Sunday, February 3, 2013

பிப்ரவரி 3, 2013

இயேசு மனிதர்களின் ஒப்புதலைத் தேடி வரவில்லை,
உண்மையை எடுத்துரைக்கவே வந்தார் - திருத்தந்தை


   வத்திக்கான் தூய பேதுரு சதுக்கத்தில் கூடி யிருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இயேசுவின் இறைவாக்கு பணி பற்றி எடுத்துரைத்தார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   புனித லூக்காவின் நான்காவது அதிகாரத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ள இன்றைய நற்செய்தி, கடந்த ஞாயிறு வாசகத்தின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது. இயேசு வளர்ந்ததும், அவரையும் அவரது குடும்பத்தையும் அறிந்த மக்கள் வாழ்வதுமான நாசரேத்தின் தொழுகைக் கூடத்திலேயே நாம் இப்பொழுதும் இருக்கிறோம். சிறிது நேர அமைதிக்கு பிறகு, அவர் புதிய வழியில் திரும்புகிறார்: ஒய்வு நாளின் திருவழிபாட்டில் எசாயாவின் மெசியா பற்றிய இறைவாக்குகளை வாசித்து, அவரை குறித்து எசாயா பேசும் வார்த்தைகளின் நிறைவை எடுத்துரைக்கிறார். இந்த உண்மை நாசரேத்து மக்களுக்கு அதிர்ச்சி அளித்தது: ஒரு விதத்தில், "அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்றனர்" (லூக்கா 4:22). புனித மாற்கு பலரும் இவ்வாறு கூறியதாக எழுதுகிறார்: "இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம்!" (மாற்கு 6:2). மற்றொரு விதத்தில், அவருக்கு அடுத்திருந்தவர்கள் அவரை நன்கு அறிந்திருந்தனர்: நம்மை போன்றே அவர்களும், "இவரது கூற்று ஏற்றுக்கொள்ள முடியாதது" என்றார்கள். "இவர் யோசேப்பின் மகன் அல்லவா?" (லூக்கா 4:22) என்று கூறி, நாசரேத்தைச் சேர்ந்த ஒரு தச்சர் என்ற உணர்வையே வெளிப்படுத்தினார்கள்.
   "இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை" என்ற மொழியை உறுதிப்படுத்தும் இந்த முடிவினை அறிந்திருந்ததால், இயேசு தொழுகைக் கூடத்தில் இருந்த மக்களைக் கோபமூட்டும் வார்த்தைகளில் பேசுகிறார். சில நேரங்களில் இஸ்ரயேலுக்கு வெளியே அதிக விசுவாசம் இருக்கிறது என்பதைக் காட்டும் வகையில், எலியா, எலிசா ஆகிய இரு பெரிய இறைவாக்கினர்கள் இஸ்ரயேலுக்கு வெளியே செய்த புதுமைகளை எடுத்துரைக்கிறார். அந்நேரத்தில் அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார். இங்கு ஒரு கேள்வி எழுகிறது: இயேசு என் அவர்கள் முயற்சியைத் தோல்வி அடையச் செய்தார்? முதலில் மக்கள் அவரைப் போற்றினர், மேலும் அவர் நல்லெண்ணத்தைப் பெற முடிந்தது ... இங்கு குறிப்பிடத் தகுந்த ஒன்று இருக்கிறது: இயேசு மனிதர்களின் ஒப்புதலைத் தேடி வரவில்லை, மாறாக, இறுதியில் அவர் பிலாத்துவிடம் கூறுவது போன்று, "உண்மையை எடுத்துரைக்கவே" (யோவான் 18:37) வந்தார். உண்மை இறைவாக்கினர் கடவுளைத் தவிர வேறு எதற்கும் கீழ்ப்படிவதில்லை, உண்மைக்கான பணியில் தங்களை ஈடுபடுத்தி கொள்வார், அதற்காக தங்களை இழக்கவும் தயாராக இருப்பார். இயேசு அன்பின் இறைவாக்கினராக இருக்கிறார் என்பது உண்மை, ஆனால் அன்பு தனக்கென தனிப்பட்ட உண்மையைக் கொண்டிருக்கிறது. உண்மையில், அன்பும் உண்மையும் ஒரே செயல்பாட்டு மற்றும் கடவுளின் இரு பெயர்கள். இன்றைய திருவழிபாட்டில் புனித பவுல் இவ்வாறு கூறுகிறார்: "அன்பு ... தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு அடையாது. அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது. அன்பு தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும்" (1 கொரிந்தியர் 13:4-6).
   கடவுளில் நம்பிக்கை கொள்வதற்கு தங்கள் வேறுபாடுகளைக் களைந்து, நாசரேத்து இயேசு என்ற மனிதரில் அவர் வெளிப்படுத்திய நிலையான முகத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த வழி அவரைக் கண்டறிந்து, மற்றவர்களில் அவருக்கு சேவை செய்ய இட்டுச் செல்லும். இதுவே மரியாவின் மனநிலையில் ஒளிர்ந்தது. அவரை விடவும் இயேசுவின் மனிதத்தன்மையைப் பற்றி அதிகம் அறிந்தவர் யார்? ஆனால் அவள் நாசரேத்து ஊர்க்காரர்களைப் போன்று ஒருபோதும் அதிர்ச்சி அடைந்தது இல்லை. விசுவாசத்தின் வழியை மீண்டும் மீண்டும் வரவேற்கும் மறைபொருளை அறிந்து, சிலுவையின் இரவு மற்றும் உயிர்ப்பின் முழுமை ஒளி வரையிலும் தன் மனதில் பேணி காத்து வந்தார். இந்த உண்மையின் வழியில் மகிழ்ச்சியோடு நடக்க மரியா நமக்கும் உதவுவார்.