Monday, January 30, 2012

ஜனவரி 29, 2012

கடவுளின் அதிகாரம் அன்பிலும் தாழ்ச்சியிலும்
சேவையிலும் வெளிப்படுகிறது - திருத்தந்தை

   இஞ்ஞாயிறு உரோம் தூய பேதுரு பேராலய வளா கத்தில் திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்க வந்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், புனித பூமியின் அமைதிக்கான உலக பரிந்துரை நாளை முன்னிட்டு 2 புறாக்களைப் பறக்கவிட்டு, கடவுளின் அன்பு நிறைந்த அதிகாரத்தைப் பற்றிப் பின்வரும் கருத்துகளை எடுத்துரைத்தார்.
   இன்றைய நற்செய்தி வாசகம், ஒய்வு நாளில் இயேசு கப்பர்நாகும் தொழுகைக்கூடத்தில் கற்பித் ததைப் பற்றி பேசுகிறது. அவரது போதனையின் நடுவே, இயேசுவை "கடவுளுக்கு அர்ப்பணமானவர்'' அதாவது 'மெசியா' என்று அடையாளப்படுத்திய தீய ஆவி பிடித்திருந்த மனிதருக்கு விடுதலை அளித்தது மக்களை வியப்பில் ஆழ்த்துகிறது. உடனேயே அவரது புகழ் அப்பகுதி முழுவதும் பரவியது. அங்கு அவர் இறையரசை அறிவித்து எல்லா விதமான நோயுற்றோரையும் குணமாக்கினார்.
   இயேசு மனிதரிடம் பேசுகின்ற வார்த்தை, தந்தையின் திருவுளத்துக்கும் மேலும் தங்களைப் பற்றிய உண்மைக்கும் உடனடியாக வழி திறக்கின்றது. வார்த்தையின் விளைவாக, இயேசு தீமையில் இருந்து விடுதலை அளிக்கும் அடையாளங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்தார். புனித அத்தனாசியுஸ் கூறுவது போன்று, "தீய ஆவிகளுக்கு கட்டளையிட்டு விரட்டுவது மனிதரின் செயலல்ல, அது கடவுளின் செயல். உண்மையில், ஆண்டவர் மனிதரை நோய்களில் இருந்தும் தளர்ச்சியில் இருந்தும் விலக்குகிறார்." இறை அதிகாரம் என்பது இயற்கையின் ஆற்றல் அல்ல. அது இந்த பிரபஞ்சத்தைப் படைத்த கடவுளின் அன்பின் ஆற்றல். மேலும் அவரது ஒரே பேறான மகனில் மனுவுரு ஏற்று, நமது மனித குலத்திற்கு இறங்கி வந்து பாவக் கறைபடிந்த உலகை குணப்படுத்துகிறார்.
   மனிதரின் அதிகாரம் என்பது உரிமை, பதவி, அடக்கி ஆள்தல், வெற்றி என்னும் விதத்தில் அர்த்தம் கொள்ளப்படுகிறது. எப்படியானாலும், கடவுளைப் பொறுத்த வரை அதிகாரம் என்பதன் பொருள் சேவை, தாழ்ச்சி, அன்பு; அதாவது குனிந்து தனது சீடர்களின் பாதங்களைக் கழுவிய இயேசுவின் வழிமுறையில் நுழைந்தால், அவர் மனிதரின் உண்மையான நன்மையையே விரும்பினார், காயங்களை குணப்படுத் தினார், அன்புக்காக தன் உயிரையே கையளித்தார், ஏனெனில் அவர் அன்பாக இருக்கிறார். சியன்னா புனித கத்தரீன் தனது கடிதங்களுள் ஒன்றில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: "கடவுள் தலைசிறந்த முடிவற்ற அன்பாக இருக்கிறார், மேலும் நமது நன்மையைத் தவிர வேறெதனையும் அவர் விரும்பவில்லை என்பதை, உண்மை யில், விசுவாசத்தின் ஒளியால் நாம் கண்டு அறிந்துகொள்ள வேண்டும்."
   அன்பு நண்பர்களே, வியாழக்கிழமை பிப்ரவரி 2ந்தேதி, நம் ஆண்டவரைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த விழாவைக் கொண்டாடுகிறோம்; அது அர்ப்பண வாழ்வுக்கான உலக நாளாகும். நம்பிக்கையோடு நாம் தூய்மைமிகு மரியாவை வேண்டுவோம்; அவர் மனித குலத்தை விடுவித்து குணமாக்கும் இறை இரக்கத்தால் நமது இதயங்கள் ஈர்க்கப்படுமாறு வழிநடத்துவதோடு, அன்பின் ஆற்ற லால் அவற்றை அனைத்து அருளாலும் தயவாலும் நிரப்புவார். வாழ்வின் தடு மாற்றங்களிலும் தீமையின் வெளிப்படையான வளர்ச்சியிலும், வழியும் உண்மை யும் உயிருமான ஆண்டவர் இயேசுவில் தொடர்ந்து நம்பிக்கை கொண்டிருக்க நாம் செபிப்போம். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக!