Sunday, February 17, 2013

பிப்ரவரி 17, 2013

கடவுள் மீதான விசுவாசத்தை மீண்டும் கண்டறிய
தகுந்த காலம் தவக்காலம் - திருத்தந்தை

   வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, சோதனையை எதிர்கொள்வது பற்றி எடுத்துரைத்தார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   கடந்த புதன்கிழமை, பாரம்பரிய சாம்பல் பூசும் சடங்குடன், ஈஸ்டர் தயாரிப்புக்கான மனமாற்றம் மற்றும் தவத்தை மேற்கொள்ளும் காலமாகிய தவக்காலத்துக்குள் நாம் நுழைந்திருக்கிறோம். தாயும் ஆசிரியருமான திருச்சபை, தனது உறுப்பினர்கள் அனைவரும் ஆவியில் புதுப்பிக்கப்படவும், கடவுளை நோக்கி மீண்டும் நெருங்கி வரவும், அன்பில் வாழும் பொருட்டு தற்பெருமையையும், தன்னலத்தையும் மறுக்கவும் அழைக்கிறது. இந்த விசுவாச ஆண்டின் தவக்காலம், நமது வாழ்வுக்கும், திருச்சபையின் வாழ்வுக்கும் அடிப்படையாக விளங்கும் கடவுள் மீதான விசுவாசத்தை மீண்டும் கண்டறிய தகுந்த காலம் ஆகும். இது எப்பொழுதுமே போராட்டத்தை உள்ளடக்கியது, ஓர் ஆன்மீக போராட்டம், ஏனெனில் இயல்பாகவே தீய ஆவி நமது புனிதத்தன்மையை எதிர்ப்பதுடன், கடவுளின் வழியில் இருந்து நம்மை விலக்கவும் முயல்கிறது, இதற்காகவே தவக்காலத்தின் முதல் ஞாயிறு நற்செய்தி ஒவ்வொரு ஆண்டும் இயேசுவின் பாலைநில சோதனையை எடுத்துரைக்கிறது.
   இயேசு, உண்மையில், திருமுழுக்கு மூலம் யோர்தானில் மெசியாவாக தூய ஆவியால் அருட்பொழிவு பெற்ற பிறகு, அதே ஆவியால் பாலைநிலத்துக்கு அலகையால் சோதிக்கப்படுமாறு அழைத்துச் செல்லப்படுகிறார். தனது பொது பணியைத் தொடங்கும்போது, சோதனையாளன் பரிந்துரைத்த மெசியா பற்றிய தவறான உருவங்களைப் புறக்கணித்து, இயேசு தன்னை வெளிப்பட்டுத்த வேண்டும். ஆனால் இந்த சோதனைகள் மனிதனின் தவறான உருவங்கள், ஒவ்வொரு நேரமும் மனசாட்சியை வேரறுத்து, பொருத்தமானவையாகவும், சரியானவையாகவும், நல்லவையாகவும் கூட வேடமிடுகின்றன. நற்செய்தியாளர்களான மத்தேயுவும், லூக்காவும் வரிசையில் மட்டுமே மாறுபட்ட இயேசுவின் மூன்று சோதனைகளை தருகிறார்கள். அவற்றின் மையம் எப்பொழுதும் சொந்த விருப்பங்களுக்காக கடவுளை பயன்படுத்துவதிலும், வெற்றி மற்றும் உலகப் பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதிலும் இருக்கிறது. சோதனையாளன் நழுவக்கூடியவனாக இருக்கிறான்; இது நேரடியாக தீமைக்கு செல்கிறது, போலியான நலத்துக்கு, அடிப்படை தேவைகளை சந்திக்கும் வலிமையே உண்மையில் அவசியம் என்று நம்பச் செய்கிறது. இவ்வாறாக, கடவுள் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டு, பாதியாக குறைக்கப்பட்டு, இறுதியில் பொய்யானவராக மாறி, இல்லாதவராக, மறைந்து விடுகிறார். இறுதியாக, விசுவாச சோதனையில் என்ன இடர்படுகிறது என்றால் கடவுள் இடர்படுகிறார். வாழ்வின் முக்கியமான தருணங்களில், நாம் குறுக்கு வழிகளில் இருக்கும் எந்த நேரத்திலும்: நாம் கடவுளைப் பின்பற்ற விரும்புகிறோமா அல்லது நம்மையா? சொந்த விருப்பமா அல்லது உண்மையான நலமா, எது உண்மையில் நன்மை?
   திருச்சபை தந்தையர்கள் நமக்கு எப்படி கற்பிக்கிறார்கள், இயேசு நமது மனித நிலைக்கு, பாவத்தின் படுகுழிக்கும் அதன் விளைவுகளுக்கும் இறங்கியதன் பகுதியாக சோதனைகள் இருக்கின்றன. கீழிறங்குதலின் இறுதி நிலைக்கு, சிலுவை மரணம் வரையிலும், கடவுளிடம் இருந்து பெரிதும் பிரிந்திருக்கும் கீழுலகிற்கு இயேசு வந்தார். காணாமற்போன ஆடுகளாகிய மனிதரை பத்திரமாக கடவுளிடம் திரும்ப கொண்டு சேர்க்கும் கையாக அவர் இருக்கிறார். புனித அகுஸ்தீன் கற்பிப்பது போல, இயேசு தனது வெற்றியை நமக்கு தருவதற்காக, நம்மிடம் இருந்து சோதனையை எடுத்துக்கொண்டார். எனவே, நாம் நம்மை எதிர்கொள்ளவும், தீய ஆவிக்கு எதிராக போராடவும் பயப்படக்கூடாது, முக்கியமானது என்னவென்றால் நாம் வெற்றியாளரான அவரோடு இருக்கிறோம். அவரோடு இருக்க, அன்னை மரியாவை நோக்கி திரும்புவோம்: சோதனை நேரங்களில் பிள்ளைக்குரிய நம்பிக்கையோடு நாம் வேண்டுவோம், அவரது தெய்வீக மகனின் வலிமையான உடனிருப்பை உணரவும், கிறிஸ்துவின் வார்த்தைக்கு எதிரான சோதனைகளை நிராகரிக்கவும் உதவுவார், அதன் மூலம் கடவுளை நமது வாழ்வின் மையாமாக்குவோம்.