Sunday, September 30, 2012

செப்டம்பர் 30, 2012

கத்தோலிக்கரல்லாதவர் நன்மை செய்யும்
பொழுது அகமகிழுங்கள்! - திருத்தந்தை

   காஸ்தல் கந்தல்போவிலுள்ள திருத்தந்தையரின் கோடை விடு முறை இல்ல வளாகத்தில் இஞ்ஞாயிறு நண்பகலில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பின்வருமாறு மூவேளை செப உரை வழங்கினார்.
   இன்றைய ஞாயிறு நற்செய்தி ஆழ்ந்த பொருள் கொண்டதாக உள்ளது. இயேசுவின் சீடராக இல்லாத ஒருவர், இயேசுவின் பெய ரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, இளமையும் இயேசுவின்மீது தீவிரப்பற்றும் கொண்ட திருத்தூதர் யோவான் அவரைத் தடுக்கப் பார்த்தார், ஆனால் இயேசு அதற்கு அனுமதிக்கவில்லை. ஒரு மறை போதகருக்கு ஒரு குவளைத் தண்ணீர் கொடுப்பது போன்ற சிறிய சிறிய செயல்களால் இறையாட்சியோடு மற்றவர்கள் ஒத்துழைக் கும்போது நல்லதும் அற்புதம் நிறைந்த செயல்களும்கூட திருச்சபைக்கு வெளியே நடக்கும் என்று இயேசு தம் திருத்தூதர்களுக்கு விளக்க விரும்பினார். புனித அகுஸ்தீன் இவ்வாறு எழுதுகிறார்: "கத்தோலிக்கத் திருச்சபையில் கத்தோலிக்கம் இல்லாத ஒன்றை ஒருவர் கண்டறிய முடிவது போல, கத்தோலிக்கத் திருச்சபைக்கு வெளியே கத்தோலிக்கமாக இருப்பதை ஒருவரால் கண்டறிய முடியும்." எனவே, திருச்சபைக்கு வெளியே இருக்கும் யாராவது கிறிஸ்துவின் பெயரால் நன்மையா னதைச் செய்யும்போது திருச்சபையின் உறுப்பினர்கள் பொறாமை கொள்ளாமல் அகமகிழ வேண்டும், அதே வேளையில் இவ்வாறு நல்லதைச் செய்பவர்கள் சரியான எண்ணத்தோடும் மரியாதையோடும் செய்ய வேண்டும். உடனிருப்பவர்கள் தூய்மை யையும் நன்மைத்தனத்தையும் அடையும்போது கத்தோலிக்கர் பொறாமை கொள்ளக் கூடும். அதற்கு பதிலாக, திருச்சபைக்குள்ளே பொறாமைப்படுவதை விட்டுவிட்டு ஒரு வர் ஒருவரை எப்பொழுதும் பாராட்டவும் மதிக்கவும் வேண்டும். திருச்சபையிலும் உலகி லும் நம் ஆண்டவர் ஆற்றும் அருஞ்செயல்களுக்காக அவரைப் புகழ்வோம்.

Wednesday, September 26, 2012

செப்டம்பர் 26, 2012

புதன் மறைபோதகம்: இயேசுகிறிஸ்து திருவழிபாட்டின்
துணையுடன் மீட்புப்பணியை ஆற்றுகிறார் - திருத்தந்தை

