Sunday, April 22, 2012

ஏப்ரல் 22, 2012

தைரியம், மகிழ்ச்சியோடு நாமும் கிறிஸ்துவின்
சாட்சிகளாக திகழ முடியும் - திருத்தந்தை

   இஞ்ஞாயிறு தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடியிருந்த முதல் நற்கருணை பெறத் தயாரித்து வரும் இளஞ்சிறார் மற்றும் திருப்பயணிகளுடன் பாஸ்கா கால மூவேளை செபத்தை செபித்த திருத் தந்தை 16ம் பெனடிக்ட் பின்வருமாறு மறையுரை வழங்கினார். 
   உயிர்ப்பு காலத்தின் மூன்றாம் ஞாயிறான இன்று, லூக்கா நற்செய்தியில் சீடர்களின் நடுவில் உயிர்த்த இயேசு தோன்றியதைக் காண்கிறோம். அவர்கள் நம்பமுடியாதவர்களாய் அச்சமுற்று ஒரு ஆவியைக் காண்பதாக நினைத் தார்கள். ரொமனோ கார்டினி இவ்வாறு எழுதுகிறார்: "ஆண்டவர் மாறிவிட்டார். முன்பு இருந்தது போல இப்போது இல்லை. அவரது இருப்பு ... அது புரிந்துகொள்ள முடியாதது. மேலும் அது உடலாக, அவரது முழு வாழ்க்கை அனுபவத்தையும், அவர் வாழ்ந்த முறையையும், அவரது திருப்பாடுகள் மற்றும் இறப்பையும் ... உள்ளடக்கி இருந்தது. அனைத்தும் உண்மை. மாற்றம் பெற்றிருந்தாலும், எப்பொழுதும் உறுதி யான உண்மை." சிலுவையால் ஏற்பட்ட தழும்புகளை உயிர்ப்பு அழித்துவிடவில்லை என்பதால், இயேசு தனது கைகளையும் கால்களையும் திருத்தூதர்களுக்கு காண்பிக் கிறார். அவர்களை நம்பச் செய்வதற்காக, உண்பதற்கு ஏதாவது இருக்கிறதா என்று கேட்கிறார். எனவே சீடர்கள், வேகவைத்த மீன் துண்டு ஒன்றை அவருக்கு கொடுத் தார்கள். அவர் அதைப் பெற்று, அவர்கள் முன்பாக உண்டார். மீனை நெருப்பில் வாட்டியது, கடவுளுக்கும் மனிதருக்கும் இடைநிலையாளரான இயேசுவின் பாடு களை உணர்த்துகிறது. உண்மையில், அவர் மனமிரங்கி மனித குலத்தில் தன்னை மறைத்துக் கொண்டு, மரணத்தின் பிடிக்கும் தன்னை ஓப்புக் கொடுத்தார். அவரது திருப்பாடுகள் தீயின் வேதனையை அனுபவிப்பதைப் போன்று இருந்தன" என்று புனித பெரிய கிரகோரி கூறுகிறார்.
   மிகவும் யதார்த்தமான இந்த அடையாளங்களுக்கு நன்றி! சீடர்கள் தங்களது தொடக்க சந்தேகத்தில் இருந்து விடுபட்டு, விசுவாசத்தின் கொடைக்கு திறந்தவர்கள் ஆயினர். இந்த விசுவாசம், மோசேயின் சட்டத்திலும் இறைவாக்கினர் நூல்களிலும் திருப்பாடல்களிலும் இயேசுவைப் பற்றி எழுதப்பட்டவற்றை புரிந்துகொள்ள அவர் களை அனுமதிக்கிறது. "மறைநூலைப் புரிந்துகொள்ளுமாறு, இயேசு அவர்களுடைய மனக்கண்களைத் திறந்தார். அவர் அவர்களிடம், 'மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும். பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள் ... இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்' என்றார்" என வாசிக்கிறோம். நம் மீட்பர் வார்த்தையின் வழி யாகவும், நற்கருணை மூலமாகவும் நம்மிடையே அவரது உண்மையான உடனி ருப்பை நமக்கு உறுதிப்படுத்துகிறார். எனவே எம்மாவு சீடர்கள், அப்பத்தைப் பிட்ட போது இயேசுவைக் கண்டுகொண்டது போலவே, நற்கருணை கொண்டாட்டத்தில் நாம் ஆண்டவரை சந்திக்கிறோம். இதைக் குறித்து புனித தாமஸ் அக்குயினாஸ் விளக்கும்போது, கத்தோலிக்க விசுவாசத்தின்படி கிறிஸ்து இந்த அருட்சாதனத்தில் முழுமையாக இருக்கிறார் என்று ஒப்புக்கொள்வது மிகவும் அவசியமாகிறது ... ஏனெனில் கடவுள்தன்மை உடலேற்பை ஒருபோதும் ஒதுக்கியதில்லை.
   அன்பு நண்பர்களே, திருச்சபை பொதுவாக ஈஸ்டர் காலத்தில், சிறுவர்களுக்கு முதல் நற்கருணை வழங்குகிறது. எனவே இந்த விசுவாச கொண்டாட்டத்துக்கு நன்றாக, சிறந்த உற்சாகத்துடன், ஆனால் எளிமையாக தயாரிக்க திருப்பணியாளர்களையும், பெற்றோர்களையும், வேதியர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். இயேசு உடனான தனிப்பட்ட சந்திப்பின் முக்கியத்துவத்தை உணரும்போது ... இந்த நாள் நினைவுகூரக் கூடிய தருணமாக இருக்க வேண்டும். ஆண்டவரின் வார்த்தையை கவனமாக கேட்கவும், நற்கருணைப் பலியில் தகுதியோடு பங்கேற்கவும், புதிய மனித குலத்தின் சாட்சிகளாக மாறவும் இறையன்னை நமக்கு உதவுவாராக!
   இங்கு வந்திருக்கும் ஆங்கிலம் பேசுவோர் அனைவரையும், மற்ற திருப்பயணி களையும் வாழ்த்துவதில் நான் மகிழ்கின்றேன். இன்றைய நற்செய்தியில், உயிர்த்த ஆண்டவர் அவரது பாடுகள் மற்றும் இறப்பின் பொருளில் சீடர்களின் உள்ளங் களைத் திறந்து, மனமாற்றத்தை அறிவிக்க அவர்களை அனுப்புகிறார். தைரியத்தோடும் மகிழ்ச்சியோடும் நாமும் கிறிஸ்துவின் உண்மையான சாட்சிகளாக திகழ முடியும். உங்கள் அனைவரையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக!