Monday, November 7, 2011

நவம்பர் 6, 2011

கடவுள் இல்லாத உலகம் இருளில் வீழும் - திருத்தந்தை

   நாம் கடவுளை அகற்றிவிட்டால், இவ்வுலகிலி ருந்து இயேசு கிறிஸ்துவை எடுத்துவிட்டால், இந்த உலகம் இருளிலும் ஒன்றுமில்லாமையிலும் வீழ்ந் துவிடும் என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். 
   இஞ்ஞாயிறு வாசகத்தின் பத்துத் தோழியர் உவமை குறித்து தன் ஞாயிறு மூவேளை செப உரையில் எடுத்துரைத்தத் திருத்தந்தை, நம் பிற ரன்பு நடவடிக்கைகளுக்குத் தேவைப்படும் அன்பு இறைவனின் கொடை என்றும், மரணத்திற்குப் பின் நம்மைச்சூழும் இருளை வென்று, வாழ்வின் கொண்டாட்டத்திற்கு அழைத்துச் செல்லும் விளக்கு என்றும் கூறினார்.
   எண்ணெயைக் கொண்டுசெல்ல மறந்த கன்னியர்களைப் பற்றி தன் செப உரையில் திருத்தந்தை குறிப்பிடும்போது, அந்த எண்ணெய் அன்பிற்கான உருவகம், அந்த எண்ணெய் வாங்கப்பட முடியாதது, மாறாக கொடையாகப் பெற்று, பாதுகாக்கப்பட்டு நற்செயல்களில் வெளிப்படுத்தப்பட வேண்டியது என்றார்.
   தன் மூவேளை செப உரையின் இறுதியில், நைஜீரியாவில் இடம்பெறும் வன்முறைகள் குறித்த தன் ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டார் திருத்தந்தை. வன்முறைகளால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக செபிக்கும் அதேவேளை, வன்முறைகள் நிறுத்தப்பட அழைப்பு விடுப்பதாகவும் உரைத்த பாப்பிறை, வன்முறைகள் எந்த பிரச்சனைக்கும் தீர்வு காண்பதில்லை, மாறாக அவைகளை அதிகரிக்கவே உதவுகின்றன என்றார்.