Monday, October 3, 2011

அக்டோபர் 2, 2011

தங்கள் காவல்தூதர்களை உதவிக்கு அழைக்க கிறிஸ்தவர்கள் மறக்கக்கூடாது - திருத்தந்தை

   கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதற்கும் உதவி செய்வதற்குத் தங்களது காவல்தூதர்களை அழைக்குமாறு இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் நினைவுபடுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
   கோடை விடுமுறை முடிந்து முதல் முறையாக வத்திக்கானிலிருந்து மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, அன்பு நண்பர்களே, நம் ஆண்டவர் மனித வரலாற்றில் எப்போதும் அருகிலும் செயல் திறத்துடனும் இருக்கிறார், தமது தூதர்களின் தனித்துவமிக்க பிரசன்னத்தோடு நம்மைப் பின்தொடருகிறார் என்று உரைத்தார்.
   வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த சுமார் இருபதாயிரம் விசுவாசிகளுக்கு உரையாற்றிய அவர், அக்டோபர் 2ம் தேதி திருச்சபை காவல் தூதர்கள் விழாவைச் சிறப்பிக்கின்றது, இவர்கள், ஒவ்வொரு மனிதன் மீதும் கடவுள் கொண்டுள்ள அக்கறையைத் தெரிவிக்கும் பணிகளைச் செய்கிறார்கள் என்றார்.
   இத்தூதர்கள், மனித வாழ்வின் தொடக்கமுதல் மரணம் வரை தங்களது இடைவிடாத பாதுகாப்பால் அவ்வாழ்வைச் சூழ்ந்துள்ளார்கள் என்றும் கூறிய திருத்தந்தை, செபமாலை அன்னையின் மணிமகுடத்தை இந்தத் தூதர்களே அலங்கரித்துள்ளார்கள் என்பதையும் சுட்டிக் காட்டினார்.
   17ம் நூற்றாண்டில் திருத்தந்தை பத்தாம் கிளமெண்ட் காவல்தூதர்கள் விழாவை அகிலத் திருச்சபையில் கொண்டு வந்தார்.
   மேலும், இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்ட திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கடவுள் தமது நண்பர்களுக்காகத் திட்டம் வைத்திருக்கிறார், ஆனால் இதற்கான மனிதனின் பதில் அவனின் பிரமாணிக்கமற்ற வாழ்வால் பின்னுக்குத் தள்ளப்படுகிறது என்று கூறினார்.
   இறைவனின் விலைமதிப்பில்லாத கொடையாகிய அவரது ஒரே மகனை ஏற்பதற்குக்கூட தற்பெருமையும் தன்னலமும் தடையாய் இருக்கின்றன, எனவே இறைவனின் திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்ய அழைக்கப்பட்டுள்ள ஒவ்வொருவரும் கிறிஸ்துவுக்கு முழுவதும் விசுவாசமாக இருக்கும் வாழ்வைப் புதுப்பிக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளார்கள் என்றார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.