Thursday, February 14, 2013

பிப்ரவரி 13, 2013

ஆண்டவரிடம் திரும்புவது அவர் இரக்கத்தில் நம்பிக்கை கொள்ளும் விசுவாசத்தின் விளைவு - திருத்தந்தை

  திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தனது பதவி விலகல் அறிவிப்பை வெளியிட்டதை தொடர்ந்து, இந்த ஆண்டு சாம்பல் புதன் திருவழிபாடு புனித சபினா பேராலயத்துக்கு பதிலாக, புனித பேதுரு பேராலயத்தில் நடைபெற்றது. தனது பதவி காலத்தில் திருத்தந்தை நிகழ்த்திய கடைசி பொது திருப்பலியான இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அவர்களுக்கு மறையுரை வழங்கிய திருத்தந்தை, தவக்காலத்தின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   சாம்பல் புதனான இன்று, நாம் ஒரு புதிய தவக்கால பயணத்தை தொடங்குகிறோம்; இது மரணத்தின் மீதான வாழ்வின் வெற்றியைக் கொண்டாடும் உயிர்ப்பின் மகிழ்ச்சியை நோக்கிய நாற்பது நாட்களுக்கும் மேலான நீண்ட பயணம். சூழ்நிலைகளின் காரணமாக, புனித சபினா பேராலயத்துக்கு பதிலாக, நாம் இன்று புனித பேதுரு பேராலயத்தில் நற்கருணை கொண்டாட்டத்துக்காக கூடியிருக்கிறோம். திருத்தூதர் பேதுருவின் கல்லறையை சூழ்ந்துள்ள நாம், இத்தருணத்தில் திருச்சபையின் முன்னோக்கிய பாதைக்காகவும், தலைமை மேய்ப்பரும் ஆண்டவருமாகிய கிறிஸ்துவில் நம் விசுவாசம் புதுப்பிக்கப்படவும் அவரது செபத்தை வேண்டுவோம். ஒவ்வொருவருக்கும், குறிப்பாக ரோம் மறைமாவட்டத்தின் விசுவாசிகளுக்கும் நன்றி சொல்ல எனக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு; பேதுருவின் பணியை நிறைவு செய்ய தயாரித்து கொண்டிருக்கும் என்னை உங்கள் செபத்தில் சிறப்பாக நினைவுகூர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
   தவக்காலத்தில் திடமான மனநிலைக்கும் செயல்களுக்கும் மாற, நாம் கடவுளின் அருளால் அழைக்கப்பட்டிருப்பது குறித்த சிந்தனைகளை நமக்கு அறிவிக்கப்பட்ட வாசகங்கள் வழங்குகின்றன. அனைத்துக்கும் முதலாவதாக இறைவாக்கினர் யோவேல் இஸ்ரயேல் மக்களுக்கு விடுத்த ஆற்றல்மிகு அழைப்பை திருச்சபை பரிந்துரைக்கிறது: "ஆண்டவர் கூறுகிறார்: இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்" (2:12). 'முழு இதயத்தோடு' என்ற சொற்றொடரை கவனியுங்கள், நமது சிந்தனைகள், உணர்வுகள், முடிவுகள், செயல்கள் ஆகியவற்றின் ஆழத்தில் இருந்து என்பது அதன் பொருள். கடவுளிடம் திரும்புவது சாத்தியமா? ஆம், ஏனெனில் இதற்கான உந்துதல் கடவுளின் இதயத்திலும், அவரது இரக்கத்தின் ஆற்றலிலும் இருந்து உருவாகிறது. இறைவாக்கினர் கூறுகிறார்: "கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்; அவர் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்; நீடிய பொறுமையுள்ளவர், பேரன்பு மிக்கவர்; செய்யக் கருதிய தீங்கைக் குறித்து மனம் மாறுகின்றவர்" (2:13). ஆண்டவரிடம் திரும்புவது சாத்தியமே, ஏனெனில் இது கடவுளின் அருட்செயல், அவரது இரக்கத்தில் நம்பிக்கை கொள்ளும் விசுவாசத்தின் விளைவு. கடவுளின் வார்த்தைகளை இறைவாக்கினர் மீண்டும் ஒருமுறை உரைக்கிறார்: "நீங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், உங்கள் இதயத்தைக் கிழித்துக்கொள்ளுங்கள்" (2:13).
