Wednesday, January 23, 2013

ஜனவரி 23, 2013

நம்பிக்கையாளரான ஆபிரகாம் உண்மையான
தாய்நாட்டை நமக்கு காட்டுகிறார் - திருத்தந்தை

   வத்திகானின் பாப்பிறை ஆறாம் பவுல் மண்டபத் தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு புதன் பொது மறைபோதகம் வழங்கிய திருத்தந்தை 16ம் பென டிக்ட், கிறிஸ்தவர்கள் ஆபிரகாமைப் பின்பற்றி விசுவாச வாழ்வு வாழ்வது குறித்து எடுத்துரைத்தார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   இந்த விசுவாச ஆண்டில், நமது வாழ்வை நம்பிக்கையாளர்களாக செலவிட உதவும் விசுவாச அறிக்கை பற்றிய போதகத்தை இன்று தொடங்க விரும்புகிறேன். "நான் கடவுளை நம்புகிறேன்" என்று விசுவாச அறிக்கை தொடங்குகிறது. இது அடிப்படையான உறுதிநிலை, ஆண்டவரோடும் அவரது மறைபொருளோடும் நாம் கொண்டுள்ள உறவின் முடிவற்ற உலகை திறப்பதாக இதன் சாரம் அமைந்துள்ளது. கடவுளை நம்புதல் என்பது அவரில் இணைந்து, அவரது வார்த்தையை வரவேற்று, அவரது வெளிப்பாட்டுக்கு மகிழ்ச்சியோடு கீழ்படிவதாகும். கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி நமக்கு போதிப்பது போன்று, "விசுவாசம் என்பது தனிப்பட்ட செயல் - தம்மை வெளிப்படுத்திய கடவுளின் முயற்சிக்கு மனிதர் சுதந்திரமாக பதிலளிப்பது." நாம் கடவுளை நம்புகிறோம் என்று சொல்ல இயல்வது கொடையாகவும் கடமையாகவும் இருக்கிறது, அன்பினால் மனிதரை நண்பர்களாக கருதி பேசும் கடவுளுடனான உரையாடலின் அனுபவத்தில், இது கடவுளின் அருளாகவும் மனிதரின் பொறுப்பாகவும் இருக்கிறது, நம்மோடு பேசியிருப்பதால், விசுவாசத்தில், விசுவாசத்தோடு நாம் அவருடனான ஒன்றிப்பில் நுழைகிறோம்.
   கடவுள் நம்மோடு பேசிக் கொண்டிருப்பதை எங்கு நாம் கேட்க முடியும்? திருமறைநூலே அடிப்படை, அதில் கடவுளின் வார்த்தை நமக்கு கேட்கிறது, கடவுளின் நண்பர்களாக நம் வாழ்வை அமைக்க ஊட்டம் அளிக்கிறது. முழு விவிலியமும் மனிதருக்கான கடவுளின் வெளிப்பாட்டை எடுத்துரைக்கிறது, முழு விவிலியமும் விசுவாசத்தைப் பற்றி பேசுவதுடன், கடவுளின் வெளிப்பாடு ஆண்டவர் இயேசுவில் முழுமை அடைவது வரை, தம்மில் நம்பிக்கை கொண்ட பல மனிதர்கள் வழியாக கடவுளின் மீட்புத் திட்டத்தை செயல்படுத்தி மனிதரைத் தமக்கு நெருக்கமாக்கி கொண்டதையும் பற்றி கூறி விசுவாசத்தை நமக்கு கற்றுத் தருகிறது. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தில் விசுவாசம் குறித்து அழகாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது: "நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி: கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை" (11:1).
   இவ்வாறு விசுவாச கண்களால் காணப்படாதவற்றையும் பார்க்க முடியும், நம்பிக்கையாளரின் விசுவாசம் அனைத்து நம்பிக்கைகளையும் மேலானதாக இருக்க முடியும், ஆபிரகாமைப் பற்றி பவுல் இவ்வாறு கூறுகிறார்: "அவர் எதிர்நோக்கினார்; தயங்காமல் நம்பினார்" (உரோமையர் 4:18). நான் எனது கவனத்தை ஆபிரகாம் பக்கம் திருப்ப விரும்புகிறேன். ஏனெனில் கடவுளில் நம்பிக்கை கொண்டவர்களில் முதன்மையானவராக குறிப்பிடப்படும் ஆபிரகாம், முதுபெரும் தலைவராகவும், முன்மாதிரியாகவும், விசுவாசிகள் அனைவரின் தந்தையாகவும் விளங்குகிறார். எபிரேயருக்கான திருமுகத்தில் இவ்வாறு கூறப்படுகிறது: "ஆபிரகாம் தாம் அழைக்கப்பட்டபோது கீழ்ப்படிந்து, உரிமைப்பேறாகப் பெறவிருந்த இடத்திற்குச் சென்றதும் நம்பிக்கையினால்தான். தாம் எங்கே போக வேண்டும் என்று தெரியாதிருந்தும் அவர் புறப்பட்டுச் சென்றார். வாக்களிக்கப்பட்ட நாட்டில் அவர் குடியேறி ஒர் அன்னியரைப் போல் வாழ்ந்தது நம்பிக்கையினாலேயே. அதே வாக்குறுதிக்கு உடன் உரிமையாளர்களான ஈசாக்குடனும், யாக்கோபுடனும் அவர் கூடாரங்களில் குடியிருந்தார். ஏனெனில், அவர் அசையாத அடித்தளமுள்ள ஒரு நகரை எதிர்நோக்கியிருந்தார். அதைத் திட்டமிட்டவரும் கட்டியவரும் கடவுளே" (11:8-10).