   காஸ்தல் கந்தல்போவிலிருந்து வத்திக்கான் தூய பேதுரு பேராலயத்திற்கு வந்து புதன் பொது மறை போதகம் வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இவ்வாரமும் செபம் குறித்த தன் சிந்தனைகளைத் தொடர்ந்தார்.
   கடந்த சில வாரங்களாக புதன் மறைபோதகங் களில், செபம் குறித்து திருவிவிலியத்தில் கூறப்பட் டுள்ளவை குறித்து ஆழமாகச் சிந்தித்து வரும் நாம், இன்று செபத்தின் மற்றொரு விலைமதிப்பற்ற ஆதா ரமாகிய திருவழிபாடு குறித்து நம் பார்வையைத் திருப்புவோம். திருவழிபாடு என்ற கிரேக்கச் சொல், 'மக்களுக்காக மக்களால் ஆற்றப்பட்ட பணி' என்ற அர்த்தத்தைக் கொண்டுள்ளது. இங்கு 'மக்கள்' என்பது இறைவனின் புதிய மனிதக் குலத்தைக் குறிக்கின்றது. இந்தப் புதிய மனுக்குலம் இயேசுகிறிஸ்துவால் கொண்டு வரப்பட்டது. இந்த மனுக்குலம் தன்னிலையிலேயே உருவானதோ, இரத்த தொடர்பு கொண்டதோ, நாடு மற்றும் நில எல்லைகளால் கட்டுப்பட்டதோ அல்ல; மாறாக, இயேசுவின் பாஸ்கா மறையுண்மையால் உருவாக்கப்பட்டது. திருவழிபாடு என்பது 'இறைவனின் செயல்'. இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் உரைப்பதுபோல், நம் மீட்பரும் தலைமைக்குருவுமான இயேசுகிறிஸ்து, திருவழிபாட்டின் துணைகொண்டு, தன் மீட்புப்பணியை திருச்சபைக்குள் இருந்துகொண்டு திருச்சபையோடு, திருச்சபை வழியாகத் தொடர்ந்து ஆற்றுகிறார்.
   கடவுள் செயலாற்றுகிறார், நாமும் அச்செயல்பாட்டில் இணைகிறோம், பலன்பெறு கிறோம். இதுவே, திருவழிபாட்டின் மிக உன்னத வியத்தகு நிகழ்வு. இறைவனே அனைத்திற்கும் முதன்மையானவர் என்பதை திருவழிபாடு நமக்கு நினைவூட்டு கிறது. அதற்கேற்ப இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கமும் தன் பணிகளை, திரு வழிபாடு குறித்த கலந்துரையாடலுடனேயே தொடங்கியது. திருவழிபாட்டின் அடிப்ப டைத் தத்துவம் என்னவென்றால், தந்தையாம் இறைவனை நோக்கிய தொடர்புறவே ஆகும். தந்தையின் மீட்பு அன்பானது, அவர் மகனின் மரணம் மற்றும் உயிர்ப்பில் தன் உச்ச நிலையை அடைகிறது. திருவழிபாட்டிலேயே நம் இதயங்களை நாம் மேல் நோக்கி எழுப்புகிறோம். திருவழிபாட்டில் நம்முள் எழும்பும் செபத்தில் நாம் நமது சகோதரர்களுடன் ஒன்றிணைந்து கூடி, இறைவார்த்தைக்கு நம்மைத் திறந்தவர் களாக்குகிறோம். இச்செபமானது இறைமகன் வழி, தூய ஆவியில் இறைத்தந்தையை நோக்கியதாக உள்ளது.
   இவ்வாறு தன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் உட்பட பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்திருந்த திருப்பயணிகளை வாழ்த்தி, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீ ரையும் அளித்தார்.

Sunday, September 23, 2012

செப்டம்பர் 23, 2012

கிறிஸ்துவின் கல்வாரி அன்புச்செயல் நமக்கு
அளவுகோலாக இருக்கட்டும்! - திருத்தந்தை

   திருத்தந்தையரின் கோடை இல்லமான காஸ்தல் கந்தல்போவில் விடுமுறையை செலவிட்டு வரும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை (மாற்கு 9:30-37) மையமாக வைத்து மூவேளை செப உரை வழங்கினார்.
   இந்த ஞாயிறுக்கான நற்செய்தி பகுதியில் சில அறிவிப்புகள் இடம்பெறுகின்றன. இயேசு கூறுகிறார்: "மானிட மகன் - இது அவரையேக் குறிக்கிறது - மக்க ளின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்; அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்'' ஆனால் அவர் சொன்னது சீடர்களுக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்கவும் அவர்கள் அஞ்சினார்கள். இயேசுவுக்கும் அவரது சீடர்களுக்கும் இடையே ஆழ்ந்த இடைவெளி இருந்தது. இன்னும் தெளிவாகக் கூறினால் இயேசுவும் அவரது சீடர்களும் இருவேறு சிந்தனை ஓட்டத்தில் இருந்தனர். இதனால் குரு சொன்னதை சீடர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இயேசு தனது பாடுகளையும், மரணத்தையும் இரண்டாவது முறை அறிவித்த பிறகு, சீடர்கள் தங்களுள் பெரியவர் யார் என்பதைப் பற்றி வழியில் ஒருவரோடு ஒருவர் விவாதிக்க தொடங்கினார்கள்.
   இறைவாக்கினர் எசாயா வழியாக, "என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல" என்று கடவுள் மொழிந்தபடியே, நம்முடையதில் இருந்து கடவுளின் நியதி எப்பொழுதும் வேறுபட்டதாக உள்ளது. இந்த காரணத்தால் நம் ஆண்டவரைப் பின்செல்வதற்கு, ஒவ்வொருவரின் எண்ணங்களி லும் வாழும் முறையிலும் மாற்றம் கொண்டுவரும் ஓர் ஆழமான மனமாற்றம் தேவைப்படுகின்றது, இதற்கு நமது இதயங்கள் ஒளிபெற்று உள்ளார்ந்த மாற்றம் பெறுவதற்கு அவற்றைத் திறந்துவைக்க வேண்டும். கடவுளும் மனிதரும் வேறுபடு வதில் தற்பெருமை முக்கியமானதாக இருக்கின்றது. மிகவும் சிறியவர்களாக இருக்கும் நாம் முதலில் பெரியவர்களாக இருப்பதற்கு விரும்புகிறோம், ஆனால் உண்மையிலேயே பெரியவரான கடவுள் தம்மைத் தாழ்த்துவதற்கு அஞ்சாமல் தம்மை கடையராகவும் ஆக்கினார். இதில் கன்னி மரியா முழுமையாக கடவுளோடு ஒத்திருந்தார். அன்பு மற்றும் தாழ்ச்சியின் வழியில் நம்பிக்கையோடு இயேசுவைப் பின்பற்றி வாழ அவரது உதவியை வேண்டுவோம்.
   இன்றைய நற்செய்தியில், நம் ஆண்டவர் மரணத்துக்கு கையளிக்கப்பட இருப்ப தையும், நமது மீட்புக்காக மீண்டும் உயிர்த்தெழப் போவதையும் தன் சீடர்களுக்கு வெளிப்படுத்துகிறார். அனைவருக்கும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண் டராகவும் மாறுவதில், கல்வாரியில் வெளிப்பட்ட கிறிஸ்துவின் மேலான அன்புச் செயல் நமக்கு உண்மையான அளவுகோலாக இருக்கட்டும்! உங்களையும், உங்கள் அன்புக்குரியவர்களையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக!

Wednesday, September 19, 2012

செப்டம்பர் 19, 2012

புதன் மறைபோதகம்: லெபனான் திருச்சபையின் விசுவாசம் மிகவும் வியப்பளிக்கிறது - திருத்தந்தை

   கடந்த சில வாரங்களாக, தன் புதன் பொது மறை போதகங்களில், செபம் குறித்து திருவெளிப்பாட்டு நூலில் உள்ளவை பற்றித் தன் சிந்தனைகளை மக்க ளுடன் பகிர்ந்து வந்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இவ்வாரம் தன் லெபனான் திருப்பயணம் குறித்து எடுத்துரைத்தார்.
   லெபனான் நாட்டிற்கான என் அண்மைத் திருப் பயணம் குறித்து உங்களுடன் நான் பகிந்துகொள்ள விரும்புகிறேன். மத்திய கிழக்குப் பகுதிக்கான சிறப்பு ஆயர் பேரவை இறுதித் தீர்மானங்களை லெபனான் மற்றும் மத்திய கிழக்குப்பகுதி முழுவதும் இருக்கும் திருச்சபைத் தலைவர்களிடம் ஒப்படைப்பது இப்பயணத்தின் முதல் நோக்கமாக இருந்தது. அதேவேளை, அப்பகுதி கிறிஸ்தவ சபைகளின் பிரதி நிதிகளையும், கிறிஸ்தவ சமூகங்களையும், இசுலாமிய மதத் தலைவர்களையும் சந்திக்கும் வாய்ப்பும் கிட்டியது. மத்திய கிழக்குப் பகுதியின் துன்பகரமான சூழல்க ளின் முன்னால் நின்று கொண்டு என்னால் என் இதயத்திலிருந்து பேச முடிந்ததுடன், அம்மக்களின் அமைதிக்கான நியாயமான ஏக்கத்திற்கு என் செப ஊக்கத்தையும் வழங்க முடிந்தது. தலத் திருச்சபையின் விசுவாசம் என்னை மிகப்பெரும் அளவில் வியப்புக்குள்ளாக்கியது. பெருந்துன்ப சூழல்களில் பகைமையின் மேல் அன்பையும், பழிவாங்கலின் மேல் மன்னிப்பையும், பிரிவினைகளின் மேல் ஒன்றிப்பையும், வெற் றியாகப் பெற்றுக் கொண்டாட உதவும் பலத்தை, தங்கள் பார்வையை சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவில் நிலைநிறுத்துவதன் மூலம் பெற்றுக் கொள்ளுமாறு அப் பகுதியின் விசுவாசிகளுக்கு நான் விண்ணப்பம் விடுத்தேன். என்னை மிகுந்த ஆர்வத் துடன் வரவேற்ற இசுலாமியத் தலைவர்களுக்கு என் நன்றியை வெளியிட ஆவல் கொள்கிறேன். அவர்களுக்கு நான் ஒன்றிப்பு மற்றும் பேச்சுவார்த்தைகளின் செய்தியை முன்வைத்தேன். இறுதியாக, என் திருப்பயணம் நன்முறையில் வெற்றியடைய உத விய அனைவருக்கும் மீண்டுமொரு முறை நன்றி கூறுவதோடு, மத்திய கிழக்குப் பகு தியின் அனைத்து அன்புநிறை மக்களுக்கும் என் செபம் மற்றும் அன்பின் உறுதியை வெளிப்படுத்துகிறேன்.
   இவ்வாறு புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Sunday, September 16, 2012

செப்டம்பர் 16, 2012

மத்திய கிழக்குப் பகுதி முழுவதற்கும் அமைதியின்
பணியாளர்களை இறைவன் தர வேண்டும் - திருத்தந்தை

   லெபனான் நாட்டு திருப்பயணத்தின் இறுதி நாளான இன்று பெய்ரூட்டின் பரந்த வெளியில் திருப்பலி நிகழ்த்திய திருத் தந்தை 16ம் பெனடிக்ட், இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து பின்வருமாறு மறையுரை ஆற்றினார்.
   இயேசுவைப் பின்செல்வது என்பது ஒவ்வொருவரும் அவரவர் சிலுவையைச் சுமந்து கொண்டு அவரின் அடிச்சுவடுகளைப் பின்செல்வதாகும். அனைவருக்கும் தன்னைப் பணியாளராக் கிய இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளில் நடப்பதைத் தேர்ந்து கொள்வது அவருக்கு நெருக்கமாக இருந்து அவரது சொற்க ளைக் கவனமுடன் கேட்டு நாம் செய்யும் அனைத்திற்கும் அவற்றிலிருந்து தூண்டுதல் பெறுவதாகும். வருகிற அக்டோபர் 11ந்தேதி தொடங்கும் விசுவாச ஆண்டை அறிவித்த போது ஒவ்வொரு விசுவாசியும் இந்த உண்மையான மனமாற்றப் பாதையைத் தேர்ந்து கொள்வதற்கு தன்னை அர்ப் பணிக்குமாறு விரும்பினேன். இயேசுவின் சாயலில் அனைத்து கிறிஸ்தவர்களும் உண்மையான ஊழியர்களாக வேண்டும். இதுவே திருச்சபையின் பணியாகும். தொடர் வன்முறை மரணத்தையும் அழிவையுமே விட்டுச் செல்லும். உலகத்தில் நீதிக்கும் அமைதிக்கும் சேவையாற்ற வேண்டிய அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது. இந்த மத்திய கிழக்குப் பகுதி முழுவதற்கும் அமைதி மற்றும் ஒப்புரவின் பணியாளர்களை இறை வன் தர வேண்டுமென்று செபிக்கிறேன். இதன்மூலம் அனைத்து மக்களும் மாண்புடன் அமைதியில் வாழ்வார்கள். கிறிஸ்தவர்கள், நன்மனம் கொண்ட எல்லாருடன் சேர்ந்து ஒத்துழைத்து செய்ய வேண்டிய பணி இதுவே. நீங்கள் எங்கெங்கு இருந்தாலும் அமைதியை ஏற்படுத்துபவர்களாக இருங்கள் என்பதே உங்கள் எல்லாருக்கும் நான் விடுக்கும் அழைப்பாகும். உடல் ரீதியாக அல்லது ஆன்மீக ரீதியாக துன்பப்படும் என் அன்பு சகோதர சகோதரிகளே, உங்களது துன்பங்கள் வீணாய்ப் போகவில்லை. உங்க ளது துன்பங்களோடு இயேசு அருகில் இருக்கிறார். அவர் எப்பொழுதும் உங்களுக்கு அருகில் இருக்கிறார்.

