Saturday, August 20, 2011

ஆகஸ்ட் 19, 2011

‘இயேசுவோடு இணைந்த பணியில் சுதந்திரத்திற்கான சிறகுகளை நாம் பெறமுடியும்’ - திருத்தந்தை

    இளையோர் முன்னிலையில் திருத்தந்தை 16-ம் பெனடிக்ட் வழங்கிய சிறப்புரை பின்வருமாறு: இன்றைய இச்சந்திப்பின் போது வாசிக்கப்பட்ட நற்செய்தி வாசகம், இயேசுவின் வார்த்தைகளை வரவேற்பதையும் அதை நடைமுறைப்படுத்து வதையும் குறித்து எடுத்துரைக்கிறது. இயேசுவின் வார்த்தைகள் நம் இதயத்தை சென்றடைந்து, ஆழமாக வேரூன்றப்பட்டு, நம் வாழ்வில் பூத்து குலுங்கவேண்டும். நம் ஆசிரியராம் இயேசு நமக்குக் கற்றுத்தருவது, பிறரிடமிருந்து கற்றதையல்ல, மாறாக, தானே வாழ்ந்து காட்டியதை. இயேசுவின் வார்த்தைகள் வாழ்வையும் உயிர்துடிப்பையும் வழங்கும் வண்ணம், இளையோரே, அவ்வார்த்தைகளுக்குச் செவிமடுங்கள். இளையோர் கொண்டாட்ட இந்நாட்களை உங்களின் ஆன்மீக வளர்ச்சிக்கென நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இன்றைய உலகில் பலர் தங்களுக்கான கடவுள்களை தாங்களே உருவாக்கிக் கொண்டு, தங்களைத்தவிர வேறு எந்த வித அடிப்படையோ ஆதாரமோ தேவையில்லை என்பதாய் வாழ்ந்து வருகின்றனர். எது உண்மை, எது உண்மையில்லை, எது நன்மை, எது தீமை, எது நீதி, எது அநீதி, யார் வாழவேண்டும், வேறு தேவைகளுக்காக யார் தியாகம் செய்யப்படவேண்டும், என்பவைகளை அவர்களே முடிவு செய்து கொண்டு எவ்வித தெளிவான பாதையுமின்றி மனம்போன போக்கில் வாழ்ந்து வருகின்றனர். இத்தகையச் சோதனைகளுக்கு உங்களைக் கையளிக்காதீர்கள். உண்மையில், இத்தகையப் போக்குகள், நோக்கமற்ற ஒரு வாழ்வுக்கும், இறைவனற்ற ஒரு சுதந்திரத்துக்குமே இட்டுச் செல்கின்றன. ஆனால், இறைச்சாயலில் சுதந்திரமாக படைக்கப்பட்ட நாம், உண்மை மற்றும் நன்மைத்தனத்திற்கானத் தேடலில் முன்னணியில் நிற்கவும், நம் செயற்பாடுகளுக்கு நாமே பொறுப்பேற்கவும், படைப்பை ஒழுங்காய் சீரமைத்து அழகுப்படுத்தும் பணியில் இணைப் பணியாளர்களாகச் செயல்படவும் அழைப்புப் பெற்றுள்ளோம். இயேசுவோடு இணைந்து இப்பணியில் நாம் வெற்றி பெறமுடியும் என்பது மட்டுமல்ல, நம் சுதந்திரத்திற்கானச் சிறகுகளையும் பெறமுடியும். கிறிஸ்துவில் உங்கள் வாழ்வைக் கட்டியெழுப்பும்போது, நீங்கள் எதற்கும் அஞ்சத்தேவையில்லை, உங்கள் இதயங்களில் அமைதி ஆட்சி புரியும். உங்களில் உருவாகும் மகிழ்வு பிறரையும் பாதிக்கும்போது, உங்கள் வாழ்வின் இரகசியத்தை அறிய ஆவல் கொள்ளும் அவர்கள், உங்களின் வாழ்வு இயேசுவின் மேல் கட்டப்பட்டிருப்பதைக் கண்டு கொள்வர்.