Monday, August 15, 2011

ஆகஸ்ட் 14, 2011

இறைவனின் கொடைகளை சுதந்திரமாகப் பெறும் வகையில் விசுவாசத்தில் வளர திருத்தந்தை அழைப்பு

   விசுவாசத்தில் வளர்ந்து, இறைவனின் கொடைகளைச் சுதந்திரமாகப் பெறும் வகையில் நம்மை உயர்த்திக் கொள்வதற்கு அனைத்து விசுவாசிகளும் அழைப்புப் பெறுகிறார்கள் என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். தன் மகளுக்கு குணம் தரும்படி இறைவனை வேண்டிய கானானியப் பெண் குறித்த இஞ்ஞாயிறு வாசகத்தின் அடிப்படையில் ஞாயிறு நண்பகல் மூவேளை ஜெப உரை வழங்கிய திருத்தந்தை, இயேசுவின் தனித்தன்மையையும், அவரின் வார்த்தைகளையும், இறைவனின் கொடைகளையும் அறிந்து ஏற்றுக்கொள்ள நம் விசுவாசம் உதவுகிறது என்றார். மனமாற்றம் எனும் அனுபவத்தை ஒவ்வொரு நாளும் வாழ்வதற்கான தேவை நம் இதயங்களுக்கு உள்ளது எனவும் எடுத்துரைத்தார் பாப்பிறை. இறைவார்த்தைகளுக்கு செவிமடுத்தல், திருவருட்சாதன நிறைவேற்றல், தனி செபங்கள் மற்றும் நம் அயலாருக்கான பிறரன்பு நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் நம் விசுவாசம் ஊட்டம் பெறட்டும் என்ற பாப்பிறை, உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளச் செல்லும் தனக்கு செபங்கள் மூலம் உதவுமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார். 
    இந்தச் செவ்வாய் முதல் ஞாயிறு வரை இஸ்பெயினின் மத்ரித்தில் இடம்பெறும் 6 நாள் கொண்டாட்டங்களின் இறுதி 4 நாட்களும் இளைஞர்களுடன் இருப்பார் பாப்பிறை.

ஞாயிறு நற்செய்தி: மத்தேயு 15:21-28
   அக்காலத்தில், இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார். அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்து வந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, 'ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்' எனக் கதறினார். ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, 'நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும்' என வேண்டினர். அவரோ மறுமொழியாக, 'இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற் போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்' என்றார். ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, 'ஐயா, எனக்கு உதவியருளும்' என்றார். அவர் மறுமொழியாக, 'பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல' என்றார். உடனே அப்பெண், 'ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே' என்றார். இயேசு மறுமொழியாக, 'அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்' என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.