   இன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வழங்கிய மூவேளை செப உரை பின்வருமாறு: கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் நாடிச்செல்லும் லெபனான் அன்னை மரியாவிடம் செபிப்போம். லெபனன் மக்களாகிய உங்கள் எல்லாருக்கும், சிறப்பாக, சிரியா மற்றும் அண்டை நாடுகளின் மக்கள் அனைவருக்கும் அமைதி எனும் கொடையை அந்த அன்னை தமது திருமகனிடம் பெற்றுத் தருவாராக! சண்டைகளும் வன்முறையும் எவ்வளவு துன்பங்களை வருவிக்கின்றன என்பது உங்களுக்கு தெரியும். விதவை கள் மற்றும் அனைதைகளின் அழுகுரல்களோடு ஆயுதங்களின் இரைச்சல் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருப்பது வருத்தமாக இருக்கின்றது. மக்களின் வாழ்வை வன் முறையும் வெறுப்பும் ஆக்ரமித்துள்ளது. இதற்கு பெண்களும் சிறாரும் முதலில் பலிகடா ஆகின்றனர். இவ்வளவு கொடுமைகள், இத்தனை இறப்புகள் ஏன்? ஒவ்வொரு மனிதரின் மாண்பும் உரிமைகளும் மத உரிமையும் மதிக்கப்படும் விதத்தில் தீர்வு களுக்கு பணி செய்யுமாறு அரபு நாடுகளுக்கும், அனைத்துலகச் சமுதாயத்துக்கும் அழைப்பு விடுக்கிறேன். அமைதியைக் கட்டியெழுப்ப விரும்புகிறவர்கள், மற்றவரில் தீமை ஒழிக்கப்படுவதைக் காண வேண்டும். இது எளிதானதல்ல, ஆயினும் அமைதி யைக் கட்டியெழுப்ப இது தேவை. உங்களது லெபனன் நாட்டுக்கும், சிரியாவுக்கும், மத்திய கிழக்குக்கும் அமைதிநிறை இதயங்கள், ஆயுதங்கள் மௌனம் அடைவது மற்றும் எல்லா வன்முறையும் நிறுத்தப்படும் கொடையை இறைவன் அருள்வாராக! அனைவரும் சகோதரர்கள் என்பதை மனிதர்கள் புரிந்து கொள்வார்களாக! முதுபெரும் தலைவர்கள் மற்றும் ஆயர்களுடன் இணைந்து மத்திய கிழக்குப் பகுதியை அன்னை மரியாவிடம் நான் ஒப்படைக்கின்றேன்.

Wednesday, September 12, 2012

செப்டம்பர் 12, 2012

புதன் மறைபோதகம்: மரணத்தின் மீது ஆண்டவர் கண்ட
வெற்றியே வரலாற்றின் திறவுகோல் - திருத்தந்தை

   திருத்தந்தையரின் கோடை இல்லமான காஸ்தல் கந்தல்போவில் விடுமுறையை செலவிட்டு வரும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இன்று வத்திக்கான் வந்து, திருத்தந்தை ஆறாம் பவுல் மண்டபத்தில் விசுவாசிகளை சந்தித்து, பொது மறைபோதகத்தை வழங்கினார். திருவெளிப்பாடு நூலில் காணப்படும் செபம் குறித்த தன் மறைக்கல்விப் போதனைகளை இவ்வாரமும் திருத்தந்தை தொடர்ந்தார்.
    வரலாற்றில் இடம்பெறும் திருச்சபையின் திருப் பயணத்தில் செபத்தின் முக்கியத்துவம் குறித்து திருவெளிப்பாடு நூல் கூறுவதை இன்று நோக்குவோம். இறையரசைப் பரப்புவதற்கான இறைத்திட்டத்தின் ஒளியில் வரலாற்று நிகழ்வுகளை ஆழ்ந்து உய்த்துணர செபம் நமக்கு உதவுகிறது. ஏழு முத்திரைகள் பொறிக்கப்பட்டு மூடப்பட்டிருந்த புத்தகம் இறைத்திட்டத்தின் உருவக மாகக் காட்டப்பட்டுள்ளது. சிலுவையில் அறையுண்டு, மரித்து, உயிர்த்த நமது ஆண்டவராம் ஆட்டுக்குட்டியால் மட்டுமே அப்புத்தகம் திறக்கப்பட முடியும். பாவம் மற்றும் மரணத்தின் மீது ஆண்டவர் கண்ட இறுதி வெற்றியே, அனைத்து வரலாற்றின் திறவுகோல் என்பதைச் செபத்தில் நாம் காண்கிறோம். இந்த வெற்றிக்காக இறைவ னுக்கு நாம் நன்றி கூறும் அதேவேளை, நம் இவ்வுலகப் பயணத்திற்கான இறை அருளைத் தொடர்ந்து இறைஞ்சுகிறோம்.
   வாழ்வின் தீமைகளின் மத்தியில் இறைவன் நம் செபங்களுக்கு செவிமடுக்கிறார். நம் பலவீனங்களை அகற்றி நம்மைப் பலப்படுத்தி அவரின் இறைமை சார்ந்த வல்ல மையில் நம்பிக்கைக்கொள்ள உதவுகிறார். 'ஆம், விரைவாகவே வருகிறேன்' என்ற இயேசுவின் வாக்குறுதியுடனும், 'ஆண்டவராம் இயேசுவே வாரும்!' என்ற திருச்சபை யின் ஆர்வமிக்க, தீவிரமானச் செபத்துடனும் திருவெளிப்பாடு நூல் நிறைவு பெறு கிறது. இயேசுவின் மகிமை நிறைந்த வருகை குறித்த நம்பிக்கையில் வளரவும், உரு மாற்ற வல்ல இறை அருளின் வல்லமை குறித்த அனுபவத்தைப் பெறவும், விசுவாச ஒளியில் அனைத்தையும் ஆய்ந்து அறியவும் நம்முடைய செபங்கள், குறிப்பாக திருப்பலி கொண்டாட்டங்கள் உதவுவதாக!
   இவ்வாறு தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, இவ்வாரம் வெள்ளிக்கிழமையன்று தொடங்கும் லெபனன் நாட்டிற்கானத் தன் திருப்பயணம் வெற்றியடைய செபிக்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். இறுதியில் திருத் தந்தை 16ம் பெனடிக்ட், அங்கு குழுமியிருந்த அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Sunday, September 9, 2012

செப்டம்பர் 9, 2012

மனிதர் இறைவனின் குரலைக் கேட்கச்
செய்யவே இயேசு மனிதரானார் - திருத்தந்தை

   திருத்தந்தையரின் கோடை இல்லமான காஸ்தல் கந்தல்போவில் விடுமுறையை செலவிட்டு வரும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், காது கேளாதவரும் திக்கிப் பேசுபவருமான ஒருவரை இயேசு குணமாக் கிய இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை (மாற்கு 7:31 -37) மையமாக வைத்து மூவேளை செப உரை யாற்றினார்.
   இன்றைய நற்செய்தியின் மையமாக ஒரு சிறிய, மிகவும் முக்கியமான சொல் அமைந்துள்ளது. ஒரு வார்த்தை, அதன் ஆழ்ந்த பொருள் இவ்வுலகில் கிறிஸ்துவின் மறைப்பணியை முழுமையாக தொகுத்து தந்துள்ளது. இயேசு உச்ச ரித்த அதே மொழியிலேயே, நற்செய்தியாளர் மாற்கு அந்த வார்த்தையைத் தருவதால் அது நமக்கு உயிரோட்டமுள்ளதாக விளங்குகிறது. அந்த வார்த்தை 'எப்பத்தா' அதா வது 'திறக்கப்படு.' இந்த வார்த்தை உள்ள பகுதியைப் பார்ப்போம். இயேசு தீர் பகுதியை விட்டு, சீதோன் வழியாகச் சென்று தெக்கப்பொலி பகுதி நடுவே வந்து, கலிலேயக் கடலை அடைந்தார். காது கேளாதவரும் திக்கிப் பேசுபவருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து, அவர்மீது கை வைத்து குணமாக்குமாறு அவரை வேண்டிக் கொண்டனர். இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார்; பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி "எப்பத்தா" அதாவது `திறக்கப்படு' என்றார். உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார் (மாற்கு7:35).
   'எப்பத்தா' என்று இயேசு சொன்னவுடன் அந்த மனிதரின் காதுகள் திறக்கப்பட்டன, நாவும் கட்டவிழ்ந்தது, இந்தக் குணப்படுத்தலால் அந்த மனிதர் உடனே பிறருக்கும் உலகினருக்கும் திறந்த உள்ளம் கொண்டவரானார், அவரால் புதிய வழியில் மற்ற வரோடு தொடர்பு கொள்ள முடிந்தது. காது கேளாமலும், வாய் பேச முடியாமலும் இருந்த நிலை அந்த மனிதரின் உடல் உறுப்புக்களை மட்டும் சார்ந்ததாக இல்லாமல், அவரது அகவாழ்வையும் மூடியிருந்ததை நாம் அறிகிறோம். பாவத்தால் அகவாழ் வில் காது கேளாமலும், பேச முடியாமலும் இருக்கும் மனிதர் இறைவனின் குரலைக் கேட்குமாறுச் செய்யவே இயேசு மனிதனானார். மேலும், குணமடைந்த மனிதர் அன்பின் குரல் பேசுவதைத் தனது இதயத்தில் கேட்கவும், இறைவனோடும் மற்றவ ரோடும் தொடர்பு கொள்வதற்கு அன்பின் மொழியைப் பேசுவதற்கு கற்றுக்கொள்ள வும் இயேசு மனிதனானார். இதனாலே திருமுழுக்கு அருட்சாதனச் சடங்கில் 'எப்பத்தா' என்ற அடையாளம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அருட்சாதனத்தின் மூலம் மனிதர் தூய ஆவியை சுவாசித்து பேசுவதற்குத் தொடங்குகிறார்.
   இறுதியில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அங்கு குழுமியிருந்த அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Wednesday, September 5, 2012

செப்டம்பர் 5, 2012

புதன் மறைபோதகம்: கிறிஸ்துவே நம் அமைதி,
நம்பிக்கை, நம் வாழ்வின் பலம்! - திருத்தந்தை

   திருத்தந்தையரின் கோடை இல்லமான காஸ்தல் கந்தல்போவில் விடுமுறையை செலவிட்டு வரும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், செப்டம்பர் மாதத்தின் முதல் புதனான இன்று வத்திக்கான் வந்து, திருத் தந்தை ஆறாம் பவுல் மண்டபத்தில் விசுவாசிகளை சந்தித்து, பொது மறைபோதகத்தை வழங்கினார். புதிய ஏற்பாட்டு திருவெளிப்பாடு நூலின் தொடக்கத் தில் காணப்படும் 'செபம்' குறித்தச் சிந்தனைகளை, கூடியிருந்த மக்களோடு அவர் பகிர்ந்துகொண்டார்.
   திருவெளிப்பாடு நூல் கடினமான ஒன்று எனினும், அது பல வளங்களைத் தன் னுள்ளே அடக்கியது. இந்நூலின் தொடக்க வரிகளே நிறைய எடுத்துரைக்கின்றன. செபம் என்றால் என்ன என்பதையும், எல்லாவற்றிற்கும் மேலாக, நம்முடன் பேசும் இறைவனுக்குச் செவிமடுப்பதே செபம் என்பதையும் அவை நமக்கு எடுத்துரைக் கின்றன. இன்று, பயனற்ற பல வார்த்தைகளின் மத்தியில் மனிதர்கள் பலர், பிறருக்கு செவிமடுக்கும், ஏன், இறைவனுக்கு செவிமடுக்கும் பழக்கத்தையே விட்டொழித்து விட்டனர். செபம் என்பது நம் தேவைகளை நிறைவேற்றுமாறு இறைவனை வேண் டும் வெறும் வார்த்தைகள் அல்ல, மாறாக, நமக்கு மீட்பையும் நம்பிக்கையையும் பலத்தையும் வழங்கிய இயேசு கிறிஸ்துவை நமக்கு கொடையாக வழங்கிய இறை வனுக்கு, அவரின் அன்புக்கு, நாம் வழங்கும் புகழ்மாலையாக அது தொடங்கப்பட வேண்டும். நம் வாழ்வுக்குள் கிறிஸ்துவை வரவேற்க வேண்டும், மற்றும் நம் கிறிஸ்தவ வாழ்வை வளப்படுத்தும், ஆழப்படுத்தும் வகையில், கிறிஸ்துவுக்கு 'ஆம்' என்று சொல்பவர்களாக வாழவேண்டும். நம் வாழ்விலும், வரலாற்றிலும் இறை இருப்பின் பொருளை, நம் தொடர்ந்த செபம் நமக்கு வெளிப்படுத்தும். சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்த இயேசு, நம்மிடையே குடிகொண்டிருப்பது குறித்த விழிப்பு ணர்வை, மற்றவர்களோடு இணைந்து செபித்தல், குறிப்பாக, திருவழிபாட்டுச் செபம், மேலும் ஆழப்படுத்தும். இவ்வாறு, எவ்வளவு அதிகமாக நாம் கிறிஸ்துவை அறிந்து, அன்பு கூர்ந்து, பின்செல்கின்றோமோ, அவ்வளவு அதிகமாக நாம் அவரைச் செபத்தில் சந்திக்க விரும்புவோம். ஏனெனில், அவரே நம் அமைதி, நம்பிக்கை மற்றும் நம் வாழ் வின் பலம்!
   இவ்வாறு தன் புதன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, ஹங்கரி நாட்டின் தலைநகரில் நிறைவுற்ற இளையோர் கொண்டாட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு வர வேற்பையும் வாழ்த்துக்களையும் பின்வருமாறு தெரிவித்தார்: "இளையோரே! உறவுப் பாலங்களைத் துணிவுடன் கட்டியெழுப்புவதன் மூலம் மனிதகுலம் எனும் குடும்பத் தின் ஒன்றிப்பை ஊக்குவிக்கும் கிறிஸ்துவின் அழைப்பை இதயத்தில் ஏற்றுள்ளீர்கள். ஆகவே, நான் உங்களுக்கு ஊக்கமளிக்கிறேன். உங்களுடைய கத்தோலிக்க விசுவாசத் தில் உறுதியாய் இருங்கள். இயேசு கிறிஸ்துவை உங்கள் வாழ்வில் சந்திப்பதன் மூலம் உங்களுக்குக் கிட்டும் எளிமையான மகிழ்வு, உண்மை அன்பு, ஆழமான அமைதி ஆகியவை உங்கள் சொந்த நாடுகளின் இளையோரிடையே சுடர்விடும் சாட்சி களாக உங்களை மாற்றுவதாக!" 
   இறுதியில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அங்கு குழுமியிருந்த அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Sunday, September 2, 2012

