Thursday, August 18, 2011

ஆகஸ்ட் 17, 2011

புதன் மறைபோதகம்: அன்னை மரியாவின் வழியாக இயேசுவிடம் நெருங்கி வர திருத்தந்தை அழைப்பு

   காஸ்தல் கந்தோல்ஃபோ கோடை விடுமுறை இல்லத்தில் ஓய்வெடுத்து வரும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அங்குள்ள வளாகத்திலேயே திருப்பயணிகளையும் உல்லாசப் பயணிகளையும் சந்தித்து, அன்னை மரியிட மிருந்து நாம் கற்றுக்கொள்ளும் தியான முயற்சிகள் குறித்து இவ்வாரப் புதன் பொது மறை போதகத்தை வழங்கினார்.
   அன்னை மரியின் விண்ணேற்பு விழா ஒளி இன்னும் நம்மில் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இது ஒரு நம்பிக்கையின் விழா. அன்னை மரி விண்ணகத்திற்குச் சென்றுள்ளார். நம் அனைவரின் இலக்கும் அதுவே. ஆனால் எவ்வாறு அங்குச் செல்வது என்பதே கேள்வி. ஆண்டவர் தமக்குச் சொன்னவை நிறைவேறும் என நம்பிய மரியா பேறுபெற்றவர் என மரியாவைக் குறித்து நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ளது. மரியா நம்பிக்கை உடையவராக இருந்தார், இறைவனிடம் தன்னை கையளித்தார். விசுவசிப்பதும், இறைவனிடம் நம்மைக் கையளிப்பதும், அவர் விருப்பத்தை நமதாக்குவதுமே விண்ணகத்திற்கான முகவரி. இன்று நாம், வார்த்தைச் செபத்தை அல்ல, மாறாக மனதிற்குள்ளேயான வார்த்தையற்ற ஒரு தியான நிலை குறித்து நோக்குவோம். அதுவே, நம் மனதை, இறைவனின் இதயத்துடனான தொடர்புக்குக் கொணர்வதாகும்.
   மரியாள் அனைத்தையும் தன் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தாள் என விவிலியத்தில் வாசிக்கின்றோம். இது நம் அன்னையின் வாழ்வில், இயேசுவின் சிலுவைச்சாவு மற்றும் மகிமை நிறை உயிர்ப்புவரைத் தொடர்ந்தது. இன்றையக் காலத்தில் நாமும் பல்வேறு சவால்களாலும் பிரச்சனைகளாலும் கவலைகளாலும் மூழ்கடிக்கப்பட்டுள்ளோம். இறைவனோடு தொடர்பு கொண்டு நம் ஆன்மீக வாழ்விற்கு உரமூட்டும் வகையில், நின்று நிதானித்து தியானிக்க நமக்கு நேரம் கிட்டாமல் உள்ளது. இங்குதான் அன்னை மரியா, நம் நாளாந்திர நடவடிக்கைகளில் எங்கனம் தியானத்திற்கான நேரத்தைக் கண்டுகொள்வது எனக் கற்றுத் தருகிறாள் என்ற திருத்தந்தை, புனித அகுஸ்தினார், புனித பொனவெந்தூர் ஆகியோர் தியானம் குறித்துக் கூறியுள்ளவைகளையும் எடுத்துரைத்தார்.
   தியானித்தல் என்பது, சேகரிப்பு மனநிலையை, உள்மன அமைதியை நம்மில் உருவாக்குவதாகும். இது தியானிப்பதற்கும், நம் விசுவாசம் மற்றும் இறைவன் நம்மில் ஆற்றும் செயல்கள் ஆகியவை குறித்தவைகளைச் சேகரிப்பதற்கும் உதவுகிறது. விவிலியத்தின் சில பகுதிகளை அல்லது ஆன்மீகம் தொடர்புடைய எழுத்துக்கள் ஆகியவைகளை ஆழமாக வாசித்தல் போன்றவைகள் உட்பட பல்வேறு வழிகளில் இது இடம்பெறலாம். செபமாலை செபித்தலும் ஒரு தியான செபமே. ஆகவே, தியானித்து, இறைவனோடு தொடர்பு கொண்டு, அவர் அருகே நெருங்கி வந்து, அதன்வழி வானுலகை நோக்கி நடந்துச் செல்வதற்கு உதவுவதில் பல்வேறு வழிகள் உள்ளன. எப்போதும் இறைவனின் கைகளில் நம்மை ஒப்படைப்பதும், அவர் விருப்பத்தை நிறைவேற்றுவதில் மட்டுமே நாம் உண்மையான மகிழ்வைக்காண முடியும் என்பதை உறுதியாக நம்புவதுமே தியானித்தலின் நோக்கமாகும், எனத் தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கினார் திருத்தந்தை.
    திங்களன்று நாம் சிறப்பித்த விண்ணேற்பு விழாவின் நாயகியாகிய அன்னை மரியின் பரிந்துரையின் மூலம் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் இயேசுவுக்கு மிக அருகாமையில் வருவீர்களாக என வேண்டி, தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அங்கு குழுமியிருந்த மக்களுக்கு அளித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.