Wednesday, October 12, 2011

அக்டோபர் 12, 2011

புதன் மறைபோதகம்: ஆண்டவரின் செயல்களால் நாம் பெருமகிழ்ச்சி அடைகின்றோம் - திருத்தந்தை

   இன்று தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடி யிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு 'கிறிஸ்தவ செபம்' குறித்த தன் புதன் பொது மறைபோதகத்தைத் தொடங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
   கிறிஸ்தவ செபம் குறித்த நம் போதனைகளின் தொடர்ச்சியாக இன்று திருப்பாடல் 126-ஐ நாம் சிந்திப்போம். பபிலோனிய நாடுகடத்தலில் இருந்து இஸ்ரயேலர்களை திருப்பி அழைத்து வருவதாக வாக்கு தந்த இறைவன் பிரமாணிக்கமுள்ளவராக இருந்ததற்கு நன்றி கூறும் மகிழ்ச்சி நிறை செபமாக இந்தத் திருப்பாடல் 126 உள்ளது. 'ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெரு
மகிழ்ச்சி யுறுகின்றோம்.'
   நம் வாழ்வு நடவடிக்கைகளிலும், சிறப்பாக, கசப்பானதாக கருமேகம் சூழ்ந்து தோன்றியதாகத் தெரிந்த காலங்களிலும் இறைவன் நம்மீது காட்டிய அக்கறையை நினைவுகூரும்போது, அதே இஸ்ராயேல் மக்கள் கொண்டிருந்த மகிழ்ச்சி மற்றும் நன்றி உணர்வை உள்ளடக்கியதாக நம் செபங்களும் இருக்க வேண்டும். இறைமீட்பு எனும் உதவியை இஸ்ரயேலர்களுக்குத் தொடர்ந்து வழங்குமாறு இறைவனை வேண்டுகிறார் திருப்பாடல் ஆசிரியர். 'கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்' என்கிறார்.
   அமைதியான முறையில் தன் முதிர்ச்சி நோக்கி வளரும் விதை என்ற இந்த உருவகம் நமக்கு சொல்ல வருவது என்னவெனில், கடவுளின் மீட்பு என்பது ஏற்கனவே நாம் பெற்றுவிட்ட கொடை, நம் நம்பிக்கையின் நோக்கம், வருங் காலத்தில் நிறைவேற்றப்படவிருக்கும் ஒரு வாக்குறுதி. இதே உருவகத்தை இயேசு கிறிஸ்து, சாவிலிருந்து வாழ்வுக்கும், இருளிலிருந்து ஒளிக்கும் கடந்து செல்வதைப் பற்றி விளக்கும்போது பயன்படுத்துகிறார். இந்த கடந்து செல்தல் என்பது, இயேசுவில் விசுவாசம் கொண்டு அவரின் பாஸ்கா மறையுண்மையில் பங்கு கொள்ளும் ஒவ்வொருவர் வாழ்விலும் இடம்பெற வேண்டியது. இந்த 126ம் திருப்பாடலை செபிக்கும் நாம், 'வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்' என்ற அன்னை மரியின் பாடல் வரிகளை எதிரொலிப்பதுடன், கடவுளின் வாக்குறுதி கள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம்.
   தூய பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகள் மற்றும் சுற்றுலாப்பயணிகளுக்கு கிறிஸ்தவ செபம் குறித்த இவ்வார மறையுரையை இவ்வாறு வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
   பின்னர் அவர், கடந்த ஞாயிறன்று எகிப்தின் கெய்ரோவில் இடம்பெற்ற வன்முறைகள் குறித்த தன் ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டார். இவ்வன்முறை யால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுடனும், அமைதியான இணக்க வாழ்வுக்கான அச்சுறுத்தலை எதிர்நோக்கும் எகிப்து குடும்பங்களுடனும் என் ஒருமைப்பாட்டை தெரிவிக்கின்றேன். நீதியையும் மனித குல விடுதலை மற்றும் மாண்பையும் அடிப்படையாகக் கொண்ட உண்மையான அமைதியை சமூகம் பெற ஒவ்வொருவரும் செபிக்குமாறு வேண்டுகிறேன். தேசிய ஐக்கிய நலனுக்காக, ஒவ்வொருவரின் குறிப்பாக சிறுபான்மையினரின் உரிமைகள் மதிக்கப்பட எகிப்து ஆட்சியாளர்களும் அரசியல் மற்றும் மதத்தலைவர்களும் தங்கள் அனைத்து ஆதாரங்களையும் பயன் படுத்த ஊக்கமளிக்கிறேன், என எகிப்து நாட்டிற்கான தன் விண்ணப்பத்தை முன் வைத்த திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.