Saturday, November 19, 2011

நவம்பர் 19, 2011

மரியா வழியாக இயேசுவைத் தேடுங்கள் - திருத்தந்தை

   மேற்கு ஆப்ரிக்க நாடான பெனின் நாட்டுக்கு மூன்று நாள் திருப்பயணமாக இவ்வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு அந்நாடு சென்ற திருத்தந்தை 16ம் பெனடிக்ட், ஆன்மீக மற்றும் ஒழுக்க நெறி அழிவுகளின் மத்தியில் ஆப்ரிக்கக் கண்டம் தனது தொன்மைமிகு விழுமியங்களைப் பாதுகாக்குமாறு அழைப்பு விடுத்தார். ஒப்புரவு, நீதி, அமைதி என்ற தலைப்பில் இடம் பெற்று வரும் திருத்தந்தையின் இப்பயணத்தின் முதல் நாள் மாலை 4.30 மணிக்கு இந்நாட்டின் மிகப் பெரிய நகரமான கொட்டுன்னு நகரின் இரக்கமுள்ள அன்னைமரியா பேராலயம் சென்ற திருத்தந்தை, அங்கு ஆற்றிய மறையுரையில், அன்னைமரியா வழியாக இயேசுவைத் தேடுமாறு கேட்டுக் கொண்டார்.
   தனிப்பட்டவர்கள் மற்றும் நாடுகளின் மீட்பு வரலாற்றில், இறை இரக்கம், நம் பாவங்களை மன்னிப்பதோடு, உண்மையும் ஒளியும் நிறைந்த பாதையில் நம்மை வழி நடத்துகிறது. ஏனெனில் நாம் தொலைந்து போவதை கடவுள் விரும்பவில்லை. சிலவேளைகளில் இப்பாதையில் வேதனையும் உண்டு. இறை இரக்கத்தின் இந்தப் பண்பானது ஒவ்வொரு கிறிஸ்தவரின் திருமுழுக்கின் போது கடவுள் செய்து கொண்ட உடன்படிக்கையில் அவர் எவ்வளவு பிரமாணிக்கமாய் இருக்கிறார் என்பதை வெளிப் படுத்துகின்றது. அன்னை மரியா இறை இரக்கப் பேருண்மையை மிக அதிகமாக அனுபவித்தவர். அவர் இறையழைப்பிற்குச் சொன்ன ஆகட்டும் என்ற பதில் வழியாக, மனித சமுதாயத்தில் இறையன்பு வெளிப்படுத்தப்பட அவர் உதவியிருக்கிறார். இவ்வன்னை, தனது எளிமை மற்றும் தாய்க்குரிய இதயத்தோடு ஒரே ஒளியும் உண்மையுமான தமது மகன் இயேசுவை நமக்குக் காட்டுகிறார். எனவே பயப்படாமல் நம்பிக்கையுடன் அவரின் பரிந்துரையை வேண்டுவோம் என்று சொல்லி அன்னை மரியிடம் ஆப்ரிக்க மக்களுக்காகச் செபித்தார் திருத்தந்தை.
   இரக்கமுள்ள தாயே, நம்பிக்கையின் அரசியே, அமைதியின் அரசியே, ஆப்ரிக்க அன்னையே, ஆப்ரிக்க இளையோரின் ஏக்கங்களை நிறைவேற்றும். நீதி, அமைதி மற்றும் ஒப்புரவுக்காக ஏங்கும் இதயங்களை நம்பிக்கையால் நிரப்பும். நோயாளிகள் குணம் பெறவும், துன்புறுவோர் ஆறுதலடையவும் பாவிகள் மன்னிப்பு அடையவும் உம் மகனின் அருளைப் பெற்றுத் தாரும். மனித சமுதாயத்துக்கு மீட்பையும் அமைதியையும் பெற்றுத்தாரும் தாயே, ஆமென்.
 


குருக்கள், துறவியர், குருமட மாணவர்கள் மற்றும் விசுவாசிகளுக்கு திருத்தந்தை இன்று வழங்கிய உரை:
   திருத்தந்தையின் பெனின் நாட்டுக்கானத் திருப்பயணத்தின் இரண்டாவது நாளான இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் பகல் 11 மணி 25 நிமிடத்திற்கு புனித கால் குருத்துவக் கல்லூரியில் குருக்கள், குருத்துவ மாணவர்கள், துறவிகள் மற்றும் பொதுநிலையினரைச் சந்தித்தார் திருத்தந்தை. அப்போது திருத்தந்தை அவர்க ளிடையே உரையாற்றினார்.
   புனிதர்கள் ஜோன் ஆப் ஆர்க் மற்றும் கால் ஆகியோரின் பாதுகாவலில் ஒப்படைக்கப்பட்டுள்ள இந்த குருத்துவப் பயிற்சி இல்லத்தில் உங்கள் மத்தியில் இருப்பது எனக்குப் பெரும் மகிழ்வைத் தருகிறது. திருமுழுக்கின் வழியாக நமக்குத் தரப்பட்டுள்ள கிறிஸ்தவ வாழ்வும், குருத்துவ வாழ்வும் நம்மிடம் எதிர்பார்ப்ப தெல்லாம் அமைதி, நீதி மற்றும் ஒப்புரவு ஆகிய உயரிய பண்புகள். இம்மூன்றையும் உலகில் நிலைநிறுத்துவது குருக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியப் பொறுப்பு. ஒளிப்படிகங்கள் ஒளியைத் தங்களிடமே வைத்துக் கொள்ளாமல், பிரதிபலிப்பதைப் போல், குருக்களும் தங்கள் வாழ்வின் மேலான பண்புகளை உலகோர் அனைவரும் காணும் வண்ணம் பிரதிபலிக்க வேண்டும். இப்படி வாழ்வதற்கு கிறிஸ்து ஒருவரே உங்கள் எடுத்துகாட்டாக இருக்க வேண்டும். இந்த உலகம் காட்டும் மற்ற எடுத்துக் காட்டுகள் உங்களைத் திசைத் திருப்பாமல் காத்துக்கொள்ளுங்கள்.
   துறவற வாழ்வைத் தேர்ந்துள்ள சகோதர, சகோதரிகளே, நிபந்தனை ஏதுமின்றி நீங்கள் கிறிஸ்துவைத் தேர்ந்துள்ளதுபோல், அயலவர் அன்பிலும் நிபந்தனைகள் ஏதுமின்றி செயல்படுங்கள். உலகை விட்டு விலகி துறவு மடத்தில் செபத்தில் ஈடுபடுவது உங்கள் அழைப்பாக இருந்தாலும், மக்கள் பணியில் ஈடுபடுவது உங்கள் அழைப்பாக இருந்தாலும், புனிதமான வாழ்வுக்கு நீங்கள் அழைக்கப்பட்டிருப்பதை உணர்ந்து வாழுங்கள்.
   குருத்துவ பயிற்சியில் ஈடுபட்டுள்ள மாணவர்களே, குருத்துவ அழைப்பும் வாழ்வும் புனிதத்திற்கு உங்களை நடத்திச் செல்லும் வழிகள். புனிதம் என்ற கொள்கை இல்லாமல் நீங்கள் மேற்கொள்ளும் குருத்துவப்பணி வெறும் சமுதாயச் சேவையாக மட்டும் மாறும் ஆபத்து உண்டு. உங்கள் பயிற்சி காலத்தில் நீங்கள் சேகரிக்கும் அறிவுத் திறன், ஆன்மீகப் பயிற்சி, மக்கள்பணி பயிற்சிகள் அனைத்துமே உங்களுக்கு கட்டாயம் உதவியாக இருக்கும். அறுபது ஆண்டுகள் குருத்துவ வாழ்வை முடித்தவன் என்ற முறையில் நான் இதை உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
   இங்கு கூடியிருக்கும் விசுவாசிகளே, நீங்கள் அனைவருமே உலகின் உப்பாக, ஒளியாக வாழ அழைக்கப்பட்டுள்ளீர்கள். நீதி, அமைதி, ஒப்புரவு ஆகியவற்றை வளர்ப்பதற்கு மீண்டும் ஒரு முறை நீங்கள் உறுதி கொள்ளுங்கள்.