Wednesday, November 21, 2012

நவம்பர் 21, 2012

கடவுளின் படைப்பை விவேகத்தோடு கையாள்வதில் நம்பிக்கையும் அறிவியலும் சேர்கின்றன - திருத்தந்தை

   வத்திக்கானின் பாப்பிறை 6ம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு புதன் பொது மறைபோதகம் வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், விசுவாசத்தைப் புரிந்து கொள்வது குறித்து விளக்கினார் .
அன்பு சகோதர சகோதரிகளே,
   நம்பிக்கை ஆண்டில் நாம் கேட்டுவரும் புதன் மறை போதகத்தின் தொடர்ச்சியாக, கடவுளின் உண்மை யின் மகிமையோடு சந்திப்பதாக, கடவுள் மீதான நம்பிக்கையை அறிவுப்பூர்வமாகப் புரிந்து கொள்வது குறித்து இன்று நோக்குவோம். நம்பிக்கை மூலமாக கடவுள் பற்றியும் நம்மைப் பற்றியும் நாம் உண்மையான அறிவைப் பெறுகிறோம். வாழ்வின் நிறைவையும், மகிழ்ச்சியையும் மறுவுலகில் பெறுவதற்காகக் காத்திருக்கும் நாம், இவ்வுலகில் விவேகத்துடன் வாழ்வதற்கும் நம்பிக்கை வழியாகக் கற்றுக் கொள்கிறோம். கடவுள் பற்றிய உண்மையை மனித மனத்திற்குத் திறந்து வைப்பதில் நம்பிக்கையும் அறிவும் ஒன்று சேர்ந்து செயல்படு கின்றன. உண்மையைத் தேடும் அறிவானது, கடவுளின் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையோடு இடம்பெறும் சந்திப்பில் உள்தூண்டுதலையும், வழிகாட்டுதலையும், நிறைவையும் கண்டு கொள்கின்றது. அதேநேரம், நம்பிக்கை, தனது இயல்பிலே கொண்டிருக்கும் புரிந்துகொள்ளும் வழிகளைத் தேடுகின்றது. மனிதரின் அறநெறி வாழ்வின் முன்னேற்றத்துக்கும், அவர் படைப்பை விவேகத்தோடு கையாள்வதற்கு மான சேவையில் நம்பிக்கையும் அறிவியலும் கைகோர்த்துச் செல்கின்றன. இறை மகன் இயேசு கிறிஸ்துவில் நமது மீட்பின் நற்செய்தியானது உண்மையான மனி தத்தை நமக்கு வழங்குகிறது. மனிதர் மற்றும் அகிலத்தின் பேருண்மையைப் புரிந்து கொள்வதற்கு ஓர் இலக்கணத்தையும் இது நமக்கு வகுக்கின்றது. நமது மனித மாண்பு மற்றும் அழைப்பின் மகிமையை வெளிப்படுத்தும் கடவுளின் உண்மையின் ஒளிக்கு இந்த நம்பிக்கை ஆண்டில் நாம் நமது மனங்களைத் திறப்போமாக!
   இவ்வாறு இப்புதன் மறைபோதகத்தை நிறைவு செய்த திருத்தந்தை, இஸ்ரேல் - காசா இடையிலான பிரச்சனை குறித்தும் பின்வருமாறு தன் கருத்துகளை வெளிப் படுத்தினார்: காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவத்துக்கும் ஹமாஸ் புரட்சியாளருக் கும் இடையே இடம்பெற்றுவரும் வன்முறை முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். இஸ்ரேலுக்கும் காசா பகுதியிலுள்ள பாலஸ்தீனியர்களுக்கும் இடையே அதிகரித்து வரும் வன்முறை குறித்து நான் மிகுந்த கவலை கொண்டுள்ளேன். இந்த வன் முறையில் பலியானவர்கள் மற்றும் துன்புறுவோருக்காக நான் செபிக்கிறேன். போர் நிறுத்தம் ஏற்பட்டு பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கு எடுக்கப்படும் முயற்சி களை நான் ஊக்குவிக்கிறேன். இரு தரப்பு அதிகாரிகளும் அமைதிக்கு ஆதரவாகத் துணிச்சலான தீர்மானங்களை எடுப்பதன் மூலம் மத்திய கிழக்குப் பகுதி முழுவதும் இடம்பெறும் மோதல்கள் முடிவுக்கு வரும். அதிகமான சண்டைகளால் பாதிக்கப் பட்டுள்ள மத்திய கிழக்குப் பகுதிக்கு அமைதியும் ஒப்புரவும் தேவை.
   இறுதியாக, இம்மறைபோதகத்தில் கலந்து கொண்ட இலங்கை, இங்கிலாந்து, அமெ ரிக்க ஐக்கிய நாடு உட்பட பல நாடுகளின் திருப்பயணிகளை வாழ்த்திய திருத்தந்தை, தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.