Monday, August 29, 2011

ஆகஸ்ட் 28, 2011

உலகத்தின் போக்கில் சிந்திப்பது கடவுளைப் புறக்கணிப்பது ஆகும் - திருத்தந்தை எச்சரிக்கை

   பணத்தையும் வெற்றியையும் தேடுவது உலகத்தின் போக்குப்படிச் சிந்திப்பதாகும், அதே நேரம் கடவுளை விலக்கி வைப்பதாகும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
   காஸ்தெல் கந்தோல்ஃபோவில் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து உரையாற்றிய திருத்தந்தை, உலகின் கண்களுக்குத் தோல்வியாகத் தெரிந்த சிலுவையை அன்புடன் ஏற்று கிறிஸ்துவைப் பின்பற்றுமாறு கிறிஸ்தவர்களைக் கேட்டுக் கொண்டார். ஒருவரின் வாழ்வு, சமூகத்தில் அவரடையும் வெற்றி, உடல் மற்றும் பொருளாதார நலவாழ்வு ஆகிய வற்றின் நிறைவில் மட்டும் கவனம் செலுத்தப்படும் போது கிறிஸ்து தமது சிலுவைப் பாடுகள் பற்றித் தெரிவித்த போது பேதுரு அதற்கு எதிர்ப்புக் கூறியது, இக்காலத்தில் மீண்டும் இடம் பெறுகின்றது என்பதைக் காட்டுகின்றது என்று விளக்கினார் திருத்தந்தை. ஆயினும் கிறிஸ்தவர்கள் தங்களது சிலுவைத் துன்பங்களைத் தனியாக அல்ல, மாறாக இயேசுவுடன் சேர்ந்து சுமக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளு மாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
   மேலும், இம்முவேளை செப உரையைக் கேட்கச் சென்றிருந்த இளம் குருத்துவ மாணவர்களிடம், கிறிஸ்துவுக்குத் தங்கள் வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணிக்கப் பயப்பட வேண்டாம் என்று கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

ஞாயிறு நற்செய்தி: மத்தேயு 16:21-27
   அக்காலத்தில், இயேசு தாம் எருசலேமுக்குப் போய் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் பலவாறு துன்பப்படவும் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் என்பதைத் தம் சீடருக்கு அந்நேரம் முதல் எடுத்துரைக்கத் தொடங்கினார். பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்து கொண்டு, "ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது" என்றார். ஆனால் இயேசு பேதுருவைத் திரும்பிப் பார்த்து, "என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்; ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்" என்றார். பின்பு இயேசு தம் சீடரைப் பார்த்து, "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக, என் பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவார். மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? மானிடமகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வானதூதர்களுடன் வரப்போகிறார்; அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக் கேற்பக் கைம்மாறு அளிப்பார்'' என்றார்.