செப்டம்பர் 2, 2012

கடவுளின் திருச்சட்டம் தனது உண்மையான
அர்த்தத்தை இழப்பது ஆபத்தானது - திருத்தந்தை

   திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்ல மான காஸ்தல் கந்தல்போவில் இருந்து மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் பற்றிய தன் கருத் தினை எடுத்துரைத்தார்.
   நமது மகிழ்ச்சியையும் பாதுகாப்பையும் இவ்வுலகப் பொருள்களிலும் அதிகாரத்திலும் மற்ற கண்கவர் பொருள்களிலும் வைக்கும் போலியான சமய உணர் வைக் குறித்து எச்சரியாய் இருங்கள். சமயத்தை இரண்டாம்தர நிலைக்கு குறைத்து பார்க்கும் ஆபத்து ஒவ்வொரு சமயத்திலும், ஏன் கிறிஸ்தவத்திலும் பரவியிருப்பதைக் காண முடிகின்றது. கடவுளின் திருச்சட்டத் தைத் தமது வாழ்வில் ஏற்று அதனை முழுமையாய் வாழும் ஒவ்வொருவருக்கும் அச்சட்டம் விடுதலையைக் கொண்டு வருகிறது. மனிதரை வாழ்வின் பாதையில் வழிநடத்தி, தன்னல அடிமைத்தனத்தினின்று விடுதலை செய்து, உண்மையான சுதந்திரம் மற்றும் வாழ்வின் பூமியை அவருக்கு அறிமுகம் செய்யும் கடவுளின் திருவார்த்தையே கடவுளது திருச்சட்டமாகும். இதனாலே திருச்சட்டம் விவிலியத் தில், அதிகப்படியான வரையறையைக் கொண்டுள்ள சுமையாகப் பார்க்கப்பட வில்லை, ஆனால் அது நம் ஆண்டவரது மிக விலையுயர்ந்த கொடையாகவும், அவரது தந்தைக்குரிய அன்புக்கு சான்றாகவும், தமது மக்களோடு நெருங்கி இருந்து அன்பு வரலாறு எழுதுவதற்கான அவரது ஆவலாகவும் இருக்கின்றது. அதேநேரம், கடவுளின் திருச்சட்டமும், சமயமும் தங்களது உண்மையான அர்த்தத்தை இழப்பது ஆபத்தானது. கடவுளின் திருச்சட்டத்தை பின்பற்றுவதன் உண்மையான பொருள் கடவுளுக்கு செவிமடுத்து வாழ்வதாகும்.
   மூவேளை செபத்தின் இறுதியில், லெபனான் திருப்பயணிகளைப் பிரெஞ்ச் மொழி யில் வாழ்த்திய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இம்மாதம் 14 முதல் 16 வரை அந்த நாட்டுக்கு தான் திருப்பயணம் மேற்கொள்ளவிருப்பதைக் குறிப்பிட்டு அந்நாட்டு அரசு தலைவருக்கு தனது நல்வாழ்த்தையும் தெரிவித்தார்.