Sunday, February 5, 2012

பிப்ரவரி 5, 2012

நோயின்போது உரிய கவனத்தோடு செயல்படுவதுடன் விசுவாசத்தோடும் இருக்க வேண்டும் - திருத்தந்தை

   வத்திகானில் நிலவிய கடும் குளிரின் நடுவிலும் இஞ்ஞாயிறு தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடியிருந்த சுமார் பத்தாயிரம் திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இன்றைய நற்செய்தி வாசகத்தை அடிப் படையாக கொண்டு பின்வருமாறு கூறினார்:
   "இன்றைய ஞாயிறு நற்செய்தியில், ஒரு வகை யான அல்லது மற்றொரு விதமான பிணிகளால் வருந்திய பலரை இயேசு குணப்படுத்தியதை நாம் அறிகிறோம். நற்சுகம் தேவைப்படும் நமக்கு தெரிந்த அனைவருக்காகவும் நாம் அவரிடம் பரிந்துரைப்போம் மேலும் நமது சொந்த இதயத்தின் கடினத்தன்மையை அகற்றிவிடுமாறும் அவரிடம் கேட்போம், அதன் மூலம் அவரது அன்புக்கு இன்னும் பரந்த மனப்பான்மையுடன் நாம் பதிலளிக்க முடியும்."
   தொடர்ந்து நோயைப் பற்றி விவரித்த திருத்தந்தை, அது உலகிலும் மனிதரிலும் இருக்கும் தீமையின் ஓர் அடையாளம் என்றும், குணமாக்குதல் இறையரசு அருகில் இருப்பதை காட்டுகிறது எனவும் குறிப்பிட்டார். நோயில் மற்றவர்களின் கவனிப்பை நாம் பெற முடிகிறது, அதே வேளையில் மற்றவர்களை கவனிக்கும் வாய்ப்பும் நமக்கு கிடைக்கிறது என்றும் அவர் கூறினார்.
   வேதனையுறுவோரின் நிலையில் இருந்து பார்த்தால், நோய் என்பது நீண்ட கடினமான ஒரு நிலையாக மாறலாம், மேலும் அது குணமாகாமல் துன்பம் நீடிக்கும் வேளையில் நாம் தொடர்ந்து தனிமையில் இருப்பதுடன் நொந்தும் போகிறோம் என்று கூறிய திருத்தந்தை, நோயின்போது நாம் உரிய கவனத்தோடு செயல்படுவதுடன், விசுவாசத்துடனும் இருக்க வேண்டும் என்றார்.
   மரணத்தை எதிர்நோக்கும்போதுகூட, மனிதரால் இயலாதவற்றை விசுவாசம் இயலக்கூடியதாக ஆக்கும் என்பதற்கு (இத்தாலியின் சவோனா நகரில், எலும்பு புற்று நோயால் தாக்கப்பட்டு உயிரிழந்த 18 வயது இளம்பெண்) அருளாளர் கியாரா பதானோ வின் வாழ்க்கை சான்றாக உள்ளது எனவும், நோயில் நம் அனைவருக்கும் மனித அரவணைப்பு தேவை என்றும் குறிப்பிட்ட திருத்தந்தை, இந்நாளில் (பிப்ரவரி 5) இத்தாலி நாட்டில் சிறப்பிக்கப்படும் வாழ்வுக்கான தினம் பற்றியும் சுட்டிக் காட்டினார்.
   இயேசு பிசாசை எதிர்கொண்ட நிலையில், அன்பின் வல்லமை தந்தையிடம் இருந்து வந்தது, எனவே நாம் கடவுளின் அன்பில் ஆழ்ந்திருந்தால் நோயை எதிர் கொண்டு அதிலிருந்து மீண்டுவர முடியும் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
   வருகிற சனிக்கிழமை பிப்ரவரி 11ம் தேதி, லூர்து அன்னை திருவிழா அன்று, உலக நோயாளர் தினம் கடைபிடிக்கப்படுகின்றது. இயேசு பிணியாளரைக் குணமாக்கு கிறார், அவரால் குணமாக்க முடியும் என்பதில் இத்தினத்தில் அனைவரும் நம்பிக்கை வைப்போம், மனிதத் துன்பம் எப்பொழுதும் அன்பால் சூழப்பட்டதாக இருக்கட்டும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.