   "முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்" என்ற அழைப்பு தனி மனிதருக்குரிய அழைப்பு அல்ல, முழு சமூகத்திற்கும் உரியது. மேலும் நாம் முதல் வாசகத்தில் கேட்கிறோம்: "சீயோனில் எக்காளம் ஊதி எச்சரியுங்கள்; புனிதமான உண்ணா நோன்புக்கென நாள் குறியுங்கள்; வழிபாட்டுப் பேரணியைத் திரட்டுங்கள். மக்களைத் திரண்டு வரச்செய்யுங்கள்; புனித கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்; முதியோரைக் கூடிவரச் செய்யுங்கள், பிள்ளைகளையும் பால் குடிக்கும் குழந்தைகளையும் ஒருசேரக் கூட்டுங்கள்; மணமகன் தன் அறையை விட்டு வெளியேறட்டும்; மணமகள் தன் மஞ்சத்தை விட்டுப் புறப்படட்டும்" (2:15-16). விசுவாசத்திலும் கிறிஸ்தவ வாழ்விலும் சமூக பரிமாணம் என்பது இன்றியமையாதது. "சிதறி வாழ்ந்த கடவுளின் பிள்ளைகளை ஒன்றாய்ச் சேர்க்கவே" (யோவான் 11:52) கிறிஸ்து வந்தார். ஒவ்வொரு நபரும், பாவங்களுக்காக மனம் வருந்தும் தவப் பயணத்தை தனியாக மேற்கொள்ள முடியாது என்ற விழிப்புணர்வை பெற்று, திருச்சபையின் சகோதர, சகோதரிகளோடு ஒன்றிணைந்து செல்ல வேண்டும்.
   இறுதியாக, குருக்களின் செபங்களைப் பற்றி இறைவாக்கினர் எடுத்துரைக்கிறார்: "ஆண்டவரின் ஊழியர்களாகிய குருக்கள் கோவில் மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையே நின்று அழுதவண்ணம், 'ஆண்டவரே, உம் மக்கள்மீது இரக்கம் கொள்ளும்; உமது உரிமைச் சொத்தை வேற்றினத்தார் நடுவில் நிந்தைக்கும் பழிச்சொல்லுக்கும் ஆளாக்காதீர். அவர்களுடைய கடவுள் எங்கே?' என வேற்றினத்தார் கூறவும் வேண்டுமோ?' எனச் சொல்வார்களாக!" (2:17). இந்த செபம் நம் ஒவ்வொருவருக்கும், நமது சமூகத்துக்கும் கிறிஸ்தவ வாழ்வு மற்றும் விசுவாசத்துக்கு சான்று பகர்வதன் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்கிறது. அதன் மூலம் நாம் திருச்சபையின் முகத்தை, அந்த முகம் தற்போது உருகுலைந்திருப்பதை வெளிப்படுத்த முடியும். திருச்சபையின் ஒற்றுமைக்கு எதிராக திருச்சபைன் உடலில் ஏற்படும் பிரிவினைகளை முக்கியமான பாவங்களாக நான் கருதுகிறேன். இந்த தவக்காலத்தில் தன்னலம், போட்டி மனப்பான்மை ஆகியவற்றை வென்று, திருஆட்சி அமைப்பில் ஆழ்ந்த, தெளிவான ஒன்றிப்பை ஏற்படுத்துவது விசுவாசத்துக்கு புறம்பே, அக்கறையின்றி வாழ்வோருக்கு விலைமதிப்பற்ற, எளிய அடையாளமாக விளங்கும்.
