Monday, April 9, 2012

ஏப்ரல் 9, 2012

உயிர்த்த ஆண்டவரின் பிரசன்னத்தை உணர அன்னை
மரியாவின் பரிந்துரையை நாடுவோம் - திருத்தந்தை

   இயேசுவின் உயிர்ப்பு ஞாயிறுக்கு அடுத்த இத் திங்களன்று கான்டல்போ கோட்டையில் பாஸ்கா மூவேளை செப உரை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பின்வருமாறு கூறினார். 
   உயிர்ப்புத் திங்கள், பல நாடுகளில் ஓய்வு மற்றும் பொழுது போக்கு நாளாக அமைந்துள்ளது, மக்கள் நகரத் தெருக்களில் ஓய்வாக நடந்தும், நண்பர்க ளோடும் குடும்பங்களோடும் நேரத்தைச் செலவழித் தும் இவ்விடுமுறை நாளைக் கொண்டாடுகின்றனர், ஆயினும், நம் விசுவாசத்தின் பேருண்மையான ஆண்டவரின் உயிர்ப்பே இந்த விடு முறைக்கு உண்மையான காரணம்.
   நற்செய்தி எழுத்தாளர்கள், இயேசுவின் உயிர்ப்பை விவரிக்கவில்லை. இந்த உயிர்ப்பு நிகழ்வு, நம் அறிவுக்கு எட்டாத மறைபொருளாக, நம் கண்களால் தாங்க முடியாத ஒளியாக இருக்கின்றது. புனித மத்தேயு இந்நிகழ்வை பெரிய நிலநடுக்கம் உருவானதாகவும், மின்னல் போன்ற ஒளிநிறைந்த ஆண்டவரின் தூதர் கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டி அதன் மேல் உட்கார்ந்தார் எனவும் விவரிக்கிறார்.
   பெண்கள் வானதூதர்களிடமிருந்து உயிர்ப்பு பற்றிய அறிவிப்பைப் பெற்ற போது, அச்சமும் பெருமகிழ்ச்சியும் நிறைந்தவர்களாய், சீடர்களிடம் அறிவிக்க விரைந்தனர். அந்த நேரத்தில் அவர்களும் இயேசுவைச் சந்தித்து அவரது காலடிகளில் பணிந்து அவரை வணங்கினர். இயேசுவும் அவர்களிடம், "அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்" என்றார்.
   பெண்கள் நம் ஆண்டவரோடு கொண்டிருந்த சிறப்பான பிணைப்பு அனுபவம், கிறிஸ்தவ சமூகத்தின் நடைமுறை வாழ்வுக்கு முக்கியமானது. அக்காலத்தில் இஸ் ரேலில் பெண்களின் சாட்சியத்திற்கு அதிகாரப்பூர்வ சட்டரீதியான மதிப்பு இல்லை யெனினும், பெண்கள் நம் ஆண்டவரோடு சிறப்பான பிணைப்பை அனுபவித்தார்கள்.
   உயிர்த்த இயேசு அளித்த காட்சிகளிலும், அவரின் திருப்பாடுகள் மற்றும் மரணம் பற்றிய நிகழ்வுகளிலும் பெண்களின் பங்கு முக்கியமானதாக இருந்ததாக நற்செய்தி யில் நாம் வாசிக்கிறோம். நம்பிக்கை மற்றும் அமைதியின் ஊற்றாகிய உயிர்த்த ஆண்டவரின் உயிருள்ள பிரசன்னத்தை நாமும் அனுபவிக்க அன்னை மரியாவின் பரிந்துரையை நாடுவோம்.
   இவ்வாறு உரை வழங்கிய திருத்தந்தை, பின்னர் பல மொழிகளில் பயணிகளை வாழ்த்தி, அவர்களுக்கு தனது ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.