Monday, December 12, 2011

டிசம்பர் 11, 2011

உலகின் உண்மை ஒளியாகிய இயேசுவின் மீது
நம் கவனத்தைத் திருப்புவோம் - திருத்தந்தை

   மழை பெய்வதையும் பொருட்படுத்தாமல் வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா வளாகத்தில் இஞ்ஞாயிறு நண்பகலில் கூடியிருந்த பல்லாயிரக் கணக்கானத் திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கிறிஸ்தவர்கள், திருவருகைக் காலத்தில் மின்னும் விளக்குகளால் கவனம் கலைக்கப்படாமல் வாழ அழைக்கப்படுகிறார்கள் என்று கூறினார். 
   இந்த திருவருகைக் காலத்தில் கிறிஸ்துமஸ் தயாரிப்பாக கடைவீதிகளில் மினுமினுக்கும் ஒளிவிளக்குகளில் நமது கவனத்தை வைக்காமல் உலகின் உண்மையான ஒளியாகிய இயேசு கிறிஸ்துவின் வருகை மீது நமது கவனத்தைச் செலுத்த வேண்டுமென்று திருத்தந்தை வலியுறுத்தினார்.
   மகிழ்ச்சி ஞாயிறு என்றழைக்கப்படும் திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறு பற்றிய சிந்தனைகளை வழங்கிய அவர், ஓய்வு மற்றும் இளைப்பாறுதலுக்கு காலம் தேவை, அதேநேரம், உண்மையான மகிழ்ச்சி கேளிக்கைகளில் இல்லை என்றார்.
   மனிதனின் இதயம் கடவுளில் இளைப்பாற்றி காணும்வரை அது சலனமற்ற ஆழ்ந்த அமைதியைப் பெற முடியாது என்று ஹிப்போ நகர் ஆயர் புனித அகுஸ்தீன் கூறியதையும் குறிப்பிட்ட திருத்தந்தை, உண்மையான மகிழ்ச்சியை ஒருவர் தனது சொந்த முயற்சியால் பெற முடியும் என்று எண்ணக் கூடாது, ஆனால் அது வாழும் மனிதாரகிய இயேசுவோடு கொள்ளும் உறவிலிருந்து பெறப்படுவது என்று கூறினார்.
   மேலும், தங்கள் வீட்டுக் குடில்களில் வைக்கும் சிறிய பாலன் இயேசு உருவங்களைத் திருத்தந்தை ஆசீர்வதிப்பதற்காக அவற்றுடன் இம்மூவேளை செப உரையில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான சிறாருக்குக் கிறிஸ்மஸ் வாழ்த்தும் நன்றியும் சொன்னார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். திருத்தந்தையின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த சிறார், கைதட்டி ஆரவாரித்து பலூன்களைப் பறக்கவிட்டனர்.