   "இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்!" (2 கொரிந்தியர் 6:2) என்ற திருத்தூதர் பவுலின் வார்த்தைகள் நம்மை விரைந்து செயல்பட அழைக்கின்றன. இப்பொழுது என்பதை நாம் இழந்துவிடக் கூடாது, அது நமக்கு வழங்கப்பட்டுள்ள தனிப்பட்ட வாய்ப்பு. மனிதரின் பாவங்களுக்காக கிறிஸ்து தனது வாழ்வை அர்ப்பணித்ததைப்  பற்றி திருத்தூதர் எடுத்துரைக்கிறார். புனித பவுலின் வார்த்தைகள் மிகவும் வலிமையானவை: "நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார்" (5:21). மாசற்றவரும், தூயவருமான இயேசு மரணத்தைக் கொணரும் பாவச்சுமையை தாங்கி, மனிதகுலத்தோடு சிலுவை சாவை ஏற்றார். மனிதரான இறைமகன், கொல்கதாவில் உயர்த்தப்பட்ட சிலுவையில் தொங்கி செலுத்திய மிக அதிக விலையால் நாம் கடவுளோடு மீண்டும் ஒப்புரவாகியுள்ளோம். இதில் தீமையின் படுகுழியிலான மனித துன்பங்களில் கடவுளின் பங்கேற்பு நமது நீதிக்கு அடிப்படை ஆகிறது. கடவுளிடம் முழு இதயத்தோடு திரும்புவதற்கான தவக்கால பயணம், சிலுவை வழியாக கிறிஸ்துவைப் பின்பற்றி கல்வாரி பாதைக்கு செல்வதில் இருக்கிறது. இந்த பயணத்தில் நமது தன்னலத்தை கைவிட்டு, நமக்குரியவற்றை மூடி வைத்துவிட்டு, நமது இதயங்களைத் திறந்து உருமாற்றும் கடவுளுக்காக அறையைத் தயார் செய்வோம். புனித பவுல் நமக்கு நினைவூட்டுவது போன்று, சிலுவை பற்றிய செய்தி நமக்குள் எதிரொலிக்க வேண்டும். நமது பாதையை ஒளிர்விக்கும் ஒளியாம் இறைவார்த்தையை கவனமாக கேட்க, தவக்கால பயணத்தில் இது நமக்கு ஒரு அழைப்பாக அமைகிறது.
   மலைப்பொழிவோடு இணைந்ததாக அழைக்கப்படும் மத்தேயு நற்செய்தி பகுதியில், மோசேயின் சட்டத்தின் அடிப்படையிலான மூன்று வழக்கங்களைப் பற்றி இயேசு குறிப்பிடுகிறார்: தர்மம், இறைவேண்டல் மற்றும் நோன்பு. தவக்கால பயணத்தில் முழு இதயத்தோடு கடவுளிடம் திரும்புவதற்கான அழைப்புக்கு பதிலளிக்க பாரம்பரியமாக வழங்கப்படும் அறிவுறுத்தல்கள் இவை. சமயம் சார்ந்த ஒவ்வொரு செயலுக்கும் தரமும், அதை உறுதி செய்யும் கடவுளுடனான நமது உண்மை உறவும் தேவைப்படுவதை இயேசு சுட்டிக் காட்டுகிறார். இந்த காரணத்திற்காக பிறருடைய பாராட்டையும், அங்கீகாரத்தையும் தேடும் வெளிவேடத்தை அவர் எதிர்க்கிறார். உண்மையான சீடர் தனக்காகவோ, மக்களுக்காகவோ அன்றி, எளிமையாகவும் தாராளத்தோடும் ஆண்டவருக்கு சேவை செய்வார்: "மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்" (மத்தேயு 6:4,18). நமது சொந்த மகிமையை குறைவாக தேடி, நேர்மையாளர்களின் பரிசு கடவுளே, அவரில் இணைவதே,  இங்கே விசுவாச பயணத்திலும், வாழ்வின் முடிவில், அமைதி ஒளியில் நேருக்கு நேராகவும் எப்பொழுதும் அவரோடு இருப்பதே என்பதை அதிகம் உணர்ந்து செயல்பட்டால் நமது பயிற்சி அதிக பயனுள்ளதாக இருக்கும்.
   அன்பு சகோதர சகோதரிகளே, நாம் நம்பிக்கையோடும் மகிழ்ச்சியோடும் நமது தவக்கால பயணத்தை தொடங்குகிறோம். "முழு இதயத்தோடு கடவுளிடம் திரும்பி வாருங்கள்" என்ற மனமாற்றத்திற்கான அழைப்பு நம்மில் வலிமையாக எதிரொலிக்கட்டும், நம்மை புதியவர்களாக மாற்றும் அவரது அருளை ஏற்பதன் மூலம் இயேசுவின் வாழ்வில் பங்கேற்போம். சாம்பல் பூசும் சடங்கிலும் விடுக்கப்படும் இந்த எளிய, அழகிய அழைப்புக்கு நம்மில் யாரும் செவிகொடுக்காதவர்களாய் இருக்கக்கூடாது. திருச்சபையின் தாயும், ஆண்டவரின் ஒவ்வொரு சீடருக்கும் முன்மாதிரியுமான கன்னி மரியா இவ்வேளையில் நமக்கு துணைநிற்பாராக! ஆமென்.