   எபிரேயருக்கான திருமுகத்தின் ஆசிரியர், தொடக்கநூலில் கூறப்படும் ஆபிரகாமின் அழைப்பை பற்றி இங்கு பேசுகிறார். கடவுள் அவரிடம் சொந்த நாட்டை விட்டுவிட்டு, அவர் காட்டும் நாட்டுக்கு செல்லுமாறு கூறுகிறார், "உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல்" (தொடக்கநூல் 12:1). இத்தகைய அழைப்புக்கு நாம் எவ்வாறு பதில் அளிப்போம்? உண்மையில், இருள் சூழ்ந்த வேளையில் கடவுள் எங்கு அழைத்து செல்வார் என்பது தெரியாமல் புறப்படுகிறார், இந்த பயணம் கீழ்ப்படிதலுக்கும் நம்பிக்கைக்கும் அழைப்பு விடுக்கிறது, விசுவாசம் இருந்தால் மட்டுமே இதை செயல்படுத்த முடியும். கடவுளின் வாக்குறுதி ஆபிரகாமின் வாழ்வுக்கு எதிர்காலத்தின் முழுமையைத் திறந்துவிடுகிறது: "உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; ... உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்" (தொடக்கநூல் 12:2,3). மறைநூலில் கூறப்படும் ஆசி முதன்மையாக வாழ்வின் கொடையாக விளங்குகிறது. மேலும், இது சுதந்திரத்தில் வாழ்வதற்கும் வளர்வதற்குமான இடத்தை உரிமையாக்கிக் கொள்ளவும், கடவுளுக்கு பயந்து, உடன்படிக்கைக்கு உண்மையான "குருத்துவ அரசாகவும், தூய மக்களினமாகவும்" (விடுதலைப்பயணம் 19:6) வாழும் சமூகத்தை கட்டி எழுப்பவும் தேவையான ஆசியாகவும் திகழ்கிறது.
   கடவுளின் திட்டத்தில், ஆபிரகாம் மக்களினங்களின் தந்தையாகவும் வாழ்விற்கான புதிய இடத்தில் நுழைபவராகவும் மாறுகிறார். விசுவாசமே ஆபிரகாமின் பயணத்தை வழிநடத்துகிறது. கடவுளின் வழிகள் அவருக்கு மறைபொருளாக இருந்தாலும், ஆபிரகாம் நம்பிக்கை கொண்டவராக இருந்ததால் ஆசி பெற்றவராக விளங்கினார். ஆபிரகாமைப் போன்றே நாமும், "ஆண்டவரே, நான் உம்மை நம்புகிறேன், என்னை உம்மிடம் அர்ப்பணிக்கிறேன்" என்று கூற வேண்டும். ஒவ்வொரு முறையும் நாம் திருமுழுக்கில் பங்கேற்கும் பொழுது, விசுவாசத்தின் மாபெரும் கொடையை ஒவ்வொரு நாளும் எப்படி வாழ்கிறோம் என்பதை நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். நம்பிக்கையாளரான ஆபிரகாம், நமக்கு விசுவாசத்தை கற்பிப்பதோடு, உலகில் ஓர் அந்நியராக, உண்மையான தாய்நாட்டை நமக்கு காட்டுகிறார். விசுவாசம் நம்மை உலகில் பயணிகள் ஆக்குகிறது, விண்ணக தாய்நாட்டுக்கான வழியில், உலகிலும் வரலாற்றிலும் நுழைக்கிறது. விசுவாசத்தை வாழ்வதற்காக எத்தகைய சோதனையையும் எதிர்கொள்ள கிறிஸ்தவர்கள் தயங்கக்கூடாது.
   பல சமூகங்களில் கடவுள் 'இல்லாதவராக' மாறிவிட்டார், அங்கு அனைத்துக்கும் மேலான அவரது இடத்தை பலவிதமான சிலைகள் பெற்றிருக்கின்றன. அறிவியலும் தொழில்நுட்பமும், தன்னிறைவும் எல்லாம் வல்லவரை மனிதருக்கு மாயத்தோற்றமாக காட்டுகின்றன. இருப்பினும் கடவுள் மீதான தாகம் இருப்பதையும், நற்செய்தி தொடர்வதையும் ஏராளமான ஆண், பெண் விசுவாசிகளில் காண்கிறோம். நம்பிக்கையாளர்களின் தந்தையாகிய ஆபிரகாமின் பாதச்சுவட்டைப் பின்பற்றி அவரது குழந்தைகள் பலர், கடவுளின் அழைப்புக்கு கீழ்ப்படிந்து, அவரது இருப்பை முழுமையாக நம்பி, அவரது ஆசியைப் பெற்று மற்றவர்களுக்கு ஆசியாக திகழ்கிறார்கள். ஆண்டவர் இயேசுவை தயங்காமல் பின்பற்றி, விசுவாசத்தால் ஆசிபெற்ற இந்த உலகில் நடைபோட நாம் அழைக்கப்பட்டுள்ளோம். சில நேரங்களில் இது கடினமான பயணமாக இருந்தாலும், இது வாழ்வுக்கு திறக்கிறது, விசுவாசத்தின் கண்களாலேயே அதிகமாக பார்க்கவும் மகிழவும் முடியும். "நான் நம்புகிறேன்" என்று கூறுவது, ஆபிரகாமைப் போன்று நம்மை விசுவாசத்தில் நிலைநிறுத்த வேண்டும். நமது அன்றாட வாழ்வின் உண்மைநிலை, வரலாற்றில் கடவுளின் இருப்பை உணர்த்துகிறது. இன்றளவும் தொடரும் அந்த உடனிருப்பு நமக்கு வாழ்வையும் மீட்பையும் கொணர்வதுடன், அவருடனான எதிர்கால நிறைவாழ்வுக்கும் நமக்கு வழி திறக்கிறது.