Sunday, January 20, 2013

ஜனவரி 20, 2013

கிறிஸ்தவ ஒன்றிப்போடு சேர்த்து அமைதிக்காகவும்
செபிக்க வேண்டிய தேவை இருக்கிறது - திருத்தந்தை

   வத்திக்கான் தூய பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கிறிஸ்தவ ஒன்றிப்பு குறித்த கருத்துகளை எடுத்துரைத்தார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   இன்றைய வழிபாடு கானாவூர் திருமணத்தைப் பற்றிய பகுதியை, அதை நேரில் பார்த்த சாட்சியான யோவான் எழுதியதில் இருந்து எடுத்துரைக்கிறது. கானாவூர் திருமணம் உண்மையில் அரும் அடையாளங்களின் தொடக்கம், பொது வாழ்வில் இயேசுவின் மாட்சியை வெளிப்படுத்தி, சீடர்களை அவரிடம் நம்பிக்கை கொள்ளச் செய்த முதல் அற்புதம். கலிலேயாவின் கானாவூர் திருமணத்தில் என்ன நடந்தது என்று சுருக்கமாக காண்போம். திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது என்பதை இயேசுவின் தாய் மரியா, தன் மகனிடம் சுட்டிக் காட்டுகிறார். தனது நேரம் இன்னும் வரவில்லை என்று அவர் பதில் அளித்தாலும், மரியாவின் கோரிக்கையைத் தொடர்ந்து, ஆறு கல்தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டது, தண்ணீர் அருமையான திராட்சை இரசமானது. இந்த அரும் அடையாளத்தால், இயேசு தன்னை புதிய நிலையான உடன்படிக்கையை நிறைவேற்ற வந்த மணமகன் மெசியாவாக வெளிப்படுத்துகிறார், இறைவாக்கினரின் வார்த்தைகளில் இவ்வாறு கூறலாம்: "மணமகன் மணப்பெண்ணில் மகிழ்வதுபோல் உன் கடவுள் உன்னில் மகிழ்வார்" (எசாயா 62:5). மேலும் திராட்சை இரசம் என்பது அன்பின் மகிழ்ச்சிக்கு அடையாளம், அதே வேளையில் மனித குலத்துடனான தனது திருமண உடன்படிக்கையை நிறைவேற்றுவதற்கான விலையாக இயேசு சிந்த இருந்த இரத்தத்தையும் குறித்துக் காட்டுகிறது.
   கிறிஸ்துவின் மணப்பெண்ணாக இருக்கும் திருச்சபையை, அதன் அருளால் அவர் தூயதாகவும் அழகானதாகவும் மாற்றுகிறார். மனிதர்களால் உருவாக்கப்படும் இந்த மணவாட்டி, எப்பொழுதும் தூய்மை பெற வேண்டிய தேவை இருக்கிறது. திருச்சபையின் முகத்தை உருவிழக்கச் செய்யும் மிகக் கடுமையான பாவங்களில் ஒன்றாக, அதன் காணக்கூடிய ஒன்றிப்புக்கு எதிராக வெற்றிகொள்ள முடியாத வகையில் கிறிஸ்தவர்களைப் பிரித்துள்ள வரலாற்று பிரிவினைகள் உள்ளன. இந்த வாரத்தில், ஜனவரி 18 முதல் 25 வரை கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான செபம் நடைபெறுகிறது. முழுமையான ஒன்றிப்பு ஏற்படுவதற்கான ஆவலைத் தட்டி எழுப்பி, அதற்காக தங்களை அர்ப்பணிப்பதற்கு அனைத்து எல்லா விசுவாசிகளையும், சமூகங்களையும் வரவேற்கும் தருணமாக இது இருக்கின்றது. இந்த பொருளில், ஒரு மாதத்துக்கு முன்பு ஆயிரக்கணக்கான ஐரோப்பிய இளையோருடனும், டைசே பொது ஒன்றிப்புக் குழுவுடனும் இந்த சதுக்கத்தில் நான் முக்கியத்துவம் வாய்ந்த திருவிழிப்பை சிறப்பித்தேன்: அந்த அருளின் தருணத்தில், ஒரே கிறிஸ்துவின் உருவில் இருப்பதன் அழகை நாங்கள் அனுபவித்தோம். சேர்ந்து செபிக்க ஒவ்வொருவரையும் நான் ஊக்குவிக்கிறேன், அதன் மூலம் "ஆண்டவர் நம்மிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்?" என்ற இவ்வாரத்தின் மையப்பொருளின் கருத்தை உணர்ந்து, அதை அடைய முடியும். இந்த செப நாட்களின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை, பிற சபைகள் மற்றும் பொது சமூகங்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் நான் புனித பவுல் பேராலயத்தில் மாலை ஆராதனை நடத்த இருக்கிறேன்.
   அன்பு நண்பர்களே, கிறிஸ்தவ ஒன்றிப்போடு சேர்த்து மீண்டும் அமைதிக்காகவும் செபிக்க வேண்டிய தேவை இருக்கிறது. ஏனெனில், எதிர்பாராத விதமாக பல இடங்களில் நடைபெறும் வெவ்வேறு மோதல்களில் ஆயுதமற்ற அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்படவும், அனைத்து வன்முறைகளும் முடிவுக்கு வரவும், சண்டைகளைப் புறக்கணித்து உரையாடலில் ஈடுபடுவதற்கானத் துணிவு பிறக்கவும் வேண்டியுள்ளது. இந்த இரண்டு கருத்துகளுக்காகவும், அருளின் இடைநிலையாளரான மரியாவின் பரிந்துரையை வேண்டுவோம்.