Wednesday, September 12, 2012

செப்டம்பர் 12, 2012

புதன் மறைபோதகம்: மரணத்தின் மீது ஆண்டவர் கண்ட
வெற்றியே வரலாற்றின் திறவுகோல் - திருத்தந்தை

   திருத்தந்தையரின் கோடை இல்லமான காஸ்தல் கந்தல்போவில் விடுமுறையை செலவிட்டு வரும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இன்று வத்திக்கான் வந்து, திருத்தந்தை ஆறாம் பவுல் மண்டபத்தில் விசுவாசிகளை சந்தித்து, பொது மறைபோதகத்தை வழங்கினார். திருவெளிப்பாடு நூலில் காணப்படும் செபம் குறித்த தன் மறைக்கல்விப் போதனைகளை இவ்வாரமும் திருத்தந்தை தொடர்ந்தார்.
    வரலாற்றில் இடம்பெறும் திருச்சபையின் திருப் பயணத்தில் செபத்தின் முக்கியத்துவம் குறித்து திருவெளிப்பாடு நூல் கூறுவதை இன்று நோக்குவோம். இறையரசைப் பரப்புவதற்கான இறைத்திட்டத்தின் ஒளியில் வரலாற்று நிகழ்வுகளை ஆழ்ந்து உய்த்துணர செபம் நமக்கு உதவுகிறது. ஏழு முத்திரைகள் பொறிக்கப்பட்டு மூடப்பட்டிருந்த புத்தகம் இறைத்திட்டத்தின் உருவக மாகக் காட்டப்பட்டுள்ளது. சிலுவையில் அறையுண்டு, மரித்து, உயிர்த்த நமது ஆண்டவராம் ஆட்டுக்குட்டியால் மட்டுமே அப்புத்தகம் திறக்கப்பட முடியும். பாவம் மற்றும் மரணத்தின் மீது ஆண்டவர் கண்ட இறுதி வெற்றியே, அனைத்து வரலாற்றின் திறவுகோல் என்பதைச் செபத்தில் நாம் காண்கிறோம். இந்த வெற்றிக்காக இறைவ னுக்கு நாம் நன்றி கூறும் அதேவேளை, நம் இவ்வுலகப் பயணத்திற்கான இறை அருளைத் தொடர்ந்து இறைஞ்சுகிறோம்.
   வாழ்வின் தீமைகளின் மத்தியில் இறைவன் நம் செபங்களுக்கு செவிமடுக்கிறார். நம் பலவீனங்களை அகற்றி நம்மைப் பலப்படுத்தி அவரின் இறைமை சார்ந்த வல்ல மையில் நம்பிக்கைக்கொள்ள உதவுகிறார். 'ஆம், விரைவாகவே வருகிறேன்' என்ற இயேசுவின் வாக்குறுதியுடனும், 'ஆண்டவராம் இயேசுவே வாரும்!' என்ற திருச்சபை யின் ஆர்வமிக்க, தீவிரமானச் செபத்துடனும் திருவெளிப்பாடு நூல் நிறைவு பெறு கிறது. இயேசுவின் மகிமை நிறைந்த வருகை குறித்த நம்பிக்கையில் வளரவும், உரு மாற்ற வல்ல இறை அருளின் வல்லமை குறித்த அனுபவத்தைப் பெறவும், விசுவாச ஒளியில் அனைத்தையும் ஆய்ந்து அறியவும் நம்முடைய செபங்கள், குறிப்பாக திருப்பலி கொண்டாட்டங்கள் உதவுவதாக!
   இவ்வாறு தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, இவ்வாரம் வெள்ளிக்கிழமையன்று தொடங்கும் லெபனன் நாட்டிற்கானத் தன் திருப்பயணம் வெற்றியடைய செபிக்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். இறுதியில் திருத் தந்தை 16ம் பெனடிக்ட், அங்கு குழுமியிருந்த அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.