இயேசு அவரை அழைத்துக்கொண்டு, சிறுமி இருந்த இடத்திற்கு அவரோடு சென்று, "சிறுமியே, உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு!" என்று கூறுகிறார். உடனே அவள் எழுந்து நடக்கிறாள். இந்த வார்த்தைகளைப் பற்றி, இயேசுவின் மீட்பளிக்கும் ஆற்றலைப் பற்றி புனித ஜெரோம் இவ்வாறு கூறுகிறார்: "சிறுமியே, என் வழியாக எழுந்திடு: உனது சொந்த தகுதியால் அல்ல, எனது அருளால். எனவே என் வழியாக உயிர்த்தெழு: நலமடைதல் உனது நற்செயலைச் சார்ந்தது அல்ல."
   இரண்டாவது பகுதியில் உள்ள இரத்தப்போக்கால் வருந்திய பெண்ணைப் பற்றிய செய்தி, இயேசு மனிதருக்கு முழுமையில் விடுதலை அளிக்க வந்தார் என்பதை வலியுறுத்துகிறது. உண்மையில் இந்த அற்புதம் இரண்டு படிகளில் நடக்கிறது: முதலாவது குணப்படுத்துதல் உடல் சார்ந்தது, ஆனால் இது (இரண்டாவது) ஆழ்ந்த குணப்படுத்துதலோடு தொடர்புடையது, அது கடவுளுக்கு தங்களை நம்பிக்கையோடு திறப்பவர்களுக்கு அவரது அருளை அளிக்கிறது. இயேசு அப்பெண்ணிடம் கூறினார்: "மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு!"
   நலமாளித்தல் பற்றிய இந்த இரண்டு நிகழ்வுகளும், கிடைமட்டமான பொருள் சார்ந்த வாழ்க்கைப் பார்வையை வெற்றிகொள்ள நமக்கு அழைப்பு விடுக்கின்றன. நமது பிரச்சனைகளைத் தீர்க்குமாறும், தேவைகளை நிறைவேற்றுமாறும் நாம் அடிக்கடி கடவுளைக் கேட்கிறோம் - அது சரியே! ஆனால் நாம் அதிகமாக கேட்க வேண்டியது எப்பொழுதும் உறுதியான நம்பிக்கை, ஏனெனில் ஆண்டவர் நமது வாழ்வைப் புதுப்பிக்கிறார்; மேலும் அவரது அன்பில் நம்பிக்கை வைப்போம், அவரது அருள் நம்மைக் கைவிடாது.
   மனிதரின் துன்பங்களை கவனிக்கிற இயேசு, நோயாளிகள் தங்கள் சிலுவைகளை சுமக்க உதவுகிற மருத்துவர்கள், நலவாழ்வு பணியாளர்கள், மருத்துவமனைகளில் மேய்ப்புப்பணி புரிவோர் உள்ளிட்ட அனைவரையும் நாம் நினைத்து பார்க்கத் தூண்டு கிறார். அங்கு 'நிறைந்திருக்கும் அன்பு', துன்புருவோருக்கு அமைதியையும் நம்பிக்கை யையும் கொண்டு வருகிறது. 'அன்பே கடவுள்' என்ற சுற்றுமடலில், "இந்த விலை மதிப்பற்ற சேவையில் ஒருவர் முதலில் தொழில் ரீதியாக தகுதி வாய்ந்தவராக இருக்க வேண்டும்; இது முதன்மையும் அடிப்படையானதுமாக இருந்தாலும், இது மட்டுமே போதாது" என்று சுட்டிக்காட்டி இருக்கிறேன்.
   இந்த சேவையில் உண்மையில், மனிதநேயமும், உள்ளார்ந்த அக்கறையும் முக்கியமாக தேவைப்படுகின்றன. எனவே, தொழில் ரீதியான பயிற்சியோடு கனி வான உள்ளத்தை உருவாக்குவதும் இத்தகையப் பணியாளர்களுக்கு அனைத்துக்கும் மேலான தேவை; இது அவர்களை கிறிஸ்துவில் உள்ள கடவுளை எதிர்கொள்ளச் செய்து, அவர்கள் அன்பில் நிலைத்திருக்கவும், தங்கள் ஆன்மாவைப் பிறருக்கு திறக்க வும் வழிநடத்திச் செல்ல வேண்டும்.
   நமது விசுவாசப் பயணத்திலும், நமது அன்பை செயலாக்குவதில், குறிப்பாக தேவையில் இருப்போருக்கு வெளிப்படுத்துவதிலும் கன்னி மரியாவைத் துணைக்கு அழைப்போம். உடலளவிலும், ஆன்ம வழியிலும் துன்புறுவோருக்காக அவரது பரிந் துரையையும் வேண்டுவோம்.